முட்புதர்களும் முணுமுணுப்புகளும்.. - sonakar.com

Post Top Ad

Saturday 21 November 2020

முட்புதர்களும் முணுமுணுப்புகளும்..

 


மூன்று மாதங்களுக்கு முன் தெளிவான அரசியல் முடிவை நோக்கி நகர்ந்திருந்த முஸ்லிம் சமூகம் தற்போது மீண்டும் கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்ட நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறது.


இலங்கை அரசியலில் யார் போடும் கணக்கு சரியென்ற கேள்விக்கு அரசியல் கட்சிகள் மத்தியில் தெளிவான விடையில்லை. ஒவ்வொரு அசைவுக்கும் எதிர் அசைவுள்ள தளம் என்பதால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கைக்கும் பல முனையில் தடங்கல்.


இந்த வாரம் நான் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் வைத்து, இலங்கையில் முஸ்லிம்களுக்கான பூர்வீகம் தொடர்பில் பேசப்பட்டது. அதன் போது, முஸ்லிம்களின் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்ட கடந்த தசாப்த ஆய்வாளர்கள் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களை 'முஸ்லிம்கள்' என்று அடையாளப்படுத்தி எழுதி விட்டதாகவும் ஒரு கருத்து சொல்லப்பட்டது.


இதன் போது, அவ்வாறு எழுதிய எத்தனை ஆய்வாளர்கள் 'மாத்தற திசாவ' என்ற பெயர் கொண்டு அறியப்பட்ட ஒரு நபரை முஸ்லிமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்? என்று ஒரு மாற்றுக் கேள்வியை நான் முன் வைத்திருந்தேன். அதற்கான காரணத்தை விளக்கும் போது, முஸ்லிம் சமூகம் ஒருவரைத் தம்மைச் சார்ந்தவராகக் கருதுவதற்கு ஆகக்குறைந்த தகுதியாக அரபு அல்லது உருது பெயர்களை வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. ஆதலால், அவ்வாறான பெயர் இல்லாதவர்களை முஸ்லிம்களாக அடையாளங் கண்டு கொள்ள ஆய்வாளர்களும் தவறியிருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தேன்.


எனினும், சிங்கள சமூக வரலாற்றில் இந்தப் பெயர் வரையறைக்கு அப்பால் காரணப் பெயர் வைத்திருந்தவர்களை, அவர் சோனகராக இருந்தால் சோனகர் என அடையாளப்படுத்தத் தவறவில்லை. எனினும், பொதுவாகவே எம்மவர் மத்தியில் இந்த அரபுப் பெயர் பி;ணைப்பின்றி ஒருவர் தம்மைத் தாம் முஸ்லிம் என புரிய வைப்பதும் சிரமம். இது தான் அண்மைக்கால நடைமுறை.


அதிலும், அவ்வாறே அரபுப் பெயர் இருந்தாலும் கூட ஒருவர் முஸ்லிமா? இல்லையா? என்ற கேள்வியெழுப்பப் பட வேண்டிய மிக இக்கட்டான கால கட்டத்தில் இன்றைய முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.


இன்றைய அளவில் இலங்கை முஸ்லிம்கள் முசம்மில் என்ற பெயரை வெகுவாக வெறுக்கிறார்கள் அல்லது அப்பெயரை அரசியல் தளத்தில் கேள்விப் பட்டாலே கொதித்தெழுகிறார்கள். காரணம், விமல் வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் முஹமது முசம்மில்.


தற்சமயம் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதனால் அவரது கருத்துக்கள் சமூகத்தைப் பாதிப்பதாக அமைகிறது என்பதே பெரும்பாலனவர்களின் வாதம். கடந்த பத்து வருடங்களில் முசம்மிலின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் எதையும் நான் அவதானிக்கவில்லை. தொடர்ச்சியாக அவர் பேசும் தளமும் கருத்துக்களும் அவரது கட்சி மற்றும் அந்த கட்சி சார்ந்திருப்போரின் தேவைகளுக்காக பேசப்படும் விடயங்களாகவே இருக்கிறது.


ஒரு சிலருக்கு அவர் முசம்மில் என்ற பெயர் வைத்துக் கொண்ட வேறு யாருமா? என்ற கேள்வியும் இருக்கிறது. மாத்தளை மாவட்டம், உக்குவளை பிரதேசத்தின் மானாம்பொட பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவரே அவர். ஆதலால், அந்த சந்தேகம் அவசியமில்லை. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அரபு அல்லது உருது பெயர்கள் இருப்பது அவர்கள் மீதான சமூகக் கடமையை அதிகரிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லையென்பதற்கு வாக்களித்து மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில் மக்களை ஏமாற்றி ஏப்பமிட்ட அந்த ஏழு பேரும் சாட்சியாகிறார்கள்.


பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதால் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லையென நியாயங் கற்பித்த புதிய தலைமுறை அரசியல்வாதி கடந்த 12ம் திகதி பசில் நாடாளுமன்றம் வந்தாக வேண்டும் என்று பெரமுன உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்த கடிதத்தில் இணைந்து கொள்ளவில்லை. ஆதலால், முன்னர் சொன்ன பேச்சில் எந்த உண்மையுமில்லையென்றாகிறது.


அதற்கடுத்து இன்னொருவர் கல்முனையில் மீண்டும் ஒரு ஊடக சந்திப்பை நடாத்தி, ஜனாஸா எரிப்பு விடயத்தை சிங்கள மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டியது, சிங்களம் தெரிந்த முஸ்லிம் புத்திஜீவிகளின் பொறுப்பு என்று கூறி அப்படியானால் 20ம் திருத்தச் சட்டத்துக்கு பாய்ந்து விழுந்து வாக்களித்ததன் ஊடாகக் கண்டு கொண்டது என்ன? என்ற கேள்வியைத் தவிர்த்துக் கொண்டதாக நிறைவடைகிறார்.


ஆனால் சமூகமோ இன்னும் தம்மைச் சூழ்ந்துள்ள காரிருளிலிருந்து வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தவிப்பின் விரிவு எவ்வாறாக இருக்கிறதென்றால், கடுமையாக நோய் வாய்ப்பட்டிருக்கும் வயதானவர்கள் எந்தக் காரணம் கொண்டும் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று விடாதீர்கள் என்று கெஞ்சும் நிலையை உருவாக்கியுள்ளது.


வெளிநாடுகளில் இருக்கும் மகன்கள் தாய்மாரின் இந்த கோரிக்கைக்கு என்னதான் வழியெனத் துடித்துக் கொண்டு, தமக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் அறிவுரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமூக மட்டத்தில் இன்றைய அளவில் பல இயங்கு தளங்களில் சூடான கருத்துப் பரிமாறல்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக எண்ணற்ற வட்சப் குழுமங்களில் ஜனாஸா அடக்க உரிமையை மீட்பதற்கான குரல்கள் கவலைகளாக பதிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


சிவில் சமூகம் தாம் யாரை நாடலாம் என திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் இதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை நாடி, அவர்களுக்கு 'வழிகாட்டுவது' தான் முடிவெனக் கூட சிந்தித்து, அதற்கான முயற்சியிலும் ஈடபட்டார்கள். சரி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இல்லையென்றால் அதற்கடுத்து யார்? அல்லது எந்த அமைப்பு? என்ற கேள்வியெழுகிறது. இந்தக் கேள்விக்கு யாரிடமும் விடையில்லை.


இன்னொரு புறத்தில், ராஜபக்ச அரசை நெருங்கி அணுகி எப்படியாயினும் ஒரு தீர்வைக் கண்டாக வேண்டும் என்று பிறிதொரு குழு மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதில் ஒருவர் அவ்வப் போது சமூகத்தைத் திருப்திப் படுத்தும் வகையிலும் ராஜபக்ச அரசு முஸ்லிம் சமூக நலன்களில் அக்கறை கொண்டுள்ளது என்றும் காட்டிக் கொள்ள சில 'நம்பிக்கை' தரும் வதந்திகளைக் கசிய விடும் வழக்கத்தை ஆகக்குறைந்தது இரு முறைகள் இது வரை முயற்சி செய்துள்ளார்.


எனவே, 75வது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனையை நடாத்தியாக வேண்டும் என்றும் முடிவெடுத்து செயற்பட்டார்கள். இன்னுமொரு புறத்தில் முஸ்லிம் சமூகத்துக்கும் ஜனாதிபதிக்கும் நெருங்கிய உறவிருப்பதாகக் காட்டிக் கொள்ளவும் அல்லாஹ்வின் அருளும் கோட்டாபே ராஜபக்சவுக்கு இருக்கிறது என்று நிரூபிக்க பள்ளி பள்ளியாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார் நீதியமைச்சர்.


நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகிக் கடந்து போயுள்ள நிலையில் இன்னும் தான் இந்த விடயத்துக்குத் தீர்வில்லை. அரசு தாம் நம்பும் நிபுணர்கள் என்ற தளத்தில் வைத்திருப்பவர்களைக் கை விடுவதாவும் இல்லை. அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் வரண்ட நிலம் தேடிச் சென்றாலும் அந்த நிலத்திலும் ஆபத்திருக்கும் என்கிறார்கள். ஏழு மாதங்களாகி விட்டது. ஒரு மெத்திகா விதானகேயின் விஞ்ஞானத்தை எதிர்கொள்ள அதே தளத்தில் நாம் இன்னும் தயாரில்லை. மாறாக, அலி சப்ரியின் கையைக் காலைப் பிடித்து செய்து கொள்ளலாம், அவர் ஜனாதிபதியின் கையைக் காலைப் பிடித்து செய்து தருவார் என்று இன்னும் தான் நம்பிக் கொண்டிருக்கிறோம்.


சரி, இதற்கடுத்து வரும் காலங்களில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு நாம் இங்கிருந்து எந்த வகையில் தயாராகிறோம்? என்று பார்த்தால், பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பேசுவதைப் பொது நலமாகப் பார்க்கக் கூட சமூகம் தயங்குகிறது. எனவே, சமூக இயக்கம் கருத்துப் பரிமாறல் என்ற வரையறையைத் தாண்ட முடியாமல் தவிக்கிறது. இப்போது மீண்டும் சமூகத்திடம் இலங்கை அரசியல் கட்டமைப்புக்குத் தகுந்த ஆட்சி முறை சர்வாதிகாரமா? ஜனநாயகமா? என்ற ஒரு கேள்வியை முன் வைத்தால் மூன்று மாதங்களுக்கு முன்னிருந்த தெளிவு கூட இல்லாமல் போயுள்ளதை உணரலாம்.


வெறுமை சூழ்ந்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் இதை யாரோடு பேசுவதென்று தெரியாமல் தவிக்கிறது. இந்நிலையில், இவ்வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி ஒரு முறைப்பாட்டை முன் வைத்தார். அதன் பின் அவரோடு உரையாடிய போது, சாதகமான முறையில் அங்கிருந்த அதிகாரிகள் செவிமடுத்ததாக தெரிவித்தார்.


ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கரும் பிரதமருக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மனித உரிமைகளுக்கான ஆசிய அமைப்பும் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகள் காயப்படுத்தப்படுவது குறித்து தமது கரிசணையை வெளியிட்டிருந்தது. இவ்வாறு பல கோணங்களில் கவலைகள் வெளியிடப்பட்டாலும் இரும்புத்திரை இன்னும் நீங்கவில்லை.


மாறாக, இது ஒரு பொது நியதி, அதிலிருந்து முஸ்லிம்களுக்கு விதிவிலக்களிக்கப்படக் கூடாது என்ற கூக்குரல்கள் ஆங்காங்கு எழுந்து வருகிறது. போதாக்குறைக்கு நிகாப் அணிந்து டான் பிரியசாத்துடன் இணைந்து ஊடக சந்திப்பு நடாத்தவும் ஆளிருப்பதாக நாடகம் அரங்கேற்றப்பட்டிருந்தது.


இவ்வாறு, பல முனைகளில் இறுகிப் போயுள்ள சமூகத்தின் முணுமுணுப்புகளும் பல்வேறு திசைகளில் அலை மோதுகிறது. நாம் முட்புதர்கள் நிறைந்த பாதையைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்பதை இன்று ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே அரசியல் போராட்டங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இருக்கும். அந்த வகையில்; தற்போதைய அரசியல் இறுக்கமும் தளரும் என்ற நூலிடை நம்பிக்கையும் கட்டாயம் இருக்கிறது.


அது எப்போது? அதுவரை கொடுக்கப் போகும் விலையென்ன என்பதே இன்றைய கேள்வியாக இருக்கிறது. ஆயினும், நாளையே நிலைமை மாறியதும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று உரக்கக் கூறி விட்டு இக்கால கட்டத்தில் நாம் கிடப்பில் போட்டுள்ள ஏனைய பிரச்சினைகளைக் கிளற ஆரம்பித்து விடுவோம்.


