நாங்கல்ல பள்ளியில் ஆயுதம் இருப்பதாக இனவாதிகள் பொய்ப் பிரச்சாரம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

நாங்கல்ல பள்ளியில் ஆயுதம் இருப்பதாக இனவாதிகள் பொய்ப் பிரச்சாரம்


கேகாலை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களில் ஒன்றே நாங்கல்ல முஸ்லிம் கிராமமாகும். கொழும்பு குறுநாகல வீதியில் கொழும்பில் இருந்து சுமார் 62 கிலோ மீற்றருக்கு அப்பாலே இந்தக் கிராமம் உள்ளது.

இந்தக் கிராமத்தில் உள்ள ஒரேயொரு ஜூம்ஆப் பள்ளியாக விளங்குவது நாங்கல்ல ஜூம்ஆப் பள்ளியாகும். தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிட ஒரு சிங்கள நபர் இந்தப் பள்ளிவாசலில் கடமை புரியும் மௌலவியின் அறையில் ஆயுதங்கள் இருப்பதாக அப்பட்டமானதொரு பொய்யான தகவல் ஒன்றை அவரின் பேஸ்புக் பக்கத்தில் சிங்கள மொழியில் பதிவேற்றி அதனை பகிர்ந்துள்ளார்.


இதனைக் கண்டறிந்த பள்ளி நிருவாகம் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் வரகாப்பொல பொலிஸார் குறித்த செய்தியைப் பார்த்து விட்டு இன்று (06)  பள்ளிவாசலுக்கு வந்து சோதனை செய்து அவ்வாறானதொரு ஆதராங்களோ அல்லது தடயங்களோ இல்லை என்று தமது குறிப்பில் பதிந்துள்ளதுடன் குறித்த பள்ளிவாசலுக்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக நிருவாகத்தினரும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை காலமும் எந்தவொரு பிரச்சினையுமின்றி அக்கிராமத்தில் முஸ்லிம்கள் அமைதியாக பெரும்பான்மை சமுகத்துடன் இரண்டறக் கலந்து வாழ்ந்து வருகின்றனர். அயல் கிராமங்கள் எல்லாம் பெரும்பான்மை சகோதர பௌத்த மக்கள் வாழுகின்றனர். அத்துடன் ஆங்காங்கே தமிழ் மக்களும் சிறிதளவு வாழ்கின்றனர்.

நாங்கல்ல கிராமம் போன்று அக்கிராமத்தை அண்டிய பகுதிகளில் வறகாபொல, தும்பல தெனிய, கனித்தபுர போன்ற கிராமங்களிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a comment