கண்டி நிகழ்வின் பின்னர் முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டியவை - sonakar.com

Post Top Ad

Sunday, 11 March 2018

கண்டி நிகழ்வின் பின்னர் முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டியவைநடந்து முடிந்த முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள், அழிவு வேலைகள் நாட்டு நலனில் கரிசனையுள்ள சிங்களவர்கள்,தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

முஸ்லிம்களும், சிங்களவர்களும், தமிழர்களும் இந்த இலங்கை மண்ணின் மைந்தர்கள். அவர்கள் ஏன் இந்த நாட்டின் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு சகோதரர்களாக அமைதியாகவாழமுடியவில்லை என்ற கேள்வி எல்லா தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களும் எழுப்பவேண்டிய கேள்வியாகும். அதற்கான வழிமுறைகள் பற்றி புத்திஜீவிகள் மட்டத்தில் மட்டுமல்ல சாதாரணபொதுமக்கள் மட்டத்திலும் கலந்துரையாடப்படல் வேண்டும். 


இந்த கலவரங்களின் உடனடிக்காரணம் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு என்பது உண்மையே. ஆனால் அது சிங்கள மக்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் பற்றி வளர்ந்து வந்த வெறுப்புணர்வு, குரோதமனப்பாங்கு என்பவற்றின் தர்க்கரீதியான விளைவு என்பது மிகத்தெளிவானதாகும்.

இந்த இன முரண்பாட்டிற்கு, முஸ்லிம்கள் தாம் பிழையாகக் கட்டமைத்துக்கொண்ட சில சிந்தனைகளும், தூர நோக்கற்ற நடத்தைகளும் காரணமாக இருந்திருக்கின்றன என்பதையும்மறுப்பதற்கில்லை.  அத்தோடு அவர்களில் ஒரு சாராரது ஒழுக்கமற்ற நடத்தையும் இந்த இன முரண்பாட்டை வளர்ப்பதில் பங்களிப்பு செய்து வருகின்றது என்பதிலும் சந்தேகமில்லை.

அதேவேளை அம்பாறை நிகழ்வு, தெல்தெனிய நிகழ்வு,  அந்த நிகழ்வுகள் கையாளப்பட்ட முறை, திகனையில் அரங்கேறிய அழிவு வேலைத்திட்டங்கள், தொடர்ந்து கண்டியின் பல கிராமங்களில் அதுதொற்றிப்பரவியமை போன்ற நிகழ்வுகளை ஆழ்ந்து நோக்கும் போது, இது திட்டமிட்டு அரங்கேறிய நிகழ்ச்சி நிரல் என்ற சந்தேகம் பலமாகவே எழுகிறது.

இந்த நிகழ்வுகளின்போது முஸ்லிம்கள் தவிர்க்க முடியாது பாதுகாப்பு பிரிவினர் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையால் தாங்களே தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்குதள்ளப்பட்டார்கள். சொத்துக்கள், உயிர்கள் மீது அத்துமீறல்கள் நிகழும் போது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சட்டம் கொடுக்கும் அனுமதியே இதுவாகும். அத்தோடு சிங்கள மத தலைமைகளும், புத்திஜீவிகளும், அரசியல் வாதிகளும், சாதாரண பொதுமக்களும் முஸ்லிம்களோடு ஒத்துழைத்தமை குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும். இவற்றின் காரணமாக முஸ்லிம்கள் மீது  ஏற்படவிருந்த மிகப்பாரிய அழிவு தவிர்க்கப்பட்டது.

இந்த வன்முறைகளால் முஸ்லிம்களே கடுமையாக பாதிக்கப்பட்ட தரப்பினர் என்பது உண்மையாயினும் நாட்டு நலனுக்கு ஏற்பட்ட பாதிப்பும் பாரியதாகும். சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டமை ,  நாட்டின் பொருளாதார இயக்கம் சில நாட்கள் ஸ்தம்பிதமடைந்து ஏற்படுத்திய பாரிய நஷ்டம் , சர்வதேச ரீதியாக ஏற்பட்ட இலங்கை மீதான அபகீர்த்தி என்பன நாட்டின் மீது தாக்கமேற்படுத்தியபெரும் நஷ்டங்களாகும்.

இனி நாம் எவ்வாறு சிந்திக்கவேண்டும்? 

முஸ்லிம்கள் பாரம்பரியமாக பின்பற்றி வரும் சிந்தனைகளை ஒருமுறை மீளப்பார்த்து இஸ்லாமிய வரையறைகளுக்குள்  நின்று சிந்தனா ரீதியான பொருத்தமான கட்டமைப்பொன்றைஉருவாக்கிக் கொள்ள வேண்டும். 

முஸ்லிம்கள் தமது பாரம்பரிய நடத்தைகள் மீதும் ஒரு மீளாய்வை மேற்கொண்டு இந்த நாட்டுக்கு பொருத்தமற்ற, ஒவ்வாமைத்தன்மை எங்கே காணப்படுகிறது என்பதை இனங்கண்டு,  இஸ்லாமிய வரையறைகளுக்குள் நின்று தம்மைத்தாம் மீள ஒழுங்குபடுத்திக்கொள்ளவேண்டும்.  

முஸ்லிம்கள் தமது ஒழுக்கப் பகுதியை மிகக் கவனமாக ஆராய்ந்து அப்பகுதியில் ஒழுக்க சீர்நிலைக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

நடந்து முடிந்த அழிவில் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளுக்கான நஷ்டஈடுகளை பெறுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளில் முனைந்து ஈடுபடுவதில் ஒருபோதும்  நாம் பின் நிற்கக்கூடாது. அத்தோடு இந்த அழிவு வேலைகளை நடாத்திய குற்றவாளிகளுக்கான தண்டனைகளைப் பெற்றுக்கொடுப்பதும், எம்மை எதிர்காலத்திலும் காத்துக்கொள்ளும் வழியே என்பதை நாம்நன்குணர்ந்து அப்பகுதியிலும் முனைப்புடன் ஈடுபடவேண்டும். இப்பகுதியில் குறிப்பாக முஸ்லிம் சட்டத்தரணிகள் கவனம் செலுத்துவதும் ஈடுபாடு காட்டுவதும் மார்க்கம் அவர்கள் மீது விதிக்கும்கடமையாகும்.

முஸ்லிம்கள் மீதான இந்த தொடர் அத்துமீறல்களின் பின்னணி என்ன என்பது விஞ்ஞான பூர்வமாக ஆராயப்படவேண்டும். அந்த ஆய்வுகளின் பின்னணியில் முஸ்லிம்கள் இந்த நாட்டில்சமாதனாமாகவும் அடுத்த சமூகங்களுடன் நல்லுறவுடனும் வாழ்வதற்கான மூலோபாயத்திட்டங்களை வகுத்துக்கொள்வது அவர்கள் மீதான கடமையாகும். குறிப்பாக இப்பகுதியில் எமது சிவில்தலைமைகள் கூடுதல் ஈடுபாடு காட்டுவது நாம் வாழும் சமகாலத்தேவையாகும். அது மார்க்கம் அவர்கள் மீது விதிக்கும் கடமையுமாகும். 

சிங்கள, தமிழ், முஸ்லிம் புத்திஜீவிகளும் அனைத்து மட்டங்களிலுமான தலைமைகளும் நாட்டின் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை வகுத்துமுன்னெடுக்க வேண்டியது அவர்களது கடமைப்பாடாகும்.

-உஸ்தாத் எம் . ஏ. எம் மன்ஸூர்

No comments:

Post a Comment