புத்தளம் நகரபிதா: சூழ்ச்சியில் பிறந்த ஒற்றுமை! - sonakar.com

Post Top Ad

Tuesday 6 July 2021

புத்தளம் நகரபிதா: சூழ்ச்சியில் பிறந்த ஒற்றுமை!

 


புத்தளம் நகரபிதா பாயிஸ் அவர்களின் திடீர் மரணத்தால் ஏற்படுத்தப்பட்ட காலி இடம் யாரைக் கொண்டு நிரப்பப்படும், காலியான சபைத்தலைவர் (chairman) பதவிக்கு யார் தெரிவு செய்யப்படுவார் என்ற இரண்டு முக்கியமான கேள்விகள் கடந்த சுமார் 40 நாட்களாக புத்தளம் நகரத்தின் முக்கிய பேசு பொருள்கள்.


சூழ்ச்சியாளர்களின் நிலைப்பாடு


1. காலியான இடத்துக்கு மறைந்த பாயிஸ் அவர்களின் வாரிசு ஒருவரே நியமிக்கப்படல் வேண்டும். நகரசபை தேர்தலுக்கான மேலதிக பத்திரம் 2ல்( 2nd additional list) பாயிஸ் அவர்களின் மகள் செல்வி. ஷ. பாயிஸ் அவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவர் மிகப் பொருத்தமானவர். ஆகவே தேர்தல் நியமனப்பத்திரம் 1ல்( 1st Nomination list) இடம் பெற்று தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனவர்கள் எவரும் காலி இடத்துக்கு நியமிக்கப்படக் கூடாது என்ற ஜனநாய விரோதக் கருத்து. அப்படியான நியமனம் மூலம் மறைந்த பாயிஸின் குடும்பத்திற்கு புத்தளம் மக்கள் செய்யும் நன்றிக் கடன் என்ற போலியான வாதம், சில பிரத்தியேக காரணங்களுக்காக  செல்வி. ஷ. பாயிஸ் காலி இடத்துக்காக தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டதை மீள்பெற்றுக் கொண்டார் என்பதால்;


2. சபையின் காலி இடத்தை நிரப்ப ஏற்கனவே சபை உறுப்பினர்களாக கடமையாற்றுவோரைத் தவிர்த்து நியமன பத்திரம் 1லும் மேலதிக பத்திரம் 2லும் உள்ள அனைவரும் தங்கள் ஜனநாயக உரிமைகளை ஒட்டுமொத்தமாக தாரைவார்த்து இரண்டு பத்திரத்திரங்களிலும் இடம் பெறாத மறைந்த பாயிஸ் அவர்களின் மகன் திரு. அஸ்ரப் பராஜ் பாயிஸ் அவர்களை நியமிக்க வேண்டும் என்ற ஜனநாயக விரோதக் கோரிக்கை.


இதற்கான சட்ட நியாயம்;  உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்த சட்ட ஏற்பாடு(Local Authority Election Amendment Act). இந்த ஏற்பாடு எதிர்பாராத சூழ்நிலையொன்று ஏற்படுமிடத்து அதை முகங் கொள்ள செய்யப்பட பிரத்தியேக விதியே தவிர, அசாதரண சூழ்நிலை ஒன்றை செயற்கையாக ஏற்படுத்த வழங்கப்பட சலுகை அல்ல.


இதற்கான நடை முறை முன்னுதாரணம்;   மஹரகம நகரசபைக்கான தேர்தலில் நடைபெற்ற சம்பவம் அதாவது, "பொஹட்டுவ" (SLPP) அணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் வேறொரு சுயேட்சைக் குழுவின் பத்திரம் 1லும் மேலதிக பத்திரம் 2லும் இடம் பெற்ற அனைவரும் தமது உரிமையை பொஹட்டுவ ஆதரவாளர் ஒருவருக்கு இடம் கொடுக்கும் முகமாக விற்று (தங்களுக்கான கொடுப்பனவுகளை அல்லது வேறு விதமான சன்மானங்களை பெற்று) விட்டு  அவரை நகர சபைக்குள் அனுப்பிவைத்த சம்பவம்.     


3. வெற்றிடத்துக்கு திரு. பராஜ் அவர்கள் நியமிக்கப்படாவிட்டால் நகரசபை தலைவராக பெரும்பான்மை பலத்தைக் கொண்ட அல்லது மாற்றுக் கட்சிகளுடன் சேர்ந்து பெரும்பான்மையை காட்டக்கூடிய முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இருந்து சபைத்தலைவர் ஒருவர் தெரிவாவதை தடுத்து, இரண்டு உறுப்பினர்களை மாத்திரம் கொண்ட "பொஹட்டுவ"(SLPP) உறுப்பினர் திரு. புஸ்ப குமர, தற்போதைய உதவி சபைத் தலைவர்,  அவர்களை சபைத் தலைவராக்கியே தீர்வோம் என்ற பயமுறுத்தல்.


4. ஒரு இளம் முதலீட்டாளரான( entrepreneur)  திரு. பராஜ்  காலம் சென்ற அவரின் தந்தை முஸ்லீம் காங்கிரஸின் அமைப்பாளர்களில் ஒருவராயினும் கூட "பொஹட்டுவ" கட்சியின் உயர் மட்ட தொடர்புகளை கொண்டவர், ஆகவே நகரசபையின் மீதமுள்ள எட்டு மாதங்களில் தந்தை வைத்திருந்த தொடர்புகளை பயன்படுத்தி நிறைய விடயங்களை குறிப்பாக முதலாம் வட்டாரத்திற்கும் பொதுவாக புத்தளம் நகரத்துக்கு செய்து கொள்ள முடியும் என்ற கற்பனாவாதம்.மேற்சொன்ன அனைத்தையும் மறுக்கும் ஜனநாயகவாதிகளின் நிலைப்பாடு


1. காலியான இடத்துக்கு பாயிஸின் வாரிசு ஒருவர் என்ற கதைக்கே இடமில்லை. நியமன பத்திரம் 1லோ மேலதிக பத்திரம் 2லோ இவரின் பெயர் இடம் பெறவில்லை. ஆகவே அரசியல் என்பதில் சொந்த, பந்தம், கூட்டம் குடும்பம், நன்றிக்கடன், கற்பனையான அரசியல் தொடர்புகள்  என்ற உணர்ச்சி வசப்படுதலுக்கெல்லாம் இடமில்லை.


2. நியமன பத்திரம் 1லும் மேலதிக பத்திரம் 2லும் இல்லாத ஒருவரை கொண்டுவர இந்த பத்திரங்கள் இரண்டிலும் உள்ள அனைவரையும் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவதும் அதற்கான முன்னுதாரணமாக மஹரகம நகரசபையை கொள்வதும் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் ஜனநாயக விரோத செயல்..


3. எந்த விதத்திலும் சாத்தியமில்லாத மூன்றாமொருவரை சபைக்குள் அனுமதிக்காவிட்டால் இப்போதய முஸ்லீம் காங்கிரஸின் அதிகாரம் கொண்ட சபையை குழப்பியடித்து அரச சார்பு உப சபைத்தலைவர் புஸ்ப குமரவிற்கு சபையை கையளித்தல் என்பது புத்தளத்தின் மொத்த 11 வட்டாரங்களில் இரண்டு வட்டாரங்களை தவிர்த்து மீதமுள்ளதில் 7 வட்டாரங்களை  வென்றும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நகரின் சபையை புத்தளம் நகரத்தின் இரண்டு சிறுபான்மை இனங்களில் ஒன்றான சிங்களவரின் கையில் வேண்டுமென்றே திணிப்பதென்பது எதிர்கால அரசியலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு அறிவீனச் செயல்..


4. நகரில் உள்ள சிறுபான்மை சிங்களவரோ, தமிழரோ தங்கள் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து சபைத் தலைவர் பதவியை பெற்றுக் கொள்வதென்பது வேறு விடயம். அல்லது முதல் நகரசபையில் திரு.முத்துகுமார் என்ற தமிழர் சபைத் தலைவராக இருந்ததும், பிற்காலத்தில் சிங்களவரான திரு. குயிண்டஸ் சபைத் தலைவராக இருந்ததும் பிரத்தியேக விடயங்கள்.     


5. முஸ்லீம் காங்கிரஸின் நியமன பத்திரம் 1லும், மேலதிக பத்திரம் 2லும் மொத்தமாக மூன்று தமிழர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர். நகரத்தின் தமிழ் வாக்களர்களில் ஆயிரத்துக்கும் சற்று அதிகமானோர் முஸ்லீல் காங்கிரஸிற்கு வாகளித்தனர். ஆகவே காலியான சபை உறுப்பினர் பதவிக்கு ஒரு தமிழரே நியமிக்கப்படல் வேண்டும்.


6. பாயிஸ் அவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியபோது தான் பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டால் நகரசபையில் காலியாகும் இடத்துக்கு தமிழராகிய திரு. ந. ரூபன் தான் நியமிக்கப்படல் வேண்டும் என்ற அவரின் முன்மொழிவு.


இந்த அடிப்படையில் பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட புத்தளம் நகரத்தின் சபைத் தலைவர் பதவி சூழ்ச்சியின் அடிப்படையில் பிற இனத்தவருக்கு தாரைவார்க்க முடியாது என்ற முடிந்த முடிவில் இருந்தனர் புத்தள மக்கள். இருந்த போதிலும் இரண்டு முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட திரு. M.S.M ரபீக் அவர்களுக்கு தமது ஆதரவை வழங்கப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.


இந்த இருவரில் ஒருவர் திரு. ரஸ்மி என்ற சபை உறுப்பினர். இவர் ஜமாத்தே இஸ்லாமியின் உறுப்பினர்/ஆதரவாளர். இவரின் நிலைப்பாடு பாயிஸின் மறைவில் இருந்து  இம்மதம் முதலாம் திகதி வரை  தலைவராகவும், பொது தேர்தல் காலத்தில் பாயிஸின் இடத்துக்கு பதில் சபைத் தலைவராகவும், பாயிஸின் காலத்தில் உதவி சபைத் தலைவராவும் கடமையாற்றிய திரு. புஸ்ப குமரவே சபைத் தலைவராக வரவேண்டும் என்பதாகும். திரு. ரஸ்மி அவர்களுக்கும் இந்த பதவியில் ஒரு கண் இருந்தும் தனக்கு போதியளவு ஆதரவு இல்லை என்பதால் உதவி சபைத் தலைவராகும் ஆசையை நிறைவேற்ற திரு. புஸ்ப குமரவை சபைத் தலைவராக்குவதை தவிர வேறு தேர்வுகள் இவருக்க இருக்கவில்லை .


தமிழ் பேசக்கூடிய திரு. புஸ்ப குமர புத்தள முஸ்லிம்களால் விரும்பப்பட்டவர் என்ற விடயத்துக்கப்பால், இந்த சபைத் தலைவர் போட்டியில் திரு. ரபீக்குக்கு எதிராக குதிக்கும் படியும் அப்படி அவர் குதிக்கும் பட்சத்தில் சபை உறுப்பினர்களின் ஆதரவை தன்னால் பெற்றுத்தர முடியும் என்றும், அப்படி திரு. புஸ்ப குமர சபைத் தலைவராகும் பட்சத்தில் தான் உதவி சபைத் தலைவராக நியமிக்கப்பட

வேண்டும் என்று திரு. ரஸ்மி அவர்கள் திரு. புஸ்ப குமரவை தூண்டி திரு. ரபீக்குக்கு எதிராக போட்டியிட சம்மதிக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதே நேரம் "பொஹட்டுவ" அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்துவரும் புத்தளம் பாராளுமன்ற உறுபினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் திட்டமாகிய "பொஹட்டுவ" தலைமையிலான நகரசபையை உருவாக்குதல் என்ற விடயத்தை சாத்தியப் படுத்த  தூதுவராக திரு, ரஸ்மியே செயல் பட்டார் என்ற மேலதிக குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது.  ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம்  மறுதலிக்கும் திரு. ரஸ்மி அவர்களின் கூற்றுப்படி தூர நோக்கு சிந்தனையுடன் அதாவது சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே ஏதாவது பிரச்சினைகள் உருவாகி அதுவே ஒரு இனக்கலவரமாக (?) மாறிவிடக் கூடாது என்ற நன் நோக்கிலேயே தனது காய் நகர்த்தல் இப்படி அமைந்ததாக ஒரு சமாதானம் சொல்லி வைத்தார். 


