பலாந்தை முஸ்லிம் கிராமம் : ஒரு பார்வை - sonakar.com

Post Top Ad

Saturday 20 October 2018

பலாந்தை முஸ்லிம் கிராமம் : ஒரு பார்வை


அறிமுகம்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 9.4%மான முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இந்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இதில் அம்பாறை, திருகோணமலை மாவட் டங்களில் பெரும்பான்மையாகவும், கொழும்பு, கண்டி, கழுத்துறை, கம்பஹா, மட்டக்களப்பு, புத்தளம், குருணாகல் ஆகிய மாவட்டங்களில் அதிகமான எண்ணின்னையிலும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவான முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றார்கள்.



இவ்வாறாக பரந்து வாழும் முஸ்லிம்கள் புராதன இலங்கையில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள். 

முஸ்லிம் வர்த்தகர்கள் தவள முறையில் பயணங்களை மேற்கொள்ளும் போது ஓய்வெடுப்பதற்காக தரித்து நிற்க அமைத்துக் கொண்ட அம்பலங்கள் பிற்காலத்தில் கிராமங்களாக மாறின.

இலங்கைவாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களை மாத்திரம் கொண்ட பெரிய, சிறிய கிராமங்களும், முஸ்லிம்களைப் பெரும் பான்மையாகவும், சிறுபான்மையாகவும் கொண்ட கிராமங்களும், முஸ்லிம்களால் கைவிடப்பட்ட கிராமங்களும் காணப்படுகின்றன.

இதன் அடிப்படையில் முஸ்லிம் கிராமங்களின் தோற்றப்பின்னணி, குடிப்பரம்பல், இனநல்லுறவு, கல்விநிலை, பொருளாதார கட்டமைப்பு உள்ளிட்ட பல விடயங்களை கண்டறிந்து அவற்றை அடையாளப்படுத்துவது எனது நோக்கமாகும்.


மேற்படி நோக்கத்தைக் அடைவதற்காக கிராம வாசிகளிடம் வாய்வழியாக் கூறப்பட்டுவரும் வாய் வழிவரலாற்றுக் கூற்றுக்கள், பள்ளிவாசல்கள், அடக்கஸ்தலங்கள், ஏனைய தொல்லியல் ஆதாரங்கள் மூலம் கிராமங்கள் தொடர்பான தகவல்களை சேர்த்து வருகின்றேன். 

இலங்கையின் தலைநகர் கொழும்பு அமைந் துள்ள மாகாணம் என்ற வகையில் மேல் மாகாணம் முதன்மை பெறுகின்றது. இம்மாகாணம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களைக் கொண்டுள்ளது.
இம்மூன்று மாவட்டங்களுள் ஒன்றான களுத்துறை மாவட்டம் 2012ம் ஆண்டு குடிசன மதிப்பீட் டின் பிரகாரம் 1,221,948 மொத்த சனத்தொகையையும், 8 தேர்தல் தொகுதியையும், 4 நகர சபைகளையும், 10 பிரதேச சபைகளையும் கொண்டுள்ளது.

அமைவிடம் 

களுத்துறை மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக பிரிவினுள் சம்பரகமுவ, தென்மாகாண எல்லைகளில் அமைந்துள்ள பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவினுள் காணப்படும் முஸ்லிம்கள் வாழும் ஒரேயொரு கிராமம் பலாந்தை ஆகும்.

இப்பிரதேச செயலகம் கொண்டுள்ள 50,382 மொத்த சனத்தொகையில் 45,492 பேர் சிங்கள பெரும்பான்மை மக்களும், 5,303 தமிழ் மக்களும். 577 முஸ்லிம்களுமாவர். இம் முஸ்லிம்கள் அனை வரும் பலாந்தை எனும் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அகலவத்தை நகரிலிருந்து இரத்தினபுரி செல்லும் பிரதான பாதையில் பதுரெலிய, லப்பந்துறை சந்தியில் இருந்து குகுலேகங்கை செல்லும் பாதையில் மேலும் 6 கி.மீ தூரத்தில் பலாந்தை எஸ்டேட் செல்லும் குறுகிய பாதை காணப்படுகின்றது. இப்பாதை ஊடாக மேலும் 2 கி.மீ. தூரத்தில் பலாந்தை முஸ்லிம்கள் வாழும் கிராமத்தை அடையலாம்.

மொறப்பிட்டிய, அத்துவல்தோட்ட பாம்பாறை, மோல்காவ ஆகிய வரலாற்று முக்கியத் துவமிக்க கிராமங்களையும், கெலின்கந்தை மலைத்தொடரையும், தேயிலை, இறப்பர் போன்ற ஏற்றுமதி பயிர்களையும், இயற்கை வளங்களையும் கொண்டமைந்ததாக இக்கிராமம் காணப்படுகின் றது.
இக்கிராமத்தை மத்தியை பெலங்கங்கை ஊடறுத்துச் செல்வதால் கிராமத்தின் ஒரு கரை அக்கரை எனவும், மறுகரை இக்கரை எனவும் அழைக் கப்படுகின்றது.

எல்லைகள்

மொறப்பிட்டிய, மோல்காவ, கப்புக்கெதர, மினிகந்தல, கெலின்கந்த, பாம்பாறை, ஆகிய சிங்கள கிராமங்களின் மத்தியில் காணப்படும் பலாந்தை மேல்;மாகாணத்தின் கிழக்கெல்லையில் அமைந்துள்ளது.
பலாந்தையின் வடக்கே: மோல்காவ, குகுலே கங்கை, கிழக்கே: மொறப்பிட்டிய, தெற்கே: பதுரெலிய, லப்பந்துற, மேற்கே: பலாந்தை தோட்டப் பிரதேசம் போன்ற பிரதேசங்கள் எல்லைக ளாகக் காணப்படுகின்றன.

சுருக்க வரலாறு 

கண்டி இராட்சிய காலத்தில் நாட்டினுள் நுழைந்த போத்துக்கேயர்கள் (1505) வர்த்தகத்தில் தமது ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கும், கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்கும், ஆட்சியைக் கைப்பற்று வதற்கும் பிரயத்தனங்களை மேற் கொண்டு வந்தனர்.

இதற்காக போத்தக்கேயர்கள் கண்டி இராட்சி யத்தின் மீதும் அதனுடன் இணைந்த சிற்றரசுகளின் மீதும் படையெடுப்புக்களை மேற்கொண்டு வந்தனர். அக்காலத்தல் சிற்றரசு ஒன்றை ஆட்சி செய்துவந்த வீரிய பண்டார எனும் சிற்றரசன்; போத்துக்கேயரின் படையெடுப்;பின் காரணமாக தன் இராச்சியத்தை இழந்த பின்னர் அவனது உயிரை காத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன்போது பலாந்தை எல்லைப் பிரதேசத்தில் காணப்பட்ட சிங்கராஜவன காட்டையும் அதனைச் சூழவுள்ள மொறப்பிட்டிய எனும் பிரதேசத்தை தனது பாதுகாப்பு பிரதேசயமாகக் கொண்டான். பின்னர் அத்துவல்தோட்ட, கெலின்கந்த, பாம்பாறை போன்ற பிரதேசங்களையும் நாடிச் சென் றான்.
வீரிய பண்டார தனது பாதுகாப்புப் படையின் பிரதானியாக இரு முஸ்லிம் வீரர்கள் காணப் பட்டார்கள். போத்துக்கேயரிடமிருந்து பாதுகாப் பிற்காக வனப்பிரதேசத்தினுள் சென்ற அவன் அவ்விரு முஸ்லிம் வீரர்களுடன் மேலும் ஒரு முஸ்லிம் சமயலாளரையும் அழைத்துச் சென்றான்.


காலத்திற்குக் காலம் பாதுகாப்புப் பிரதேசங் களை மாற்றிக் கொண்ட வீரிய பண்டார பலாந்தை பிரதேச த்தில் ஒரு மாளிகையை அமைத்து அதில் சில காலம் தங்கினான்.

