முடிந்தால் கைது செய்யுங்கள்: அசாத் சாலி சவால்! - sonakar.com

Post Top Ad

Friday 8 January 2021

முடிந்தால் கைது செய்யுங்கள்: அசாத் சாலி சவால்!

 


கட்டாய ஜனாஸா எரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆட்சி மாற்றத்தின் பின்னராவது இழப்பீட்டைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக அண்மையில் முன்னாள் ஆளுனரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இவ்வாறு தெரிவிப்பது அச்சுறுத்தல் எனவும் அசாத் சாலி கைது செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று முன் தினம் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தி கருத்துரைத்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள அசாத் சாலி, முடிந்தால் கைது செய்யும்படியும் 'திருடர்கள்' சொல்லி இயங்கும் அளவுக்கு பொலிஸ் மா அதிபர் இல்லையெனவும் விமல் வீரவன்சவுக்கு விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, அசாத் சாலியைக் கைது செய்ய வேண்டும் எனவும் அவரது பேச்சுக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்து மனோஜ் கமகே என அறியப்படும் சட்டத்தரணியொருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளதாக அறிய முடிகிறது. இது குறித்து, முன்னாள் ஆளுனர் அசாத் சாலியிடம் சோனகர்.கொம் வினவிய போது, எனது சமூகத்திற்கு அவசியப்படும் நீதியைக் கேட்பதற்கு ஒரு போதும் தயங்கப் போவதில்லையெனவும் முஸ்லிம் தலைவர்கள் எல்லோரும் இவ்வாறு கைது அச்சுறுத்தல்களாலேயே வாயடைத்துப் போயுள்ளதாகவும் ஆனாலும் தான் உண்மைகளை உரத்துப் பேசத் தயங்கப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.


அத்துடன், கட்டாய எரிப்பினால் பாதிக்கப்படுவோருக்கு அந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ளவர்களின் சொத்துக்களை விற்றாவது இழப்பீட்டை செலுத்தும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், இந்த ஆட்சியில் அதற்கான சாத்தியமில்லையாதலால் ஆட்சி மாறியதும் அதற்கான ஆவன செய்யப் போவதாகவும் அவர் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment