நீதிமன்றை திசை திருப்பும் முயற்சியிலும் மஹிந்தவுக்கு தோல்வி! - sonakar.com

Post Top Ad

Monday, 3 December 2018

நீதிமன்றை திசை திருப்பும் முயற்சியிலும் மஹிந்தவுக்கு தோல்வி!


தான் பிரதமராக நியமிக்கப்பட்டமையையும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையும் ஆதரித்தும் நிறைவேற்று அதிகாரத்தின் பயன்பாடு குறித்து தவறான மேற்கொள்களுடன் நேற்றைய தினம் அவசரமாக உரையாற்றி நீதிமன்றை திசை திருப்ப மஹிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சியும் இன்று தோல்வி கண்டுள்ளது.

19ம் திருத்தச் சட்டத்தினை தானும் ஏற்றுக்கொண்டே நிறைவேற்றத் துணை நின்ற மைத்ரிபால சிறிசேன, தமது பங்காளிகள் மீதான அதிருப்தியை தவறான வழியில் காட்டச்சென்று இது வரை எந்தவொரு இலங்கை ஜனாதிபதியும் சந்தித்திருக்காத சட்டச் சிக்கலுக்கு முகங்கொடுத்து வருகிறார்.


இந்நிலையில், நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ச செய்த முயற்சி, நீதிமன்றை திசை திருப்ப முயன்ற செயல் என ஜனநாயகத்துக்கான சட்டவல்லுனர்கள் அமைப்பு இன்று காலை கண்டனம் வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மஹிந்த பிரதமராக இருப்பதற்கான அடிப்படை அதிகாரத்தினை தெளிவு படுத்த அவருக்கு இன்னும் ஒன்பது நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அதுவரை அவரும் அவரது சகாக்களும் அரசாங்கமாக இயங்குவதற்குத் தடை விதித்துள்ளது.

இது ஜனநாயக ரீதியாகவும், சட்டரீதியாகவும் ஏற்பட்ட பின்னடைவு மாத்திரமன்றி அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் அதனை வழி நடாத்திய மஹிந்த ராஜபக்சவுக்கும் ஏற்பட்ட தோல்வியாகும்.

நீதித்துறை சுயாதீனமாக இயங்க வேண்டியதன் அவசியம் உச்ச கட்ட அரசியல் தேவையொன்றின் போது மக்களுக்கு உணர்த்தப்பட்டிருப்பதானது, கட்சி பேதங்களுக்கு அப்பால் நீதித்துறையின் சுயாதீனத்தை சர்வாதிகாரப் பிடிக்குள் தள்ளிவிடாது பாதுகாபதன் மக்கள் கடமையையும் உணர்த்தி நிற்கிறது.

No comments:

Post a Comment