அரசியல் நெருக்கடியும் முஸ்லிம் அரசியலும் - sonakar.com

Post Top Ad

Saturday, 24 November 2018

அரசியல் நெருக்கடியும் முஸ்லிம் அரசியலும்


காலநிலையிலும், அரசியலிலும் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினால் பல்வேறு தாக்கங்களுக்குக்கும், நெருக்கடிகளுக்கம் மக்கள் முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. காலைநிலையில்; அடிக்கடி ஏற்படுகின்றன மாற்றமானது வெள்ளப் பெருக்கையும், மண்சரிவையும், சுழல்காற்றையும் மக்களை எதிர்நோக்கச் செய்து வரும் இவ்வேளையில்  கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தொடங்கிய அரசியல் நெருக்கடியானது  ஒரு மாத காலத்தை இன்னும் இரு தினங்களில் எட்டவிருக்கின்ற நிலையில் தீர்வின்றித் தொடர்வதை அவதானிக்க முடிகிறது. 


கூட்டு அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகியதாக அறிவித்து பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்ற நாள் முதல் இக்கட்டுரை அச்சுக்கும் போகும் வரை அரசியல் குழம்பம் வீரியமடைந்துள்ளதே தவிர ஜனநாயகத்தை விரும்பும் எல்லோரும் எதிர்பார்க்கும்  ஜனநாயக அடிப்படையிலான் தீர்வு எட்;டப்படவில்லை. 

ஏறக்குறைய ஒரு மாதம் அடையப்பெற்றும் இந்த அரசியல் நெருக்கடி தீர்வின்றித் தொடர்வதானது சமூக, பொருளாதார செயற்பாடுகளைப் பின்தள்ளி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமை நாட்டுக்கு ஆபத்தானது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கயிறிழுத்தலும், கபடி ஆட்டமும், அரசியல் ஆடுகளத்தில் மேவிக் காணப்படுவதனால் இந்நெருக்கடி நிலை இன்னும் எத்தனை தினங்களுக்கு நீடிக்கும் என்று உறுதிப்பட எடுத்துரைக்க முடியாதுள்ளதாகவே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2015ல் கூட்டு அரசாங்கத்தை உருவாக்க முயற்சித்தவர்களையம், வாக்களித்த மக்களையும் அதிர்ச்சிக்குட்படுத்திய ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நவம்பர் 24ஆம் திகதிவரையான நாட்களில் இந்நாடு கண்ட அனுபவங்களை ஒரு முறை திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையின் பாரளுமன்ற வரலாற்றில் எந்தக் கட்சிக்குப்  பெறும்பான்மைப் பலம் இருக்கிறது என்பதை அரசியலமைப்புக்கும், பாராளுமன்ற ஒழுக்க, கலாசார விழுமியங்களுக்கும் ஏற்ப ஜனநாயக ரீதியாக நிரூபிக்க  முடியாது 30 நாட்களை அடைந்தமை இதுவே  முதற் தடவையாக இருக்க வேண்டும். 

அரசியல் நெருக்கடியின் 30 நாள்

2015ல் உருவாக்கப்பட்ட கூட்டு அரசாங்கத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறுவதாக அறிவித்தைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

கூட்டு அரசாங்கத்தின் மூன்றரை வருட காலத்தில் நாட்டில்  தொடர்ச்;சியாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, அரசாங்கத்தின் முரண்பாடுகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களின் எதேச்சதிகார செயற்பாடுகள் குறித்தும், அவற்றோடு ஜனாதிபதியைக் கொலை செய்ய இடம்பெற்ற சதி முயற்சி தொடர்பிலும்; அதனைக் கண்டுகொள்ளாமல் ஐக்கிய தேசியக் கட்சி நடந்துகொண்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அரசின் பங்காளி கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மீது ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டு வந்தன.

இந்நிலைமை விஸ்பரூமடைந் நிலையில்தான்;,  அரசியல் யாப்பின் 42வது பிரிவின் 4வது ஷரத்தின்படி பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெற்ற ஒருவரை ஜனாதிபதி பிரதமராக நியமிக்கலாம் என்றதன் அடிப்படையில் புதிய பிரதமர் நியமனம் வழங்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் இற்றைக்கு 28 நாட்களுக்கு முன்னர் தெரிவித்தனர்.
இருப்பினும், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஜனாதிபதி நியமித்தமை அரசியலமைப்புக்கும், நீதிப் பொறிமுறைக்கும்  முரணான செயற்பாடாகும். ஆட்சிக் காலம் முடியும் வரையில்  நானே பிரதமராகச் செயற்படுவேன். இந்த நியமனத்தை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது பெரும்பான்மை எங்களிடமே உள்ளது என கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் தானே பிரதமதராக நீடிப்பதாக அறிவித்திருந்த ரணில் விக்ரமிரசிங்க பாராளுமன்றத்தினை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எழுத்து மூலமான கோரிக்கையொன்றை விடுத்திருந்தார். அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயாரான வேளையில், பாராளுமன்றத்தினை மூன்றாவது கூட்டத்தொடருக்காக நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரை ஒத்தி வைக்குமாறு ஜனாதிபதி சபாநாயகருக்கு பணிப்புரை வழங்கியிருந்தார். 

ஒக்டோபர் 27ஆம் திகதி ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட இப்பணிப்புரையைத் தொடந்து நெருக்கடி நிலை மேலும் விஸ்பரூபமெடுக்க ஆரம்பித்தது. இந்நிலையில் யார் பிரதமர் என்ற அரசியல் குழப்பம் நாட்டு மக்களை மாத்திரமின்றி சர்வதேசத்தையும் குழப்பத்தில் ஆழ்த்திதையடுத்து யார் பிரதமர் என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். ஆதலால், பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு உலக நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகளும், உள்நாட்டு புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் கோரிக்கை விடுத்தன. 

இந்நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட பாராளுமன்றக் கூட்டத்தொடரை நவம்பர் 5ஆம் திகதி, 7ஆம் திகதிகளில் கூட்டுவதற்கான அறிவிப்புக்களும் வெளியாகியது. இருப்பினும், இவ்விரு தினங்களிலுமே ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் கூட்டப்படவில்லை. இதனால் பாராளுமன்றத்தை உடன் கூட்டுமாறு சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும், உள்ளுர்; அரசியல் கட்சிகளும், தொடர்ந்தும் வேண்டுகோள்களை முன்வைத்து வந்தன. 

இதனிடையே, இரு பிரதான கட்சிகளும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காகவும் அவற்றைப் பெறுவதற்காகவும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்னான விஷேட வர்த்தமானி அறிவிப்பு நவம்பர் 04ஆம் திகதி இரவு வெளியாகியது.

பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் யாருக்கு இருக்கிறது என்ற பலப்பரீட்சைக்கான வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் இத்தேச மக்களுடன் முழு உலகமும் இருந்தது. இவ்வேளையில,; பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் வலை வீசப்பட்;டனர். பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்துக்கொள்வதற்காக பதவிகளும் வழங்கப்பட்டன. இதனால் கட்சித்தாவல்களும் இடம்பெற்றன. இச்சூழ்நிலையில் நவம்பர் 10ஆம திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதான விஷேட வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டது. 

அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை ஒரு வருடத்திற்குப் பின்னர் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. ஆனால்,  19வது திருத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்குப் பின்னரே பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்கலாம். ஆனால், அதற்கிடையில் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அல்லது சபையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி ஒரு பிரேரனையைக் கொண்டு வந்தால் பாராளுமன்றத்தைக் கலைக்கலாம். அதைவிட நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டால் அதனைக் காரணம் காட்டி ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்காலாம் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த எதிர் விமர்சனங்களும் அதற்கு ஆதரவான கருத்துக்களும் அரசியல் பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

இந்நிலையில,; ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்;தமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 12ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்பில் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கல் தொடர்பில் இரண்டு தினங்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நவம்பர் 13ஆம திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கு ஏற்ப கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறியதுடன், பெரும்பான்மைய அரசாங்கம் இழந்ததாகவும் சபாநாயகர் சபையில் அறிவித்து சபையை மறுநாள் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்ப்பட்டதும் நவம்பர் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெற்றன அதில் ஆளும் கட்சி உறுப்பினர்களினதும,; சில ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களினதும் நடத்தைக் கோலங்கள் எவ்வாறு அமைந்தன என்பதை முழு உலகும் பார்த்து வியந்தது மாத்திரமின்றி பல்வேறு விமர்சனங்களையும் சர்வதேச மட்டத்திலும் உள்ளுரிலும் ஏற்படுத்தியது. அத்துடன் பல சர்வதேச ஊடகங்களினதும் தலைப்புச் செய்திகளாகவும் இந்நிகழ்வுகள் வெளியாகியிருந்தமை அறிந்த விடயங்களாகும்.

மூன்று நாட்கள் போர்களமாக காட்சியளித்த பாராளுமன்றம் கடந்த 19ஆம் திகதி மீண்டும் கூடியபோதிலும்  ஏழு நிமிடத்தில் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் வெள்ளிக்கிழமை 23ஆம்(நேற்று) பாராளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டதற்கு அமைய நேற்று 23ஆம் திகதி கூடிய பாராளுமன்றத்தில்; பாராளுமன்றத் தெரிவுக்குழுக்காக ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து 5 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிலிருந்து 5 உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைபிபிலிருந்தும் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்தம் தலா ஒவ்வொருரு உறுப்பினர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து ஆளும்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தும் சபாநாயகரின் தெரிவுக்குழு நியமன அறிப்பானது 121 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்ப்பட்டது. இதன் மூலமும் எதிர்தரப்புக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது. இருந்தும் தொடரும் அரசியல் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. 

பாராளுமன்றப் பெரும்பான்மை என்ற விடயம் ஆளும் கட்சியினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில்; சிறுபான்மைச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு முன்னிண, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு தொடர்பிலும் சிறுபான்மைத் தலைவர்களின் அரசியல் நகர்வு மற்றும் கட்சிகள், தலைமைகள் என்பவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகள் குறித்தும் தமிழில் பேசும் சமூகங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன.

சிறுபான்மைத் தலைமைகளும் அரசியல் களமும்

ஒரு இனத்தின் பல்வேறு அங்கத்தவர்களை உள்ளடக்கியேதே ஒரு சமூகம். ஒவ்வொரு சமூகமும் அச்சமூகத்திற்கான கலை, கலாசார, பாரம்பரிய, சமய பன்பாட்டு விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கியும் அவற்றில் ஏனையோரின் தலையீடுகளுக்கு இடம் வழங்காத முறையிலும் அவற்றைப் பின்பற்றி வாழ்கின்றன.

இவற்றிற்கு அப்பால், தமக்கான உரிமைகளைப் பெறவும், அந்த உரிமைகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகளை உருவாக்கியும், அக்கட்சிகளிலிருந்து மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கும், மாகாண சபைகளுக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அனுப்பதற்காக தமது வாக்குரிமைகளை பயன்படுத்தவும் செய்கின்றனர். அவ்வாறு தமது அடிப்படை உரிமையான வாக்குரிமையை மனச்சாட்சிக்கு ஏற்ப சுதந்திரத்துடன் பயன்படுத்துவதனால் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகி;ன்றன. இந்த மாற்றங்கள் அரசிலிலும் ஏற்படுத்தப்படுகின்றன. அரசியலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் இந்நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை சமூகத்திற்கு சாதாமாகவும் பாதகமாகவும் அமைந்து விடுகின்றன.

 2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் சிறுபான்மை சமூகத்திற்கு சாதகமாக அமையுமென்று எதிர்பார்;க்கப்பட்ட போதிலும் அவை குறித்த எதிர்பார்ப்புக்களை எட்டவில்லை என்ற ஆதங்கங்கள் வெளிப்பட்டு வந்த நிலையில்தான் கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்த ஆட்சி மாற்றம்  சிறுபான்மை சமூகங்களில் எதிர்பார்ப்புக்களை எதிர்வு கூற முடியாத நிலைக்குத் தள்ளியிருக்கும் நிலையில்,  ஜனாதிபதி தலைமையிலான தற்போதை அரசாங்கத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி ஆகிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு முன்னிண, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.

இதில் எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும் அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்காது தனித்துவமாக செய்படும் வரலாற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்தாலும் அக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சுப் பதவியை ஏற்றுள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றததில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இம்முறை அமைச்சுப் பதவிகளுக்கு சோரம்போகவில்லை என்பது ஆச்சரியமானதுதான்.

