ஓட்டைக் கூடையும் அழுகிய முட்டைகளும்! - sonakar.com

Post Top Ad

Friday 25 December 2020

ஓட்டைக் கூடையும் அழுகிய முட்டைகளும்!

 


தம்மைத் தாமே பெறுமதியான முட்டைகளாகக் கருதிக் கொண்ட முஸ்லிம் சமூகம் அதை எல்லாக் கூடைகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன் நியாயங்கற்பித்துக் கொண்டது. 


காலியாக இருக்கும் வெளியென நினைத்து பெரமுன முகாமில் புகுந்து கொள்ளத் திட்டமிட்டவர் இதில் பலர். எப்படியோ அவரவர் முட்டை வெந்தால் போதும் என்ற சுயநலத்தோடே சமூகம் இவ்வாறு இழுத்தெடுக்கப்பட்டது. சந்தர்ப்பாவாத அரசியலுக்காக எதையும் பேசவும் - தர்க்கிக்கவும் துணிந்துள்ள இச்சமூகத்தின் இன்றைய நிலை கடும் பரிதாபமாக மாறியுள்ளது.


காகம் கருப்பு ஆனாலும் கருமை நிறமுள்ளதெல்லாம் காகமில்லையென்று வாதாடித் தான் வழக்காட வேண்டும் என்ற சூழ்நிலையில் உலகெங்கிலும் நீதி நிலை நாட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கையிலும் வரலாற்றில் பல விசித்திரமான வழக்குகள் இடம்பெற்றுள்ளன. 


யானைப் படம் பொறித்த தீப்பெட்டியின் விலையை அரசாங்கம் 50 சதத்தால் உயர்த்தியது. கடைக்காரரோ அதனை 1 ருபாவாக அதிகரித்து விற்பனை செய்ய அவருக்கு எதிராக வழக்காடப்பட்டது. அப்போது அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி, கடைக்காரர் தவறிழைக்கவில்லை ஏனெனில் அவர் விற்பனை செய்யும் தீப்பெட்டியில் இரண்டு யானைகள் அடங்கிய படம் இருக்கிறது. ஆதலால் அதனை ஒரு ரூபாவுக்க விற்கலாம் என வாதிட்டு வழக்கை வென்றதாக ஜி.ஜி. பொன்னம்பலம் சார்ந்த கதைகளும் உண்டு.


இப்படி பல்வேறு விசித்திரம் நிறைந்த உலகில், கட்டாய ஜனாஸா எரிப்பு என்பதும் விசித்திரம். உலகின் வேறு எந்த அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் இல்லாத விஞ்ஞானம் இலங்கையில் சர்வாதிகார அரசின் கடும்பிடியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இறந்த உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டால், மண்ணூடாக வைரஸ் பரவும் என்று சொல்லப்படுகிறது. மறு புறத்தில், இறந்து பல மணி நேரம் ஆகி விட்டால், பி.சி.ஆர் பரிசோதனையை நடாத்தத் தயக்கம் காட்டப்படுகிறது. அவ்வாறு செய்தால் கொரோனா தொற்று இருப்பதாகக் (பொசிடிவாக) காட்டாது என்பதால் இறந்த போது எடுக்கப்பட்ட அனுமானத்தின் அடிப்படையிலான முடிவைக் கொண்டு உடலங்கள் எரிக்கப்படுகிறது.


இப்படி அவர்களுக்கே தெளிவில்லாத விசித்திரமான விஞ்ஞானத்தை விசித்திரமாகக் கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. என்ன வழியென தேடிக் கொண்டிருந்த போது, அக்கரைப்பத்தில் ஒரு வழக்குப் பதிவானது. பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது, இலங்கை நிபுணர்களின் கருத்துப்படி வைத்தியசாலை கழிவு நீர் ஊடாகவும் நிலத்தடி நீர் மாசடையும் என்று கூறப்படுகிறது. அப்படியானால், அங்கே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு மாற்று வழியென்னவென வினாவெழுப்பப் பட்டுள்ளது.


