தனியான முஸ்லிம் செயலணி: சொல்கிறார் ஹிஸ்புல்லா! - sonakar.com

Post Top Ad

Tuesday 13 November 2018

தனியான முஸ்லிம் செயலணி: சொல்கிறார் ஹிஸ்புல்லா!



தேசிய ரீதியாக முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில்  முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் கீழ் தனியான முஸ்லிம் செயலணி ஒன்று உருவாக்கப்படும்  என நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 



முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம் செய்தார். அங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஆர். மலிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது:

புதிய அமைச்சரவையில் எனக்கு வழங்கப்பட்ட அமைச்சின் கீழ் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தை விசேட வர்த்தமானி மூலம் இணைத்துள்ளனர். குறுகிய காலத்துக்கு இந்த அமைச்சு வழங்கப்பட்டாலும் தேர்தலுக்கு பின்னரும் தொடர்ந்து இந்த அமைச்சை எனக்கு வழங்குவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே இந்த அமைச்சை நான் பொறுப்பேற்றேன். 

இந்த திணைக்களம் சட்டரீதியாக பலமான திணைக்களமாக மாற்ற வேண்டும். அத்துடன் இத்திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகள் சட்ட ரீதியாக தீர்க்கப்பட வேண்டும். குறிப்பாக பள்ளிவாசல்கள், அறபு மத்ராஸாக்கள் விடயத்தில் உறுதியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்ற தேவைப்பர்டு இருந்து வருகின்றது.

ஹஜ் விடயத்தில் நான் நேரடியாக தலையிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளேன். ஹஜ் என்பது அரசியலுடன் தொடர்புடைய  வியாபாரமாக மாறியுள்ளது. அவற்றை முழுமையாக நீக்கி ஹஜ் கமிட்டி என்பது முழுமையாக அரசியலுக்கு அப்பால் சட்டரீதியான சுயாதீன அமைப்பாக இயங்க வேண்டும். 

பள்ளிவாசல்கள், வக்பு சொத்துக்கள் தொடர்பில் வக்பு சபை மேலும் ஆக்கபூர்வமாக செயற்படுவதுடன்   குறுகிய காலத்துக்குள் பாரிய மாற்றமொன்றினை இந்த திணைக்களத்தில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 
அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளுக்கு அப்பால் வெளிநாட்டு நிதி உதவிகளையும் பெற்று முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தேசிய ரீதியாக பலம்மிக்க ஒரு திணைக்களமாக மாற்ற வேண்டியுள்ளது. சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இத்திணைக்களம் ஒப்பந்தங்களை செய்து எமது மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை தொடர ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 

முஸ்லிம் மக்கள் தொடர்பில் ஏனைய சமூகங்கள் மத்தியில் உள்ள தப்பபிப்பிராயங்களை நீக்க இத்திணைக்களம் செயற்பட வேண்டும். அதற்கான ஒரு பிரிவு இத்திணைக்களத்தின் கீழ் இயங்க உருவாக்கவுள்ளேன்.  

வடகிழக்கிலும் அதற்கு வெளியேயும் சமய, சமூக ரீதியாக பல பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.  தேசிய ரீதியில் காணிப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை என பல பிரச்சினைகளையும்  எமது சமூகம்  எதிர்நோக்கியுள்ளது. இவைகளை தீர்த்து வைப்பதற்காக தனியான முஸ்லிம் செயலணி உருவாக்கப்பட வேண்டும். 

இவ்வாறு ஏராளமான ஆலோசனைகள் சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றது. இவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தின் உதவிக்கு அப்பால் சர்வதேச உதவியையும் பெற்று சிறப்பாக முன்னெடுப்பேன் என்றார். 

-R. Hassan

No comments:

Post a Comment