நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது ஆபத்து: ஹிஸ்புல்லா - sonakar.com

Post Top Ad

Monday, 7 May 2018

நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது ஆபத்து: ஹிஸ்புல்லாநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்குவது சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமையும் என்பதால் அதற்கு அனுமதியளிக்க முடியாது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 


நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் இதன்போது மேலும் கூறியதாவது:-

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்கும் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்;துக்கு தனிநபர் பிரேரணையாக கொண்டுவரவுள்ளது. இது தற்போது அரசியல் மட்டத்தில் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்குவதற்கு அனுமதியளிக்க முடியாது. நாட்டில் சிறுபான்மையினராக வாழ்கின்ற தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக தமிழ் மக்கள் என பலதரப்புக்கும் இது பாதிக்காகவே அமையும். 

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. இருந்தாலும் எனது தனிப்பட்ட நிலைப்பாடு இதுவாகும். 

எனினும், மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவரவுள்ள தனிநபர் பிரேரணையை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை பார்த்து ஆராய்ந்த பின்னரே இறுதி தீர்மானத்துக்கு வரமுடியும். 

நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறுபான்மையினருக்கு  பாதுகாப்பானது. சிறுபான்மையினரை ஆதரித்து அனுசரித்து சென்றால் மாத்திரமே ஒருவரால் ஜனாதிபதியாக வர முடியும். ஆனால், அம்முறைமை இல்லாமல் செய்யப்பட்டால் சிறுபான்மையினரின் ஆதரவின்றி பெரும்பான்மையினால் தமக்கு விரும்பிய ஒருவரை அதிகாரத்தில் கொண்டு வர முடியும் என்றார். 

-R. Hassan

No comments:

Post a Comment