இதற்கிடையேதான்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புத்தளம் வந்து தேவையான முன்னேட்பாடுகளை செய்து விட்டுச் சென்றார். இதன் அடிப்படையில் சபையில் இருந்த 5 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், NFGG சார்பு சுயேற்சை உறுப்பினர்

ஒருவரும் ,  SJB இருந்து 5 ரும் (இரண்டு சிங்கள உறுப்பினர் உட்பட) சபைத் தலைவர் தேர்வு தினமான 01.05.2021ல் திரு. ரபீக் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க தயார் நிலையில் இருப்பததைக் கண்டு கொண்ட " பொஹட்டுவ" உறுப்பினர் திரு. புஸ்ப குமர போட்டியில் இருந்து வாபஸ் பெற 14 உறுப்பினர்களின் விருப்பத்தில் புத்தளம் வரலாற்றில் முதன் முதலாக போட்டியின்றி சபை முதவராக திரு, ரபீக் அவர்கள் நியமனம் பெற்று 05.07.2021 உத்தியோக பூர்வமாக பதவியை ஏற்றுக் கொண்டார்.


இந்த சூழ்ச்சி, அதற்கான எதிர் நடவடிக்கைகளுக்கிடையில் முக்கியமான ஒரு விடயம், அதாவது பாயிஸ் அவர்களின் மறைவினால் ஏற்படுத்தப்பட்ட காலி இடம் ஒரு தமிழரை கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை தலைவர் ரவூப் ஹகீமின் வருகையுடன் அநீதியான முறையில் நிரப்பப்பட்டுள்ளது. அதாவது பத்திரம் 1லோ அல்லது மேலதிக பத்திரம் 2லோ இடம் பெறாத புத்தளம் நகர் முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளர் ஜொவ்பர் மரிக்கார் சபை உறுபினராக நியமிக்கப்பட விடயம்.  இந்த முடிவு எப்படி எட்டப்பட்டது, அதாவது முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளர் பத்திரம் 1ல் இடம் பெற்று தேர்தலில் தோற்றாலும் 1000 க்கும் அதிகமான தமிழ் வாக்குகளை மு.கா. க்கு பெற்றுக் கொடுத்த திரு. ந. ரூபனின் சுய விருப்பத்துடன் செய்யப்பட்டதா அல்லது வற்புறுத்தப்பட்டாரா என்பது சம்பந்தபட்டவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம். ஆனால் காலி இடத்துக்கு இரண்டு பத்திரங்களிலும் இடம் பெறாத முஸ்லிம் காங்கிரஸ் நகர அமைப்பாளர் நியமிக்கப்பட்டது நகர முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையே இதுவரை காலம் நிலவி வந்த அரசியல் ரீதியான ஒற்றுமை சிதைவடையும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆகவே தான் இன்னும் ஒருவருட காலத்தில் நடை பெறவிருக்கும் நகரசபை தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நிலையையும் தாண்டி இனி புத்தளம் நகர் என்பது முஸ்லீம் காங்கிரஸின் அஸ்தமனத்துக்கான இடம் என்றும் பொதுவாக பேசப்படுவதும் எதிர்கால நகரசபை தேர்தலுக்கான கூட்டு முயற்சிகளும் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதை உணரக் கூடியதாக உள்ள அதே நேரம் அடுத்த நகர சபையை தம் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து "பொஹட்டுவ" கட்சியை பலப்படுத்துவோம் என்று புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரின் அலி சப்ரி ரஹீமின் ஆதரவாளர்கள் சூளுரைப்பதையும் காணக் கூடியதாகவே உள்ளது. 

Mohamed SR. Nisthar

Co-Editor, Sonakar.com

No comments:

Post a Comment