இவர்களுக்குள் அப்படி என்ன தான் பிரச்சினை? ஒரு அலசல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 17 November 2018

இவர்களுக்குள் அப்படி என்ன தான் பிரச்சினை? ஒரு அலசல்!


2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் மைத்ரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சியும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் இணைந்து பொது வேட்பாளராக அறிமுகப்படுத்திய போது நாடே கொண்டாடியது.

அளுத்கம வன்முறையின் வடுக்களை மறக்க முடியாத முஸ்லிம் சமூகமும், முள்ளிவாய்க்கால் வலிகளை இழக்க முடியாத தமிழ் சமூகமும், சர்வாதிகாரப் போக்கை அனுமதிக்க இயலாத சிங்கள சமூகமும் கை கோர்த்து இயங்கியதன் பயனால் மைத்ரி வெற்றி பெற்றார், ஜனாதிபதியானார். அதனைத் தொடர்ந்து அதே எழுச்சி அலையூடாக அடுத்த ஆறு மாதங்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசும் அமையப் பெற்றது.

2015 மார்ச் மாதம், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள மைத்ரிபால சிறிசேன லண்டன் வந்திருந்த போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள், நாட்டின் எதிர்காலம் பற்றி அவர் கொண்டிருந்த சிந்தனைகள் மற்றும் பார்வை, தன்னை நவீன இலங்கையின் சிற்பியாக (Modern Godfather) உருவாக்குவதில் அவருக்கு பலே நாட்டமிருந்ததை எடுத்துரைத்தது. 


என் கண் முன்னே நடந்த சில சம்பவங்கள், அதாவது தனது அதிகாரத்தின் வரம்பை மீறாது ஏனையோர் தமது பணியை சரி வரச் செய்ய வேண்டும் எனும் அவரது சிந்தனைப் போக்கு அவ்வேளையில் எனக்கும் பிடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் வெறும் ஆரம்பமே என்பதால் புதிய அரசு நிலை பெறுவதற்கு சற்று அவகாசம் வழங்கிக் காத்திருந்து அவதானித்து வந்தோம்.

அதன் பின் மைத்ரிபால சிறிசேனவை இரு தடவைகள் சந்தித்திருந்த போதிலும், இவ்வருடம் (2018) ஏப்ரல் சந்திப்பு, சற்றே கசப்பானதாகவும் திகன பிரச்சினைகளின் பின்னான உணர்வுகளைக் கொட்டித் தீர்க்க வேண்டியதாகவும் அமைந்திருந்தது (https://www.sonakar.com/2018/04/uk_18.html). அப்போது கூட அவரது பதில்களில் ஒரு தவிப்பும், இயலாமையுமே இருந்த போது, ஜனாதிபதியொருவரின் இந்நிலை மனதுக்குள் பல ஆயிரம் கேள்விகளை எழுப்பியிருந்தது.


திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தை போன்றோரின் கைங்கரியமே திகன வன்முறையின் பின்னணியென தெரிந்தும் அதற்கெதிராக முழு வீச்சில் இயங்க முடியாத சூழ்நிலையை அவர் வெளிக்காட்டிய போது, 2015ல் மத்திய மாகாண சபை விவகாரத்தில் அவ்வளவு தெளிவாக லண்டனிலிருந்தே முடிவெடுத்த ஜனாதிபதியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

இந்நிலையில், திடீரென கடந்த ஒக்டோபர் 26ம் திகதி அரசியல் புரளியை உருவாக்கி இன்று வரை நாடு அரசியல் ரீதியாக குழப்ப நிலையில் தொடர அவரே காரணமாகியுள்ளார். இந்நிலையில், ஒட்டு மொத்த இலங்கை சமூகத்தின் கோபமும் மைத்ரி மேல் விழுந்துள்ளது. ஆனாலும் அதைப்பற்றி அவர் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.

கடைசியாக 2018 ஒக்டோபர் 30ம் திகதி இரவு, கொழும்பில் பகத்தலே வீதியில் இடம்பெற்ற தனியார் நிகழ்வொன்றில், துமிந்த திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதிலும் இடையில் வருகை தந்து தனது வாக்கினைக் காப்பாற்றியிருந்த மைத்ரியிடம் இது பற்றிப் பெரிதாக கேட்க முடியவில்லை. ஆனாலும், என்ன நடக்கிறது? என்ற கேள்விக்கு வழக்கம் போல ஒரு நமட்டுச் சிரிப்புடன் வேறு விடயங்களைப் பேசிச் சென்று விட்டார்.

2015ல் அவரது பாதுகாப்பு அணியில் வந்திருந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் அப்போதே தனக்குப் பதவியுயர்வு கிடைக்கப் போவதாக தெரிவித்திருந்தார். எனினும் இரு வாரங்களுக்கு முன்னும் அவரும் இன்னும் அதே பாதுகாப்பு அணியிலேயே இருப்பதைக் கண்டு பதவியுயர்வு என்னாச்சு என வினவினேன்? இல்லை சேர், என்று அவரும் மழுப்பிச் சென்றார். ஆக மொத்தத்தில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது, எதிலும் முன்னேற்றமில்லையென்பது மாத்திரம் தெளிவாகியது.

இந்த சூழ்நிலையில் படித்தவர்களை சூழவைத்துக்கொண்டுள்ளதாகவும் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதாகவும் 2020ல் கடன் சுமையெல்லாம் தீர்ந்துவிடும் எனவும் தெரிவிக்கிற ரணில் விக்கிரமசிங்க பற்றியும் பார்த்தோமானால், ரணிலுடன் நேரடியாகப் பேசி விளக்கம் கேட்கும் வாய்ப்பிருக்கவில்லையாயினும் சாகல ரத்நாயக்க, ஹரின் பெர்னான்டோ, சுவாமிநாதன், ருவன் விஜேவர்தன, அஜித் பெரேரா, தயாசிறி ஜயசேகர, அருந்திக பெர்னான்டோ, ரிஷாட் பதியுதீன், ஹர்ஷ டி சில்வா, ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், ரவி கருணாநாயக்க, முஜிபுர் ரஹ்மான், H.M.M. ஹரீஸ், அலி சாஹிர் மௌலானா, ரோசி சேனாநாயக்க உட்பட இரு தரப்பையும் சேர்ந்த பிரமுகர்கள் பட்டியலுடன் அவ்வப் போது ஆழமாக உரையாடியுள்ளேன். யாருமே நிலையான அபிவிருத்தி பற்றிய உறுதியான விளக்கங்களை தரவில்லை.

அப்படியானால், இரு தரப்பும் இணைந்து இத்தனை நாள் என்ன செய்தது? எனும் கேள்விக்கும் பதில் வேண்டும். தொடர்ச்சியான அமைச்சரவைப் பிணக்குகளை அறிந்திருந்த போதிலும் என்றோ ஒரு நாள் அது இவ்வாறு அரசியல் பூகம்பமாக வெடிக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதற்காக மைத்ரிபால சிறிசேனவையோ, ரணில் விக்கிரமசிங்கவோ நியாயப் படுத்தவும் முடியாது.

எனினும், இருவருக்குமிடையில் அப்படி என்ன தான் நடந்தது என அறியும் ஆவல் எல்லோருக்கும் போல எனக்கும் உண்டு. அதன் பின்னணியில் கடந்த சில நாட்களாக ஜனாதிபதியுடன் நெருங்கிய பல்வேறு நபர்களுடன் இது பற்றி ஆழமாக உரையாடிப் பார்த்ததில் எல்லோருமே சொல்லி வைத்தாற் போல் அவரை ஒரு நாட்டுப்பற்றாளன் (Patriotic Citizen) எனவும் ரணில் தரப்பு நாட்டை அன்னியர்களுக்கு அடைமானம் வைத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மத்தள, திருகோணமலை, துறைமுக நகரம் (Port City) போக கொழும்பு துறைமுகத்தின் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு பகுதியையும் இந்தியாவுக்கு தாரை வார்ப்பதில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் பெரும் கருத்து வேறுபாடு நிலவி வந்தமை குறித்தும் அறியக் கிடைத்தது. இறுதியாக இப்பிரச்சினையே நீண்டு கொண்டு சென்றதாக பிரமுகர்கள் சுட்டிக்காட்டும் அதேவேளை அமைச்சரவை பிணக்குகள் அதற்குப் பலம் சேர்த்து வந்ததாகவும் தனக்குத் தேவையான மாற்று அரசியல் வழியை மைத்ரி தேடியதாகவும் அவர் சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.