எதிரிகள் தன்மை தாக்க முட்படும் வேளை இப்பிரதேசத்தின் அடர்ந்த காடுகளுள் காணப்பட்ட அட்டைகளைக் கொண்டு எதிரிகளைத் தாக்கி தன்னை காத்துக் கொள்ளும் திட்டத்தை அவன் கொண்டிருந்தார்கள்.
வீரிய பண்டார சிற்றரசன் தங்கியிருந்த மாளிகை பிற்காலத்தில் பௌத்த விகாரையாகவும், அவனோடு வந்த மூன்;று முஸ்லிம்களும் பலாந்தையின் அக்கரையில் ஒருவீரனுடன் சமயலாளியும், இக்கரையில் ஒரு வீரனும் குடியமர்ந்தனர்.

இவ்வாறாக குடியேறிய மக்களே பலாந்தை யின் பூர்வீகக் குடிகளாவர். தற்பொழுது பலாந்தையில் சுமார் 1000 சிங்கள குடும்பங்களும், 250 இலங்கை, இந்திய தமிழர் குடும்பங்களும், 200 முஸ்லிம்கள் குடும்பங்கள் நெருக்கமான உறவுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கண்டி இராட்சியத்தில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் மட்டுமல்லாது இந்நாட்டு மன்னர்களுக்கு விசுவாசமானவர்களாகவும், படைவீரர்களாகவும் இருந்து வந்துள்ளமைக்கு இக்கிராமத்தின் தோற்றம் ஒரு சான்றாகும்.
பள்ளிவாசல்கள்

கிராமத்தின் அக்கரையில் அமைக்கப்பட்ட பள்ளிவாசலே இக்கிராமத்தின் பூர்வீகப் பள்ளிவாச லாகும். ஆரம்ப காலங்களில் ஒரு சிறிய குடிசைப் பள்ளிவாச லாக ஆரம்பிக்கப்பட்ட இது பலாந்தை ஜூம்ஆ பள்ளிவால் என அழைக்கப்பட்டது. இப்பள்ளிவாசல் இன்று மஸ்ஜிதுல் நூராணியா ஜூம்ஆப் பள்ளிவாசல் என அழைக்கப்படுகின்றது.

இப்பள்ளிவாசல் பல புனருத்தானங்கள் செய்யப் பட்டுவந்த போதிலும் இதன் தொன்மை அழிந்து விடாத வகையில் பாதுகாக்கப்பட்டுவரு கின்றமை வரவேற்கத்தக்கதாகும்.

இப்பள்ளிவாசலுக்கு மேலதிகமாக ஊரின் இக்கரையில் மஸ்ஜிதுல் நூர் தைக்கப் பள்ளிவாசலும் 2007ம் ஆண்டு அமைப்பட்டுள்ளது.

தொழில்கள்

இக்கிராம மக்கள் ஆரம்பகாலங்களில் காட்டுத் தொழில்களிலும், மாட்டு வியாபாரங்களிலும் ஈடுபட்டுவந்துள்ளனர். 

பின்னர் வர்தத்கம், தேயிலை, இறப்பர், விவசாயம் கூலித்தொழில், சமயல் தொழில்கள் போன்ற தொழில்களிலும் இக்கிராம மக்கள் ஈடுபட்டனர். ஆரம்ப காலங்களில் ஒருசிலர் மாணிக்க வியாபாரங்களிலும், இன்றைய காலத்தில் சிலர் ஆசிரியர்களாகவும் தொழில் புரிந்து வருகின்றனர்.

களவானை, களுத்துறை போன்ற பிரதேசங் களில் நகைக்கடை, புடவைக் கடைகளையும் இங்குள்ள மக்களில் சிலர் நிறுவி தொழில் புரிந்து வருகின்றனர்.