ஒன்றா? இரண்டா? எத்தனை பிரச்சினைகள் இன்னும் பேசுவதற்கு இருக்கிறது. 20க்கு வாக்களித்து விட்டு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கும் நம்பிக்கைத் துரோகத்தை கொண்டாடுவதா அல்லது கேள்வி கேட்பதா? என்பதற்கே இன்னும் சமூகம் முடிவெடுக்கவில்லை. தலைவர்களும் தொண்டர்களும் மாறி மாறி முன் வைக்கும் குற்றச்சாட்டுகளின் பஞ்சாயத்து கூட இன்னும் நடந்து முடியவில்லை.


இதற்கிடையில் முஸ்லிம் சமூகத்தின் நலன் சமூகத்திற்குள்ளேயே இருக்கும் வேறு கூறுகளால் எவ்வாறு புரியப்பட்டுள்ளது? அதன் எதிர்வினைகள் எவ்வகையிலான எதிர்விளைவுகளை உருவாக்கும்? அதனூடான சமூகப் பிரதிபலிப்புகள் எவ்வாறு இருக்கும்? அது அரசியலுக்கு எவ்வாறான பயனைக் கொடுக்கும்? என்று பல கேள்விகள் உண்டு.


இவற்றுக்கெல்லாம் விடை காண இன்னும் அவகாசம் இருக்கின்றது என்கிற அடிப்படையில் தற்போதைய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே முந்தி நிற்கிறது. ஜனாஸா எரிப்பு என்பது முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்ட சிக்கல் என்பதில் சமூகம் தற்போது தெளிவாக இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றுக்காகவே காத்திருக்கிறோம் என்பதில் மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.


விஞ்ஞான போர்வையில் அவையெல்லாம் மறைக்கப்பட்டு அரசின் மாற்றுத் தலைமையெனும் இலக்கையடைய தொடர்ந்தும் உடலங்கள் எரிக்கப்பட்டாலும் அரசியலால் எரிப்பைத் தடுக்க முடியும் என்பதும் இவ்வாரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றென அடையாளப்படுத்தப்படாமல் கையளிக்கப்பட்ட ஜனாஸாக்கள் பல உண்டாயினும் கூட, தொற்றிருப்பதாகக் கூறப்பட்ட ஒவ்வொரு ஜனாஸாவின் நிலையும் சந்தேகத்துக்குரியதாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை முழு மனதுடன் யாரும் ஏற்றுக்கொண்டதாக ஆதாரமில்லை. வேண்டுமென்றே கொரோனா பெயரில் உடலங்கள் எரிக்கப்படுகிறது என்ற அவலக்குரல் எட்ட வேண்டியவர்களின் காதுகளையெல்லாம் எட்டியாகிவிட்டது. 


ஆதலால், அரசியல் தீர்வுக்காகக் காத்திருக்கிறோம். அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்டவர்களை எரிப்பிலிருந்து காப்பாற்ற முடியும் என்றால் சாதாரண ஏழை மக்களின் ஜனாஸாக்களையும் காப்பாற்ற முடியும் என்பதே சமூகம் எதிர்பார்க்கும் நீதி. பூமிப்பரப்பில் இதில் நீதி தவறி நடந்தாலும் இறைவன் சன்நிதானத்தில் நீதி கிடைக்கும் என்ற இறுதி நம்பிக்கையொன்றே அநீதியிழைக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது.


எனவே, காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆயினும் முணுமுணுப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கான காரணம் சுற்றியிருக்கும் முட்புதர்களாக இருக்கிறது. முஸ்லிம் சமூகம் த்மைச் சுற்றி இத்தனை சோதனைகளை உருவாக்கி, ஊட்டி வளர்ப்பதற்குப் பங்களித்திருக்கிறோம் என்பதை எப்போது உணரப் போகிறது என்பது கேள்வி.


கொள்கை இயக்கப் போராட்டங்களினால் தமக்குள் பிரிவினைகளை உருவாக்கிக் கொண்டுள்ள நம் சமூகம் யார் சொல்வதை நல்லதென்று ஏற்றுக் கொள்ளப் போகிறது? என்பதும் தெளிவில்லாத விடயம். நம்மைப் பிரித்தாள்பவர்களை முந்தி நாமாகப் பிரிந்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் எத்தனையோ தெருச் சண்டைகள் நடந்தேறியிருக்க வேண்டும். ஆயினும், கொரோனா புண்ணியத்தில் தற்போதைக்கு அடக்கி வாசிக்கிறோம்.


நம் முணுமுணுப்புகள் நம் மீதான மீள் வாசிப்பாகவும் இருக்கக் கடவதாக!


 










-Irfan Iqbal

Chief Editor, Sonakar.com


No comments:

Post a Comment