அரசியல் குழப்பம்: லஞ்சக் குடியரசு? - sonakar.com

Post Top Ad

Wednesday 7 November 2018

அரசியல் குழப்பம்: லஞ்சக் குடியரசு?


அரசியல் உலகின் அதிசயம் ஒன்று சத்தம், சந்தடி இல்லாமல் ஸ்ரீ லங்காவில் நடந்தேறிய நாள்தான் 26.10.2018. மூன்றாம் கிழமையை நெருங்கும் இந் நிகழ்வானது ஸ்ரீ லங்காவில் குழப்பம்! அனைத்தும் குழப்பம்!! குழப்பத்தை தவிர வேறொன்றுமில்லை!!! என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. இருந்தபோதிலும் இந்த அசாதரண அரசியல் சூழ் நிலை சட்டவாளர், அரசியல்வாதிகள் என்போரை மாத்திரமல்ல சாதாரண மக்களையும் நாட்டின் அரசியலமைப்பு பற்றிய அறிவையும், அது சம்பந்தமான தேடலையும் அதிகரிக்கவைத்துள்ளது என்ற உண்மையையும் மறக்க முடியாதுள்ளது. 

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நடப்பு கூட்டரசாங்கத்தின் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கடிதம் மூலம் அவருக்கு அறிவித்த கையோடு "பொட்டு" கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக அறிவித்தலானது அரசியலமைபின் அடிப்படையில் பிழை என்று ஒரு சாராரும், இல்லை அந்த அறிவிப்பானது அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு உட்பட்டது என்று மறுசாராரும் வாத பிரதிவாதங்களில் ஈடுபட்டு நாட்டு மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த முயற்சித்த போதும் ஐக்கிய தேசிய கட்சியினதும், பொட்டு கட்சியினதும் அதிதீவிர ஆதரவாளர்களின் சமூக வலைத் தளங்களோ தமது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்றால் போல் சட்ட வியாக்கியானம் செய்து சுய இன்பம் காண்பதையும் மறுப்பதற்கில்லை.



ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்பது அந்நாட்டின் அதி உயர்ந்த சட்டமாகும். இருந்த போதிலும் இத்தகைய உயர் சட்டம் பிழையில்லாத. ஓட்டையில்லாத, விரும்பியவாறு வளைக்க முடியாத சட்டமல்ல. இந்த சட்டம் தேவையின் நிமித்தம் இதுவரை எண்ணிக்கை அடிப்படையில் 18 திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட  போதிலும் இலக்க அடிப்படையில் 19 திருதங்களுக்கு உட்பட்டு 20ம் திருத்தத்தையும் விரைவில் எதிர்பார்த்து நிற்கின்றது.  

ஜனாதிபதியினால் வேண்டுமென்றோ அல்லது அவரின் அறியாமையினாலோ ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அசாதரண அரசியல் சூழ்நிலை  ஸ்ரீ லங்காவின் சட்டமாஅதிபரின் பார்வையில் சட்டமீறலாகும். அதாவது சட்ட சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது என்பதை சுருக்கமாக சொல்லிவிட்டார்.  அரசியலமப்பு சட்டத்தில் இப்படியான சிக்கல் ஏற்படும் போது அதை தீர்த்துவைக்க பல நாடுகளிலும் அரசியலமைப்பு நீதிமன்றங்கள்(Constitutional Court ) உள்ளன.  நமது நாட்டில் அதிவுயர் நீதிமன்றமான உச்ச நீதிமன்றம்(Supreme Court) இத்தகைய நிலைமைகளை கையாள அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டின் அதியுயர் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் நடத்தையினால் பாதிக்கப்பட்டுள்ள நடப்பு பிரதமர் ரனில் விக்கிரமசிங்கா தனக்கு இழைக்கப்பட அநீதிக்கு உச்ச நீதிமன்றில் பரிகாரம் தேடி விண்ணப்பம்/வழக்கு தாக்கல்  செய்யலாம். உச்ச நீதிமன்றம் தனது விசாரணையில் அநீதி இழைக்கப்பட்டதை காணுமானால் ஜனாதிபதின் நடத்தை அரசியலமைப்புக்கு எதிரானதென்று முடிவெடுத்து அதை வரிதற்றதாக( null and void) அறிவிக்கும். அந்த கட்டத்தில்  புதிதாக (தற்காலிக) பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்ச அப்பதவியை மீள்கையளிக்க வேண்டும். ஆனால் ரனில் விக்கிரமசிங்கா இதுவரை வழக்கு தாக்கல் செய்ததாக தெரியவில்லை. பலருக்கு அதன்  காரணமும் புரியவில்லை.

