இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மத வழக்கத்திற்கு எதிராக எரியூட்டும் இலங்கை அரசின் சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று (நவ.06) சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி, வடசென்னை மாவட்ட தலைவர் ரஷீத், தென்சென்னை மாவட்ட தலைவர் சலீம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலங்கை அரசின் இனவாத நடவடிக்கை எதிராக முழக்கமிட்டனர்.
முற்றுகை போராட்டத்தில் கண்டன உரை நிகழ்த்திய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், “இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடலை அடக்கம் செய்யாமல், உடலை அரசே வலுக்கட்டாயமாக எரித்து விடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகில் வேறு எந்த நாடுகளிலும் இதுபோன்றதொரு நடைமுறை இல்லாதபோது, இலங்கையில் மட்டும் நடைபெறும் இத்தகைய நிகழ்வு காரணமாக, இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.
ஒரு முஸ்லிம் மரணித்தால் குளிப்பாட்டுவது, உடலை துணியால் போர்த்துவது, இறுதி தொழுகை நடத்துவது, அடக்கம் செய்வது என்பது கட்டாய கடமையாகும் என்கிறபோது, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த இஸ்லாமியரின் உடலை குறைந்த பட்சம் இறுதி தொழுகை நடத்தி அடக்கம் செய்யக்கூட அனுமதிக்காமல் உடலை எரியூட்டுவது என்பது மத உரிமைகளை மறுக்கும் அதேவேளையில் மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கையாகும்.
இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் இறந்த உடல்களை தங்கள் மத வழக்கப்படி அடக்கம் தான் செய்து வருகின்றனர். இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கை காரணமாக அவர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக இறந்த உடலில் இருந்து வைரஸ் வெளியேறி நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்ற இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கும் உயிரியல் காரணங்கள் தவறானவை என சர்வதேச அளவிலான மருத்துவர்களின், உயிரியல் வல்லுநர்களின் கூற்றுக்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் மரணித்தவர்களின் உடல்கள் அதிகளவில் மண்ணில் தான் அடக்கம் செய்யப்படுகின்றன. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களும் அவ்வாறே அடக்கம் செய்யப்படுகின்றன. எங்கும் எரியூட்டப்படுவதில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களில் கூட இத்தகைய எரியூட்டும் வழிகாட்டுதல்கள் இல்லாதபோது, இலங்கை அரசின் இத்தகைய சிறுபான்மை மக்களுக்கு எதிரான விரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
ஆகவே, தவறான உயிரியல் காரணங்களை முன்வைத்து, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும், உடல் அடக்கம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் அனைத்து மத உரிமைகளும் பாதுகாக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.
-Mursith
No comments:
Post a Comment