மஹிந்த முஸ்லிம்களுக்கு செய்த அநீதியை மறைக்க முடியாது: மு.ரஹ்மான் - sonakar.com

Post Top Ad

Monday, 11 June 2018

மஹிந்த முஸ்லிம்களுக்கு செய்த அநீதியை மறைக்க முடியாது: மு.ரஹ்மான்மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் அனுபவித்த இன்னல்களை, துன்பங்களை மறைப்பதற்கு எந்த யுக்திகளாலும், எந்த சக்திகளாலும் முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் ஆதரவை தேடி கோத்தாபய ராஜபக்ஷ ஆரம்பித்திருக்கும் அரசியல் நகர்வு தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அந்த அறிக்கையிலே அவர் தெரிவித்திருப்பதாவது,

எதிர்காலத்தில் இந்நாட்டின் ஜனாதிபதியாகுவதற்கு கனவு கண்டுகொண்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று முஸ்லிம் மக்களுடன் நட்புறவுடன் இருப்பதுபோன்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து வருகிறார். முஸ்லிம்கள் ஒருசில நபர்களுடன் இணைந்து ரமழான் இப்தார்  நிகழ்ச்சிகளில் கோத்தாபய பங்குபற்றி வருவதோடு, முஸ்லிம் மக்கள் மீது கரிசனை காட்டுவதுபோல நடித்தும் வருகிறார்.   

அண்மையில் பேருவளையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட கோத்தாபய ராஜபக்ஷ இனிவரும் ராஜபக்ஷக்களின் ஆட்சியில் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று உறுதிமொழி கூறியிருந்தார். இவரின் இந்தக் கூற்றே இவர்களது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை என்பதற்கு உண்மையான ஆதாரமாக இருக்கிறது.

கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் மீது அட்டுழியங்களை கட்டவிழ்த்து விட்டார். முஸ்லிம் வர்த்தகர்களை கடத்துவது முதல், முஸ்லிம் மக்களின் வணக்க வழிபாடுகளை தடுக்கும் நோக்கில் 'கிரீஸ்யகா' என்ற பீதியைக் கிளப்பும் மனிதன் மூலம் முஸ்லிம்களை உளவியல் ரீதியான தாக்குதல்களை நிகழ்த்தி அச்சுறுத்தி  முஸ்லிம்களை பீதியடைய வைத்தார்.  கோத்தாபய ராஜபக்ஷ என்ற இந்த மனிதனால் முஸ்லிம்கள் அனுபவித்த இன்னல்களையும், அச்சுறுத்தல்களையும், அடக்குமுறைகளையும் இலகுவில் மறந்து விட முடியாது.

மஹிந்த ஆட்சிக் காலத்தில், பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷவின் அனுசரணையில் மற்றும் பூரண ஆதரவுடன் இனவாத சக்திகள் புற்றீசல்களாய் பிறப்பெடுத்தன. முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான துவேச பிரசாரங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் பணியை தனது அதிகாரத்தை வைத்து கோத்தாபய திட்டமிட்டு செயற்படுத்தினார். 

இந்த இனவாத தூண்டுதலின் பிரதிபலனாக முஸ்லிம்களின் உயிர், உடமைகள் அழிக்கப்பட்டன. இவரினால் வளர்க்கப்பட்ட இனவாத தீய சக்திகள் மோசமான செயற்பாடுகளினால் தர்காநகர், பேருவளை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் சொத்துக்கள் தீயிற்;கு இரையாகிப் போகின. 

கோத்தாபயவினால்; வளர்க்கப்பட்ட இனவாதத்தின் மூலம்  அரங்கேற்றப்பட்ட கொலை, கொள்ளை, தீவைப்பு சம்பவங்களால்; முஸ்லிம் சமூகம் கோடானு கோடி சொத்துக்களையும், உயிர் உடமைகளையும் இழக்க வேண்டி நேரிட்டது. 

முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகளைகளைத் தூண்டும் எல்லே குணவன்ஸ தேரோ, அபயதிஸ்ஸ தேரோ, இத்தபானே சத்தாதிஸ்ஸ தேரோ போன்றவர்கள் கோத்தாபயவின் அமைப்பில் முக்கிய அங்கத்தவர்களாக இருக்கின்றனர். கோத்தாபயவின் காலத்தில் பொதுபலசேனா அமைப்பு தம்மை உத்தியோகபற்றற்ற பொலிஸ் என அழைத்துக்கொண்டு முஸ்லிம் வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்டது. முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தாக்கி தீவைத்து அழித்தது. இன்று முஸ்லிம்கள் மீது இரக்கம் காட்டுவதாய் நடிக்கும் பாதுகாப்பு செயலாளரான கோத்தாபய அன்று இவற்றை அமைதியாக பார்த்து இரசித்துக்கொண்டு இருந்தார்.

இன்று முஸ்லிம்களுடன் நட்புடன் இருப்பதாக காட்டுவதற்கு முற்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ இந்த இனவாத சக்திகளுக்கு உயிரூட்டி, பின்னணியில் இருந்து செயற்பட்டவர் என்பது உலகறிந்த உண்மையாகும். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சார்ந்துள்ள பொது எதிரணியின் பாராளுமன்ற அங்கத்தவர்களே இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். வாசுதேவ நாணாயக்கார, மஹிந்தானந்த அலுத்கமகே போன்றவர்கள் இனவாதிகளின் பின்னணியில் கோத்தாபய இருந்ததை ஊடகங்களில் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் மறந்து விட்டு இன்று முஸ்லிம்களில் ஒருசில விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் இந்த கோத்தாபய ராஜபக்ஷவை முஸ்லிம்கள் மத்தியில் 'மார்க்கட்' பண்ணும் துஷ்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அன்று கோத்தாபயவினால் விதைக்கப்பட்ட இனவாத நச்சு விதைகள் இன்று விருட்சங்களாகி இருக்கின்றன. இந்த ஆட்சியில் கூட இந்த இனவாத சக்திகளை அடக்கி கட்டுப்படுத்த முடியாதளவு  பலம்பெற்றிருக்கின்றன. ஆளும் அரச இயந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சக்திகளாக இந்த இனவாத சக்திகள் உருவாகியிருப்பதோடு, தொடர்ந்தும் இந்நாட்டு சிறுபான்மை சமூகங்களை குறிப்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தியும் வருகின்றன. 

இன்றும் கூட, கோத்தாபயவின் ஜனாதிபதி கனவுக்குப் பின்னால் அதே இனவாத சக்திகளே அணிதிரண்டு இருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக வீதியில் இறங்கி அழிவுகளை ஏற்படுத்திய  அனைத்து இனவாத சக்திகளும்  ஒன்றிணைந்தே கோத்தாபயவை ஜனாதிபதியாக்க முயற்சி செய்கின்றன. இன்று கோத்தாவுக்காக பிரசாரம் செய்யும் எலிய, வியத்மக, சிங்கள ராவய, ராவணா பலய போன்ற அமைப்புகளில் இருக்கும் அனைவரும் தீவிர இனவாதிகளாவர். நாட்டிலுள்ள அனைத்து இனவாத அமைப்புகளும் இவரின் ஜனாதிபதிக் கனவை நனவாக்க அயராது பாடுபட்டு வருகின்றன.

ஒருபுறம் சிறுபான்மை சமூகங்களை கருவறுக்கும் தீவிர இனவாதிகளையும் மறுபறம் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் ஒருசிலரையும் இணைத்துக் கொண்டு, ஜனாதிபதியாகும் கனவில் கோத்தாபய ராஜபக்ஷ மிதந்துக் கொண்டிருக்கிறார்.  இந்த ஏமாற்று அரசியலுக்கு இந்நாட்டு முஸ்லிம்கள் ஒரு போதும் துணைபோக மாட்டார்கள்.;.அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் மஹிந்தவின் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய எம்பிலிபிட்டிய, மத்துகம போன்ற இரண்டு ஊள்ளுராட்சி சபைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள முடிவை குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன். இந்த இரண்டு பிரதேச சபைகளையும் கைப்பற்றிய மஹிந்தவின் மொட்டு கட்சி குறித்த பிரதேசத்தில் மாட்டிறைச்சி கடைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்திருக்கின்றன. 

இந்த உள்ளுராட்சி சபைகள் பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயற்படுவதாக இருந்தால் கோழி, ஆடு, பன்றி,  போன்ற இறைச்சிக கடைகளுக்கான அனுமதிகளும் இரத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும். மீன் கடைகளும் மதுபான கடைகளும் இரத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை மஹிந்தவின இனவாத முஸ்லிம் எதிர்ப்பு அரசியலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். 
மஹிந்தவின் மொட்டு கட்சி கைப்பற்றியுள்ள பிரதேச சபைகளில் நிகழ்ந்துள்ள இந்த முஸ்லிம் விரோத நிலைப்பாட்டை கோத்தாபய தடுக்க முன்வருவாரா?  அரசாங்கத்தைக் கைப்பற்றி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கப்போவதாக பறைசாற்றும் இவர்கள், தமது அதிகாரம் இருக்கும் உள்ளுராட்சி சபைகளில் இடம்பெறும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க முன் வரவேண்டும்.  

இனவாதத்தை இல்லாதொழிக்க உருவான இன்றைய நல்லாட்சியில் கூட முஸ்லிம்களுக்கு இன்னல்கள், துன்பங்கள் இழைக்கப்பட்டன. இந்த அரசின் கீழ் நிகழ்ந்த அநீதிகளை நாம் கண்டிக்கத் தவறவில்லை. பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளை பாதுகாப்பதில் குறியாக இருக்கும் இந்த பெரும்பான்மை அரசு இயந்திரங்கள் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை அணுகுவதில் ஒரே அளவுகோலையே கொண்டிருக்கின்றன. 

அளுத்கம கலவரத்தில் கைது செய்யப்பட்ட இனவாதிகள் அன்றிரவே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அன்றைய பொதுக் கூட்டத்தை நடாத்துவதற்கான அனுமதியை வழங்கிய கோத்தாபய ராஜபக்ஷவே பொலிஸாருக்கு இந்த ஆணையையும் வழங்கியிருந்தார். 
அண்மையில் கண்டி, திகன பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது கைது செய்யப்பட்டவார்களில் நூற்றுக்கும் அதிகமானோர் ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் இனறும் தடுத்து வைகக்கப்பட்டுள்ளனர். 

இந்த அரசாங்கம் இனவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளைச் சொல்லி முஸ்லிம் சமூகம் திருப்தியடைய முடியாது என்ற நிலைப்பாட்டில் எமக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மஹிந்த ஆட்சியில் இனவாதிகளுக்கு ஒத்தாசை வழங்கியது போல் இந்த ஆட்சியில் இனவாதிகளை தூண்டிவிடும் எந்த மோசமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

என்றாலும் இன்றைய இந்த நல்லாட்சி அரசாங்கத்தை இந்த இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள நிர்பந்திக்கும் ஒருபலம் சிறுபான்மை சமூகமான எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த அரசில் குறைகள் பல இருந்தாலும் மஹிந்த ஆட்சியோடு ஒப்பிடும் போது இனவாதிகளுக்கு ஒத்தாசை வழங்கிய ஆட்சியை விட, சிறுபான்மை சமூகம் தொடர்பாக குரல்கொடுத்து அழுத்தம் கொடுக்கக் கூடிய  சாதகமான ஒரு நிலையை  நாம் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது. 

No comments:

Post a Comment