இத்தனை பிளவுகளுக்கு மத்தியில் இத்தனை நாள் கூட்டாட்சி தொடர்ந்ததே பெரும் விடயம் என மூச்சு விட்டு முடிப்பதற்குள், ரணில் - மைத்ரி இடையே வேறு ஏதும் தனிப்பட்ட பிரச்சினைகள் உருவாகியதா என்றும் அலசத் தயங்கவில்லை. எனினும், நான் உரையாடிய யாருமே அவ்வாறு ஒரு பிரச்சினை இருப்பதாகக் கூறவில்லை. அதனையும் மீறி இருவர் மத்தியிலும் உருவாகியுள்ள இணைக்க முடியாத வேறுபாடு நாட்டின் நலன் அடிப்படையாகக் கொண்டதுதானா? எனும் சந்தேகத்துக்கும் முழுத் தீர்வு கிடைக்கவில்லை.

மைத்ரியின் குடும்பத்தினரும், ரணில் மற்றும் அமைச்சர்களின் குடும்பத்தினரும் கூட மணல், கட்டிட நிர்மாணம், போக்குவரத்து உட்பட முக்கிய பல தொழிற்துறைகளில் கொடி கட்டிப் பறக்கின்றனர். இந்த அளவில் இது பொருளாதார மேலாதிக்க யுத்தமா என சிந்திக்காமலும் முடியவில்லை. ஆனாலும், அதற்கான தேவை தனக்கில்லையெனவே இரு தலைவர்களும் பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்.

அப்படியானால், என்னதான் பிரச்சினையென்பதை நிகழ்வுகளைக் கொண்டே கணிப்பிட வேண்டியுள்ளது. 2015 ஆட்சிபீடமேறும் போது 2020ல் மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதில்லையென மைத்ரி கூறிய போதிலும் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) முறைமை அடிப்படையில் பிரதமர் ஆட்சியை உருவாக்கி மைத்ரிபாலவிடம் முக்கிய மூன்று அமைச்சுக்களை வழங்கி அவரை கௌரவ ஜனாதிபதியாக (Honorary President) மேலும் ஐந்து வருடங்களுக்கு பதவியிலமர்த்துவதே இரு தரப்பு உடன்பாடாக இருந்தது. அடுத்த மூன்று வருடங்களுக்குள் அதை வேண்டாம் என மைத்ரி புரட்சி செய்கின்ற போதிலும் தனித்து நின்று போட்டியிட்டு அவர் தேர்தலை வெல்லப் போவதில்லை. மஹிந்த தரப்பு தேர்தல் வரும் போதும் அவருடன் நட்பு பாராட்டும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.

இந்நிலையில், ஜனாதிபதியின் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீண்டகால சந்தேகம் மற்றும் விரிசலை எடுத்தியம்புகிறது. அதனைத் தெளிவாக்கி நட்புறவைப் பேண மறுத்தது ரணிலின் குற்றம் என்றால் மிகையில்லை. ஆனாலும் இருவருக்குமிடையில் ஆரம்பமாகியுள்ள இந்த யுத்தம் நாட்டின் கௌரவத்தையும், கீர்த்தியையும் வெகுவாக பாதித்து விட்டது.

இதற்கு பதில் சொல்லப் போகிறவர் யார்? எனத் தெரியவில்லை. ஆனாலும், ஒவ்வொரு அமைச்சரின் செயற்திட்டத்தின் (Business Projects) பின்னணியிலும் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வந்தது. பொருளாதார போட்டியும் அதிருப்தியும் நிலவி வந்தது என்பது கண்டறிந்த உண்மை.

2015 ஆட்சி மாற்றத்தின் அடுத்த சில மாதங்களுக்குள்ளேயே ஒஸ்டின் பெர்னான்டோவின் மருமகன் என்ற காரணத்தினால் லண்டன் இலங்கைத் தூதரகத்தில் ஒருவருக்கு தொழில்வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்ததைக் கண்டு முகம் சுளிக்க நேர்ந்தது. இன்றும் ஊழல் மலிந்த உட்பூசலை நினைத்து வருத்தத்துடன் தொய்கிறது மனம்!


-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
https://www.facebook.com/irfaninweb

No comments:

Post a Comment