மத்திய கிழக்கு: ஜோர்டானின் முக்கியத்துவமும் அரசியல் நகர்வுகள் கற்றுத்தரும் பாடமும் - sonakar.com

Post Top Ad

Wednesday 27 June 2018

மத்திய கிழக்கு: ஜோர்டானின் முக்கியத்துவமும் அரசியல் நகர்வுகள் கற்றுத்தரும் பாடமும்


ஜோர்டானை  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான வரி மற்றும் விலை அதிகரிப்புகளுக்கெதிராக,  ஜோர்டான் தலைநகர் அம்மானின் வீதிகளின் ஆயிரக்கணக்கான ஜோர்டானியர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த நிலையில், ஜோர்டான் மன்னர் அரசாங்கம் அழுத்தங்களை எதிர்கொண்டது இதை தொடர்ந்து பிரதமர்  ஹானி அல் முல்கி பதவி விலகினார் . இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜோர்டான் மன்னார் அப்துல்லாஹ் II  புதிய பிரதமராக   முன்னாள்  கல்வி அமைச்சரும்  முன்னாள் உலக வங்கி பொருளாதார நிபுணருமான்  உமர் அல்  ரஸாஸ் என்பவரை  பிரதமரான  நியமித்து  புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு பணித்தார்  .


இது பற்றி கருத்துரைக்கும் சர்வதேச அரசியல் ஆய்வாளர் மகீத் போன்றவர்கள்   இது ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் எதிரான மக்கள் எதிர்ப்பு இந்த எதிர்ப்பை  காட்டுவதில்  ஜோர்டானின் எல்லா  தரப்புக்களும் ஒன்றுபட்டுள்ளன   இதற்கு முன்னர் இதுபோன்று ஒருமித்த எதிர்ப்பு ஏற்றப்பட்டதில்லை , வீதிகளில் குவிந்துள்ள எதிர்ப்பாளர்களின் தொகை ஒரு புறமிருக்க அரசாங்க எதிர்ப்பு மனநிலை ஒட்டுமொத்த ஜோர்டானியர்களையும் ஒன்றுபடுத்தியுள்ளது  இது ஜோர்டானில் முன்னெடுக்கப்படும் அரசியல், பொருளாதார  சீர்திருத்தங்கள் தொடர்ந்தும் தோல்வியை கண்டுள்ளதன் விளைவு எனவும் .அரபு வசந்தம் மீண்டும் ஜோர்டானில் ஏற்படப்போகிறதோ என்ற கேள்வியை இது எழுப்புவதாகவும்  அவர் குறிப்பிட்டனர் 

தற்போது ஜோர்டானில் ஏற்றப்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இஸ்லாமிய அரசியல் பின்னணிகொண்ட 'இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி' தலைமையிலான   சீர்திருத்தத்திற்கான தேசிய கூட்டணி ஜோர்டானின்  ஹானி அல் முல்கியின் அரசாங்கத்தை விமர்சித்துள்ளதுடன்       ''இந்த அரசாங்கம் இனிமேலும் எமது   நம்பிக்கைகுறியதாக  இல்லை "   என  மன்னர் அப்துல்லாஹ் II  க்கு அனுப்பிய கடிதத்தில்  குறிப்பிட்டிருந்தது  , இதேபோன்று   57 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மன்னர் அப்துல்லாஹ் II  க்கு அனுப்பி இருந்த  கடிதத்தில்  பிரதமர் ஹானி அல் முல்கியை பதவி நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் , அதில் அவர்கள் முல்கியின் கொள்கைகள் நாட்டை வெடிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

இதேவேளை  ஜோர்டானில் இடம்பெறும் உள்நாட்டு விவகாரங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தெரிவித்திருந்தது , ஜோர்டான்  ஆர்ப்பாட்டங்களின்  பின்னணியில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும்  சவூதி ,துபாய்,  எகிப்து ஆகிய நாடுகள் இருப்பதாகவும் அமெரிக்காவின்  “deal of the century”  என்ற உடன்படிக்கையை ஜோர்டான் நிராகரித்தமைக்கு இது பழிவாங்களா எனவும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் (IAEA) முன்னாள் இயக்குநரான எகிப்து நாட்டைசேர்ந்த மொஹமட் எல் பாரடே கேள்வியெழுப்யிருந்தார்  , 