வழக்கின் நோக்கம், தெளிவானது. நிலத்தடி நீர் மாசடையும் என்று கூறப்பட்டதற்கான விசித்திரத்தைப் பொய்ப்பிப்பதுதான் இலக்கு. ஆதலால், ஜனாஸா எரிப்புக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றை நம்ப வைத்து, உயிரோடு இருப்பவர்களின பாதுகாப்புக்காகவே தமது விஞ்ஞானம் செயற்படுகிறது என்று சொன்ன அந்த நிபுணர்கள் இங்கு அதற்கு மாற்றமாக என்ன கருத்தை முன் வைக்கப் போகிறார்கள் என்பதே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும் அவதானித்துப் பார்க்க வேண்டியது.


ஆயினும், இந்த யோசனை தனக்கு வரவில்லையே என்ற அவதியில் ஒரு சிலர், கூக்குரலிட்டு அங்கலாய்த்துக் கொண்டுள்ளனர். ஒரு படி மேலே சென்ற முஸ்லிம் அரசியல்வாதியொருவர், இப்படி வழக்காடப் போவது இஸ்லாத்துக்கு முரணானது என்றும் தன் அறிவைப் பறைசாற்றியுள்ளார். 


அது ஒரு புறமிருக்க, கட்டாய ஜனாஸா எரிப்புக்கு எதிராக மேலை நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர் தம் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வரும் தொடர்ச்சியில், உள்நாட்டிலும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.


கட்டாய ஜனாஸா எரிப்பு, வடிகட்டிய இனவாத அரசியல் என்பதை இதுவரை புரிந்து கொள்ளாதவரிடம் இனியும் புரிதல் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. தீயில் வேகிப் போவது வேறு யாரோ பெற்ற பிள்ளையென்பதால் வாய்மூடியிருக்கும் பலர் போக, தாம் தேர்ந்தெடுத்த கூடையில் ஓட்டையிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது தவிக்கும் அரசியல் பிள்ளைகள் எப்போதும் திருந்தப் போவதில்லை.


அவர்கள் மிகத் தெளிவாகக் கருத்துரைக்கிறார்கள். ஆனால் அவர்களுடன் சேர்ந்திருந்து எதையோ சாதிக்கப் போவதாக சொல்லிக் கொண்ட எம்மவர்களால் தெளிவான முடிவொன்றுக்கு வர முடியாமல் உள்ளது.


இலங்கை ஜனாஸாக்களை மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சி தோல்வி கண்டுள்ளது. முதலில் உணர்வுபூர்வமாக தமது சகோதர முஸ்லிம்களுக்கு உதவுவதாக எண்ணி பச்சைக் கொடி காட்டியிருந்த மாலைதீவு நிர்வாகம், பின்னர் விடயத்தை சரிவரப் புரிந்து கொண்டு, இலங்கை முஸ்லிம்களுக்கு உதவுவதென்பது அவர்களது நாட்டில், அவர்களது உரிமைகளை பாதுகாக்கக் குரல் கொடுப்பதேயென தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.


மாலைதீவின் எதிர்க்கட்சிகள், அரசியல் ஆளுமையுள்ள அதாலத் கட்சி போன்றன இத்தெளிவைப் பெற்றுக் குரல் கொடுக்க ஆரம்பித்ததோடு முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்குப் பலம் சேர்த்ததன் ஊடாக அது சாத்தியமானது. இந்நிலையில், உறவினர்களால் கைவிடப்படும் ஜனாஸாக்களை எரிக்காது அவற்றைக் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைத்துப் பாதுகாப்பதற்கும் தற்காலிகமாக திட்டமிட்டது அரசு.


