அல் – இல்ம் (AL – ILM)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல் இல்ம் கல்வித் திட்டம் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலோடு இங்கு வருகை தந்திருக்கும் உங்களை வரவேற்கிறோம், அல்ஹம்துலில்லாஹ்.

இத்திட்டம் தொடர்பாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விபரங்களை இங்கு இணைத்திருக்கிறோம். இங்கு தரப்பட்டிருக்கும் தகவல்களுக்கு மேலதிகமான கேள்விகள் இருந்தால் அவற்றை எமது மின்னஞ்சலுக்கு (editor @ சோனகர். com) அனுப்பி வையுங்கள்.

திட்ட உருவாக்கம்

அல் – இல்ம் திட்டம் என்பது ஊடகவியலாளர் இர்பான் இக்பாலின் சிந்தனையாலும் முயற்சியாலும் உருவாக்கப்பட்டிருக்கும் கல்வி அபிவிருத்திக்குக் கை கொடுக்கும் திட்டமாகும்.

நோக்கம்

இத்திட்டம் எமது சமூகத்தில் வறுமை, குடும்ப சூழல் உட்பட்ட காரணங்களுக்காக தமது கல்வியைத் தொடர முடியாது தவிக்கும் மாணவர்களுக்கு உதவ விரும்புபவர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே, இதில் யார் எல்லாம் எமது சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு உதவ விரும்புகிறார்களோ அவர்கள் அனைவருமே எந்த வித தயக்கமும் இன்றி இணைந்து கொள்ளலாம்.

உதவ விரும்புபவர்களிடமிருந்து நாம் பெறுவது உங்கள் பெயர் மற்றும் தொடர்பிலக்கம் மாத்திரமே. அவற்றை எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். எம்மிடம் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களில் ஒன்றை உங்கள் பரிசீலனைக்காக அனுப்பி வைப்போம். இன்ஷா அல்லாஹ் அதன் பின் நீங்கள் செய்ய விரும்பும் உதவியை தேவையுள்ளவர்களுக்கு நீங்களே நேரடியாக செய்வதற்கான ஏற்பாட்டை நாம் செய்து தரக் காத்திருக்கிறோம்.

எமது பங்கு

ஒரு சமூக ஊடகமாக எமது செயற்பாடானது உதவி பெற விரும்புவோருக்கு உதவ விரும்புவோருடனான இணைப்பை உருவாக்குவதாக அமையும். எனவே, உதவ விரும்புவோர் நேரடியாக உதவி பெற விரும்புவோருக்கு தமது உதவியை செய்யலாம். அதற்கான இணைப்பை ஏற்படுத்துவதே எமது வரையறையாகும்.

உதவ விரும்புபவர்கள் நேரடியாக உதவி செய்வதையே விரும்புகிறோம். எனினும், நேரடி உதவியை செய்ய விரும்பாது மூன்றாம் தரப்பின் ஊடாக மாத்திரமே உதவ விரும்புவோருக்கு இன்ஷா அல்லாஹ் அதற்குரிய வழிமுறைகளையும் ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

உதவி பெறத் தகைமையானவர்கள் யார்?

அல் – இல்ம் கல்விக்குக் கை கொடுக்கும் திட்டம் எனவே பாடசாலை அல்லது மத்ரசா கல்வியைத் தொடர்வதில் உதவி தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பங்கள் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் வேறு பிரதிநிதிகளை நியமிக்கும் நோக்கம் எமக்கில்லை. எனவே, விண்ணப்பங்கள் நேரடியாக எமக்கு மின்னஞ்சலூடாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதற்கான மின்னஞ்சல்: editor @ சோனகர். com அல்லது sonakarweb @ ஜிமெயில்.com ஆகும்.

சுய விபரக் கோவையுடனான விண்ணப்பத்தில் முழுப் பெயர், முழுமையான முகவரி, உதவி தேவைப்படுவதன் அவசியம், விண்ணப்பதாரரின் தொடர்பிலக்கம் அல்லது அவர்கள் சார்பாக தொடர்பு கொள்ளப்படவேண்டியவரின் தொடர்புகள் முழுமையாக இணைக்கப்படல் அவசியம்.

விண்ணப்பத்தை உறுதி செய்வதற்கு பிரதேச பள்ளிவாசல் நிர்வாகம் அல்லது இமாம் மூலமான கடிதம் ஒன்றை இணைப்பின் செயற்பாட்டைத் துரிதப்படுத்த ஏதுவாக அமையும். பள்ளிவாசல் இல்லாத பிரதேசங்களில் வாழ்பவர்கள் ஊரில் உள்ள ஆலிம் ஒருவர் அல்லது பாடசாலை அதிபர் மூலம் அவர்களது உத்தியோகபூர்வ தொடர்பிலக்கங்களுடனான கடிதம் ஒன்றை இணைத்துக்கொள்ளலாம்.

செயற்பாடு

இன்ஷா அல்லாஹ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை உறுதி செய்யப்பட்டதன் பின்னர் உதவ விரும்பி எம்மோடு இணைந்து கொள்வோரின் பரிசீலனைக்கு அவை அனுப்பி வைக்கப்படும். அவர்களுடைய ஒப்புதல் பெறப்பட்டதும் விண்ணப்பித்தவருக்கும் உதவ விரும்புகிறவருக்குமான தொடர்பை ஏற்படுத்தி தருவதை முதற்கட்டமாகவும், உதவி பெறப்பட்ட பின் குறித்த மாணவர் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொடுப்பதை இரண்டாம் கட்டமாகவும் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சாராம்சம்

மேற்குறிப்பிட்ட விடயங்கள் அடிப்படையில் அல் – இல்ம் கல்வித் திட்டம் என்பது சமூகத்தில் கல்வித் தேவையை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு உதவும் மனப்பாண்மையுள்ளவர்களுடனான இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு முயற்சியாகும்.

எனவே, உதவ விரும்பும் உள்ளம் படைத்தோரை அன்போடு அழைக்கிறோம் ! உங்கள் உதவிகள் நேரடியாக தேவையுள்ளவர்களைப் போய்ச் சேரும். அவ்வாறானவர்களை அடையாளங்கண்டு கொள்ள உங்களுக்கு நாங்கள் உதவ எண்ணியுள்ளோம்.

இன்ஷா அல்லாஹ் உதவ விரும்புகிறவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பெயரையும் தொடர்பிலக்கத்தையும் அனுப்பி வைப்பது மாத்திரமே.

அடுத்ததாக உதவி பெற விரும்புகிறவர்கள் மேற்குறிப்பிட்டதற்கமைய விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள். இன்ஷா அல்லாஹ் உதவ மனமுள்ளவர்களிடமிருந்து உங்களுக்கான உதவியைப் பெற்றுத்தர நாம் முயற்சி எடுப்போம்.

இந்த திட்டம் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்தித்து இன்றைய இக்கட்டான சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் நல்லதொரு கல்வியால் மேம்பட்ட சமூகத்தை உருவாக்குவதற்கு நல்ல மனம் படைத்தோரை இத்திட்டத்தில் இணைந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

ஜஸாகல்லாஹ்.

சோனகர் வலைத்தளம்.

மின்னஞ்சல்: editor @ சோனகர். com அல்லது sonakarweb @ ஜிமெயில்.com