வியங்கல்லை: முஸ்லிம்களின் ஒரு அடையாளம் - sonakar.com

Post Top Ad

Monday 29 October 2018

வியங்கல்லை: முஸ்லிம்களின் ஒரு அடையாளம்

 

அறிமுகம்

இலங்கையின் தலைநகர் கொழும்பு அமைந்துள்ள மாகாணம் என்ற வகையில் மேல் மாகாணம் முதன்மை பெறுகின்றது. இம்மாகாணம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களைக் கொண்டுள்ளது.


இம்மூன்று மாவட்டங்களுள் ஒன்றான களுத்துறை மாவட்டம் 2012ம் ஆண்டு குடிசன மதிப்பீட் டின் பிரகாரம் 1,221,948 மொத்த சனத்தொகையையும், 8 தேர்தல் தொகுதிகளையும், 4 நகர சபைகளை யும், 10 பிரதேச சபைகளையும் கொண்டுள்ளது.

அமைவிடம் 

களுத்துறை மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவினுள் புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவும் ஒன்றாகும். இப்பிரதேச செயலகப் பிரிவினுள் அமைந்துள்ள முஸ்லிம்களின் அடையாளக் கிராமம் வியங்கல்லையாகும். 

இப்பிரதேச செயலகம் கொண்டுள்ள 64,634 மொத்த சனத்தொகையில் 54,635 பேர் சிங்கள பெரும்பான்மை மக்களும், 4,236 இலங்கைத் தமிழர்களும், 3,513 இந்தியத் தமிழர்களும், 2,223 முஸ்லிம்களும், 26 ஏனையோரும் வாழ்ந்து வரு கின்றனர்.

களுத்துறையிலிருந்து மதுகமை ஊடாக அகலவத்தையை அடைந்து, அகலவத்தையிலிருந்து ஹொறன செல்லும் பிரதான வீதியில் டூல்வெல்ல என்னும் சந்தியிலிருந்து, குடலிகம செல்லும் பாதையில் வியங்கல்லை கிராமம் அமைந்துள்ளது.

பாதையின் இரு புரமும் இறப்பர், தேயிலை ஆகிய ஏற்றுமதிப் பயிர்களையும், பச்சைப்பசேல் என ஆங்காங்கே பரந்து கிடக்கும் வயல் நிலங்களையும், ஓங்கி உயர்ந்து காணப்படும் மரங்கள் கிராமத்தின் இயற்கை சுவாசத்திற்கு சௌக்கியம் சேர்த்தக் கொண்டிருக்கின்றன.

ஊரின் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் மலைத் தொடர்களும் அவற்றிற்கிடையே ஓடிக் கொண்டிருக்கும் களுகங்கை மற்றும் சிறு நீர் ஓடைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள எழில் மிகு கிராமம் வியங்கல்லையாகும்.

எல்லைகள்

வியங்கல்லை வடக்கே: குடலிகம, கிழக்கே: மஹகம, தெற்கே: கிரிகொல்லை ஆகிய சிங்கள மக்கள் வாழும் கிராமங்களாலும், மேற்கே: மலைத் தொடர்களாலும் சூழப்பட்ட எல்லைகளைக் கொண்டுள்ளது.

இக்கிராமம் இன்று வியங்கல்லை கிழக்கு, வியங்கல்லை மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இவ்விரு கிராமசேவகர் பரிவுகளிலுள்ளும் பிடவகுற, ஹெட்டிகேவத்த, ஹிரினந்தன, பன்விலஹேன ஆகிய முஸ்லிம் குக்கிராமங்களை யும் உள்ளடக்கியுள்ளது. மொத்தமாக இவ்விரு கிராம சேவகர் பிரிவினுள்ளும் சுமார் 800 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சுருக்க வரலாறு 

இக்கிராமத்தில் ஆரம்பத்தில் குடியேரிய முஸ்லிம்கள் இங்கு காணப்பட்ட ஒரு கல்லின் அருகில் தமது குடியிருப்பை அமைத்துக் கொண்டனர்.

இவர்களது குடியிருப்புக்கு அருகாமையில் காணப்பட்ட கல்லில் பெரிய கரையான் புத்து ஒன்று காணப்பட்டுள்ளது. காலப்போக்கில் இப் பிரதேசம் இந்த கரையான் புத்தை அடையாளமாகக் கொண்டு சிங்கள மொழியில் 'வேயங்கல்ல'  என அழைக்கப்பட்டது. 