ஜோர்டானின் அரசியல் முறைமை  யாப்பு சார்ந்த மன்னர் ஆட்சி முறையையும் அதனுடன் இணைந்ததாக மன்னர் நியமிக்கும் பிரதமரையும், மக்கள் பிரநிதிதிகளையும்  கொண்ட பாராளுமன்ற மற்றும் சட்டவாக்க சபை முறையை ஒருங்கே கொண்டுள்ள ஒரு அரசியல் ஒழுங்கை  கொண்டது அதில் மன்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் என்பதுடன் மட்டுப்படுத்த முடியுமான ரத்து அதிகாரத்தையும் கொண்டவர் இங்கு 92 வீதத்துக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாகவும் 6 வீதமாகவர்கள் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். 

ஜோர்டான், மத்திய கிழக்கில் இருக்கும் ஒரு சிறிய நாடு ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜெரூசலத்தை ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தலைநகராக பிரகடனப்படுத்தியதன் பின்னர் ஜோர்டான் பிராந்திய முக்கியத்துவம் பெற்றநாடாக மாறியுள்ளதாக  அரசியல் கொள்கை  ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் ,   ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் II  ஜெரூசலத்தில் அமைத்துள்ள அல் குத்ஸின் ''பாதுகாவலராக'' இருப்பதும்   , ஜோர்டான் சிரியாவுக்கும்  அண்மையிலும் , ஆக்கிரமிப்பு இஸ்ரேலின்  எல்லை நாடாக இருப்பதாலும் இது மேலும் முக்கியத்துவம் பெற்றநாடாக பிராந்திய அரசியலில் இடம்பிடித்து வருகின்றது.

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு 

சர்வாதிகாரியாக செயல்பட்ட  ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் II 1989ஆம் ஆண்டு வரை நாட்டில் எந்த கட்சிகளும் இயக்கங்களும் உருவாக அனுமதிக்கவில்லை 1989 இல் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட திருத்தங்களின் ஊடாக 30அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் உருவாக வழிவகுத்தது ,பல கட்சிகள் உருவாக்கப் பட்டாலும் Islamic Action Front (IAF). மட்டும் சட்டவாக்க சபையில் பிரதான பங்காற்றியுள்ளது Islamic Action Front (IAF) என்பது 1992 ஆம் ஆண்டு ஜோர்டானில் உருவாக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் பிரிவு இந்த அமைப்பு 2005ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டவாக்க சபைக்கான தேர்தலில் 84ஆசனங்களில் 20 ஆசனங்களை கைப்பற்றியது அந்த தேர்தலில் வேறு எந்த அரசியல் கட்சியும் எந்தவொரு ஆசனத்தையும் பெறவில்லை ஏனைய 64 ஆசனங்களும் மன்னருக்கு ஆதரவான கட்சி சாராதவர்களினால் வெற்றிகொள்ளப்பட்டது இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் பிரிவான Islamic Action Front (IAF). ஜோர்டானில் அரசியல் ரீதியான ஒரு விரைவான வளர்ச்சியை கண்டது தொடர்ந்தும் உள்ளுராச்சி தேர்தல்களில் வெற்றிகளை பெற்றுவந்தாலும் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தலுக்கு பின்னர் அரச நிர்வாகத்தின் மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்து தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளது கடந்த 10 ஆண்டுகளாக பாராளுமன்ற பகிஷ்கரிப்பை செய்துவந்தது எனினும்   ஜோர்டான்  இஹ்வான் அமைப்பின் அரசியல் கட்சியான இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி தலைமையிலான கூட்டணி  கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் மூலமாக பாராளுமன்றத்தில் 15 ஆசனங்களை கைப்பற்றி தனது குரலை பாராளுமன்றில் மீண்டும் பதிவு செய்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண மற்றும் உள்ளூராச்சி தேர்தல்களில் மொத்தமாக 76  ஆசனங்களை இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது  , குறிப்பாக 48 மாகாண சபைக்கான ஆசனங்களில் 25 ஆசனங்களை கைப்பற்றியதுடன் சில முக்கிய உள்ளூராச்சி சபைகளில் பெரும்பான்மையும் பெற்று மீண்டும் அரசியல் அரங்கில் தன்னை நிலைநிறுத்தியது. 

ஜோர்டான் சவூதி மற்றும் துபாயை கோபப்படுத்தியுள்ளதா ?

அதேவேளை சவூதி ,துபாய் நாடுகளின் பொருளாதார உதவிகளில் பெரிதும்  தங்கியுள்ள ஜோர்டானின்  இஹ்வான் பின்னணிகொண்ட அரசியல் கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பதும் ஜோர்டானின் அண்மைய நகர்வுகள்  துருக்கியுடன் உறவை பலப்படுத்தியுள்ளதுடன் ரஷியாவுடனும் உறவை ஏற்றப்படுத்தியுள்ளமையும் முக்கிய எதிர்விளைவுகளை தூண்டும் காரணிகளாக செயல்பட்டவல்லதாக உள்ளது என்பது இங்கு முக்கிய அம்சமாக அவதானிக்கப்படவேண்டியுள்ளது , மேற்கு நாடுகளுடனும் அதன் நெருங்கிய கூட்டாளிகளுடனும் நெருக்கமான உறவை ஜோர்டான்  கொண்டுள்ள நிலையில் இந்த புதிய நகர்வது வித்தியாசமாகவே பார்க்கப்பட்டது   என்றாலும் மேற்கு நாட்டு கூட்டாளிகளுடன் உறவை துண்டித்துக்கொள்ளாமல் கிழக்கு நாடுகளுடனும் உறவை ஜோர்டான் ஏற்றப்படுத்திக் கொள்வதாகவே பார்க்கப்பட்டது .  ஜோர்டானின் துருக்கியுடனான நெருக்கம் துபாய் மற்றும் சவூதியை நிச்சயம்  கோபப்படுத்தி இருந்தது என   அரசியல் கொள்கை ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். 

“Deal of the century”  யின் உள்ளடக்கம் 

உண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் முன்னெடுக்கப்படும்   “deal of the century”  யின் உள்ளடக்கம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது இதன் இரகசியம் இஸ்ரேலுக்கும் ,சவூதிக்கும் , துபாய் , எகிப்து ஆகிய நாடுகளுக்கு மட்டுமே தெரியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது   “deal of the century”   என்ற இந்த ப்ரொஜெக்ட் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்னால்  முன்னர் பகிரங்கமாக அறிவிக்கப்படவிருந்த நிலையில் அப்படி அறிவிப்பதை கடைசி நேரத்தில் தவிர்த்து இருந்தார் என்றும் அத்திட்டம் தற்போது முஸ்லிம் நாடுகளின் சர்வாதிகாரிகள் ஆதரவுடன் இரகசியமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ  இஸ்ரேல், சவூதி ,ஜோர்டான் ஆகியன நாடுகளுக்கு அண்மையில்  மேற்கொண்ட விஜயம் அமெரிக்காவின் “deal of the century”  என அழைக்கப்படும் இந்த நூற்றாண்டுக்கான திட்டத்தில் ஜோர்டானையும் முழுமையாக உள்வாங்கும் நோக்கத்தையும் கொண்டதாக இருந்தது என   அரசியல் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடுகின்றனர் , அமெரிக்காவின் “deal of the century”  என்பது   மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நண்பர்களை பலப்படுத்தும் திட்டம் , இஸ்ரேல் - பலஸ்தீன பிரச்சினைக்கான  தீர்வு திட்டம் ,மத்திய கிழக்கில் ''பயங்கரவாதத்தை'' ஒடுக்குவதற்கான   தீர்வு திட்டம், ஈரானுக்கு எதிரான செயல்திட்டம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளதாக பலராலும் அரசியல் ஆய்வுத்தளத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன 
இடம்பெறும் நிகழ்வுகளை வைத்து அரசியல் ரீதியாக கருத்துரைப்பவர்கள் , இஸ்ரேல் -அமெரிக்கா இணைந்து இந்த  “deal of the century”  திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் பலஸ்தீன் விவகாரத்தில் பலஸ்தீனர்களின் தமது மண்ணுக்கு திரும்பிச் செல்வதற்றான உரிமையை அது மறுப்பதுடன் சட்ட விரோத இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகராக முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ( அல் குத்ஸ் ) அமைத்துள்ள கிழக்கு ஜெருசலமும் இணைந்த ஜெரூசலத்தை உருவாக்குவதையும் பலஸ்தீனர்களை ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இராணுவத்தால் கட்டுப்படுத்தும் மாநிலம் என்ற திட்டத்தையும் கொண்டிருப்பதாகவும்   இத்திட்டத்துக்கு சவூதி , துபாய் , எகிப்து ஆகிய நாடுகள் இரகசியமான ஆதரவை தெரிவித்துள்ளதுடன் ஜோர்டானையும் தம் பக்கம் முழுமையாக இழுத்துக்கொள்ள அவை நகர்வுகளை கூர்மைப்படுத்தியுள்ளதாகவும்   தெரிவிக்கின்றனர். 

அதேவேளை பலஸ்தீன விடுதலைக்காக போராடிவரும் ஹமாஸ் இஸ்லாமிய ஜிஹாத் போன்ற அமைப்புக்களை பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவும் திட்டத்தின் மூலமாக ஒடுக்கவும் ஆலோசனைகளை கொண்டுள்ளதாகவும் நம்பப்படுகின்றது , இதில் ஜோர்டான் பலஸ்தீன விவகாரத்தில் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ள வில்லை என்றும் பலஸ்தீன் விவகாரத்தில் பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் நிலைப்பாட்டுடன் இணைந்த நிலைப்பாட்டை ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் II வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . இதேவேளை ஜோடான் மன்னர் குடும்பம் இஸ்ரேல் நிர்வாகத்துடன் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டதுடன் ஜோர்டான் ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான எந்த விடையமும் இடம் பெறாமல் கண்காணித்து வருகின்றது என்ற குற்றசாட்டை எதிர்கொள்கிறது அதேவேளை ஜோர்டானில்  வசிக்கும் பலஸ்தீன் மேற்கு கரை மக்களுக்கு ஜோடானியர் போன்று அனைத்து உரிமைகளையும் வழங்கும் மன்னர் அரசு ஜோர்டானில் வசிக்கும் காஸா மக்களுக்கு அந்த உரிமையை வழங்க மறுக்கின்றது   என்ற  குற்றசாட்டும்  உள்ளது . இந்த ஜோர்டானின் நிலைப்பாட்டில் மேலும் மாற்றங்களை ஏற்றப்படுத்தி “Deal of the century”  யின் ஓர் அங்கமாக ஜோர்டானையும் மாற்றும் திட்டம் இடம்பெறுவதாக நம்பப்படுகிறது .


இந்த பின்னணியில் ஜோர்டானின் இடம்பெற்ற ஆர்பாட்டங்களை நோக்குபவர்கள் மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார உதவியில் தங்கியிருக்கும் ஜோர்டானை சவூதி மற்றும் துபாய் ஆகிய நாடுகள் தற்போதைய ஆர்ப்பாட்டங்களை பயன்படுத்தி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயல்வதாக பார்க்கின்றனர் , பிந்திய தகவல்களின் படி சவூதி மற்றும் துபாய் ஆகிய நாடுகள் ஜோர்டான் மன்னருடன் மேற்றுக்கொண்ட பேச்சுக்களின் பின்னர் 2.5 பில்லியன் அமெரிக்க டொலரை 
வழங்க முன்வந்துள்ளது ,இதேவேளை கட்டார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது 

 மேற்சொன்ன தரவுகளை வைத்து பார்க்கும்போது ஜோர்டான் மன்னர்  நிர்வாகம் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் உள்நாட்டு ,வெளிநாட்டு சவால்களுக்கு முகம்கொடுத்துவருவதாக விளங்கிக்கொள்ள முடிகிறது , ஒருபக்கம் அமெரிக்கா ,இஸ்ரேல் மேற்கு நாடுகளும் அவர்களின் முகவர்களாக சவூதி , எகிப்து , துபாய் ஆகியவற்றுடன் உறவை பேணும் அதேவேளை  துருக்கி , கட்டார் ,ஈரான்   ரஷியா போன்ற நாடுகளுடனும் உறவை பேண முயன்றுவருகின்றது , உள்நாட்டில் எதிர்ப்புக்களை சமாளிக்க சீர்திருத்தங்களுக்கு உடன்பட்டாலும் உணமையான அரசியல் சீர்திருத்தம் இடம்பெற அனுமதிக்காத நிலையிலேயே உள்ளது ,ஆக மன்னர் நிர்வாகம் தன்னை தக்கவைத்துக்கொள்ளும் அரசியலை மையப்படுத்தியே நகர்வுகளை முன்னெடுத்து செல்கிறார் என்பதும் ஜோர்டான் மீது எந்த சக்தியால் மிகையான உள்நாட்டு வெளிநாட்டு தளங்களில் செறிவான செல்வாக்கை செலுத்தும் முடியுமோ அவர்களால் ஜோர்டான் மன்னர் நிர்வாகம் கட்டுப்படுத்தபட்ட ஒன்றாக இருக்கும் என்பது ஒரு யதார்த்தமாகும்  , 