ஏனெனில், எந்த அரசாங்கம் நாட்டை ஆண்டாலும் ஒரு சில ஆண்டுகள் அல்லது சில சந்தர்ப்பங்களைத் தவிர அவ்வரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்தமை என்பது முஸ்லிம் அரசியல் வரலாற்றுப் பதிவாகும். இருப்பினும், சார்பானதும் எதிரானதுமான சிறுபான்மைக் கட்சிகளின் நிலைப்பாடுகள் சமூகங்களின் அபிலாஷைகளையும், சமூகங்கள் எதிர்நோக்குகின்ற நீண்டகால மற்றும் குறுகிய பிரச்சினைளையும் தீர்த்துக்கொள்வதற்கு எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தப்போகிறது என்பது குறித்து தற்போதைக்கு எடுத்துக் கூற முடியாதுள்ளபோதிலும்; தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது வலியுறுத்தப்பட வேண்டியதாகும்.

இந்நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் பல்வேறு போராட்ட வடிவங்களினூடாக தமது சுயநிர்ணய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பல தசாப்தங்களாக போராடி வருவதும் அதற்காக பல இழப்புக்களை தியாகித்திருப்பதும் தமிழ் மக்கள் மனங்களை விட்டு அகலாதவைதான். தமிழ் மக்;களின் நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்து அவற்றை வெற்றி கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியில் முடிந்த கையோடு ஆயுதப் போராட்டம் தலைதூக்கி அதன் பேராட்ட வடிவம் திசைமாறியதன் காரணமாக அவையும் தோல்வியில் முடிந்த போராட்ட வரலாறாகவே தடம்பதிதுள்ளதைக்; கண்டுகொண்டுள்ளோம். அதன் இழப்புக்கள் இந்நாட்;களில் நினைவு கூறப்படுகிறது.

அவ்வாறான நிலையில், இனிவரும் காலங்களில் தமிழ் மக்களின் நியாமான கோரிக்கைகளை வெற்றி கொள்வது தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகளின் தலையாய கடப்பாடாகும். அதைத்; தமிழ் அரசியல் கட்சிகள் தனித்து நின்று மேற்கொள்ள முடியாது என்பதும் வெளிப்படையான உண்மை.

இந்நாட்டில் வாழுகின்ற தமிழ்  மக்களின் குடிப்பரம்பலை நோக்குகின்றபோது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவில் செறிவாக வாழ்கின்றனர். மலையத்தில் இந்தியப் பரம்பரையைக் கொண்ட தமிழ் மக்கள் வாழ்ந்தாலும்  வடக்கு, கிழக்கில் அதிகளவில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அழிவுகள் அதிகம். அந்த அழிவுகள் அதிகம் கொண்ட வாழ்க்கை வரலாற்றை மலைய மக்களின் வரலாற்றில் எழுதப்படவில்லை என்ற போதிலும் மலையக மக்களும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார். ஆவர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை என்பது வெளிப்படையானது.. 

அத்துடன், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் அக்கறை கொள்ள வேண்டுமென்பதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. இருப்பினும், கட்சிகள் பிளவுபடுவதும் புதிய கட்சிகள் உருவாக்கப்படுவதும் என்ற கலாசாரம் தற்போது மேலோங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. 

இந்நிலையில், இந்நாட்டில் வாழுகின்ற ஏறக்குறைய 20 இலட்சம் முஸ்லிம்களில் வடக்கு கிழக்களில் மூன்றில் ஒரு பகுதியினேரே வாழ்கின்றனா.; ஏனைய இரண்டு பங்கினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் செறிவின்றி  வாழ்கின்றனர். இவ்வாறு வாழ்கின்ற முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இன்னும் முறையான தீர்வு எட்டப்படவில்லை. மாறி மாறி ஆண்ட அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் அரசியல் தலைமைகள் வகித்த போதிலும் முஸ்லிம்களி;ன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை கையாளுவதற்கு அவ்வமைச்சுப் பதவிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் முஸ்லிம பாராளுமன்ற உறுப்பினர்களின் இரு பெரும்பான்மைக் கட்சிகளுக்குமான ஆதரவும் எதிர்ப்பும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை கையாளுவதில் எவ்வகையில் உதவப்போகிறது. 

