அரசின் பலவீனத்தால் பலம் பெறும் இனவெறித் தாக்குதல்கள் - sonakar.com

Post Top Ad

Sunday, 11 March 2018

அரசின் பலவீனத்தால் பலம் பெறும் இனவெறித் தாக்குதல்கள்நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் அரசாங்கத்திற்குரியது. இது விடயத்தில் அரசாங்கம் சிறிதளவேனும் தட்டிக்கழித்துவிட முடியாது. ஆனால் தற்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாத கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள், கொலைகள் முழு முஸ்லிம்களையும் அரசாங்கத்தின் மீது சந்தேகம் கொள்ளச் செய்துள்ளது.

இதற்கு மூலகாரணம் அரசாங்கமேயாகும். அரசாங்கத்தின் திறணற்ற மற்றும் இயலாத் தன்மைகளும் பாரிய வன்முறைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது. குறிப்பாக அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தமக்குள்ளே முரண்பட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டு அறிக்கைகளை விடுவதும், ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரங்களை விடுவதும் இனவாத வன்முறைக் கும்பல்களுக்கு அவர்களின் காடைத்தனங்களை கட்டுப்பாடில்லாமல் மேற்கொள்வதற்கு வழிசமைத்து விட்டது. இதற்கான பொறுப்பை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என முஸ்லிம் சமுகம் கண்டனம் வெளியிட்டுள்ளது. 

அரசங்கம்  சரியான முறையில் ஆட்சியை கொண்டு நடாத்தியிருக்குமானால் நாட்டில் இனவாத சிங்கள காடையர்களால் முஸ்லிம் சமுகம்மீது இவ்வாறான துரோகத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்காது. அரசாங்கம் சட்டத்தையும், பாதுகாப்பையும் கையில் வைத்துக் கொண்டு வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தமையால் ஏற்பட்ட விளைவுகள் இன்று இனவாதிகளினால் அச்சமின்றி சட்டத்தையும் மீறி காடைத்தனங்கள் மேற்கொள்வதற்கு வழி சமைத்துள்ளது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு தோற்றுள்ளது.

குற்றமிழைப்பவன் எவராக இருந்தாலும் அவர்கள் மீது சரியான முறையில் சட்டத்தை நடைமுறைப் படுத்தியிருந்தால் அடாவடித்தனங்கள் ஏற்பட்டிருக்காது. அத்துடன்; வன்முறைகளைத் தூண்டி அவர்களை வழி நடத்தும் இனவாத துறவிகள் மேற்படிச் செயற்பாடுகளில் ஈடுபட முனைய மாட்டார்கள். ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் தோற்றுப்போய் விட்டது. அரசாங்கத்தினால் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்பதனை இலங்கையில் உள்ள இனவாத கும்பல்கள் புரிந்து கொண்டு தமது கபடத்தனங்களை மேற்கொண்டு நாட்டை அழிக்கத் துடிக்கின்றனர். 

இன்று சட்டமும், ஒழுங்கு அமைச்சராக இருக்கும் பிரதமர் தனது பதவியை சரியான முறையில் கடைப்பிடிக்கவில்லை என்பதனை ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைமைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். குழப்பம் செய்பவர்கள் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைதுசெய்து சட்டத்தின் முன்நிறுத்தி சிறையில் போட்டிருந்தால் அவர்கள் அச்சமடைந்திருப்பர் ஆனால் இவ்வாறான முன் நடவடிக்கைகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. காரணம் பெரும்பான்மை என்ற ஒரே காரணத்தினால் என்பது மட்டும் உண்மையான விடயமாகும். எனினும் தற்போது முஸ்லிம் சமுகம், சமாதான விரும்பிகள் சர்வதேச சமுகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற வற்றின் அழுத்தங்களால் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்குவதாக அரசாங்கமும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், பாதுகாப்புத் தரப்புக்கள் அறிக்கைகள் விடுத்துள்ளன. 

என்றாலும் மேற்படி விடயங்களின் உண்மையான செயற்பாடுகள், அவற்றின் முன்னேற்றங்கள் என்பனவற்றின் நடவடிக்கைகளின் பின்னரே முஸ்லிம் சமுகம் அதன் மீது நம்பிக்கை கொள்ள முடியும். அதுவரையில் எந்தவித வாக்குறுதிகளையும் முஸ்லிம் சமுகம் நம்பத்தயாராக இல்லையெனத் தெரிவிக்கின்றனர். காரணம் கடந்த காலங்களில் இவ்வாறு பலவாறான பொய் வாக்குறுதிகளால் மக்கள் நசுக்கப்பட்டனரேதவிர அவர்களுக்கு எந்த விதத்திலும் விமோசனங்கள் கிடைக்க வில்லை எனலாம். 

இலங்கை ஒரு பல்லின, பல்சமய மக்கள் வாழும் நாடாகும் இந்த நாட்டில் முஸ்லிம்கள் மீது இனவாத துறவிகளும், அவர்களின் அடிவருடிகளும் மேற்கொள்ளும் துரோக்கத்தனங்கள் தற்போது கட்டுப்பாடில்லாமல் செல்வதால் நாட்டில் அமைதியின்மை ஏற்படும் நிலைமைகள் அதிகமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக வன்முறைகளுக்கு வித்திடும் பல இனவாத நபர்கள் தற்போது பகிரங்கதமாகவே சமுக வளைத்தளங்களில் தமது அடையாளங்களை காட்டி அமைதியாக இருக்கும் பௌத்த சகோதரர்களை முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைக்கு இழுக்கின்றமை ஒரு பாரிய மனித உரிமை மீறலாகும். இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடன் கைதுசெய்து கூட்டில் போட சகல ஆதாரங்களும் இருக்கின்றன. இந்த வகையில் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலமே தற்போது ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும் என்பதனை ஜனாதிபதியும், பிரதமரும் புரிந்து கொள்ள வேண்டும். 

சிறுபான்மைச் சமுகங்கள் என்பதற்காக ஒரு பிரஜையின் அல்லது சமுகத்தின் மத, சமய மற்றும் வாழ்வுரிமைகளை இன்னொருவர் அல்லது இன்னொரு குழு பறிக்க முடியாது. சர்வதேச சட்டங்களும் இவற்றையே வழியுறுத்துகின்றன. ஆனால் இன்று அரசாங்கம் கையாலாகாத் தன்மையில் இருப்பதை சாதகமாகப் பயன்படுத்தி குண்டர் குழுக்கள் தமது தாக்குதல்களை பகிரங்கமாகவே மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பொதுபல சேனாவின் ஞானசார தேரர், மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனதேரர் போன்றோர்கள் இன்று நாட்டில் சண்டித்தனங்கள் காட்டி மக்களையும், அரசாங்கத்தினையும் அச்சுறுத்துகின்றனர். 

இவர்களுக்கு மேற்படி விடயங்களில் ஈடுபடுவதற்கு இந்த நாட்டில் யார் அதிகாரங்களைக் கொடுத்தது?. இவர்கள் சமயப் போதகர்கள் என்பதற்காக நாட்டின் இறைமைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள முடியாது. இவர்கள் மேற்கொண்டு வரும் இந்நடவடிக்கைகள் மிகவும் பாரதூரமானது. இவர்கள் இந்த நாட்டை அழித்து சின்னாபின்மாக்க நினைப்பவர்கள், மற்றவர்கள் அமைதியாவும், சந்தோசமாகவும் இருப்பதை விரும்பாத படுபாவிகள். இவர்கள் விடயத்தில் பாதுகாப்புத் தரப்பினரும், அரசாங்கமும், சட்டத்துறையும் உடநடியாக கவனஞ் செலுத்த வேண்டும். இவர்கள் மோசமான  குற்றவாளிகள் உண்மையில் இவர்கள் தற்போது இருக்க வேண்டிய இடம் சிறையாகும். 

