ஜனாதிபதியின் பேச்சு திருப்தியாக இல்லை: ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Thursday 10 May 2018

ஜனாதிபதியின் பேச்சு திருப்தியாக இல்லை: ஹக்கீம்


இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் முன்மொழிவு திருப்தியாக இல்லை. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட பேசாதது கவலையையும் ஏமாற்றத்தையும் தருகிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இன்று (10) 8ஆவது பாராளுமன்றத்தில் 2ஆவது கூட்டத்தொடரின் தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,



தேசிய அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி ஆற்றிய உரையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அடிப்படை தெரியாமல், சரியான அணுகுமுறை இல்லாமல் நழுவல்போக்கில் இருந்ததா என்ற கேள்வி குழுக்களின் தவிசாளரினால் எழுப்பப்பட்டிருந்தது. இதை நான் ஆமோதிக்கிறேன். அதேநேரம், ஜனாதிபதியின் உரையின் ஒருசில இடங்களில் மாத்திரம்தான் சிறுபான்மை பற்றி பேசப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உண்மையான மக்கள் நேய செயற்திட்டத்தில் 15 விடயங்களை அடையாளம்கண்டு குறிப்பிட்டிருந்தார்.

இதில் 7ஆவது அம்சமாக தமிழ் மக்களின் சமஉரிமைகளை அடிப்படையாகக்கொண்ட அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளல் என்றும் முஸ்லிம் மக்களின் நலன் மற்றும் சமூக, கலாசார தேவைகளை உறுதிசெய்தல் என்றும் மலையக தமிழ் மக்களின் பொருளாதார, சமூக நிலையை மேம்படுத்தல் போன்றவற்றைத் தவிர வேறெதும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஜனாதிபதியினால் முன்மொழியப்படவில்லை.

பேசுபொருளாக மாத்திரம் இருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், பிரதமர் தலைமையிலான வழிநடத்தில் குழுவில் நாங்கள் சுமார் 77 தடவைகள் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறோம். இது சம்பந்தமான இடைக்கால அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இந்த அறிக்கையில் கையாளப்பட்ட விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றில் விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்காமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதன் எதிர்கால திட்டங்கள் என்னவென்று தெரியாமல் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்துகொண்டிருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தற்போதைய ஜனாதிபதியை ஆசனத்தில் அமர்த்தியிருக்கின்ற நிலையில், இன்று கட்டம் கட்டமாக அரசியல் யாப்பை திருத்திக்கொண்டிருக்கின்ற ஒரு நிலைமைக்கு போய்க்கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை நாங்கள் கேட்கிறோம் என தெரிவித்தார்.

-RH

No comments:

Post a Comment