தேரரின் தலைமையில் கல்முனையில் போராட்டம் - sonakar.com

Post Top Ad

Wednesday 2 February 2022

தேரரின் தலைமையில் கல்முனையில் போராட்டம்

 


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்டத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பிரதேச மக்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தலைமையிலான பொதுமக்கள் இன்று (02) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இன்று (02) காலை கல்முனை சுபத்திராம விகாரைக்கு  முன்னால் ஒன்று கூடிய மக்கள் அங்கிருந்து பேரணியாக கல்முனை பிரதேச செயலகத்தை வந்தடைந்தனர். இதனையடுத்து கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவு, நகர அபிவிருத்தி அதிகாரசபை அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் பிரதான கதவை மூடி, வழிமறித்து தமது சுகாதார பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வை வழங்க வேண்டும் என கோரி குறித்த இடத்தில் அமர்ந்திருந்தனர். "கழிவு நீரை வைத்து அரசியல் செய்யாதீர்", "மக்களின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்", "முறையான கழிவகற்றல் செய்யப்படவேண்டும்", "மாநகர சபை மௌனம் காப்பது ஏன்?" போன்ற சுலோகங்களை ஏந்தி பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி  சுமுகமான தீர்வை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் பொதுமக்கள் அங்கிருந்து செல்லவில்லை. மாநகரசபை முதல்வர், சுகாதார தரப்பினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்து பொது மக்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


- நூருல் ஹுதா உமர், ஏ.எல். எம்.சினாஸ்

No comments:

Post a Comment