எதற்கெடுத்தாலும் முந்திக் கொண்டு நாங்கள் தான் உச்ச கட்ட பணக்கார சமூகம் என பறைசாற்றிக் கொள்வதில் கொள்ளைப் பிரியம் உள்ள எம் சமூகம், அதிலும் பாய்ந்து விழுந்து அந்த கன்டைனர்களை வாங்கித் தருவதற்கு முண்டியடித்தது. இந்த சந்தடியில் கட்டாய எரிப்பு இடை நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பயனாக, கராபிட்டியவைச் சேர்ந்த ஒரு சகோதரரது ஜனாஸா எரிப்பு தற்காலிகமாக இரு தினங்கள் தள்ளி வைக்கப்படக்கூடியதாக இருந்தது.


நீதிமன்றில் வழக்காடப்பட்டு, அதற்கான தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. ஆயினும், சுகாதார அமைச்சிடம் கொள்கலன்களைக் கேட்ட சுகாதார பணிப்பாளர் எரிப்பதற்கான உத்தரவை மீண்டும் வழங்கியதும் 24ம் திகதி அந்த சகோதரரது ஜனாஸாவும் எரிக்கப்பட்டது.


எனினும், இடைப்பட்ட காலத்திலும் ஜனாஸா எரிப்பு தொடர்ந்தது. அதற்குப் பல விசித்திரமான விளக்கங்கள் கூறப்பட்டிருந்தது. ஒன்று, அந்த நீதிமன்ற உத்தரவானது கராபிட்டிய விடயத்துக்கு மாத்திரமானது. அடுத்தது, சுகாதார பணிப்பாளர் ஐந்து கொள்கலன்களையே கேட்டிருக்கிறார். எனவே, அந்த ஐந்து வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய இடங்களைச் சேர்ந்த ஜனாஸாக்கள் எரிக்கப்பட வேண்டும். அதற்கும் மேலாக, எரிப்பதை நிறுத்தக் கூறி எந்தவொரு சுற்றுநிரூபமும் வெளியாகவில்லை. எனவே, எரிப்பதை நாம் தொடர்வதையும் யாரும் தடுக்க முடியாது என ஜே.எம்.ஓக்கள் வாதிட்டனர்.


ஆக, ஜனாஸாக்களை எரியூட்டி அதனூடாக முஸ்லிம் சமூகத்தை நோகடிப்பதற்கு அவர்களுக்கு ஆயிரம் வழிகள் உண்டென்பது தெளிவாகிறது. இதில் இன்னும் தெளிவு பிறக்காத இன்னுமொரு விசித்திரம் எதுவென்றால், கொரோனா மரணங்களில் 70 வீதம் முஸ்லிம்களாக இருப்பது. பிழையான அறிக்கைகள், பரிசோதனையே இல்லாத முடிவுகள் அவசர எரிப்புகள் என சுற்றிச் சுற்றி முஸ்லிம் சமூகத்துக்கே பாதிப்பு அதிகமாக இருக்கிறது.


ஆனாலும், கூட இதற்கும் சர்வ அதிகாரத்தையும் பெற்றுள்ள நாட்டின் தலைமைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென வெள்ளையடிப்பதற்கும் முஸ்லிம்கள் படாத பாடு படுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஜனாஸா எரிப்பை நிறுத்துங்கள் என ஜனாதிபதியின் படத்தைப் போட்டு யாராவது தன் ஆதங்கத்தை வெளியிட்டால் கூட அது தவறெனக் கூறி வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் முற்றிலும் முரணான சமூகப் பெருந்தகைகள்.


யார் தான் பொறுப்பாளிகள்? தீர்க்கமாகச் சொல்லத் தெரிந்தும் சொல்லிக் கொள்ள முடியாமல் தவிக்கிறது சமூகம். வெளியுலகத்தில் எல்லாம் நீதி பேசும் நீதியமைச்சரும் நாடாளுமன்றில் தமது அரசு இனவாத நோக்கில் ஜனாஸாக்களை எரிக்கவில்லையென்று தான் கூறுகிறார். அதேவேளை, அவரும் ஞானசாரவும் கூட தொடரும் இந்த சூழ்நிலை முஸ்லிம் இளைஞர்களை கடும்போக்குவாதிகளாக மாற்றிவிடும் என்று சொல்வதற்கும் தயங்கவில்லை.


