பிச்சைக்காரனுக்கு தேர்வு உண்டா? - sonakar.com

Post Top Ad

Sunday 1 November 2020

பிச்சைக்காரனுக்கு தேர்வு உண்டா?

 


பொருளாதார ரீதியில் ஓரளவு திருப்தியான நிலையில் இருப்பவன் சரியான முறையில் தன் நிதியை நிர்வகிக்கவில்லை என்றால் அவன் கடனாளியாகி இறுதியில் எப்படி பிச்சைக்காரனாவானோ அதே நிலையில் தான் நம் சமூகம் உள்ளது. அரசியல் ரீதியாக ஒரு கெளரவமான நிலையில் இருந்தவர்களை மாத்தளையில் கருக்கொண்டு கிழக்கில் குறை மாதத்தில் பிறந்த முஸ்லீம் காங்கிரஸ் இன்று அவர்களை பிச்சைக் காரர்களாக்கிவிட்டது. 


பிச்சைக்காரனுக்கு பிறந்த பிள்ளை பிச்சைக்காரனாவது போல் மு.கா வில் இருந்து பிறந்த மக்கள் காங்கிரஸும் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை, ஆகவே அதன் தலைவிதியும் அப்படியே ஆகிவிட்டது. இந்த கட்சிகளை பற்றி சற்று விபரமாக பார்க்க முன் இன்றைய அரசாங்கத்தின் நிலையை பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.


பொது தேர்தலுக்கு பின்னான அரசியல் நிகழ்வுகளில் அதிகம் முக்கியம் பெற்றது அரசியல் யாப்புக்கான  20ம் திருத்தம். இதை முன் நிறுத்தி திரைமறைவில் நடக்கும் விடயங்கள் பல. இந்த 20ம் திருத்ததில் மறைந்திருப்பது என்ன?   அதிகாரங்களை ஒரே இடத்தில் குவிப்பது. அப்படி குவிப்பதின் அர்த்தம் என்ன? சனநாய மறுப்பும், நாட்டு மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதும், இவற்றின் மூலம் மக்களை ஒன்று திரட்ட முடியாத படிக்கு பயத்தை ஏற்படுத்துவதுமாகும். இவை ஏன் செய்யப்பட வேண்டும்? பொருளாதர ரீதியில் நாடு பின்னோக்கி போய்க்கொண்டிருக்கின்றது என்பதை மறைத்து, நாட்டை அபிவிருத்தி செய்ய முழு அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு தேவை என்ற யாருக்கும் புரியாத புதிய அரசியல் வேதாந்தம் ஒன்றை உருவாக்குவது. 


நாட்டின் அபிவிருத்திக்கும் அதிகார குவிப்புக்கும் என்ன சம்பந்தம்? எழுத்து மூலமான வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றும் தேவையில்லை, தனது வாய்ப் பேச்சே வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றுக்கு சமமானது என்று கூறிய ஜனாதிபதிக்கு 19ம் திருத்தத்தில் உள்ள  அதிகாரங்களை வைத்து தேவையான அபிவிருத்திகளை நாட்டுக்கு செய்ய முடியாதா? என்ற கேள்விக்கு கிடைக்கும் விடை ஒன்றே போதும் இந்த 20ம் திருத்த முயற்சியில் புதைந்துள்ள இரகசியங்களை கண்டறிய.


பொருளாதர ரீதியில் நாடு படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்கின்றது, கூடவே "கொரோனா" பொருளாதர ரீதியில் நாட்டையும், உலகத்தையும் நசுக்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்ரீ லங்காவுக்கான கடன் பெரும் தகுதித் தன்மை B+ நிலையில் இருந்து C-- நிலைக்கு சென்றுவிட்டதாக இந்தியா அறிவித்து விட்டது. இருந்தும்  நம் நாட்டுக்கு போதியளவு கடன் வழங்கி, மீள் செலுத்தும் காலத்தையும் கூட்டி, காலவரயறை இன்றி நிறுத்தி வைக்கும் வசதியையும் (Morotorium) கூட செய்துள்ளது அதே இந்தியா. காரணம் நமக்கு பிச்சை போடும் எசமானுக்கு நோக்கங்கள் பல  இருப்பதனால்.