 இதேவேளை   அமெரிக்க, இஸ்ரேலிய “deal of the century”   திட்டத்துக்கு ஜோர்டான்  முழுமையாக உடன்படாமை அமெரிக்கா ,இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளிகளை கோபப்படுத்தியதன் விளைவுதான் தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் எனவும் சிலர் கூறுவதும் முழுமையாக மறுக்க முடியாத ஒன்றாகவே உள்ளது .அமெரிக்காவும் , ஆக்கிரமிப்பு இஸ்ரேலும் இணைத்து தாம் எதைவேண்டுமானாலும் முஸ்லிம் மத்திய கிழக்கில் சாதிக்க முடியும் என்பதைத்தான் நிரூபித்து வருகின்றன உதாரணமாக  துருக்கியில் ஏற்றப்பட்டுள்ள நாணய பெறுமதி சரிவானது  ஜனாதிபதி அர்துகானை இலக்கு வைத்து இஸ்ரேலிய அழுத்தகுழுக்களினால் திட்டமிடப்பட்டவை என்பதை இஸ்ரேலிய கல்வியாளரும் ஆய்வாளருமான கலாநிதி எடி கோஹென் (Edy Cohen) குறிப்பிடுகிறார்  அவர் இது பற்றி குறிப்பிடும்போது துருக்கிய பொருளாதாரம் யூத அழுத்த குழுக்களின் சூழ்ச்சியின் விளைவாக ஏற்றப்படுத்தப்பட்டுள்ளது மேலும் துருக்கி இழப்புக்களை அனுபவிக்கும் ' என அவர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை ஆக்கிரமிப்பு இஸ்ரயேலில் இடம்பெறவிருந்த ''ஆர்மேனியா படுகொலைகள் '' என்ற அரசியல் விவாதத்தை இஸ்ரேலிய அரசு பிற்போட்டுள்ளது  அர்மேனியாவில் துருக்கியின் செயல்பாடுகள் பற்றிய அந்த விவாதம் இடம்பெற்றால் அந்த விவாதம் இம் மாதம் 24 ஆம் திகதி துருக்கியில் இடம்பெறவிருக்கும் தேர்தல்களில் ரஜப் தையூப் எர்துவானுக்கு சாதகமாக அமையும் என்பதால் அதை தாம் பிற்போடுமாறு பிரதமர் நெட்டன்யாஹுவைகோரியுள்ளதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது .
இதேவேளை துருக்கியில் இம்மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள    தேர்தல்களில் ஜனாதிபதி ரஜப் தையூப் எர்துவானையும் அவரின் ஆர்க் (AK) கட்சியையும் தோற்கடிக்க சவூதியும் துபாயும் பல  பில்லியன் அமெரிக்க டொலர்களை இறக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 

இவை  முஸ்லிம் உம்மாவின் மீது அமெரிக்காவும்  ,மேற்குநாடுகளும் இஸ்ரேலும்  அவர்களின் முகவர்கள் மூலமாக மேற்கொள்ளும்   சதிகளையும் அவை  செலுத்தும் செறிவான செல்வாக்கையும் காட்டுவதாக உள்ளது , முஸ்லிம் நாடுகளை சர்வாதிகாரிகள் ஆட்சி செலுத்தும் காலம்  வரை முஸ்லிம் உம்மாவின் நலனின் மீது இஸ்லாத்தின் எதிரிகள் ஆக்கிரமிப்பு செய்வார்கள் அந்த சர்வாதிகாரிகளை பயன்படுத்தி முஸ்லிம் உம்மாவின் நலன்களை வேட்டையாடுவார்கள் என்பதைத்தான் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

-எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)-BA.Hons (special in political science) 

No comments:

Post a Comment