'வேயங்' என்பது கரையான் புத்தையும், 'கல்ல' என்பது கல்லையும் தமிழில் குறிக்கிறது. எனவே வேயங்கல்ல என்பதை தமிழில் கரையான்புத்துள்ள கல் என பொருள் கொள்ள முடியும்.

இதுவே காலப்போக்கில் மருவி வெயங்கல்ல எனவும் வியங்கல்லை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையிலுள் நுழைந்த போத்துக்கேயர்கள் (1505) கொழும்பு உள்ளிட்ட முக்கிய துறைமுக நகரங்களிலிருந்து முஸ்லிம்களை துரத்திய காலப் பகுதியில் வெலிகம பிரதேசத்திலிருந்து வந்த கணவன் மனைவியும் அவர்களது குழந்தைகள் அறுவருமே இக்கிராமத்தின் பூர்வீகக் குடிகள் என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

அடந்த காடாகக் காணப்பட்ட இப்பிரதேசத் தில் பெருமளவில் பெரம்பு, மூங்கில், ஏனைய மரங்களும் நிறைந்திருந்தன. இம்மரங்களை இங்கு குடியேறிய பூர்வீகக் குடிகள் வேறு பிரதேசங்களுக் குச் கொண்டு சென்று வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர்.

புராதன இலங்கையில் இங்கு வாழ்ந்த முஸ்லிம் கள் வர்த்தகத்தில் செல்வாக்குப் பெறுவதற்கு பிரதான போக்குவரத்துப் பாதையையாக இக்கிராமத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் களுகங்கை  காணப்பட்டது.

களுகங்கையூடாகவே இப்பிரதேசத்தில் காணப்பட்ட மரங்களை நீரில் மிதக்கும் பதையின் மேல் ஏற்றி மொரட்டுவ வரை கொண்டு செல்வதற்கான வழி மிக இலகுவானதாக காணப்பட்டது.

இவ்வாறான வர்த்தகத்தின் மூலம் தொடர்புடைய மேலும் நான்கு குடும்பங்கள் இக்கிராமத்தில் குடியேறி அவர்களும் இங்கு நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்ததாக கிராம வாசிகள் குறிப்பிடுகின்ற னர்.

சிங்கள கிராமங்களுக்கு மத்தியில் வியங்கல்லை அமைந்துள்ள போதும் அது புராதன காலம் முதல் களுத்துறை மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த கிராமமாக இருந்து வந்துள்ளது.

இவ்வாறான குடிப்பரம்பலில் இன்று வெயங்கல்லையில் 800 முஸ்லிம் குடும்பங்களும் பிடவகுற 168 குடும்பங்களும், ஹெட்டிகேவத்தை 79 குடும் பங்களும், ஹிரிகந்தன 69 குடும்பங்களும், பன்வில ஹேன 58 குடும்பங்களும், வியங்கல்லையில் 385 குடும்பங்களும், கல்லக்க 41 குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர்.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் வியங்கல்லையிலிருந்து அப்போதைய மொரட்டுவ பாலம் வரையான பிரதேசத்தை வெயங்கல்லையைச் சேர்ந்த சித்திலெப்பை மரைக்கார், காசிம் லெப்பை மரைக்கார் கிராமத் தலைவராக பதவி வகித்துள்ளார்.

இவர்களது பொதுப் பணிகள் அளப்பெரி யவையாக அமைந்தன. இவர்களது ஆள்புள எல்லைக்குள் பிரதேசத்தினுள் வாழ்ந்த சகல இன மக்களுக்கும் பல சேவைகளை புரிந்துள்ளனர்.

தொடர்ந்து வந்த காலங்களில் வியங்கல்லை யில் வாழ்ந்த முஸ்லிம் செல்வந்தர்களான சித்தி லெப்பை மரைக்கார், ஐத்ருஸ் லெப்பை மரைக்கார், கபூர் ஹாஜியார் போன்றோர் தமது சொந்த செல்வங்களைக் கொண்டு பல பொதுப் பணிகளை நிறைவேற்றி வந்துள்ளனர்.

பள்ளிவாசல்கள்

இங்கு காணப்படும் தொன்மையாக பள்ளி வாசல்களில் முதலாவதாக வியங்கல்லை ஜூம்ஆ பள்ளிவாசல் காணப்படுகின்றது. ஊரின் தோற்றத்துடன் அமைக்கப்பட்ட இது பல்வேறு புனருத் தானங்களின் பின்னர் அழகிய தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இப்பள்ளிவாசல் இறுதியாகப் புனரமைக் கப்பட்டு சுமார் 150 வருடங்கள் கடந்த பின்னும் அக்கால கட்டடக் கலையுடன், இரு மாடிகளைக் கொண்டதாகவும், மாடிக்குச் செல்லும் படிகள் மற்றும் மேல்மாடியின் தரை போன்ற மரப் பலகையினால் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளிவாசலுக்கு மேலதிகமாக கபூர் ஹாஜியாரின் பள்ளிவாசல் என அழைக்கப்படும் மஸ்ஜிதுல் உம்ரதுல் அலவியா பள்ளிவாசலிலும் ஜூம்ஆ தொழுகை நடாத்தப் பட்டு வருகின்றது.

பிடவகுற என அழைக்கப்படும் வெயங் கல்லையில் நுழைவுப் பிரதேசத்தில் காதிரியா தைக்காப் பள்ளிவாலும், பன்விலஹேன முஹைதீன் மஸ்ஜித் மற்றும் தௌஹீத் பள்ளி வாசல் போன்றன இங்கு வாழும் முஸ்லிம்களின் ஆண்மீக கடமை களை நிறைவேற்றி வருகின்றன.

தொன்மை 

வெயங்கல்லையின் ஓர் எல்லையில் மஹகம கிராம சேவகர் பிரிவினுள் கல்லக்க (கல்லப்பஹல) என்னும் முஸ்லிம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் களின் பூர்வீக வரலாற்றுடன் தொடர்புடைய சுமார் 15 அடி நீளம் கொண்ட அடக்கஸ்தலம் காணப்படுகின்றது.

இவ்வடக்கஸ்தலத்தை கல்லக்க றஹூமத்துல் லாஹ் வலியுள்ளாஹ் சியாரம் என இப்பிரதேசத்து மக்கள் அழைக்கின்றனர். இச்சியாரத்துடன் இணைந்ததாக மஸ்ஜிதுல் முபாறக் தைக்காப் பள்ளிவாசலும் காணப்படுகின்றது. 

மேலும் இக்கிராமத்தில் 150 வருடங்கள் பழைமை வாய்ந்த கட்டடக் கலைகளுடன் கூடிய தொன்மையாக வீடுகளும் காணப்படுகின்றன. இவ்வீடுகள் இங்கு வாழ்ந்த மூதாதையரின் செல்வச் செழிப்பையும், ஊரின் தொன்மையையும் எடுத்துக் காட்டுப வையாக அமைந்துள்ளன.

தொழில்கள்

இங்கு குடியேறிய ஆரம்பகால முஸ்லிம்கள் காடுகளை வெட்டி சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டதோடு, இப்பிரதேசத்தில் காணப்பட்ட பெரம்பு, மூங்கில் மரங்களையும் வெட்டி வேறு பிரதேசங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர்.

பின்னர் தேயிலை, இறப்பர் ஆகிய ஏற்று மதிப் பயிர்களை செய்தனர். மேலும் இவர்கள் மாணிக்கக் கல் வியாபாரங்களிலும் ஈடுபட்டு வருமானத்தை ஈட்டிக் கொண்டினர்.

விவசாயம், ஹொட்டல் தொழில்கள் போன்ற வற்றுடன் நாளாந்த கூலித்தொழில் களையும் புரியும் மக்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், ஆசிரியர் தொழில் மற்றும் அரச தொழில் புரிபவரகளையும் இங்கு காண முடிகின்றது.

கடந்த ஒரு தசாப்த காலமாக இக்கிராம இளை ஞர்கள் பாணிகளை உற்பத்தி செய்யும் தொழில் முயற்சிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்து வருகின்றார்கள்.

இத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள்  முழு நேர தொழிலாகவும், பாடசாலை முடிந்த பின்னர் பகுதி நேர தொழிலாகவும் இத்தொழிலை செய்து வருகின்றனர்.

பாதணி உற்பத்தி செய்யும் தொழில் புரியும் சுமார் 250 இளைஞர்கள் கணிசமான வருமானத்தை இத்தொழில் மூலம் பெற்று வருகின்றனர்.

கல்வி

வியங்கல்லையின் கல்வி வளர்ச்சிக்கு அடித்த ளமாக இருந்து வருவது இங்குள்ள முஸ்லிம் மகா வித்தியாலமாகும். 

1934ம் ஆண்டு ஊர் பிரமுகர்களின் முயற்சியி னால் ஆரம்பப் பாடசாலையாக இது ஆரம்பிக்கப் பட்டது.

குறிப்பாக அக்காலப்பகுதியில் புளத்சிங்கள தேர்தல் தொகுதியில் காணப்பட்ட பல கரீயச் சுரங் கங்களுக்கு தலைவராக இருந்த ஐத்ருஸ் லெப்பை மரைக்கார் அவர்களின் பெரு முயற்சிகள் இப் பாடசாலையின் ஆரம்பத்திலும் வளர்ச்சியிலும் செல்வாக்கச் செலுத்தி வந்தது.