காரணம் அந்தளவிற்கு கடந்த காலங்களில் கொலைகள் புரிந்தும், வன்முறைகளை கட்டவிழ்த்து முஸ்லிம் மக்களினதும், தமிழ் மக்களினதும் விலைமதிக்க முடியாதளவு உடமைகளை சூறையாடியும், அழித்து நாசம் செய்ததுடன் சமய ரீதியாகவும், உடல் உள ரீதியாகவும்  சிறுபான்மை மக்களை நொந்துபோகும் அளவிற்கு இச்சமுகங்களை வஞ்சித்து விட்டனர். இவ்வாறானவர்களை துறவிகள் என்று கூறுவதற்கும், உச்சரிப்பதற்கும் நாவு கூசுகின்றது. அதுமட்டுமல்லாது இவர்கள் நீமன்ற உத்தரவுகளைக் கூட கிழித்தெறிந்து நாட்டின் சட்டம், ஓழுங்கு என்பவற்றிற்கு குந்தகம் விளைவித்துள்ளவர்கள் என்பதுடன் அப்பாவி பௌத்த மக்களை வன்முறையாளர்களாகவும், சிறுபான்மை மக்களின் எதிரிகளாகவும் ஆகுவதற்கு தூபமிட்டவர்கள் எனலாம். 

ஒட்டு மொத்தத்தில் மிகமோசமான குற்றவாளிகளான இவர்கள் அவர்கள் புரிந்த குற்றத்திற்காக தண்டனைகள் அனுபவிக்காது சட்டத்துறையையும், நீதித்துறையையும, அரசாங்கத்தினையும்; ஏமாற்றி சுதந்திரமாக சுத்தித்திரிகின்றனர். இவர்களின் குரல்வளையை உரிய முறையில் அரசாங்கம் நசுக்கினால் இந்த நாட்டில் இனவாதம் என்ற அரக்கனை இலகுவாக அழித்து விடலாம். 

மேற்படிக் கபடத்தனமான பயங்கரவாதிகளின் அளுத்கம, ஜிந்தோட்டை கொலைகளுக்குப் பிறகு தற்போது அம்பாறை மற்றும் கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய, திகன உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களில்  திட்டமிட்டு வன்முறைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்களின் சகாக்கள் மூலம் நாட்டின் மக்கள் அமைதியாக வாழும் ஏனைய பகுதிகளிலும் வன்முறைகளை தூண்டுமாறு பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர். முக்கியமாக இவ்வாறு தூண்டுதல்கள் மேற்கொள்ளும் ஒருசில இனவாத துறவிகளை கைது செய்யாவிட்டால் தற்போதைய நிலைமைகள் பாரிய பூகம்பமாக வெடிக்கலாம். அரசாங்கம் சொல்லிக் கொண்டிருப்பதைவிட செயற்பாட்டில் இறங்க வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.

கண்டியில் இவர்கள் மேற்கொண்ட காட்டுமிறாண்டித் தனமான செயற்பாடுகளால் 24வயதுடைய முஸ்லிம் வாலிபர் ஒருவரின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டதுடன் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாப்பட்டுள்ளதுடன் நெருப்பு வைத்து அழிக்கப்பட்டும் உள்ளன. இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் கண்டும் கானாததுபோல் முழுப் பூசணிக்காயை சோற்றில்; மறைக்க முனைவதுபோல் செயற்பட முனைகின்றதா? என கல்விமான்கள் கேள்வி எழுப்புகின்றனர். தாக்கப்பட்ட பள்ளிகள்

