வாழ்வுரிமைக்குப் பேரிடி! - sonakar.com

Post Top Ad

Sunday 11 March 2018

வாழ்வுரிமைக்குப் பேரிடி!


இந்நாடு எல்லோருக்கும் சொந்தம் என்ற மனப்பாங்கு எல்லோரிடமுமில்லை. இந்நாட்டில்; பெரும்பான்மையாக   பௌத்த சிங்கள மக்களே வாழ்கின்றனர் என்பது புள்ளிவிபரங்களின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதற்காக ஏனைய இனத்தவர்கள் வந்தேறு குடிகளல்ல.


அன்னியவர்களிடமிருந்து இந்நாட்டை மீட்பதற்காக சிங்களத் தலைவர்களுடன் இணைந்து தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களின் தலைவர்களும் போராடியிருக்கிறார்கள். 

அதனால், இந்நாட்டுப் பிரஜைகள் என எவரெவரெல்லாம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்நாட்டின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனை உரிமைகளையும் பெற்று சுதந்திரமாகவும், நிம்மதியாகவும், ஏனைய சமூகங்களுடன் சமூக ஒருமைப்பாட்டுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கு வழிவிடப்பட வேண்டியது அவசியமாகும். 

இருப்பினும், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கும், சகவாழ்வு நிலைபெறுவதற்கும் இந்நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனவாதம் தடைக்கல்லாக இருந்து வருகிறது. இலங்கைச் சமூகங்களின் சமூக ஒற்றுமையைச் சீர்குலைத்து இலங்கையை இனவாத சகதிக்குள் புதைக்க எத்தனிக்கும் சக்திகள் அடையாளம் காணப்பட்டு அச்சக்திகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பு என பல கோணங்களிலும்  வலியுறுத்தப்பட்டுக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. 



தெற்கில் ஆண்டாண்டு காலம் நல்லிணக்கத்துடன், சகவாழ்வுடனும் வாழும்  சிங்கள – முஸ்லிம் மக்களின் சகவாழ்வைச்  சீர்குலைத்து இனமுறுகலை ஏற்படுத்தும் கைங்கரியங்களை பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள வக்குரோந்து அரசியல்வாதிகளும், பௌத்த சிங்கள கடும்போக்காளர்களும், இவர்களுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் துணைநிற்கும்; சில ஊடகங்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்திருப்பதை வரலாற்று நெடுங்கிலும் காண முடியும்.

இவ்வாறே, வடக்கிலும், கிழக்கிலும் தொன்றுதொற்று ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம்களை ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு நோக்கச் செய்தும,; விட்டுக்கொடுப்புக்களையும், புரிந்துணர்வுகளையும் இல்லாமலாக்கியும் தமிழனா முஸ்லிமா  என்று சிந்திக்கச் செய்ததும் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற இம் முக்கூட்டு சக்திகள்;தான் என்பது வெள்ளியிடைமலை.

சிறுபான்மையினரான தமிழர்களும், முஸ்லிம்களும்   ஆண்டாண்டு காலமாக இம்மண்ணை நேசித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்;. இத்தேசத்தைக் கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்;. இந்நாட்டுக்காக உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களால் இத்தேசம் மாண்பு பெற்றிருக்கிறது என்பதை பெரும்பான்மை சமூகத்திலுள்ள பலர் ஏற்றுக்கொண்டிருந்தாலும், பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சிறுபான்மையினருக்கெதிரான சக்திகள் இவ்வுண்மைகளை மறைத்து, இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற போலிப் பிரச்சாரங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இம்முக்கூட்டு சக்திகளின் போலிப் பிரச்சாரங்களின் மூலம் பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள அப்பாவி இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட தூண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம் தேசியத்தின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தியிருப்தோடு மக்களின் வாழ்வுரிமையையிலும் பேரிடியை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர் சம்பவங்களும் வாழ்வுரிமை மீதான பேரிடியும்

