
சியாறங்களும் , அதன் அமைவிடங்களும் முஸ்லிம் வரலாற்றிலும், அதன் நீண்ட இருப்பிலும் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன, எமது பூர்வீகத்தின் ஆதாரங்களாகவும், தொல்லியல் வடிவங்களாகவும் இன்று எஞ்சி இருப்பவை சியாறங்களே,,
மட்டுமல்ல அவை எமது இன்றைய நெருக்கடியான வாழ்வியல் பிரச்சினைகளில் இருந்து சற்று நேரம் நிம்மதிப் பெரு மூச்சை சுவாசிப்பதற்கான சுற்றுலா "#ஆறுதல் #மையங்களாக"வும் அமைகின்றன. அந்த வகையில் கட்டவுலியா சியாறம் பற்றி இப்பதிவு ஆராய்கின்றது,
அமைவிடம்
Kalmunai - Ampara வீதியில் சம்மாந்துறை தொழிநுட்பக்கல்லூரி, சம்மாந்துறை வரவேற்பு வளைவு(Gateway) என்பவற்றைத் தாண்டி அம்பாறை நோக்கிச் செல்லுகின்ற போது , எமது இடதுபுறத்தில் Jaleel hotel அருகில் செல்லும் " #காட்டவுலியாசியாற வீதியூடாகத் திரும்பி கிட்டத்தட்ட 5 KM வயல்களினூடாகவும், பனை மரங்களையும், நீரோடைகளையும் தாண்டிச் செல்கின்ற போது , இந்த இடத்தை அடை முடியும், இது அனைத்து வாகனங்களும் பயணிக்கக் கூடிய இயற்கை அழகைக் கொண்ட பாதை ,இதில் இடையிடையே, பறவைகளைக்காணவும், ஓசைகளைக் கேட்கவும் முடியும்,
பின்னணியும் - புராதனமும்
சம்மாந்துறை சேனைவட்டை யில் சுற்றி வர வயல் வெளிகளுக்கும் , நீரோடைகளுக்கும் மத்தியில் அமைந்துள்ள ஒரு புராதன கட்டிடத்தின் ஒரு பகுதியில் #இச்சியாறம் அமைந்துள்ளது,
இயற்கை ,மற்றும் இன வன்முறைகளினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் இக்கட்டிடம் இப் பிரதேசத்தின் புராதனத்தை அப்படியே வெளிக்காட்டுகின்றது, மட்டுமல்ல இது ஒரு தொழுகைக்கான பள்ளிவாசலாகவும் இயங்கி இருக்கின்றது, இதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய இரண்டு மாடி, தொழுகை அறை எல்லா வசதிகளையும் கொண்டதாக உள்ளது,
நீர் வசதிகளுக்காக, 2 கிணறுகள் சுத்தமான நீர் வசதியுடன் உள்ளன, சுற்றிவர மரங்களும் உள்ளன,
யார் இந்தப் பெரியார்?
இங்கு அடங்கப்பட்டிருக்கும் பெரியாரின் பெயர்" #காட்டவுலியப்பா, #காட்டுவாவா என அழைக்கப்படுகின்றது, இவர்கள் யெமன், அல்லது பாரசீகத்தைச் சேர்த்த மிக முக்கியமான குடும்ப்ப் பின்னணி கொண்ட, நபிகளாரின் வழி முறையில் வந்த ஒரு நாடுகாண் சமயப் போதகர் என்ற நம்பிக்கைகள் இப்பிரதேச விவசாயிகளிடையே உள்ளது,
இது கிட்டத்தட்ட கி.பி.1800 ம் ஆண்டளவில் #கோட்டுப்போடியார், எனப்பட்ட மீராசாகிபு சேனா வட்டை வட்டானையாக இருந்த வேளையில் அடர்ந்த காடுகளின் நடுவே கண்டு பிடிக்கப்பட்ட சியாறமாகும் .ஆனாலும் சியாறத்தின் காலம்,இதைவிட பல நூறு ஆண்டுகள் பழமையாக இருக்க முடியும்,
சமூகப் பாத்திரம்
இக்கட்டிடத்தையும், இங்குள்ள கிணறுகளையும் இவ்வயல் வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகள் தொழுகைக்காகவும், ஓய்வுக்காகவும் பயன்படுத்துகின்றனர், அதே போல் இங்குவரும் பொதுமக்கள் இங்கு குடும்பங்களுடன் வந்து சமைத்து , ஆறுதலாக இருந்து விட்டு செல்லுகின்றனர். மட்டுமல்ல, முன்பு வயல் அறுவடைக்கு முதல் இங்கு"கந்தூரி வழங்கப்பட்தாகவும், குறித்த அவுலியாவின் பெயரில் பல பக்தியான சம்பவங்கள், நடந்துள்ளதாகவும், விவசாயிகளும், மக்களும் இன்றும் நம்புகின்றனர்,
இதன் புராதனத்தையும், மக்கள் புழக்கத்தையும் குறுகிய இயக்கவாத நோக்கில் இல்லாமல் செய்ய முனைவது ,எதிர்காலத்தில் இப்பிரதேச காணிகளுக்கான " தொல்லியல் " அச்சுறுத்தலைக் கொண்டு வரும் என்பது எனது கணிப்பீடு,
பொருளாதார, சமய ,சமூகப்பங்கு
இலங்கையில் உள்ள புராதன சியாறங்களும், அதில் அடங்கப்பட்டுள்ள பெரியார்களும்,அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, மரணித்த பின்னரும் , முஸ்லிம் வாழ்வியலுக்கும், பொருளாதாரத்திற்கும், பாரிய பங்களிப்பைச் செய்து கொண்டே வருகின்றனர்,
அந்த வகையில் குறித்த #சேனை #வட்டையில் உள்ள பல ஆயிரக்கணக்கான, ஏக்கர் காணிகள் முஸ்லிம் விவசாயிகளுக்குச் சொந்தமாக இருப்பதற்கு, இச்சியாறத்தின் பழைமையும் , அதன் பின்னர் கட்டப்பட்ட பளிளிவாசலுமே காரணம், என்பது உறுதியான கணிப்பீடு, இதற்கு இன்றும் இங்குள்ள விவசாயிகள் நன்றி உடையவர்களாக உள்ளனர்,
பொழுதுபோக்கு
அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்ல, நாட்டின் எப்பிரதேசமாயினும், இஸ்லாமிய அடிப்படையில் மனதுக்கு இதமான நீர்நிலைகள், வயல்வெளி, சமைத்தல் , போன்றவற்றுடன் தமது உல்லாசமான பொழுது போக்கையும், ஒரு வரலாற்று இடத்தைக் கண்ட திருப்தியையும் பெற்றக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகப் பொருத்தமான ஒரு இடமாக இது உள்ளது எனலாம்,
இங்குள்ள வயல் வெளிகளும், சுத்தமான இயற்கைக் காற்றும், பறவைகளும் இயற்கையை விரும்பும் அனைவருக்கும் ரம்மியமானது மட்டுமல்ல, பாதையின் அருகில் உள்ள #வம்மியடிபெட்டிக்கடை உணவுகளும் மன மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருகின்றது,
எதிர்காலச் செயற்பாடு
உலகின் எங்கோ ஒரு, பகுதியில் இருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முதல் குறித்த கொடிய விலங்குகள் நிறைந்த காட்டுப்பகுதியில் தங்கி இருந்து மார்க்கப் பணியும், எம் இன்றைய இருப்பிற்கான பொருளாதார, சமூக, பணிகள் பலவற்றை ஆற்றி விட்டு இன்று அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு மகானைச் சென்று பார்ப்பதும்,
அதனூடாக எமது இருப்பின் நீண்ட வரலாற்றையும், சமயத்தின் சர்வதேசத் தொடர்பையும், நாமும் ,அறிவதுடன் எமது எதிர்கால சந்த்தியினருக்கும் எத்தி வைப்பதற்கான அத்தனை ஆதாரங்களையும் கொண்டதாக ,இவ் இடமும், இங்குள்ள ஆதாரங்களும் உள்ளன, எனவேதான்,
"எம்-இருப்பின் வேர்களைக் காணப் பயணிப்போம், அவற்றை அடுத்த தலைமுறைக்கான ஆதாரங்களாகவும் பாதுகாப்போம் . "
MUFIZAL ABOOBUCKER
முபிஸால் அபூபக்கர்
SENIOR LECTURER
UNIVERSITY OF PERADENIYA
No comments:
Post a Comment