குறிப்பாக அம்பாறை பள்ளிவாசலைத் தொடர்ந்து திகன ஜூம்ஆப்பள்ளிவாசல், ஹிஜ்ரா புரம்பள்ளிவாசல், பல்லேகல பள்ளிவாசல், கட்டுகஸ்தோட்டை குருநாகல வீதி மஸ்ஜித், கட்டுகஸ்தோட்டை கஹல்ல மஸ்ஜித், எலதெனிய பள்ளிவாசல், வன்னிபொல பள்ளிவாசல், யஹலத்தென்ன பள்ளிவாசல், பெனிதெனிய பள்ளிவாசல், தென்னங்கும்பர பள்ளிவாசல், மனிக்கின்னே பள்ளிவாசல், இலுக்குவத்த பள்ளிவாசல், வத்தேகம பள்ளிவாசல், ரம்புக்கன பள்ளிவாசல், எழுகொட பள்ளிவாசல், என்ரதென்ன பள்ளிவாசல், முறுதலாவ பள்ளிவாசல், அலவதுகொட பள்ளிவாசல், அக்குரணை வெலேகட பள்ளிவாசல், பேராதெனிய பள்ளிவாசல், ஹீப்பிட்டி பள்ளிவாசல், அலியதென்ன பள்ளிவாசல், வாரியபொல (மாத்தளை) பள்ளிவாசல், குருந்துகொல்ல பள்ளிவாசல் என்பன கண்டி மாவட்டத்தில் பகுதியளவிலும், முழுமையாகவும் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை பூகொடையில் கடைகள் எரிந்துள்ளன, அனுராதபரத்தில் பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளன, மெல்சிரிபுரத்தில் மத்ரஸா தாக்கப்பட்டுள்ளது, கேகாலை மாவட்டத்தில் நாங்கல்ல பள்ளியில் ஆயுதம் இருப்பதாக வதந்திகள் பரப்பட்ட சம்பவம் இவ்வாறு நாட்டின் பலபாகங்களிலும் பள்ளிகள் மீது கல் எறித்தாக்குதல்களும் நடந்தேறியுள்ளன. இதனால் முஸ்லிம் மக்கள் பாரிய அச்சத்தில் இருக்கின்றனர். 

இவ்வாறு இறையில்லங்கள் முஸ்லிம்களின் கண்முன் தாக்கப்படுவது அவ்வளவு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் அல்லவெனலாம். முஸ்லிம் சமுகம் பொறுமைக்குமேல் பொறுமை காத்து வருகின்றனர். சில வேளைகளில் பொறுமை இழக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் மனிதன் என்ற வகையில் இது நடக்கலாம். அவ்வாறு இடம் பெறுமானால் அது பாரிய துன்பியல் நிலைமைகளையே தோற்று விக்கும் எனலாம். எனவே வெள்ளம் வருமுன் அணையைக் கட்டுவதுபோல் அரசாங்கம் இனியும் முட்டாள்தனமாக இனவாதிகளுக்கு இடங்கொடுத்துக் கொண்டு பார்த்துக் கொண்டும், வெட்டிப்பேச்சுப் பேசிக் கொண்டும் இருக்க முடியாது. உடன் செயற்படுவதே சாலச் சிறந்தது எனலாம். 

முஸ்லிம் தலைமைகள்

இதேவேளை முஸ்லிம் தலைமைகள் விடயத்திலும் அவர்கள் விடும் தவறுகளையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சில முட்டாள்தனமான முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனைவரும் இனியும் தமக்குள் கட்சிரீதியாகவும், பதவி மோகங்களுக்காகவும் ஒருவருக்கொருவர் தத்தமது குறைகளையும், குற்றங்களையும் சொல்லிக் கொண்டு செல்லாமல் ஒன்றுபட வேண்டும். அதன் மூலமே இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பாதுகாக்கலாம். 

முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள அரசியல் பின்னடைவுகளும், அதன் செயலற்ற தன்மைகளுமே இனவாதிகள் துணிகரமாக பள்ளிகளையும், முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம் சமுகத்தின் பலவீனத்தை சாதகமாக வைத்துக் கொண்டு இன்று சட்டத்தை மீறிக் கொண்டு தமது காடைத்தனங்களை காட்டுகின்றனர் என்றால் அதற்கு முஸ்லிம் சமுகத்தின் அரசியல் தலைமைகளும் முக்கியமானவர்கள் என்றே கூறலாம். 