அதை விடவும் நடந்த அதிசயம் தான் ஜப்பானிய அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு, கொழும்பின் போக்குவரத்து நெரிசலை சீர் செய்து பொருளாதார ரீதியில் பயனுள்ளதாக்கும் மென்புகையிரத (Light railway)  திட்டத்தை கைவிட்ட சம்பவம். உலகத்தின் பிச்சைக்காரர்களுக் கெல்லாம் வட்டியற்ற கடனும், குறைந்த வட்டி வீதத்தில் அடைக்கக் கூடிய நீண்ட காலக் கடனும், இன்னும் சில பிச்சைக்காரர்களை தொடர்ச்சியா கடனாளியாக வைத்திருக்கும் சீனாவிடமிருந்து அதி கூடிய வட்டிக்கு கடன் படுக்கொண்டிருக்கும் நிலை. அது ஏன்? ஸ்ரீ லங்கா எங்கும் ஏற்கனவே கால் பதித்துள்ள சீனா தன் பிராந்திய ஆதிக்க மையமாக நம் நாட்டை கையகப்படுத்தும் திட்டம் ஒன்று காதோடு காது வைத்தாற் போல் நடந்து கொண்டிருக்கின்றது என்பதினால். 


2010 முதல் 2015 வரை ஸ்ரீ லங்காவின் பல இடங்களை 99 வருட குத்தகைக்கு கொடுத்து அதற்கு பதிலாக கையூட்டும் பெற்றுக் கொண்டிருக்கின்றது நமது அதியுயர் குடும்பம். இவற்றை எல்லாம் நிரந்தரமாக மறைக்கும் முகமாக குடும்ப ஆட்சியை தக்கவைக்க எடுக்கும் பல் முக நகர்வுகள். இதற்கிடையிலேயே தமக்கே சரியாக புரியாத விஷப்பரீட்சை ஒன்று நடந்து கொண்டிருப்பதையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. அதாவது  ஒரே நேரத்தில் அமெரிக்காவையும், சீனாவையும், இந்தியாவையும்  திருப்தி படுத்த எடுக்கும் முயற்சி.  இதன் விளைவுகளைப்பற்றி சற்றும் கவலைப்படாத அரசாங்கம், தட்டிக் கேட்க முடியாத பலமிழந்த எதிர் கட்சி, பயத்தின் காரணமாக அதை கண்டு கொள்ளாத நாட்டு மக்கள்.


ஆக மொத்தத்தில் நாட்டின் பொருளாதார பின்னடைவை மறைக்க எடுக்கும் முயற்சிகளில் தன்னை அறியாமலே சர்வதேச வலை பின்னல்களில் சிக்குண்ட நிலைமை. கூடவே நவம்பர் 3ல் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் டோனால்ட் ட்ரம்(Donald Trump) வெற்றி பற்றால் ஸ்ரீ லங்கா அமெரிக்காவுடன் செய்து கொண்ட MCC (Millenium Challenge Corporation) ஒப்பந்தம் துரித கதியில் நடை முறைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். அதன் முன் நகர்வே மைக் பொம்பியோ (Mike Pompeo) வின் அவசர ஸ்ரீ லங்கா வரவு, அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நேரத்தில் இவருக்கு இங்கு அப்படி என்ன அவசர வேலை? 20ம் திருத்தத்தின் சூத்திரதாரிகள் "ட்ரம்" குழுவினரோ என்ற நாட்டு மக்களின் நியாயமான சந்தேகம் இதில் முக்கியமான ஓர் அம்சம். அதாவது சீனாவின் பிராந்திய ஆதிக்கம் என்ன விலை கொடுத்தாவது கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இங்கு இருப்பதை மறைக்க முடியாது.     


ஆனால் அதிபர் போட்டி மிக இறுக்கமாகவே இருப்பதாலும் ஜோ பைடன்(Joe Biden) னின் வெற்றி அனேகமாக சாத்தியம் என்ற எதிர்வு கூறல் நிதர்சனமானால் ஸ்ரீ லங்கா சில நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிடும். 


காரணம் "பைடன்" அதிபராக தெரிவாகும் பட்சத்தில்  கமலா அக்கா என தமிழ் சமூகத்தால் அழைக்கப்படும் திருமதி கமலா ஹரிசன் (Kamala Harrison- தமிழ் நாட்டு வம்சாவழி) உதவி அதிபராக பதவி ஏற்பார். அவரின்  இப்போதய தனிப்பட்ட செயலர் ஒரு யாழ்பாண பெண்மனி. கூடவே நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்க பிரதமர் (சட்டத்தரணி உரூத்திரமூர்த்தி) அமெரிக்காவிலேயே தன் காரியாலயத்தை கொண்டிருப்பது மாத்திரமல்ல பைடனின் தேர்தல் பிரச்சாரங்களில் அமெரிக்க சிறுபான்மையினரின் நலன்கள் அதிக கரிசனை காட்டப்படும் என்ற உத்தரவாதமும், உலக அரசியலில் அவர்கள் கடைபிடிக்க எதிர்பார்க்கப்படும் சில அரசியல் நகர்வுகளுமாகும். 