இந்த விடயத்தி உச்ச நீதின்ற தலையீடு நாடப்படுகிறதோ இல்லையோ ரனில் விக்கிரமசிங்க ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கின்றார், அதாவது, அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் படி  பாராளுமன்றில் தனக்கான பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்தி தன் பிரதமர் பதவியை   
தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற அம்சமே அது.   அரசியலமைப்பின் இந்த ஏற்பாடுதான் ஜனாதிபதியையும் இன்றைய நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது எனலாம். கடந்த ஏப்பிரல் (04.2018) மாதத்தில்   பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், தோல்வியை தழுவிய போதிலும் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு வழங்கும் அதிகாரமான, அதாவது "  பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் அரசாங்கத்தை நம்பிக்கையுடன் கொண்டு நடத்தக் கூடியவர்" என்று கருதும் ஒருவரை ஜனாதிபதி பிரதமராக்கலாம் என்ற அம்சம். அதாவது ஏழு மாதத்துக்குள் பழைய நிலை மாறிவிட்டது என்ற ஜனாதிபதியின் கற்பனை இன்றைய நிலைக்கு பிரதான காரணமாக அமைந்துவிட்டது.  

இது வெறுமனே  குறிப்பிட்ட ஒரு நபருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என ஜனாதிபதி  "நினைக்கின்றார்" என்பதால் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக அத்தகைய பெரும்பான்மை குறிப்பிட்டவருக்கு இருக்கின்றாதா என்பதை நேரடியாக கண்டறிந்து உறுதி செய்த பின்பே தன் முடிவை ஜனாதிபதி  நாட்டுக்கு அறிவித்திருக்க வேண்டும், அதுவும் ரனில் விக்கிரசிங்க ஏற்கனவே தனக்கான பெரும்பான்மை ஆதரவை நிரூபித்து இன்னும் அதன் சூடு தணிய முன்பு ஜனாதிபதியின் இந்த அதிரடி முடிவு உண்மையில் ஜனநாயக மீறலே. இந்த அதிரடி சட்ட மீறல், அதிகாரதுஸ்பிரயோகம் என்பதெல்லாம்  ஜனாதிபதி அரசியமைப்பு சட்டத்தை மீறிவிட்டார் என்பதனால் மாத்திரமல்ல. ஜனாதிபதியின் கடப்பாடு என்பது அரசியலமைப்பு சட்டத்தோடு  நாட்டில் உள்ள அனைத்து எழுதப்பட்ட சட்டங்களுக்கும்(National Laws), சர்வதேச சட்ட (International Law) ஏற்பாடுகளுக்கும், மரபு வழி நடத்தைகளுக்கும்(Customs), பாராளுமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் (Multilateral  Conventions ratified by our Parliament)ஏற்புடையதாக அமையவில்லை என்பதனாலும் ஆகும்.

அதே நேரத்தில் என்ன தான் விரும்பும் ஒருவரை பிரதமர் பதவியில் அமர்த்த ஏதுவாக, அதாவது வெளிப்படையாக சொல்வோமானால், குதிரை வியாபாரத்தின் மூலம், இன்னும் வெளிப்படையாக சொல்வோமானால், அதிகாரத்தின் ஊடாக ஜனநாயக விழும்மியங்களுக்கு எதிராக  லஞ்சம் ( பணமும், பதவியும்) கொடுப்பதையும், வாங்குவதையும் ஊக்கப்படுத்தி தன் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்ள பாராளுமன்ற பிரதிநிதிகளின்  ஒருவரான ராஜபக்சவுக்கு சந்தர்ப்பமளித்துள்ளார் ஜனாதிபதி என்பது ஒரு ஜனநாயக படுகொலை. லஞ்சத்துடன் ஜனாதிபதி சம்பந்தப்பட்டுள்ளார் என்பது நிரூபனமானால் அதுவே ஜனாதிபதி பாராளுமன்றத்தால் பதவி நீக்கப்பட(Impeach) போதுமான காரணியாகும்.

2015ல் நாட்டு மக்கள் கண்ட பொதுவேட்பாளர் சிரிசேனவும் இன்று மக்கள் காணும் ஜனாதிபதி சிரிசேனவும் இரு வேறுபட்ட குணாதிசயம் கொண்டவர்கள். முன்னையவர் தன்  நாட்டில் சட்ட ஆட்சியை மீண்டும் கொண்டுவர தன் உயிரை பணயம் வைத்தவர். பின்னயவரோ சட்டத்தை மீறிய தம் செயலை நியாயப்படுத்த மீண்டும், மீண்டும் சட்ட மீறல்களை செய்து கொண்டிருப்பவர், இதன் தெளிவான அத்தாட்சிதான்  (தற்காலிக) புதிய பிரதமர் நியமனத்துடன்  எதிர்வரும் 16ம் திகதி வரையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை "பக்கசார்பாக" ஒத்திவைத்த நிகழ்வு. 

நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக பார்க்கவேண்டிய, நடத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டவர் தன் நிறைவேற்று அதிகாரத்தை பகிர்ந்து பணியாற்றும் மந்திரிசபை உறுபப்பினர்களின் ஒருவரான பிரதமரை சற்று வித்தியாசமாகவே நடத்துவது ஜனாதிபதி நடுநிலையாக் நாட்டை நிறுவகிக்க, அதை  நிரூபிக்கத் தெரியாதவர் என்பதை சர்வதேச சமூகத்ததுக்கு தெளிவு படுத்திவிட்டார். பொதுவாக சட்ட ஆட்சியில் நம்பிக்கை கொண்டுள்ள மேற்கு ஐரோப்பா , அமெரிக்கா, கனடா, அவுஸ்த்ரேலியா போன்ற நாடுகள் ஜனாதிபதியின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டன என்பதை  இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகளை உடனேயே மீள் ஆரம்பிக்க வேண்டும் என்ற இந்நாடுகளின் கோரிக்கையில் இருந்து  கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது. 

ஆகவே நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை உறுதி செய்யும் பொருட்டு, நாட்டில் சட்ட ஆட்சியை உறுதி செய்யும் பொருட்டு, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மீள் கட்டியெழுப்பும் பொருட்டு ஜனாதிபதி  தான் தன்னிச்சையாக  அரசியமைப்பு சட்டமீறல் செய்ததையும், செய்து கொண்டிருப்பதையும் ஏற்றுக் கொண்டு தானாக பதிவி விலக வேண்டும், அல்லது பாராளுமன்ற நடவடிக்கைகளை காலதாமதமின்றி ஆரம்பித்து நடப்பு பிரதமரையும், தற்காலிக பிரதமரையும் தத்தமது பலத்தை நிரூபிக்க சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். இதை செய்ய தவறும் பட்சத்தில் ஸ்ரீ லங்காவின்1983 ஆண்டின் இன ஒடுக்கல் அரசியல் வரலாற்று பதிவின் ஜனாதிபதி ஜே.ஆர், 2009 ம் ஆண்டின் இனப்படு கொலை அரசியல் வரலாற்றுப் பதிவின் ராஜபக்ச வரிசையில் 2018ம் ஆண்டின் ஜனநாயக படுகொலை அரசியல் வரலாற்றுப் பதிவின் சொந்தக்கார் ஆகிவிடுவார் சிரிசேன என்பது மட்டும் உறுதி..     

இந்த அசாதரண சூழ்நிலையில் முஸ்லீம்(?) கட்சிகள் என்றறியப்பட்ட ஸ்ரீ.மு.காங்கிரஸ், அ.இ.ம.காங்கிரஸ் என்பன வழமையான தங்கள் பாணியில் இருந்து. அதாவது சமூக நலன், நாட்டு நலன் என்பவைகளை விடவும் தம் சொந்த, குடும்ப, கட்சி நலங்களையே முதன்மை படுத்தல் என்ற நிலையில் இருந்து சற்று முன்னேறி நீதி நேர்மையின் பக்கம் இன்னும் இருந்து கொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயமே. இருந்தும் இந்த பாராட்டையும் ஒரு நிபந்தனையின் அடிப்படையிலேயே தெரிவிக்க வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலையில்தான் நம் சிறுபான்மை இனம் இருந்து கொண்டிருக்கிறது. காரணம் 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அ.இ.ம.காங்கிரஸ் சற்று தைரியமாக சரியான நேரத்தில் தம் ஆதரவை பொதுவேட்பாளருக்கு கொடுக்க ஆயத்தமானாலும் ஸ்ரீ.மு.காங்கிரஸ் பதினொராவது மணித்தியாலத்திலேயே தம் ஆதரவை சரியான பக்கத்திற்கு வழங்க முன்வந்ததை மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்னும்மொரு பதினொராவது மணி நேர கட்சித் தாவலை இந்த இரண்டு கட்சிகளும் செய்யாமல் இருந்தால் அதுவே சிறுபான்மை இனம் எப்போதும் சலுகைக்கு பின்னால் ஓடும் கூட்டமல்ல ஜனநாயகத்தை பாதுகாப்பதில் நமக்கும் பாரிய பொறுப்புண்டு என்பதை உணர போதுமான அரசியல் வளர்ச்சி கொண்டவர்கள் என்பதையும், நாமும் இந் நாட்டின் உரித்தாளர்கள் என்பதையும் அதன் அரசியல் ரீதியான வளர்ச்சியில் நமக்கும் அக்கறையுண்டு என்பதையும் செயல் முறையில் நிரூபிக்க  நமக்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பமாகும். ஆக 2015ல் ஜனநாயகத்தை காக்க சிரிசேனவுக்கு முழு ஆதரவை அளித்தது போல் இம்முறையும் அதே ஜனநாயகத்தை பாதுகாக்க சிரிசேனவுக்கு முழு எதிர்ப்பையும் காட்டவேண்டும். 

இந்த சந்தர்ப்பம் துஸ்பியோகம் செய்யப்படுமானால் 2015ல் ராஜபக்ச தூக்கி எறியப்பட சிறுபான்மை இனம் எவ்வாறு பங்களிப்பு செய்தார்களோ அதை மீண்டும் சிறுபான்மை கட்சிகள் மீது பரிட்சித்துபார்க்க தயங்கமாட்டார்கள் என்பது திண்ணம்.


-Mohamed Nisthar

No comments:

Post a Comment