முஸ்லிம் சமுகம் ஒரே குடையின்கீழ் ஒரேகட்சி என்ற அடிப்படையில் இருந்திருந்தால் நாம் இன்று இவ்வாறான அவல நிலைமைகளுக்கு உள்ளாக வேண்டிய தேவை இல்லை எனலாம். ஆனால் 1815ஆம் ஆண்டின் கண்டி சிங்கள முஸ்லிம் கலவரத்தைப் போன்று மீண்டும் ஒரு நாடகத்தை இன்றைய இனவாத பயங்கரவாதிகள் மேற்கொள்ள முனைகின்றனர். அவ்வாறு ஒன்று இனியும் ஏற்படுமானால் அது இந்த நாட்டின் அழிவிற்கான ஒரு ஆரம்பமே எனலாம். 

1983ஆம் ஆண்டு தமிழ் சிங்கள கலவரம் இந்த நாட்டில் கடந்த முப்பது வருடகால யுத்த அழிவுகளை அனுபவிக்க வழிசமைத்தது. இன்று முஸ்லிம்கள் மீதான தாக்குதல் இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதக் கலாசரம் ஏற்படுவதற்கான துண்டுதல்களாகவே தற்போதைய முட்டாள்தனமான தாக்குதல்கள் அமைகின்றன. 

இதேவேளை எரிகின்ற நெருப்பில் எண்ணை வார்ப்பதுபோல் முஸ்லிம்களுக்குள் அடிப்டைவாதம் இருப்பதாக அமைச்சர் சம்பிக்கரணவக்க குறிப்பிட்டுள்ளமையும் முஸ்லிம்களை கவலை கொள்ளச் செய்துள்ளதுடன் இவ்வாறான கருத்துக்கள் வன்முறைக் காரர்களுக்கு வாய்க்குப் பொரி கிடைத்தமாதிரியே அமைகின்றது. 

தற்போதைய நிலையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் ஒரு இன அழிப்புக்கான விடயங்களாகவே நோக்க வேண்டியுள்ளது. இது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இலங்கையின் சுதந்திரத்திற்கு எந்தவித பாகுபாடின்றியும் இந்த நாட்டின் மூவின மக்களும் ஒன்றினைந்தே குரல்கொடுத்து வெற்றி கண்டனர். இவ்வாறு ஒன்றினைந்த சமுகங்களில் முஸ்லிம்களும் முக்கியமானவர்கள். ஆனால் அன்றைய காலத்தின் சகோதரத்துவம், இன ஒற்றுமை எல்லாம் ஒரே இலங்கையர் என்ற கொடியின் கீழே கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால் இன்று ஒருசில இனவாத சக்திகள் இந்த நாட்டின் இன, மத, சமய கொள்கைகளுக்கு கேடு செய்பவர்களாக தமது கருமித்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இலங்கை வாழ் முஸ்லிம்களின் மிகவும் பொறுமைக்குமேல் பொறுமைகாத்து இந்த நாட்டின் தேசியம், இன ஐக்கியம் என்பனவற்றிற்கு மதிப்பளித்து அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வருகின்றனர். சமுகத்தில் ஓரிருவர் தனிப்பட்ட முறையில் விட்ட பிழைகளுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தினையும் தாக்கியளிக்கவும், அவர்களின் உடமைகளைச் சூறையாடி, எரித்து நாசம் செய்வதற்கும் சமய விழுமியங்களைக் கொச்சைப்படுத்துவதற்கும்  எந்தவிதமான நியாயமும் இல்லை. முஸ்லிம்கள் மீது அநியாயமான முறையில் நியாயமற்ற வகையில் மேற்கொள்ளப்படும் சகல நாசகார செயற்பாடுகளுக்கும் அரசாங்கமே பதில் சொல்ல வேண்டும் என முஸ்லிம் சமுகம் தமது ஆதங்கத்தினை தெரிவிக்கின்றனர். 

-சத்தார் எம் ஜாவித்

No comments:

Post a Comment