முஸ்லிம்களின் வளர்;ச்சி பேரினவாதத்தின் கழுகுக்கண்களை சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் தொட்டுக் குத்திக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சியை அழிப்பதே இப்பேரினவாதத்தின் இலக்கு என்பதை 1915ஆம் ஆண்டு இடம்பெற்ற கம்;பளைக் கலவரம் முதல்; அம்பாறையிலும், கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மற்றும் நாட்டின் இதர பிரதேசங்களிலும்  அரங்கேற்றப்பட்டுள்ள இனவெறியாட்டம் நன்கு புலப்படுத்தப்படுத்தியுள்ளன. தொடர்ச்சியான தாக்குதல்கள் சம்பவங்கள் இலங்கை முஸ்லிம்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற  நாடு என்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையை மீண்டும் நிரூபித்தாகவும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், வாழ்வுரிமை மீதான பேரிடியாகவும் நோக்கப்படுகிறது.

தமிழ் சமூகம் கல்வியில் முன்னேறிக் காணப்பட்டதொரு காலகட்டத்தில் இச்சமூகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி, உரிமைகளை மறுத்து அப்பாவி இளைஞர்களை ஆயுதப்போராட்டத்துக்கு இழுத்துச் சென்றது பேரினவாதிகளின்; இருண்ட மனப்பாங்குதான். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை 30 வருட காலம் அழிவுகளைச் சந்திக்கச் செய்த பௌத்த சிங்கள் மக்கள் மத்தியிலுள்ள வங்குரோத்து அரசியல்வாதிகளும், கடும்போக்காளர்களும் இவர்களை ஊக்கப்படுத்தும் சில ஊடக ஊதுகுழல்;களும், முஸ்லிம்;களின் கலை, கலாசார, மதப் பண்பாட்டு விழுமிய வாழ்க்கை முறையிலும், ஏனைய கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களிலும் வேண்டுமென்றே மூக்கைநுளைத்துள்ளனர். 

முஸ்லிம்கள் குறித்தான தப்பபிராயங்களை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி, போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இன வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இவர்களின் இத்தகைய பிரச்சாரங்களும், போலிக்குற்றச்சாட்டுக்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதரமற்றவை என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

அம்பாறை நகர் முஸ்லிம் ஹோட்டலில் தயாரிக்கப்பட்ட கொத்து ரொட்டியில் இனவிருத்தித்தடை மாத்திரை கலக்கப்பட்டதாக கூறப்பட்டதற்கமைய அக்கொத்துரொட்டியின் மாதிரி அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதில் எவ்வித மாத்திரைகளும் கலக்கப்படவில்லை எனவும் அதில் மாவுக் கட்டியே இருந்துள்ளதாகவும் அது வேறொரு உணவின் பகுதியெனவும் அரச இரசாயனப்பகுப்பாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி இனவாதிகளிதும், அவர்களின் ஊது குழலாகச் செயற்பட்ட ஊடகங்களினதும் முகத்திரையைக் கிழித்திருக்கிறது. 

பெரும்பான்மை பௌத்த-சிங்கள மக்கள் மத்தியில் உள்ள  சிறுதொகையினரான இனவாதக் கடும்போக்காளர்கள் இந்நாட்டின் சொந்தக்காரர்களும், முன்னுரிமைக்குரியவர்களும், உரிமைகளை அனுபவிக்கக் கூடியவர்களும் நாங்கள்தான்; என்ற மனப்பாங்கிலும்  ஏனைய இனத்தினர் இந்நாட்டில் மேலெழந்து விடக்;கூடாது என்ற மனோ நிலையில் தங்களது இனவிரோத நடவடிக்கைகைள முன்னெடுத்து இந்நாட்டை அமைதியற்ற அசாதாரண சூழ்நிலைக்குத் தற்போது தள்ளியிருக்கிறார்கள். 

சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டி வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தும் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்த போதிலும், இச்சக்திகளினால் தூண்;டப்பட்டுள்ள இனவெறி பிடித்த வன்முறையாளர்களினால் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள், வாகனங்கள் என சமூக, பொருளாதார கட்டமைப்புக் கூறுகள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன.  பாரிய அழிவுகளை முஸ்லிம்கள் சந்தித்துள்ளனர்.

முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள அழிவுகள்

முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளின் தூண்டுதல்களினால்  சுதந்திரததிற்கு முன்பிருந்து தொடங்கப்பட்ட அழிப்பு நடவடிக்கைகள் 2012 ஆண்டின் பின்னர் வீரியம் பெற்றிருக்கிறது. பொதுபலசோன உருவான காலம் தொட்டு முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பட்டியல்கள் தொடர்ந்து நீண்டுகொண்டுதான் செல்கிறது. 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அநுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாசலையும் அங்கு வாழ்ந்த முஸ்லிம்களின் குடியிருப்புக்களையும் அகற்றக் கோரி  பிக்குகள் மேற்கொண்ட போராட்டத்துடன் தொடங்கிய முஸலிம்களுக்கு எதிரான சமகால நடவடிக்கைகள் இன்னும் ஓயவில்லை.

2013ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக 250 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் 15க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு 2014ஆம் ஆண்டிலும் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆட்சியின் இறுதிக்கால கட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல தாக்குதல் சம்பவங்கள்; முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

2014ல் தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற எடுத்த முயற்சி, வீதி அபிவிருத்தி என்ற பெயரில் பள்ளிவாசலை அண்டி வாழ்ந்த மக்களை வெளியேற்றியமை, 300 வருட பூர்வீக வரலாற்றைக் கொண்ட மாவனல்லை தெவனகல பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட  முயற்சி எனத் தொடர்ந்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகள், 2014 ஜுன் 15ஆம் திகதி; அளுத்தகமையில் நேரடி இனவெறியாட்டமாக அரங்கேற்றப்பட்டது. கறுப்பு ஜுன் ஆக அத்தினத்தை இந்நாட்டு முஸ்லிம்களின் வரலாற்றுப்பக்கங்களில் எழுதச் செய்தது. சட்டமும் நீதியும் புதைக்கப்பட்டு அராஜகம்; சில மணித்தியாளங்கள் அளுத்தமையில் தாண்டவம் ஆடியது. ஜனநாயகம் கண்ணீர் சிந்தச் செய்யப்பட்டு பேரினவாதம் அகோரம் பெற்றது. இத்தாக்குதல் சம்பவங்களை விட கடந்த திங்கள் முதல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள்pனால் 25 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் 200 வீடுகள், 150க்கு மேற்பட்ட வர்த்த நிறுவனங்கள் நிலையங்கள் என்பனவும் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றபோதிலும் சேத விபரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சமூக பொருளாதார ரீதியாக பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதுடன் அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை முற்றாக இழந்துள்ள நிலையில் ஒருவேளை உணவுக்கு பிறரின் தயவை நாட வேண்டி நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவர்களுக்குரிய நஷ்டஈடுகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டு;ள்ளதாகவும், இவற்றை உடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. அளுத்கம முதல் அம்பாறை வரை மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளபோதிலும்  அவர்களுக்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில,;; கடந்த திங்கள் கிழமை முதல் முஸ்லிம்களுக்கு எதிராக பல பிரதேசங்களிலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கான சட்ட நடவடிக்கைள் எவ்வாறு அமையவுள்ளன என்பதை காலம் கடந்துதான் அறிந்துகொள்ள முடியும்.

அளுத்தக, கிந்தோட்டை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நஷ்டயீடுகளும் இன்னும் முழுமையாக வழங்கப்படாத நிலையில,; அம்பாறையிலும், திகன உட்பட்ட கண்டி மாவட்டத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு எப்போது எவ்வாறு  வழங்கப்படும் என்ற கேள்விக்கு மத்தியில்;, கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற  யுத்தகாலத்தில் விபத்துக்களை சந்தித்த மக்கள், மக்கள் எழுச்சிகளினால் பாதிக்கப்பட்ட மக்கள், மக்களின் உரிமைகள் மீறப்படல், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட  தரப்பினருக்கு நஷ்டஈடு வழங்கும் அலுவலகத்தை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதான தகவல்களும் வெளிவந்துள்ளன.