முஸ்லிம்களின் பிரச்சினைகளும் அரசியல் நகர்வும்

இந்நாட்டின் 25 மாவட்டங்களிலும் வாழும் முஸ்லிம்கள் பிரதேச ரீதியிலான பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஆனால், எவ்வகையான பிரச்சினைகளை இந்த மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்குகிறார்கள் என்பது குறித்த ஆவணப் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பது தொடர்பில் அறியப்படவில்லை. ஒரு சில மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் ஏனைய பல மாவட்டங்களில் இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகும்.

மாவட்ட ரீதியாக நீண்டகாலமாக முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. என்பதன் அடிப்படையில் முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் பல பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாது தொடர்கதையாகக் காணப்படுகிறது. 
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம்கள் பயிர் செய்கை, காணிப்பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் காலத்திற்குக் காலம் மேற் கொள்ளப்படுகின்றபோதிலும் இதுவரை அவற்றிற்கான நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.

கிழக்கின் அம்பாறை மாவட்டத்திலும் பல பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாது தொடர்கின்றன. பொத்துவில் தொடரும் காணிப்பிரச்சினை, அக்கறைப்பற்று வட்டமடுப் பிரதேசத்தில்  இழுபறி நிலையிலுள்ள மேச்சல் தரை மற்றும் விவசாயக் காணிக்கு தீர்வு எட்டப்படாமை, சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சவுதி அரேபியா அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடுகள் இதுவரை வழங்கப்படாமை, ஒலிவில் பிரதேசத்தின் கடலரிப்பு, காணி சுவிகரிப்பு, அட்டாளைச்சேனை அஷ்;ரப் நகர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள். சம்மாந்துறை விவசாயிகள் எதிநோக்குகின்ற பிரச்சனைகள், கல்முனைப் பிரதேச அபிவிருத்தி தொடர்பான தடைகள் என ஒவ்வொரு பிரதேசத்திலும் தொடரும் பிரச்சினைகளுக்கு அப்பிரதேச முஸ்லிம்கள் முகம்கொடுத்தவரே உள்ளனர். அத்துடன் முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் தேர்தல்காலத் துரும்பாகப் பாவிக்கப்படுகின்ற அம்பாறைக் கரையோர நிர்வாக மாவட்டக் கதையும் இன்னும் முடிவாகவில்லை.

அத்தோடு, வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் உட்ப வாழ்வியலில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை இவ்வாறு மாவட்ட, மாகாண ரீதியாகவும் தேசிய மட்டத்திலும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவது அசியமாகும்.

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும், அரசியல், சமூக, பொருளாதார, கல்வி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடையப்பட வேண்டுமாயின் எந்தப் பிரச்சினையினை எவ்வழியில் தீர்த்துக்கொள்ள முடியுமோ அவ்வழியில் தீர்த்துக்கொள்வதற்கு ஒன்றுபட்டு செயற்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது. தற்போது முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக புனித மக்காவில் ஒற்றுமைப்பட்ட நிழற்படங்களும் ஒற்றுமை குறித்த கருத்துக்களும் ஊடகங்களில் வெளிவந்திருந்தமை முஸ்லிம் வாக்காளர்களுக்கு அகமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

இந்த அரசியல் ஒற்றுமையென்பது பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒற்றுமையாக மாத்திரம் இல்லாது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வேண்டியும், வாக்களித்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும், எதிர்கால சமூகத்தின் இருப்பு மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அதற்காக எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றுபட்டு செயற்படக்கூடியதாகவும் அமைய வேண்டுமென்பதே வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் வாழுகின்ற பெரும்பான்மை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இத்தகையை எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத விடத்து இன்று முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகிய இவ்வரு கட்சிகளுக்கிடையிலும் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு அல்லது தற்போதைய அரசாங்கத்திற்கெதிரான ஒன்றுபட்ட நிலைப்பாடானது சுய நலன்களுக்கான ஏற்பாடுகளாகவும், புரிந்துணர்வுகளாகவுமே கருதப்படும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகவுள்ளது. எது எவ்வாறு இருந்தபோதிலும் எதிர்காலம்தான் இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கப்போகிறது அதுவரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment