கண்டியில் முஸ்லிம் சமூக முக்கியஸ்தர்களுடன் விசேட சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 4 November 2018

கண்டியில் முஸ்லிம் சமூக முக்கியஸ்தர்களுடன் விசேட சந்திப்பு


இலங்கையில் முஸ்லிம்களுக்கு நெருக்கடியான கால கட்டங்களில் முஸ்லிம்களுக்கு ஊடகம் இல்லாத மனக் குறையை சமூக ஊடக வலைத்தளங்களே  நிறைவு செய்யக் கூடியதாக திகழ்கிறது. எனினும் அன்று அறிஞர் சித்திலெப்பையினால் வெளிக்கொணரப்பட்ட முஸ்லிம் நேசன் பத்திரிகையைப் போன்று இன்னுமொரு பத்திரிகையை இலங்கையில் முஸ்லிம்கள் வெளிக்கொணர முடியாது இருப்பது ஒரு துரதிருஷ்டமான செய்தியாகும் என்று சோனகர் சமூக வலைத்தளத்தின் (sonakar.com) பிரதம ஆசிரியர் இர்பான் இக்பால் தெரிவித்தார்.கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சமூக ஊடக வலைத்தளம்  தொடர்பாக லண்டனில் இருந்து வருகை தந்துள்ள சோனகர் சமூக வலைத்தளத்தின் (sonakar.com) பிரதம ஆசிரியர் இர்பான் இக்பால் அவர்களுக்கும் கண்டி ஊடகவியலாளர்களுக்குமிடையே சந்திப்பொன்று  கட்டுக்கலை பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் கே. எம் எச். ஏ. சித்தீக் தலைமையில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

அந்நிகழ்வில் கலந்து கொண்ட சோனகர் சமூக வலைத்தளத்தின் நிர்வாக இயக்னர் இர்பான் இக்பால் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக  முன்னெடுக்கப்பட்ட ஏராளமான பிரச்சினைகளுக்கெல்லாம்  உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை வெளிவுலகிற்கு வெளிக் கொணர்வதற்கு சமூக ஊடக வலைத்தளங்களின் வகிபாகம் அளப்பரியவை. எனினும் அச்சு ஊடகம் ஒன்றை வெளிக்கொணர்வதில் பெரும் சிரமத்தை முஸ்லிம்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். முஸ்லிம்களுக்கென தனித்துவமான நவமணிப் பத்திரிகையை மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே முன்னெடுத்துச் செல்கின்றார்கள். பத்திரிகை வாங்கிப் படித்து அதனை ஊக்குவிக்க வேண்டும் என்ற ஆர்வம் முஸ்லிம்களிடத்தில் இல்லை.

பொதுவாக முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்படும் ஊடகங்கள் தோல்வியிலேயே செல்கிறது. இது கவலை தரும் செய்தியாகும். எனினும் இதற்கு மாற்றீடாக மாதாந்தம் ஒரு கனதியான சஞ்சிகை இலங்கையில் இருந்து வெளிக்கொணரப்பட வேணடும். வாசிப்புத் துறையில் மிகவும் வீழ்ச்சி கண்ட சமூகமாக எமது சமூகம் இருக்கிறது. அத்தகைய அவல இல்லாமற் செய்து வாசிப்புத் துறையை ஊக்குவிப்புச் செய்யப் பண்ண வேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கிறது.


நாங்களும் சமூக ஊடக வலைத்தளத்தை சோனகர் என்ற பெயரில் நேர்த்தியுடன் செம்மைப்படுத்தி நம்பகத்தன்மயுடன் நடத்தி வருகின்றோம். லண்டனில் எமது சோனகர் இணையத்தளம் இயங்கினாலும் செய்திகளைப் பதிவிடுபவர்கள் ஜேர்மன், கொழும்பு மற்றும் லண்டனில் உள்ளனர். ஆரம்பத்தில் முஸ்லிம்களுடைய வரலாற்றுப் பதிவுகளையும் இலக்கிய அம்சங்களையும் வெளிக்கொணர்வதற்காகத்தான் இந்த சமூக வளைத்ளத்தைப் பயன்படுத்தினோம். இது ஆரம்பித்து ஏழு வருடங்களாகும். பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் மாத்திரம் 10 லட்சத்துக்கு அதிகமான வாசகர்களைக் கொண்டுள்ளது.

அத்துடன் இதனோடு இணைந்ததாக முஸ்லிம் குரல் வானொலி, ஆங்கிலத்தில் காணானொளிச் செய்திகள் எனப் பல அம்சங்கள் பதிவிடுகின்றோம். இது உலகிலுள்ள ஆங்கில வாசகர்களைக் கவர்ந்துள்ளது. லண்டனில் வாழ் புலம்பெயர் தமிழ் சமூகம் கூட  இலங்கையில் என்ன நடக்குகிறது என்பதை அறிய எமது தளத்தையே அதிகளவு பார்வையிடுகின்றனர்.

எமது முஸ்லிம்களுடைய சமூக, கல்வி, பொருளாதார, சமய மேம்பாட்டுக்காக எமது சமூகத்தின் தலைவர்கள் ஆற்றிய பங்களிப்பை இப்போது எமது முஸ்லிம்  சமூகத் தலைவர்களால் ஆற்ற முடியாதுள்ளது. அவர்கள் ஏனைய சமூகத்துடன் சேர்ந்து இருந்து கொண்டுதான் தங்களுடைய சமூகத்திற்குத் தேவையான சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொண்டார்கள். அறிஞர் சித்திலெப்பை, ஏ. எம். ஏ. அஸீஸ், எம். சி. கலீல், அப்துல் காதர், சேர் ராசிக் பரீத், கலாநிதி பதியுதீன் முஹமட் ஆகிய உள்ளிட்ட இன்னும் முக்கிய சமூகத் தலைவர்கள் உள்ளார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக அறபு இஸ்லாமிய நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சலீம், இந்திய இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் ஐ. ஐனுடீன்,  ஓய்வு நிலை கல்வி அதிகாரி ரீசா, விடிவெள்ளி உதவி ஆசிரியர் பரீல், சட்டத்தரணியும் ஊடகவியாளருமான வைஸ், பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் உப செயலாளர் அஷ்ஷெய்க் ஷக்கி,  மற்றும் ஊடக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி

No comments:

Post a Comment