இது நம் நாட்டின் சிறுபான்மையினர் குறிப்பாக தமிழர்களின் நீண்ட நாள் கனவான "சம பிரஜை" களாக வாழத் துடிக்கு  அவர்களின் அடிப்படை உரிமையில் சில முனேற்றங்கள் நிகழ எல்லா வாய்ப்புகளும் உள்ளன. பொருளாதார இருப்புக்காக அமெரிக்கா, சீனா, இந்தியா (அமெரிக்க பினாமி) ஆகிய மூன்று எசமானர்களின் கடைக்கண் பார்வைக்கு தவமிருக்கும் ஸ்ரீலங்காவுக்கு அடிபணிவதைத் தவிர வேறு தேர்வுகள் இல்லை.


அதே போலவே தேர்வுகள் ஒன்றும் இன்றி தவிக்கும் சமூகம்தான் ஸ்ரீ லங்கா சோனகர் (சமய நம்பிக்கையால முஸ்லீம்கள்). சிறுபான்மை தமிழர்களுக்கு சர்வதேச ரீதியில் காணப்படும் ஒரு வகை சாதகத் தன்மையும், ஸ்ரீ லங்காவில் அவர்களின் அரசியல் தலைவர்களின் சாதுர்ய நகர்வுகளும் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கின்றது. ஆனாலும் உலகளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராகக் காணப்படும் பொது சூழ்நிலையும், ஸ்ரீ லங்காவில் முஸ்லீம் தலைவர்களின் தான்தோன்றித்தனமான அரசியல் நகர்வுகளும் நம் சமூகத்தை அரசியலில் அனாதை பிச்சைக்காரர்களாக்கிவிட்டுள்ளது.


இதன் தெளிவான எடுத்துக்காட்டே அதிகாரம் அனைத்தையும் ஒரு தனி மனிதனிடம் குவிக்கும் 20ம் திருத்தம் பாராளுமன்றில் தோல்வியை சந்திக்க இருந்த நேரத்தில் இரண்டு முஸ்லீம் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்த சம்பவம். 


மு.கா தலைவர் தான் 18ம் திருத்தத்திற்கு கையுயர்த்தி செய்த அரசியல் வரலாற்றுத் தவறுக்காக பிராயசித்தம் வேண்டியே 2018 ஓக்டோபரில் இன்றைய ஆளுங்கட்சியின் அரசியல் அடாவடிக்கு எதிராக ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து நீதிமன்றம் சென்று சனநாயகத்தை நிலை நிறுத்தியதாக சொன்னவர், இப்போது தான் மாத்திரம் 20க்கு எதிர்ப்பு என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தன் கட்சிக்காரர்களை 20க்கு ஆதரவாக கையுயர்த்த அனுமதித்தது சம்பவம் இவர் முன்னொரு முறை "மஹிந்த ராஜபக்ச ஒரு நடிகன், ஆனால் நான் அவரைவிட பெரும் நடிகன்" என்று கண்டியில் கூறியதை கொழும்பில் தெட்டத்தெளிவாக நிரூபித்துள்ளார். எதிர்கட்சி வரிசையில் இருந்து கொண்டு தன் கட்சி பா.உ பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளித்த நால்வரையும் கட்சியில் இருந்து இடைநிறுத்தவோ அல்லது விசாரணைக்கு உட்படுத்தவோ இலை. மாறாக தான் ஒரு "சூழ்நிலை கைதி" (Victim of circumstance) என்ற புதிய குற்றவியல் சட்டபிதற்றல் ஒன்றுடன் மக்களை மீண்டும் மடையர்களாக்க முயல்கின்றார்.


மு.கா.வின் முன்நாள் கிழக்கு மாகாண முதல்வரும் இன்நாள் பா.உ மாகிய ஹாபிஸ்( குர்-ஆனை மனதிலே சுமந்த) நசீர், பிரான்ஸ் நாட்டின் பொருட்களை பல அறபு நாடுகள் பகிஸ்கரிப்பது போன்று ஸ்ரீ லங்காவும் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கோருகிறார். காரணம் இறைத்துதர் முஹம்மத் அவர்களின் உருவ கேலிச் சித்திரம் (Cartoon) தொடர்பாக பிரான்ஸ்சில் நடக்கும் ஏட்டிக்குப் போட்டியான இருபக்க கொலைகள். ஆனால் இந்த "ஹாபிஸ்" நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிறிஸ்த்தவ, முஸ்லீம் சமய நம்பிக்கைக்கு எதிரான "உடல் எரிப்பு" சம்பந்தமாக இந்த அரசாங்கத்துக்கு என்ன கூறினார் என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது.


இரண்டு முஸ்லீம் கட்சிகளைச் சேர்ந்த ஆறு பா.உறுப்பினரும் சேர்ந்து தங்களின் கையுயர்த்தலுக்கு பகரமாக ஒன்றுபட்ட பொதுவான கோரிக்கைகளோ அல்லது தத்தமது பிரதேசங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகளை அடிப்படையாக வைத்தும் கூடவே இந்த பொதுப் பிரச்சினையான உடல் எரிப்புக்கு ஒரு சாதகமான பரிகாரம் கிடைக்குமானால் தாங்கள் 20ம் திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதாக கூறியிருக்க வேண்டும்.  ஆனால் எதுவித யோசனையுமின்றி கையுயர்த்தியது மட்டுமல்லாமல் எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத இந்த அரசியல் வரலாற்று தவறை நியாயப்படுத்த  முனைவது நகைப்புக்குறிய விடயமே.


அந்த வகையில் பொத்துவில் பா.உ முஷ்ரப் அவர்கள் ஒட்டு மொத்த திருத்தத்திற்கும் ஆதரவளிக்காவிட்டாலும், இரட்டை பிரஜை ஒருவர் பராளுமன்றில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த ஏதுவாக்கப்பட்ட திருத்தத்திற்கு ஆதரவளித்தார். இதில் உள்ள வெளிப்படை ரகசியம் அமெரிக்க பிரஜையான பெசில் ராஜபக்சவை பாராளுமன்றத்திற்கு உள்வாங்குவது மட்டுமன்றி குடும்ப ஆட்சியில் இடை வெளி ஏற்படாதவாறும் அரசியலில் உள்ள குடும்ப உறுப்பினர், நாமல் ராஜபக்ச அரசியல் முதிர்ச்சி பெறும் வரை, அனைவரையும்  வரிசையா அதி உச்சத்தில் வைக்கும் முகமாக பெசில் ராஜபக்சவை அடுத்த சனாதிபதியாக்கும் திட்டமுமாகும். இந்த இளம் பா.உ தன் கையுயர்த்தலால் சாத்தியமாகவுள்ள, அதாவது இரட்டை பிரசா உரிமை பெறும் சீன வம்சாவழி ஒருவர் கூட ஸ்ரீ லங்காவின் சனாதிபதியாகும் நிலைமையை உணர்ந்து கொள்ள முடியாத அரசியல் அனுபவமின்றி இருக்கின்றார்.


அதே போலவே புத்தளம் பா.உ அலி சப்ரி ரஹீம் தனது பாராளுமன்ற கன்னியுரையில் குறிப்பிட்ட ஒரு விடயத்தை இங்கே கோடிடுவது பொருத்தமாகும். " நுரைச்சோலை அனல் மின்சார நிலையம் போன்ற மக்களுக்கும், சுற்றாடலுக்கும் கேடு விளைவிக்கும் நாசகார திட்டங்கள் எதுவும் இனி எம் பிரதேசத்தின் மீது திணிக்க வேண்டாம்" என சனாதிபதிக்கு அறிவுரை புகுத்தியவர், இப்போது எந்தவித நிபந்தனைகளும் இன்றி  கையையுயர்த்தியது அதிசயத்தை தருவது மட்டுமன்றி அவரின் வெற்றிக்கு வாக்களித்தவர்களும் இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.


புத்தளம் அறுவைக்காட்டு பகுதியில் மொத்த நாட்டின் குப்பைகளையும் கொட்டும் திட்டத்தை கைவிட்டு, அப்பிரதேச இயற்கை வளங்களையும், நீர் நில சீவராசிகளையும், பிரதேச மக்களின் நீண்டகால நோயற்ற வாழ்வையும், எதிர்கால சந்ததியினரின் இயற்கையோடு கூடிய வாழ்க்கையையும் உறுதி செய்யும் முகமாகவும் ஏற்கனவே இயக்கதில் உள்ள அனல் மின்சார உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் கட்டமாக 330 மெகா வோட் மின் உற்பத்தி நிலைய திட்டம் கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். கூடவே  கையுயர்த்திய அறுவரும் தத்தமது கோரிக்கைகளின் கடைசி அம்சமாகவேனும் "உடல் எரிப்பு" எதிர்ப்பு அம்சத்தை சேர்த்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் கை நழுவ விட்டுவிட்டு, இப்போது ஆளுக்காள் பத்திரிகை மாநாடு நடத்தி தம் கையுயர்த்தலின் தவறை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.   


இந்த வகையில் அலி சப்ரி ரஹீம் தனது அண்மைய ஊடக சந்திப்பில் புத்தளம் உலமா சபையின் ஆலோசனையின் பேரிலேயே தான் கையுயர்த்தியதாகக் கூற, உலமா சபையோ அப்படி ஒரு ஆலோசனை தம்மால் வழங்கப்படவில்லை என்று மறுத்துரைக்கின்றனர். இன்னொரு ஊடக சந்திப்பில் தான் பணத்துக்கோ, பதவிக்கோ அடிமையாகவில்லை என்றும் தமது கட்சி தலைவர் இந்த 20ம் திருத்த வாக்கெடுப்பு நாளின் மாலை  ஆறு மனிவரையும் கூட திருத்தத்திற்கு எதிரானவராக இருந்தது மாத்திரமல்ல தங்களையும் அவ்வாறே எதிர்பார்த்தார் என்றும், கடைசி மனி நேரத்தில் தங்களின் நியாயப்பாட்டை அவரிடம் கூறி அவரவர் அவரவர் விருப்பதிற்கு வாக்களிக்க அனுமதிக்குமாறு கேட்கவே அவரும் சம்மதித்ததாகவும் அந்த அடிப்படையிலேயே கையுயர்த்தியதாகவும் கூறினார்.


அசி சப்ரி ரஹீம் வெற்றி ஈட்டியது அ.இ.ம. காங்கிரஸ் ஊடாக அல்ல, மாறாக பலகட்சிகளின் கூட்டணியின் மூலமாகவே. ஆகவே அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுத்தீனின் இறுதி முடிவைவிட வாக்களித்த மக்களின் முடிவே முதன்மை பெற்றிருக்க வேண்டும். தேர்தல் காலத்தில் "மொட்டு" சின்னத்துக்கு வாக்களிப்பதின் ஆபத்துக்களை மக்களுக்கு சொல்லி வாக்கு கேட்டவர்கள், அந்த நம்பிக்கையில் வாக்களித்த மக்களை இலகுவாக ஏமாற்றிவிட்டு, அதை மறைக்க புத்தளம் தேர்தல் தொகுதியில் உள்ள சுமார் 150 அமைப்புகளின் ஆலோசனையில் கையுயர்த்தினேன் என்று புதிதாக நியாயம் கற்பிக்க முயல்வது அபத்தமானது. காரணம் இந்த 150 அமைப்புக்களில் உள்ள ஆலீம்கள், புத்தி(இல்லா)சீவிகள், இளையவர் அமைப்புக்கள், என்ற அனைவரும் நிபந்தனையற்ற கையுயர்த்தலுக்கு ஒப்புதல் அளித்தார்களா என்பது கேள்விக் குறியே. அல்லது இந்த அமைப்புக்கள் எல்லாம் கையாலாகாத அரசியல் அறிவற்றவை என்று கூற முற்படுகின்றாரா இந்த பா.உ?


ஆக மொத்ததில் இரு கட்சி தலைவர்களும் தம் அடையாள எதிர்ப்பைக் காட்டிய அதே நேரத்தில் தம் உறுப்பினர்களை இந்த 20ம் திருத்தத்திற்கு ஆதரவாக கையுயர்த்த வைத்து நாடகமாடியது மாத்திரம் தெளிவாக தெரின்றது. இப்படி பல முறை, குறிப்பாக யாப்பு சம்பந்தமாக இரு முறை தப்பு செய்த றவூப் ஹகீம், அவரை பின்பற்றி அரசியல் காய் நகர்த்தும் ரிசாத் பதியுத்தீன் ஆகிய இருவரும் நாட்டுக்கும், சிறுபான்மை சமூகத்துக்கும் செய்யும் தலையாய கடமை தம் உணர்சியூட்டும் அரசியல் கட்சிகளை கலைத்துவிட்டு அரசியல் ரீதியாக மக்களை சயமாக சிந்திக்கவிடுவதாகும். அதே போலவே இந்த சமய அமைப்புக்களின் தலைவர்களும், அவைகளின் முக்கிய உறுப்பினர்களும் அரசியலில் இருந்து ஒதுங்குவது காலத்தின் கட்டாயம். இது ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பாதுகாப்பாகவும் இருக்கும். இவை உடனடியாக நடக்காவிட்டால் ஏற்படும் பாரிய விளைவிகளுக்கு அவர்களே பொறுப்பு.













- முஹமம்து S.R. நிஸ்த்தார்

Co-editor, Sonakar.com

No comments:

Post a Comment