வாழைச்சேனை: இனவன்முறையை எதிர்த்து கடையடைப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday 7 March 2018

வாழைச்சேனை: இனவன்முறையை எதிர்த்து கடையடைப்பு!



அம்பாறை மற்றும் கண்டி தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கண்டித்தும், முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் இன்று புதன்கிழமை மூடப்பட்டுள்ளது. 

முஸ்லிம் சமூகத்திற்கெதிராக அம்பாறை, கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் தூண்டி விடப்பட்டுள்ள வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக கடையடைப்பு போராட்டம் இடம்பெற்றது. 

வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டதுடன், தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று இயங்குவதை காண முடிகின்றது. 

இந்த நாட்டின் சுதந்திரம், பொருளாதாரம், பாதுகாப்பு உட்பட முஸ்லிம்கள் ஆற்றிவரும் பங்களிப்பு குறித்தும் மற்றும் சகல இனங்களுக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சமத்துவமாக வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், சட்டம் ஒழுங்கு பாகுபாடின்றி நிலை நாட்டப்பட வேண்டியதை வலியுறுத்தி பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த கடையடைப்பு போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.



அத்தோடு முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் சம்பவத்தை உடன் நிறுத்துவதுடன், இதன் சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த ஜனாதிபதி மற்றும் சட்ட அமைச்சராக திகழும் பிரதமரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வர்த்தகர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை அரச திணைக்களங்கள், பாடசாலைகள் என்பன இயங்கி வருவதுடன், போக்குவரத்துச் சேவைகள் எந்தவித இடையூறுகனும் இன்றி இடம்பெற்று வருகின்றது.

-அனா



No comments:

Post a Comment