கல்வி

சிறு முஸ்லிம் சனப்பரம்பலைக் கொண்டதாக இக்கிராமம் காணப்பட்ட போதும் இங்கு காணப் படும் பலாந்தை முஸ்லிம் வித்தியாலயம் இக்கிராமத் தின் மிகப் பெரிய அடையாளமாகும்.

1944ல் 10 மாணவர்களைக் கொண்டு ஜூம்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் இப்பாடசாலை அமைக் கப்பட்டு, 1947ல் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட் டது. பலாந்தை முஸ்லிம் வித்தியாலயம்;

காலவோட்டத்தில் பிள்ளைகளின் எண்ணிக்கை, பௌதீக வளங்கள், ஆசிரியகளும் அதிகரிக்கப்பட் டன. தரம் 1 - 11 வரையான வகுப்புக்களைக் கொண்டுள்ள இப்பாடசாலையில் இன்று மொத்தம் 163 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். 

க.பொ.த. தரம் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் உதயர்தரம் கற்பதற்காக வெலிப்பனை, பேருவளை, வெயங்கலை ஆகிய பிரதேச பாடசாலை களை நாடிச் செல்கின்றனர்.

இனநல்லுறவு

சூழ சிங்கள மக்கள் வாழும் கிராமங்களின் மத்தியில் அமைந்துள்ள பலாந்தையில் பெரும் பான்மையாக சிங்கள மக்களும், சிறு தொகையினர் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர். இருந்தா லும் இக்கிராமத்தில் சிங்கள முஸ்லிம் உறவானது ஆரோக்கியமான நிலையில் காணப்படுகின்றது.

இக்கிராமத்தின் பூர்வீக வரலாற்றுடன் தொடர்புடைய வீரிய பண்டாரவின் பாதுகாப்பிலும், நம்பிக்கையிலும் முதன்மையாக இருந்தார்கள். இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அண்மைக்கால மாக பேரினவாதக் குழுக்களினால் பல்வேறு வகையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் பலாந்தை வாழ் முஸ்லிம்கள் இதுபோன்றதொரு தாக்குதலுக்கு உள்ளாகாதவகையில் அம் மக்களை பாதுகாக்கும் பொறுப்புள்ளவர்களாக இங்கு வாழும் சிங்கள மக்கள் செயற்படுகின்றார் கள்.

இப்பிரதேசத்தில் முஸ்லிம்களின் திருமண நிகழ்வுகளின் போது சிங்கள மக்கள் கலந்து கொள்வதுடன் அவர்களுக்கென பிரத்தியேக விருந்து உபசரிப்புக்களும் ஏற்பாடுசெய்யப்படுவ தும், சிங்களவர்களின் திருமண நிகழ்வுகளில் பெரும்பாலாக சமயல் பொறுப்புக்களை முஸ்லிம் கள் சமையல்காரர்கள் சமைக்கும் நடைமுறை இருந்து வருகின்றது.

இந்நடைமுறையானது இக்கிராமத்தின் பூர்வீ கத்தோடு தொடர்புடைய ஆரம்பக்குடிகளில் ஒருவரான இருந்த சமயல்காரருக்கும், வீரிய பண்டாரவுக்கும் இடையில் காணப்பட்ட உறவின் நீட்சி எனலாம்.

இதற்கு மேலதிகமாக இப்பிரதேசத்தில் சிங்கள சகோதரரின் மரணவீடுகளில் சமயல் செய்பவர்களா கவும் பெரும்பாலும் இக்கிரா மத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருந்து வருகின்றார்கள்.

காலாகாலமாக இக்கிராமத்தில் நடாத்தப்பட்டு வரும் ஹிழ்ர் கந்தூரி நிகழ்வுகளிலும் இப்பிரதேசத் தில் வாழும் சிங்கள மக்கள் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொள்வதோடு மட்டுமல்லாது காணிக்கைகளை வழங்கும் ஒரு வழக்கம்; இருந்து வந்துள்ளது.

கடந்த காலங்களில் இப்பிரதேசத்திற்கு சமீபமாக உள்ள அளுத்கமை, பேருவளை போன்ற பிரதேசங்களிலும், கண்டி, திகனை போன்ற பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் மீது இனவாதக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாதத் தாக்குதல்களின் போது இக்கிராம மக்கள் பெரும் அச்சம் கொண்டிருந்தார்கள்.

இச்சூழலின் போது இக்கிராமத்தில் வாழும் சிறு தொகை முஸ்லிம் மக்களை பாதுகாத்து அவர்களின் அச்சத்தைப் போக்குவதில் இங்கு வாழும் பெரும் பான்மை சிங்கள சகோதரர்கள் முன்னின்று செயற்பட்டனர்.

இவர்கள் வெளியிடங்களிலிருந்து வரும் இனவாதக்குழுக்களை இப்பிரதேசத்தினுள் நுழையாத வகையில் பலாந்தை விகாராதிபதியும், மக்களும் ஆற்றிய பங்களிப்பு மிகப் பெறுமதியா னவை.

இதுபோன்ற பல சம்பவங்கள் பலாந்தை வாழ் சிங்கள - முஸ்லிம் நல்லுறவில் ஆழமாக பதியப் பட்டுக் காணப்படுகின்றன. சிங்கள மக்களுடன் எப்பொழுதும் இணைந்து வாழும் இதுபோன்ற பல கிராமங்கள் அவர்களுக்கிடையில் நிழவிவரும் இன உறவுகள் உறுதியாக இருந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றன.

பலாந்தையில் வாழும் முஸ்லிம்கள் வெலிப்பனை, வெயங்கலை, மதுகமை, களுத்துறை, பேருவளை போன்ற பிரதேச முஸ்லிம்களுடன் திருமணம் உள்ளிட்ட பல தொடர்புகளுடனும், கல்விச் செயற்பாடுகள் போன்ற  தொடர்புகளையும் பேணிவருகின்றனர். 

இப்பிரதேசம் தவிர்ந்த தூரப் பிரதேசங்களுக்கி டையிலான தொடர்புகள் இக்கிராம மக்களிடத் தில் மிகக் குறைவாகவே இருந்து வருகின்றது. 

குக்குலேகங்கை திறந்துவிடப்படும் சந்தர்ப்பங்களில் இக்கிராமத்தின் மத்தியில் ஓடிக்கொண்டி ருக்கும் பெலங்கங்கை பெருக்கெடுத்து இக்கிராமத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கின்றன. இவ்வாறாக பல பாரிய வெள்ளங்கள் இக்கிராமத் தில் ஏற்பட்டுள்ளன. 

முடிவுரை

புராதன இலங்கை வரலாற்றில் ஒரு சிற்றரசன் ஒருவனின் நம்பிக்கையுடனும், பாதுகாப்புடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த பலாந்தை எனும் முஸ்லிம்கள் வாழும் கிராமம் இந்நாட்டின் சிங்கள - முஸ்லிம் உறவின் முக்கியமானதொரு சான்றாகும்.

தம்மைச்சூழ சிங்கள மக்களையும் பெரும் பான்மையாகக் கொண்ட போதிலும் சிங்கள மக்கள் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாமல் தமக்கிடையிலான நல்லுறவைப் பேணி சமூக ரீதியான தாக்கங்களிலிருந்து காத்துவருகின்றார்கள்.

இதுபோன்ற பல சிறப்புக்களைக் கொண்டுள்ள பலாந்தை எதும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் கிராமம் குறித்து இந்நாட்டு முஸ்லிம்கள் அறியப்படாமல் உள்ளது.



எனவே, இக்கிராமத்தின் வரலாறு முஸ்லிம் சமூகத்தின் ஏதிர்கால இருப்புக்கான சான்றாக அமைந்த ஒன்றாகும். ஆதலால் சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் முஸ்லிம் கிராமங்கள் தேசிய வரலாற்றுடன் இணைந்து மீள எழுதப்பட வேண்டிய ஒன்றாகும்.

-ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் (கல்முனை)

No comments:

Post a Comment