ம'முனை சுனாமி வீட்டுத்திட்டம்: அரசியல் இயலாமையின் நீண்ட சாட்சியம் - sonakar.com

Post Top Ad

Saturday 26 December 2020

ம'முனை சுனாமி வீட்டுத்திட்டம்: அரசியல் இயலாமையின் நீண்ட சாட்சியம்

 


சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 16 ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனாலும் அதன் எச்சங்களின் நினைவுகள் அதன் அதிர்வலைகளை ஞாபமமூட்டிக் கொண்டே இருக்கின்றன. இதில் ஒன்றுதான் மருதமுனை 65 மீற்றர் மக்களது வீட்டுப்பிரச்சினையாகும்.


ஆழிப் பேரலையின் தாக்கத்தினால் இலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களுள் மருதமுனை முதன்மையானது என்பது புள்ளிவிபரத் தகவல். அக்பர் கிராமம்-இருபத்தைந்து வீட்டுத்திட்டம்-நாற்பது வீட்டுத்திட்டம்-சம்ஸ் மத்திய கல்லூரி-மஸ்ஜிதுல் குமைதி பள்ளிவாசல் உட்பட மருதமுனையின் பெரும்பாலான இடங்களைக்  காவு கொண்டதுடன் ஐந்நூற்றுக்கும் அதிகமான உயிர்களையும் கோடிக்கணக்கான உடமைகளையும் ஏப்பம் விட்டமையை சுனாமியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை


பலருக்கு இது நினைவு நாளாக இருக்கின்ற போதிலும் பாதிப்பின் வடுக்களைச் சுவித்தவர்களுக்கு மறக்கமுடியா நாள் இதுவே. அனர்த்தங்களைத் தொடர்ந்து உள்ள10ர் மற்றும் வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பிறான்ஸ் சிற்றி-இஸ்லாமிக் றிலீப்-65 மீற்றருக்கு உட்பட்டோர் வீட்டுத்திட்டம் எனப்பல குடியிருப்புக்கள் உருவாகி சிற்சில குறைபாடுகளுடன் மக்கள் தங்கள் இருப்பிடத் தேவை நிவர்த்திப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.


65 மீற்றரில் எஞ்சிய வீடுகளுக்கு நடந்தது என்ன?


சுனாமி அனர்த்தத்தின் போது பெரும்பாதிப்பைச் சந்தித்த 65 மீற்றருக்கு உட்பட்ட மக்களின் எஞ்சிய வீடுகளைக் கையளித்தல் பிரச்சினையே இந்திய மெகா சீரியல்களைப் போல் தொடர்கின்றன.அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட 65 மீற்றருக்கு உட்பட்டோர் ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பானது சுனாமி ஏற்பட்டு மூன்று வருடங்கள் கழிந்தும் எவ்வித நிவாரணங்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து 2007.01.20 ஆம் திகதி மருதமுனை பிரதான வீதியை மறித்து சாலை மறியல் போராட்டம் ஒன்றை மூன்று நாட்களாக நடந்தேற்றியதன் பிற்பாடு அன்றைய அம்பாறை அரசாங்க அதிபராக இருந்த சுனில்கன்னங்கராவுக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு பிரதேச செயலாளராக இருந்த ஏ.எச்.எம்.அன்ஸார் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 


உடனடியாகவே பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்ட போது பிரதேச செயலாளராக இருந்த அன்ஸார்; தூர நோக்கின் அடிப்படையில் 186 பேருக்கு வீடுகள் தேவை எனத்தெரிவித்தார். பேச்சுவார்த்தை உடன்பாட்டின் பின்னர்; மருதமுனை மேட்டு வட்டையில் வீடமைப்புத்துறை அமைச்சின் ஏற்பட்டில் ஆமை வேகத்தில் வீடுகள் கட்டப்பட்டன. 186 வீடுகள் கட்டப்படுவதாகத் தெரிவித்து வீடமைப்பு அமைச்சு அதற்கான எண்ணிக்கைப் பலகையினைக் காட்சிப்படுத்திய போதும் 178 வீடுகளே கட்டப்பட்டன. எட்டு வீடுகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது? இதன் பின்னணியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து இதுவரை தெளிவில்லை.


அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர்?


178 வீடுகளையும் கையளிக்கும் படலம் ஆரம்பமான போது கடலில் இருந்து 65 மீற்றருக்கு உட்பட்டவர்களில் முழுமையாக வீட்டை இழந்தவர்கள்-வீடு சோதமானவர்கள்-வளவு மட்டும் உள்ளவர்கள் என 143 பேர் அடையாளம் காணப்பட்ட போதும் பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் 2012 ஆம் ஆண்டு நூற்றி ஒன்பது வீடுகள் மாத்திரமே கையளிக்கப்பட்டன. மீதமான 69 வீடுகள் யாருக்கும் வழங்கப்படாத நிலையில் இருக்க பிற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற நீதிமன்ற உத்தரவின் நிமித்தம் 111 வீடுகள் கையளிக்கப்பட்ட நிலையில் 74 வீடுகள் கவனிப்பாரற்று இன்றும் கிடக்கின்றன.