காலவோட்டத்தில் இப்பாடசாலை அரச பாடசாலையாக மாற்றம் பெற்று கனிஷ்ட பாடசா லையாகவும் தரம் உயர்ந்து சென்றது.

1960ம் ஆண்டில் முதன் முதலாக க.பொ.த சாதரணதரப் பரீட்சையில் தோற்றிய மாணவர் களில் பலர் சித்தியடைந்தனர்.

1994ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தி விழாவில் இப்பாடசாலை மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது.

தரம் 5, க.பொ.த. சாதாரணம், உயர்தரம் போன்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொடுத்து இக்கிராமத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு மிகப் பெரிய பலமாக இப்பாடசாலை செயற்பட்டது.

2011ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 50மூ மானோர் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகியமை யை குறிப்பிட்டுக் கூற முடியும்.

இதேபோல் இங்குள்ள அஹதியா பாடசாலை, அந்நூர், லிட்டில் றோஸ் போன்ற தமிழ் மொழி மூலமான பாலர் பாடசாலைகள், லிட்டில் பிளேவர் ஆங்கிய மொழி மூலமான பாலர் பாடசாலை, அல்-பலாஹ் சர்வதேச சிங்கள மொழி மூலமான பாடசாலை மற்றும் அல்-ஹிறா அரபுப் பாடசாலை போன்ற இக்கிராமத்தின் கல்வி முன்னேற்றத்தின் முக்கிய திருப்பங்கள் எனலாம்.

இனநல்லுறவு

வியங்கல்லையைச் சூழ பெரும்பான்மை இன சிங்களக் கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இங்குள்ள முஸ்லிம்கள் சமாதானாகவும், நல்லுற வுடனும் வாழ்ந்து வருகின் றனர்.

ஆரம்ப காலம் தொட்டு இங்கு வாழும் முஸ்லிம் களுக்கும் இப்பிரதேசத்து சிங்கள மக்களுக்கும் இடையில் எவ்வித பிரச்சினைகளுமின்றி அந்நி யோன்யமான நல்லுறவு பேணப்பட்டு வருகின்றது.

வியங்கல்லை வாழ் முஸ்லிம் செல்வந்தர்கள் தமது செல்வங்களினூடாக வழங்கிய கொடைகள், உதவிகள் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு மாத்திர மல்லாமல் ஏனைய சமூகத்தவர்களுக்கும் பல்வேறு உதவிகளைப் புரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக் கது. 

குறிப்பாக வைத்தியசாலைகள், பௌத்த விகாரைகள் போன்றவற்றுக்கு மின்சாரம் உள்ளிட் ட பல உதவிகளையும், பாலங்கள் அமைப்பதற்கும், வீதிகள் புனரமைப்பதற்கும் முன்னிற்று செயற்பட் டமைக் குறிப்பிடலாம்.

1915ம் ஆண்டு சிங்கள - முஸ்லிம் கண்டிக் கலவரத்தின் தாக்கம் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம் கிராமங்களுக்கும் பரவியபோதும் அது வெயங்கல்லை மக்களை எந்த வகையிலும் ஆட்கொள்ளவில்லை என பிரதேசவாசிகள் குறிப்பி டுகின்றனர்.

அண்மையில் (2014) அளுத்கம, பேருவளை பிரதேசங்களிலும், கண்டி-திகனை (2018) பிரதேசங் களிலும் முஸ்லிம்கள் மீது பேரினவாதக் குழுக்கள் மேற்கொண்ட இனவாதத் தாக்குதலின் போது இக்கிராம முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக பிரதேச சிங்கள சகோதரர்களே செயற்பட்டனர்.

இச்சூழலில் வெயங்கல்லையைச் சூழவுள்ள பிரதேசத்து சிங்கள இளைஞர்கள் காலாகலமாக எமக்குள் இருந்துவரும் நல்லுறவு வெளியிடங்களில் இருந்து வரும் இனவாதிகளால் அழித்தொழிக்க நாம் இடமளிக்க மாட்டோம். உங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுடையது. நீங்கள் எந்த வகையிலும் அச்சம் கொள்ள வேண்டாம் என சிங்கள இளைஞர்கள் கூறி முஸ்லிம்களை இரவு பகல் பாராது பாதுகாத்ததாக முஸ்லிம்கள் தெரிவித்தனர்.

சமூகப் பொறுப்புக்களும் தொடர்புகளும் 

வியங்கல்லை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் பலாந்தை, வெலிப்பனை, தர்ஹாநகர், பேருவளை, பாணந்துறை, களுத்துறை போன்ற பிரதேச மக்களுடன் திருமணம், வியாபாரம் உள்ளிட்ட பல தொடர்புகளைக் கொண்டுள்ளனர். 

மேலும் இக்கிராமத்தில் சமூக ரீதியாக பொறுப் புக்களை ஏற்று செயற்படும் நிறுவனங்களாக பள்ளிவாசல்களின் நிருவாகம், ஜனாஸா நலன்புரி அமைப்பு, நவாவி, கல்வி கலாச்சார நிலையம், ஹூதா பெண்கள் அமைப்பு போன்றவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

அதேபோல் கறீன் லைன், ரெட்லைன், விளையாட்டுக் கழகங்கள், பிடவகுர இளைஞர் விளையாட்டுக் கழகம், மஹகம விளையாட்டுக் கழகம் போன்றனவும் இக்கிராமத்தின் சமூக செயற்பாடுகளில் முக்கிய பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டு வருகின்றன.

விருந்தோம்பல்

வியங்கல்லை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கொண்டுள்ள பண்பாடு, மார்க்க விழுமியங்களைப் பேணும் நடைமுறை, விருந்தோ ம்பல் என்பன மிகச் சிறப்பாகக் காணப்படுகின்றன.

இக்கிராமத்தின் விருந்தோம்பல் நடைமுறை ஏனைய இனத்தவர்களுடனான சகவாழ்வை மேம் படுத்தும் நற்காரியங்களில் ஒன்றாக இங்கு மிக நீண்ட காலமாக வழங்கப்பட்டுவரும் கந்தூரி நிகழ் வுகளை சுட்டிக் காட்டி முடியும்.

அந்தவகையில் கோப்பைச் சோற்றுக் கந்தூரி, காதிரியா கந்தூரி, மொஹியிதீன் கந்தூரி, ஈ.எல்       ஹாஜியார் வீட்டுக் கந்தூரி உள்ளிட்ட பல கந்தூரி கள் இக்கிராமத்தில் பிரபல்யமிக்கவையாக காணப் படுகின்றன.

அனர்த்தங்கள்

வியங்கல்லையைப் பொறுத்தவரையில் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் ஒரு கிராமமாக இருந்து வருகின்றது.  அழைமழை மற்றும் குகுலே கங்கைள திறந்துவிடப்படும் சந்தர்ப்பங்களில் களுகங்கை பெருக்கெடுத்து அதிகமான நீர் ஊர் முழுவதையும் மூழ்கடிக்கும் நிலை இருந்து வருகின்றது.

இவ்வாறானதொரு அசாதாரன சூழல் வரும் சந்தர்ப்பங்களில் மக்களை பாதுகாப்பான இடங்க ளுக்குக் கொண்டு செல்வதற்கான முன்னாயத்தமாக இங்குள்ள பள்ளிவாசல்களில் வல்லங்கள், தோணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இக்கிராமத்தைச் சேர்ந்த ஏழு முஸ்லிம்கள் உயிரிழ்ந்தனர். 

எதிர்காலத் தேவை

வியங்கல்லை கிராமத்தைப் பொறுத்தவரை யில் இங்கு தாய்சேய் சுகாதார சிகிச்சை நிலையம், உப தபாலகம், கிராமிய வங்கி ஆகிய பொது நிறுவ னங்கள் காணப்படுகின்றன.

இருந்தபோதும் இக்கிராமத்திற்கென பொது நூலகம், பல்தேவைக் கட்டிடம், கலாச்சார மண்ட பம் போன்றவை அத்தியவசியமானவையாக இருந்து வருகின்றது.

எனவே, இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வியங்கல்லை கிராமம் ஓர் அடைளம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இக்கிராம மக்களின் எதிர்காலத் தேவைகளை சமூக நலன் விரும்பிகள், அரசியல் பிரமுகர்கள் கருத்திற் கொண்டு அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க முன்வர வேண்டும்.

இக்கிராமம் தொடர்பான மேலதிக தகவல்கள் உள்ளவர்கள்  டியசயமயவாஅஅஉளூபஅயடை.உழஅ எனும் எனது மின்னல் முகவரியுடன் அல்லது யுவாயஅடியறய ஆழாயஅநன டீயசயமயவாரடடயா எனும் முகநூல் ஊடாகவும் தொடர்பு கொள்ளவும்.

 -ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்

No comments:

Post a Comment