இனவெறி வன்முறையாளர்களினால் ஏற்பட்டுள்ள அழிவுகள் கடந்த ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்ததைப் போன்றே இந்நல்லாட்சியிலும் கடந்த வருடம் கிந்தோட்டையில்  முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களும், கடந்த மாதம் 27ஆம் திகதி அம்பாறையிலும், கடந்த திங்கள் கிழமை திகனை, தெல்தெனிய, கட்டுகஸ்தோட்டை, அக்குரணை, பூக்கொடை என பல பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவங்களும் அதன் அழிவுகளும் இந்நல்லாட்சி அசாங்கத்தினால் வழங்கப்படும் உத்தரவாதங்களிலும், பாதுகாப்பிலும் நம்பிக்கையீனத்தை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன.  இவ்வரசாங்கத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை இழப்பை முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

'கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்களின் போது பாதுகாப்புத்துறை அசமந்தப்போக்குடன் நடந்துள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்ட செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அசாதாரண நிலைமை குறித்த விஷேட கலந்துரையாடலில்  குறிப்பிட்டிருக்கிறார்.

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்

வன்முறைச் சம்பவங்கள்; அரசாங்கத்தை மாத்திரமின்றி முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளையும், முஸ்லிம் மதத் தலைவர்களையும் பெரும் விமர்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது. நேரடியாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களினூடாகவும், கடும் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தாலும், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் மதத் தலவர்களும் அவர்களது சக்திக்குட்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதனடிப்படையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்புக்களை பாராளுமன்றத்திற்குள்ளும,; வெளியிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். 

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதல்கள் இடம்பெறுவதைத் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது சபை நடுவே அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இவ்வமர்வின் போது அமைச்சர் றிஷாட் பதியூதீன் இலங்கையின் இறைமையைப் பாதுகாக்கும் முஸ்லிம்;களுக்கு இனவாதிகள் தரும் பரிசா இத்தாக்குதல்கள் என்ற கேள்வியையும் அரசாங்கத்திடம் எழுப்பியுள்ளர்.

'அம்பாறை சம்பவத்தின் உண்மைதன்மையை மறைந்துள்ள பொலிஸார் அம்பாறை மற்றும் திகன சம்பவங்களில்  பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் நாட்டில் சில சம்பவங்கள் இடம்பெற்று கலவரங்கள் ஆரம்பித்த நிலையில் விரைவாகச் செயற்பட்டு கலங்களைக் கட்டுப்படுத்திய பொலிஸார் இவ்விரு பிரதேசங்களிலும் இடம்பெற்ற சம்;பவங்களில் தலைகீழாகச் செயற்பட்டமை ஏன் என்ற கேள்வியையும் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அவர் எழுப்பியுள்ளார்.

இதேவேளை, 'முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கத் தவறினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்போது இப்பிரேரணைக்கு ஆதரவு வழங்ப்படும'; என பிரதி அமைச்சர் ஹரிஸ் அரசாங்கத்தை எச்சரித்துள்ள நிலையில் 'முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக  ஆயுதங்கள் வழங்க வேண்டும்' என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாமென அரசாங்கத்திடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37வது கூட்டத்தொடரில் பங்குகொள்வதற்காக ஜெனிவா சென்றுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குகொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்தோடு, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும், முஸ்லிம் சமூகம்சார் சிவில் அமைப்புக்களும், ஏனைய தரப்புக்களும் இத்தாக்குதல் சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதுடன் முஸ்லிம்களின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ள நிலையில்  தேசிய அரசியலிலும் சர்வதேச அரங்கிலும்; இத்தாக்குதல்களுககு எதிரான கண்டங்களும், ஆதங்கங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய சர்வதே ஆதங்கங்களும் கண்டனங்களும்

முஸ்லிம்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்குட்படுத்தியுள்ள தொடர் தாக்குதல் சம்பவங்கள் தேசிய அரசியலிலும் சர்வதேச அரங்கிலும் தாக்கங்களை ஏற்படுத்தி விமாசனங்களுக்கும், கருத்தாடல்களுக்கும் உட்படுத்தியிருக்கிறது. 