 

மருதமுனையில் சுனாமியால் பாதிக்கப்பட்டும் படாமலும் வீடுகளற்ற நிலையில் ஏழைகளுக்கும் புதிதாக இஸ்லாத்துக்கு வந்தவர்களுக்கும் ஒப்படைக்கலாம் என 65 மீற்றருக்கு உட்பட்ட அமைப்பினர் உள்ளிட்ட பலர் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் அதனை ஒப்படைப்பதில் கல்முனை பிரதேச செயலக அதிகாரத்தரப்பினர் தொடர்ந்தும் இழுபறி நிலையினையே இருந்து வந்தனர். இதற்கிடையில் பல தடைவ நேர்முகப் பரீட்சையும் நடைபெற்று மீதி வீடுகளை வழங்கவதற்கான முஸ்தீபுகளும் நடைபெற்றன. அவ்வாறு நடந்த நேர்முகப்பரீட்சையின் போது ஒழுங்கீனமும் ஊழல்களும் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் புகார் செய்தே வந்தனர். சிலர் அத்துமீறிக் குடியேறியும் பார்த்தனர். எல்லாமே தொடராகத் தடுக்கப்பட்டன. அரச அதிகாரிகள் நினைத்திருந்தால் கொடுத்திருக்கலாமே என கோசங்கள் எழுந்த போதுதான் மீதமுள்ள வீடுகளில் பலவற்றிற்காக அரச அதிகாரிகள் இலஞ்சப் பணம் பெற்ற உண்மை தெரியவந்தது


காற்றில் பறந்து கொண்டிருக்கும் அரசியல் வாக்குறுதிகள்


16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் உள்ள10ராட்சித் தேர்தல்கள் தொடங்கி ஜனாதிபதித் தேர்தல் வரை பலவற்றை இம்மக்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை இம்மக்களின் பிரச்சினை இழுபறியாகி வருவதென்பது அரசியல்வாதிகளின் கையாலாகாததனமே அல்லாமல் வேறில்லை. தேர்தல் காலங்களில் இவர்கள் வழங்கியுள்ள வாக்குறுதிகளையும் ஏமாற்று வார்த்தைகளையும் தாங்கிக் கொள்ளாமல் குறித்த வீடுகள் தாமகவே உடைந்து விழும் நிலைமைக்கு வந்துவிட்டன. சில வேளை முஸ்லிம் கட்சிகளின் அரசியல்வாதிகள் இப்படித்தான் என நீங்கள் அவர்கள் பக்கம் கைநீட்டினால் அது உங்கள் தவறு. இந்தநாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தரிசித்த ஒரே வீட்டுத்திட்டம் என்ற பெருமை இதற்கு மட்டுமே உண்டு. 


தற்போதுள்ள அரசு பதவியேற்றதும் இவ்வீடுகளை கையளிக்க ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறி மக்களை நம்பவைத்திருப்பதைதே இறுதி அப்டேட்டாகச் சொல்லலாம்.

 

வீடுகள் பாழடைவதற்கு அரச அதிகாரிகளே பொறுப்பு


எஞ்சியுள்ள வீடுகள் யார் யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கப்பால் அதனைப் பெறப்போகின்றவர்கள் ஏழைகள். அவர்கள் இன்று அவ்வீடுகளைப் பெற்றால் அதனைப் லட்சக்கணக்கான ரூபாய்க்களைச் செலவு செய்தே அதில் குடியேற வேண்டும். காரணம் இன்று அவ்வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. ஜன்னல் கண்ணாடிகள் கழற்றப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளன. மிருகங்களின் சரணாலயமாகவும் போதைவஸ்த்துக்காரர்களின் ஒழிவிடமாகவும் அவ்வீடுகள் மாறியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் அரசியல் வாதிகளின் பொடுபோக்குத்தன்மை ஒருபுறமிருக்க அரச அதிகாரிகளின் கவனமின்மையே பிறிதொரு காரணமாகும்.

 

வீடுகள் இல்லாமல் அத்துமீறி குடியேறி வசித்து வருகின்ற சில குடும்பங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அதிகாரிகள் தங்களின் கீழுள்ள வீட்டுத்திட்டத்தைப்பாதுகாக்காமல் பாழடைந்து சேதமேற்படவும் காரணமாக இருந்துள்ளனர். இவ்வீடுகள் மீண்டும் ஒப்படைக்கப்படும் நிலை வந்தால் அதற்கான புனர்நிருமாணப்பொறுப்பை அரசே பொறுப்பேற்க வேண்டும்.


எது எவ்வாறான போதும் அரசில்வாதிகளின் கையாகாலாகாத செயற்பாட்டின் மிக நீண்ட எச்சமாக மருதமுனை 65 வீட்டுத்திட்டத்தின் எஞ்சிய வீடுகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதை எவரும் அழித்துவிட முடியாது. 17 ஆவது ஆண்டு நிறைவிலாவது இதனை நிறைவேற்றுவார்களா? எனக் கேட்பதற்கு வெட்கப்படும் எழுத்துக்களாக விடைபெறவேண்டியுள்ளது.


- ஜெஸ்மி எம்.மூஸா

No comments:

Post a Comment