முஸ்லிம் இளைஞர்கள் கடும்போக்கு – தீவிர போக்குள்ளவர்களாக மாற வேண்டும், அதன் பின் அவர்களை அடக்கி எஞ்சியிருக்கும் சிங்கள சமூக எழுச்சி வரலாற்றை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்று தான் மறுமுனை காத்திருக்கிறது. எனவே, தூண்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இது கொண்டாட்ட காலம்.


பொதுத் தலைமையோ கட்டுப்பாடோ இல்லாத இன்றைய தலைமுறை சமூகத்திடம் பொதுக் கருத்தும், பொது உடன்பாடும் கூட எந்தவொரு சமூக விடயத்திலும் இல்லை. ஆதலால், தமக்கு பொதுப் பிரச்சினையொன்று இருப்பதாக எல்லோரும் உணரவும் இல்லை. எப்போது உணர்வார்கள் என்ற கேள்விக்கும் விடையிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் தூண்டப்படக் கூடாது என்பதில் எல்லோரிடமும் தெளிவு அவசியப்படுகிறது.


மிருகங்களில் பல மனிதர்கள் தம்மைத் தாக்கி விடுவார்களோ என்கிற அச்சத்தில் தான் தாக்குதலுக்கு முந்திக் கொள்கின்றன. மனிதர்களுக்கு அந்த அவசரம் தேவையில்லையாயினும் கூட தற்பாதுகாப்பு என்பது முக்கியமாக இருக்கிறது. மாற்றத்தை நாடாத எந்த சமூகமும் தாமாக மாற்றத்தைக் கண்டதாக சரித்திரம் இல்லை. இந்நிலையில், கொரோனா தீ தமது வீட்டு வாயிலைத் தொடும் வரை காத்திராது சிவில் சமூக செயற்பாடுகளை முன்னெடுப்பது எல்லோருக்கும் கடமையாகிறது.


கொரோனா அநீதியை யார் தட்டிக் கேட்பது என்பதிலும் எமக்குள் பாகப்பிரிவினை இருக்கிறது. எதிர்க்கட்சி கேள்வி கேட்டால் அதை ஆதரிப்பதை விட அரசியலாகப் பார்ப்பதிலேயே ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் முனைப்பாக இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக நிபுணர்கள் தான் முடிவெடுக்கிறார்கள் என்று கூற, அந்த நிபுணர்களோ ஆட்சியாளர்கள் தம்மைக் கைவிட மாட்டார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் 20 லட்சம் பேரை வீதிக்கு இறக்கி இனப்பிரச்சினையை உருவாக்குவோம் என்றும் சவாலிடுகிறார்கள். இந்த தெளிவான உண்மையைப் புரிந்து கொள்வதற்கும் முடியாமல் அரசியல் ஆதரவு பலரின் கண்ணை மறைக்கிறது.


முஸ்லிம் சமூகம் வெகுவாக நோகடிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்ட ஏனைய மனித நேயமுள்ளவர்கள் கூடத் தம் அபிப்பிராய பேதங்களை மறந்து களமிறங்கி அமைதிவழியில் தமது எதிர்ப்பினை பதிவு செய்கிறார்கள். ஆயினும், முஸ்லிம் சமூகத்துக்குள் நோகாமல் நொந்து கொள்வது எப்படியென்ற ஆய்வு இன்னும் முடிவாகவில்லை. அந்த அளவுக்கு அரசியலால் பிளவுற்றுப் போயுள்ளது சமூகம்.


துரதிஷ்டவசமாக, சிவில் சமூக அமைப்புகள் ஒரேயடியாகக் காணாமல் போய் விட்டன. எனவே, சமூகம் தமது உணர்வுகளை தெரிந்த வழிகளில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கொட்டித் தீர்ப்பதைத் தவிர வேறு வழியில்லையென்று தவிக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் கொண்டாடும் கூட்டம், எரியும் நெருப்பில் எண்ணையூற்றி இனவாதத் தீயைப் பற்ற வைக்கிறது. இத்தனைக்கும் தலைமை தாங்கப் போவதாகக் கிளம்பியவர்கள் ஒரேயடியாகக் காணாமல் போய் விட்டார்கள். குறிப்பாக, 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து நம்பிக்கைத் துரோகத்தின் நவீன கால அடையாளமாக உருவெடுத்துள்ள அந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.


அதில் ஒருவருடன் அண்மையில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது, தான் அவ்வாறு செய்ததன் அடிப்படை நோக்கம் தமது பிராந்திய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதுதான் என்றார். அந்த பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அரசுடன் தனக்கு நல்லுறவு அவசியம் என்றும் விளக்கமளித்ததார். அவரது பிராந்தியத்துக்கு கொரோனா என்கிற பிரச்சினை இன்னும் சென்றடையவில்லை. சென்றடையாமல் இருக்கும் வரை அவர் மீது மக்களில் ஒரு சாரார் வைத்திருக்கும் அந்தக் கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருக்கும் எனக் கொள்வோம்.


இப்படியே, பிராந்தியம் - வட்டாரம் என்று சுருக்கிக் கொண்டுள்ள அரசியல் இலக்குகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் சமூகம் - தேசியம் என விரிவடைந்து நிற்கும். அது பற்றி அவர்கள் மீண்டும் வாய் கிழியப் பேசுவார்கள். ராஜபக்சக்கள் எம் சமூகத்தை தீயிட்டுக் கொளுத்தி விட்டார்கள், அதனால் மாகாண சபை அதிகாரத்தை எங்களுக்கே தாருங்கள் என்று கோசமிடுவார்கள். அது சரி, அந்த மாகாண சபையில் இவர்கள் தலைமைப் பதவியில் உட்காந்து எதைச் சாதிக்கப் போகிறார்கள்? பிரச்சினை முடியும் வரை திரும்பவும் சிறையில் பதுங்கியிருக்கப் போகிறார்களா அல்லது யாருக்கும் நோகாமல் நாடாளுமன்றில் எழுதி வாசிக்கப் போகிறார்களா? என்ற தெளிவு மக்களுக்கே அவசியப்படுகிறது.


நாடாளுமன்றில் தரப்படும் ஊதியமும், அந்தப் பதவியைப் பெறுவதற்காக முதலிட்ட பெருந்தொகைப் பணமும் மக்களைத் தலைமை தாங்கி வெகுஜன போராட்டங்களை நடாத்துவதற்குப் போதுமானதில்லை. மாறாக, தமக்குச் சுய விளம்பரம் தரக்கூடிய தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் உரையாடுதல் மற்றும் நாடாளுமன்ற உரையின் போது ஒரு நிமிடம் சுட்டிக் காட்டுதலை வேண்டுமானால் செய்யலாம் என்றே இன்றைய தலைமைகள் எடுத்துச் சொல்கின்றன.


ஈஸ்டர் தாக்குதலையடுத்து ஏற்பட்ட நிலைமையில் கூட்டு இராஜினாமா செய்தவர்களால், கட்சி எல்லைகளுக்கப்பால் கூட்டு சேர்ந்து நாட்டுத் தலைமையிடம் இது பற்றிப் பேசவோ வலியுறுத்தவோ முடியாத சூழ்நிலையே நிலவுகிறது. ஏனெனில் அந்தக் கூட்டில் உள்ள பல அழுகிய முட்டைகள் ஏற்கனவே ஓட்டையால் வீழ்ந்து விட்டன.


உலகமே எதிர்த்து நின்றாலும் எரிப்பதைக் கைவிட முடியாது என்று அவர்கள் விடாப்பிடியாக இருக்கிறார்கள். இந்த வனாந்தரத்திற்குள் புலியாகப் போன பலர் பூனைக்குட்டிகளாக இரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், அடுத்தடுத்த நாட்களில் பசுத்தோல் போர்த்திய நரிகளாக வெளிக்கிளம்பி வரப் போகிறார்கள். 


அவதானமும் - அளவீடும் அசியம்!










Irfan Iqbal

Chief editor, Sonakar.com


No comments:

Post a Comment