அந்தவகையில் 'தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்றநிலையில் இவற்றைத்தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை' என எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ' இணைந்த வடகிழக்கில்  தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் உணர்த்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். ' முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து இடம்பெறும் வன்முறைகள் உடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்' என கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வேலூ குமார் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், தேசிய ஒற்றுமையைச் சீர்குலைத்தால் நாடு அதல பாதாளத்தை நோக்கிச் செல்வதைத் தடுக்க முடியாது என மல்வத்த மாநாயக்க தேரர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ள அதேவேளை இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள்  பிரபல்ய வீரர்களான சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோரும், இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வினும் இத்தொடர் தாக்குதல்கள் குறித்து தங்களது கண்டனங்களையும,; ஆதங்கங்களையும் வெளியிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்நிலையில் சர்வதேச அரங்கிலும் இத்தாக்குதல் சம்பவங்களை நிறுத்த உடனடி நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளன. அண்மைய நாட்களாக இடம்பெறுகின்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சூத்திரதாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர்களைச் சட்டத்தின் முன் கொண்டுவருமாறும் பிரதேசங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.

அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் இந்த வெறுப்பூட்டும் சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐரோப்பி ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேசிய ரீதியாகவும் சர்வதேச அரங்கிலும் இத்தாக்குதல் சம்பவங்கள் இந்த அரசாங்கத்திற்கு பேரழுத்தங்களை உருவாக்கயிருப்பதுடன் அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கத் தறிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் சுமத்தியிருக்கிறது. இவ்வேண்டுகோள்கள் கருத்திற்கொள்ளப்பட்டு அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதைக் காண முடிகிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் சமூகங்களின் கடப்பாடும்

இதனடிப்படையில், கண்டி மாவட்டம் முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்கு மாத்திரமின்றி இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களினது இயல்பு வாழ்வைப் பாதிக்கச் செய்த சூத்திரதாதிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் பிரதான சூத்திரதாரி உட்பட 9பேர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களோடு இத்தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட  70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட்டாலும் முஸ்லிம்கள் உளவியல்;, சமூக, பொருளாதார, வாழ்வுரிமை ரீதியாக மிகவும் மோசமாகக்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பாதிப்புக்களிலிருந்து அவர்கள் மீள வேண்டுமாயின் அவர்களின்; வாழ்வுரிமை அப்பிரதேசங்களில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து சக்திகளும் இனங்காணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலை எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்திற்கும் ஏற்பாடதிருக்க உரிய நடவடிக்கைகளை சிறுபான்மை சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னெடுப்பது அவசியமாகவுள்ளது.

சிங்கள முஸ்லிம் மக்களின் சகவாழ்வைச் சீர்குலைக்க எடுக்கும் முயற்சிகள் போன்று தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்தையும் சீர்குலைத்து சிறுபான்மை சமூகங்கள் வாழும் பிரதேசங்களில் பதற்றத்தைத் தோற்றுவிக்க இச்சக்திகள் முயற்சித்தால் அவற்றிற்கு எதிராக தமிழ் போசும்; சமூகங்கள் ஒன்றுபட்டு செயற்படுவது காலத்தின் தேவையாகும். வீணாக விளக்கில் வண்டு விழுந்த நிலைக்கு எந்தவொரு சமூகமும் ஆளாகிவிடக் கூடாது.



இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளோடு,  சமகால மற்றும் எதிர்கால முஸ்லிம்கள்pன் வாழ்வுரிமையில் மீண்டும் பேரிடி ஏற்படாது சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின், முஸ்லிம் சமூகத்திலுள்ள அரசியல் தலைமைகள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அத்தனை தரப்புக்களும் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவதும,; ஒன்றுபட்டு சமூகத்தைப் பாதுகாப்பதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், அத்தோடு இனவெறியர்களின் இனவாதச் சகதிக்குள் இந்நாடு அமிழ்ந்து விடாது இந்நாட்டின் எதிர்கால சந்ததிகளின் சுபீட்சத்துக்கும் இன ஒற்றுமையுடனான வாழ்வுக்குமாக எத்தகைய சக்திகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றனவோ அச்சக்திகளுடன் இணைந்து செயற்படுவதும் முஸ்லிம்களின் காலத்தின் அதி முக்கிய தேவையாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment