சிறுவர் துஷ்பிரயோகத்தை முற்றாக இல்லாதொழிப்போம் (கடிதம்) - sonakar.com

Post Top Ad

Saturday 30 June 2018

சிறுவர் துஷ்பிரயோகத்தை முற்றாக இல்லாதொழிப்போம் (கடிதம்)



தற்காலத்தில் மிகவும் பேசு பொருளாகவும் ஊடகங்களின் பசிக்கு தீனியாகவும் அமைந்துள்ள ஒரு விடயம்தான் இந்த சிறுவர் துஷ்பிரயோகம்.  பெரும்பாலும் நாம்  எல்லோரும் இதனை அதன் தாக்கம் நம்மை சார்ந்தோருக்கு நிகழாத வரை ஏதோ ஒரு செய்தியாகவே கடந்து செல்கிறோம்.


நாம் எல்லோரும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கான தண்டனைகளை பற்றி ஆராய்கின்றோம் விவாதிக்கின்றோமே தவிர யாரும் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதனை எப்படி முற்றாக இல்லாதொழிப்பது என்பது தொடர்பாக சிந்தனை செய்வது கிடையாது.

மனிதனின் வயிற்றுப் பசியை உணவு வகைகளின் மூலமாகவே பூர்த்தி செய்து கொள்ள முடியும் மாறாக அலுமினியம் பிளாஸ்டிக் பொருட்கள் மூலமாக பூர்த்தி செய்ய முடியாது. இது போன்ற ஒன்றுதான் இளைஞர்கள் முதியவர்களின் காம பசிக்கு சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதென்பது. இருந்தும் ஏன் இது நாடலாவிய ரீதியில் ஏன் உலகளாவிய ரீதியில் எண்ணிக்கைக்கு பஞ்சம் இன்றி நடந்தேருகின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இதற்கான முக்கியமான காரணமாக சில ஊடகங்கள் மற்றும் சில சமூக வலைத்ள ஆர்வலர்களின் சமூக பொறுப்பற்ற செய்தி வெளிப்படுதல்களை கூறலாம். முந்தியடித்துக் கொண்டு தங்களை முதல்தர ஊடகங்களாக காட்டிக் கொள்ளவும் வாசகர் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளவும் ஆபாசத்தை தூண்டும் வகையில் தலைப்புகளை இடும் சில கேவலமான  ஊடகங்களும் சமூக வலைத்தள ஆர்வலர்களுமே முக்கிய பங்களிப்பு செய்கின்றனர். சில ஊடகங்கள் ஒருபடி மேலே சென்று  துஷ்பிரயோகம் எப்படி நடந்திருக்கிறது என்று படிமுறை படிமுறையாக விபரத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். சில முதற்தர ஊடகங்களாக தங்களை மார்தட்டிக் கொள்ளும் சில ஊடகங்கள் ஒரு விடயத்தினை சுமார் மூன்று வருடங்களாக வதைக்குள்ளாக்கிய நிகழ்வுகளும் இல்லாமல் இல்லை.

ஒன்றுமே இல்லாத இடத்தில் சந்தர்ப்பம் கிடைக்குமிடத்து ஏதாவது இருக்குமோ என்று கயவர்களை தூண்டுவதில் முதலிடம் பெற்றுக்கொள்கிறது சில ஊடகங்களும் சமூக வலைத்தள ஆர்வலர் கணக்குகளும்.

இன்று நமக்கு தேவையோ இல்லையோ சில பொருட்களை கொள்வனவு செய்கிறோம், காரணம் ஊடக விளம்பரங்களின் தாக்கம். அது போலத்தான் ஒருவர் ஒரு விடயத்தினை அறிந்திறாத போது அது பற்றி சிந்திப்பது கிடையாது. ஆனால் ஒரே விடயம் பல்வேறு இடங்களில் ஒருவரின் மூலையை தொடும் போது, நல்ல விடயமோ கெட்ட விடயமோ, பரீட்சித்து பார்க்க முடியாதா என்ற நிலைக்கு தள்ளப்படலாம். இந்த தூண்டுதல் ஒன்றுமே இல்லாத விடயத்தில் கூட சந்தர்ப்பம் அமைகின்ற போது அதனை பரீட்சித்து பார்க்க தூண்டுகிறது.

இந்த விடயத்தில் முக்கியமாக சில பெற்றோர்களின் கவனக்குறைவையும் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். சிறு பிள்ளைகளின் அத்தனை செயற்பாடுகளிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உதாரணமாக உண்மையாக நடந்த ஒரு சம்பவம்.

பெற்றோர்கள் வீட்டுக்குள் நாடகம் பார்த்துக் கொண்டு பிச்சை கேட்டு வந்த ஒருவருக்கு பிள்ளையிடம் பணத்தை கொடுத்து அனுப்பிய போது அந்த வயோதிபர் அந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்ய ஆரம்பித்த நேரத்தில் வீதியால் வந்த ஒருவர் அதனை தடுத்த சம்பவங்களும் உண்டு. எனவேதான் பெற்றோர்களே ஒரு விடயம் நடந்ததன் பிறகு அதனை நினைத்து வருந்துவதில் எந்த நன்மையும் இல்லை எனவேதான் வருமுன் காப்போம்.


ஊடக நண்பர்கள் மற்றும் சமூக வலைத்தள ஆர்வலர்கள் அனைவரிடமும் வினயமாக வேண்டக்கொள்கின்ற விடயம் தயவு செய்து இவ்வாறான செய்திகளை வெளியிடும் போது சிறிதளவேனும் சமூக அக்கறையுடன் நடந்து கொள்ளுங்கள்.

நாம் செய்கின்ற நன்மையான காரியம் யாருக்காவது நன்மை பயக்கின்றதோ இல்லையோ யாருக்கும் தீங்காக அமைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம்.

-சமீன் முஹம்மட் சஹீத் -நிந்தவூர்

No comments:

Post a Comment