மரணிக்கும் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டாக வேண்டும் என்ற அரசின் நியதியினால் வருவாய் குறைந்த மக்கள் பாரிய சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், அரச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றின் ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மேல் மாகாண முன்ளாள் ஆளுனர் அசாத் சாலி, தேவைப்படும் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று பி.சி.ஆர் பரிசோதனையை நடாத்தி சான்றிதழ் வழங்கும் வசதியை ஏற்பாடு செய்யத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார்.
இதனூடாக, இறந்த உடலங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் கொரோனா தொற்றிருப்பதாகக் கூறப்படும் சந்தேகத்துக்கும் தெளிவு கிடைப்பதோடு, நேரடியாக வீடுகளுக்கே சென்று இலவசமாக இந்த சேவையை வழங்குவதற்கு தகுதி பெற்றுள்ள சோதனைக்கூடமும், உபகரணங்களும் தொழிநுட்ப நிபுணர்களும் முன் வந்திருப்பதாக தெரிவிக்கிறார்.
வீடுகளில் நிகழும் மரணங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் நிலையில், அங்கு கொரோனா தொற்று என அறிவிக்கப்படுவது தொடர்பில் மக்கள் பெருமளவு சந்தேகம் கொண்டு வருவதாகவும் வைத்தியசாலை சூழ்நிலைகள் காரணமாகலாம் என்ற அவநம்பிக்கை நிகழ்வதாகவும் இவற்றுக்குப் பரிகாரமாக, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரே இப்பிரச்சினைக்கு முகங்கொடுப்பதனால் அதற்கேற்ப இலவச நடமாடும் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடாத்துவதற்கான வசதிகளை செய்து கொடுக்க முடியும் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
நாளைய தினம் இவ்விதி முறை குறித்து ஆராயும் சுகாதார அமைச்சு, மாற்றீட்டை வழங்கத் தவறினால் இவ்வாறு இலவச நடமாடும் சேவையை சமூகத்துக்கு வழங்குவதே மாற்று வழியென அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment