ஜனாஸா அரசியல் 2.0 (பாகம் 2) - sonakar.com

Post Top Ad

Friday 13 November 2020

ஜனாஸா அரசியல் 2.0 (பாகம் 2)

 யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பார்கள். கொரோனா காலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஜனாஸா அரசியல் யார் மணியடித்தால் யாரெல்லாம் வருவார்கள் என்றும் காட்சிகளை அரங்கேற்றியுள்ளது.


ஒரு வார ஓய்வுக்குப் பின் திங்கட்கிழமை மாலை திடீர் பரபரப்பு. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தியின் ஒலிப்பதிவொன்று வெளியானதிலிருந்து அது ஆரம்பித்தது. 


இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போது முழுமையாக அரசியலுக்குள் சிக்குண்டு தவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகார ஆட்சி முறைமையை பெரும்பாலான முஸ்லிம் வாக்காளர்கள் நிராகரித்து வாக்களித்திருந்தார்கள். எனினும், வாக்குகளைப் பெற்ற வியாபாரிகள் மீண்டும் சர்வாதிகாரத்திடம் சரணாகதியடைவதன் ஊடாகவே மீட்சியுள்ளதாக நிறுவ முனைந்தார்கள்.


கொரோனா தொற்றுக்குள்ளாகி இறக்கும் உடலங்கள், புதைக்கப்பட்ட பின் அதிலிருந்து வைரஸ் தொற்றுவதற்கான எந்த ஆதாரமும் உலகில் எந்த நாட்டிலும் இதுவரை பதிவாகவில்லை. ஆயினும், இலங்கையின் நிலத்தன்மை அதற்கு சாதகமாக இருப்பதாகவும், வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதாகவும் மருத்துவத்துறையின் ஒரு தரப்பு ஆணித்தரமாக நம்புவதாக தெரிவிக்கிறது. அந்தத் தரப்பு ஆளுங்கட்சிக்கும் நெருக்கமாக இருப்பதால் முஸ்லிம்கள் அளவுக்கு மீறி அடம் பிடித்தால் மக்களை வீதிக்கு இறக்கிப் போராடுவோம் என்றும் ஏப்ரல் மாதத்திலேயே எச்சரித்தது.


இருப்பினும் கூட, 20ம் திருத்தச் சட்டம் ஊடாக சர்வ அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி விரலை நீட்டி ஒரு உத்தரவைப் பிறப்பித்தால், அத்துடன் சட்டமெல்லாம் சத்தமில்லாமல் அடங்கி விடும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஏனைய சமூகங்களை விட, கடந்த முப்பது வருட காலமாக இவ்வாறான சரணாகதி அரசியலை நியாயப்படுத்திப் பழகி விட்ட முஸ்லிம் சமூகத்திடம் இந்த எதிர்பார்ப்பு மிதமிஞ்சியே இருந்து வருகிறது.


வாக்களித்தவர்களும் ஏமாற்றி விட்டதால் மக்கள் மீண்டும் குழம்பிப் போயுள்ளார்கள் என்பது ஏற்புடையது. அதே போன்று, தாம் கட்சி மாறியதற்கான நியாயமொன்றை நிறுவுவதற்கு அந்த அரசியல் வியாபாரிகளும் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மறு புறத்தில், கோட்டாபே ராஜபக்சவின் பக்கம் தாம் நின்றதற்கான நியாயத்தை நிறுவுவதற்காக மறுக்கப்பட்ட உரிமையை ஜனாதிபதி மீளத் தந்து விட்டார். அது நாங்கள் அவரோடு இருந்து சாதித்த சாதனையென சொல்லிக் கொள்வதற்கு பெரமுன ஆதரவு முஸ்லிம் அரசியல்வாதிகளும் காத்திருக்கிறார்கள்.


கடந்த வார உரையில் (https://www.sonakar.com/2020/11/20.html) சுட்டிக்காட்டப்பட்ட நிகழ்வுகளின் தொடர்ச்சியில், ஜனாஸாக்களை அடக்குவதற்கான உரிமையை மீளப்பெறுவதற்கு அவர்களும் ஏதோ ஒரு அளவில் முயற்சி செய்தார்கள். எனினும், நீதியமைச்சர் அலி சப்ரி ஒருவரே ஜனாதிபதியிடம் இதனை எடுத்துச் செல்லக் கூடியவர் என்கிற அடிப்படையிலும், பெரமுனவின் மாற்று முஸ்லிம் தலைமை எனும் இலக்குக்கு அவரே தற்சமயம் சிறந்த தெரிவாக இருப்பதாலும் அவர் மீதே அந்த எதிர்பாப்பு சுமத்தப்பட்டிருந்தது.


இந்நிலையில், அவரும் அதற்கான முயற்சிகளை எடுத்தார் என்பதிலும் சந்தேகமில்லை. ஆகக்குறைந்தது அமைச்சரவை உறுப்பினர்களின் எதிர்ப்பு அடக்கப்பட்டிருப்பதன் பலனாவது அவரைச் சார வேண்டும். என்றாலும் அரசுக்கு அதைத் தாண்டிய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன என்பதும் தெளிவாகியுள்ளது.


எனவே, கொரோனாவினால் உயிரிழப்போரின் ஜனாஸாக்களை அடக்க அனுமதி;ப்பது அரசியல் எதிர்விளைவுகளுடனேயே நிறைவேறும் என்பதும் எதிர்பார்க்கப்பட வேண்டியது. தனிச் சிங்கள அரசு என்ற கோசம் ஏலவே பிழைத்துப் போயிருப்பினும் கூட பௌத்த மேலாதிக்கத்தைக் காப்பதன் உறுதி மொழிகளுக்கமைவான ஏனைய விடயங்களிலாவது அரசு உறுதியாக இருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.


ஒருவேளை, கொரோனா சூழ்நிலைக்கு முன்பாகவே பொதுத்தேர்தல் நடந்திருந்தால், ஆரம்பம் தொட்டே அடக்குவதற்கான அனுமதியும் இருந்திருக்கும்;. பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முன் வைக்கப்பட்ட பேரினவாத கோசங்களினால் இந்த விடயத்தை நேரடியாகக் கையாள முடியாத சிரமம் அரச மேல் மட்டத்துக்கு உள்ளது.


எல்லாவற்றையும் தாண்டி, சர்வாதிகார ஜனாதிபதியுடன் உள்ள நெருக்கத்தை முஸ்லிம் சமூகம் வெகுவாக நம்பிக்கொண்டிருக்கிறது என்பதன் விளைவை இரண்டாவது தடவையாக இந்த வாரம் நாம் அவதானித்தோம்.


அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது? என்பதை முழுமையாக வெளியில் சொல்லும் சூழ்நிலையில் ஆளுங்கட்சியினர் இல்லை. சூழ்நிலையும் மாறி விட்டது. எனினும், ரிஸ்வி முப்தியிடம் நம்பிக்கையூட்டும் வகையில் தெரிவிக்கப்பட்ட விடயத்தில் நிச்சயமாக உண்மையிருப்பதாகவே நான் கருதுகிறேன். அதற்கேற்ப சமல் ராஜபக்சவும் இவ்விடயத்தை ஆமோதித்துள்ளார்.


முதலில், அல்ஹம்துலில்லாஹ்! ஜனாஸாக்களை 'தஃபன்' செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது என்று அவர் வெளியிட்ட குரல் பதிவானது உலமாக்கள் உள்ள ஒரு குழுமத்துக்கு அனுப்பப்பட்டதாகவே உடனடியாக அவரை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது விளக்கம் கிடைத்தது. ஏனெனில், கஃபன் என்ற சொற்பிரயோகத்தை அறிந்த அளவுக்கு நாம் தஃபன் என்ற வார்த்தைக்குப் பழக்கப்பட்டவர்களன்று. ஆதலால், கிடைத்திருக்கும் அனுமதி அல்லது இணக்கம் என்ன? என்பதை விளக்கமாக அறிய ரிஸ்வி முப்தியை உடனடியாகத் தொடர்பு கொண்டிருந்தேன். அவரும், தஃபன் என்ற சொல்லானது அடக்குவதைக் குறிக்கும் என விளக்கமளித்திருந்ததோடு தான் அந்த ஒலிப்பதிவினை உலமாக்களுக்கான குழுமத்திற்கு அனுப்பியிருந்ததாகவும் தெரிவித்தார்.


இந்நிலையில், யாரோ ஒருவர், சந்தேகத்தின் பலனை சாதகமாக்கிப் பேசுவதாக இருந்தால், சந்தோச மிகுதியால் அவ்வொலிப் பதிவை வெளியில் பகிர்ந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். ரிஸ்வி முப்தி மீதான நம்பிக்கையும் இணைந்து தகவல் முழுமையாக நம்பப்பட்டது. அதே நேரம், அடக்கம் செய்வதற்குப் பொருத்தமான இடமொன்றைத் தேடும் நடவடிக்கையும் அவசியம் என விளக்கமளிக்கப்பட்டதால், அரசின் இந்த இணக்கமானது நிபந்தனைக்குட்பட்டது என்ற தெளிவு இருந்தது.


ஆயினும், நல்ல செய்திக்காகக் காத்திருந்த சமூகத்தாருக்கு அடக்கம் செய்வதற்கான அனுமதி என்ற தகவல் மாத்திரமே தேவைப்பட்டிருந்தது. அதனைத் தீர ஆராயும் அளவுக்கு உணர்வுகளும் இடங்கொடு;க்கவில்லை. அதில் தவறுமில்லை. இருப்பினும், மறு நாளே இவ்விடயம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக வெடித்து, ஆளுந்தரப்பு மாற்று விளக்கங்களை முன்வைக்கும் நிர்ப்பந்தம் உருவாகியது.


பல நாட்கள் தேசியப்பட்டியல் பிரச்சினையால் துவண்டு போயிருந்த ஞானசாரவும் கடிதம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு செய்தியாளர்களை சந்திக்க வந்திருந்தார். சிலோன் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பினரால் சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட கடிதமே அது. அந்தக் கடிதத்தில் ஜனாஸாக்களை அடக்க அனுமதித்த ஜனாதிபதிக்குத் தாம் நன்றி தெரிவிப்பதாக அவ்வமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஒரு மாத காலத்துக்கு முன்பாக குறித்த அமைப்பின் செயலாளராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் நபர் ஒரு சிங்கள மொழியிலான நேர்காணலில் பங்கு கொண்டிருந்த போது, தமது அமைப்பில் 300க்குக் குறைவான பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாகவும் சுமார் ஆயிரம் பதிவு செய்யாத, தம்மைப் பின் தொடர்பவர்கள் இருப்பதாகவும் தனது கணிப்பீட்டை வெளியிட்டிருந்தார். இப்போது, அந்தளவு சிறிய தொகை உறுப்பினர்களுக்கு இந்த அமைப்பு சொல்லித் தான் இவ்வாறான தகவல் சென்றடைய வேண்டுமா? என்றொரு கேள்வியிருக்கிறது.


சோனகர்.கொம் உட்பட பல்வேறு இணையத்தளங்கள் இருக்கின்றன. முஸ்லிம்களால் இயக்கப்படும் பல்லாயிரம் வட்சப் குழுமங்கள் இருக்கின்றன. சமூக வலைத்தள பகிர்வுகள் மிக வேகமாக இடம்பெற்றிருந்தன. இவற்றையெல்லாம் மீறி இந்த அமைப்பு விளக்கம் வெளியிடுமளவுக்கு இருக்கும் முக்கியத்துவம் என்ன? என்பது விடை தேடப்பட வேண்டியதாகிறது. அதுவும், ரிஸ்வி முப்தியின் ஒலிப்பதிவு வெளியாகியிருக்காவிட்டால் யாருக்குமே இவ்விடயம் தெரிந்திருக்கப் போவதில்லை.


இந்நிலையில், அதனை அவர்கள் தனித்துக் கையாள வேண்டிய ஒரு தேவையில்லையென்பதே பொதுவான சிந்தனை. முதல் நாள் இவ்வாறு விளக்கவுரை வெளியிட்ட அமைப்பு, மறு தினம், தாமும் ரிஸ்வி முப்தியின் ஒலிப்பதிவினைக் கேட்டே தகவல் அறிந்ததாகவும் பின்னர் நீதியமைச்சர் அலி சப்ரியிடம் அதனை உறுதி செய்து கொண்டதாகவும் விளக்கமளித்திருந்தது. 


ஆக, ஏலவே சமூகம் அறிந்து கொண்ட விடயத்துக்கு கடிதமொன்று அவசியமுமில்லை, முந்திக் கொண்டு ஜனாதிபதிக்கு நன்றி சொல்ல வேண்டிய தேவையுமில்லை. அதுவும் அதனை சிங்கள மொழியில் வெளியிடும் அளவுக்கு இந்த அமைப்புக்கும் - அந்த சூழ்நிலை முடிவுக்கும் கூட தொடர்பிருக்கவில்லை. இருந்தாலும் அவ்வாறு ஒரு கடிதம் வெளியிடப்பட்டது.


ஏலவே, பல்வேறு சர்ச்சைகளில் தொடர்புபட்டு அனைத்து தரப்பு சமூகங்களாலும் கவனிக்கப்படுபவர்கள் என்ற அடிப்படையில், எதிர்பார்த்ததை விட வேகமாக இந்தக் கடிதத்தின் விளைவுகள் அரங்கேறியது. அத தெரண போன்ற ஊடகங்கள் கடிதத்தைக் காட்சிப் படுத்தி இவ்விடயத்தை சர்ச்சையாக்க, ஞானசாரவும் வெளியில் வந்து இவர்களிடம் ஆலோசனை பெற்றா அரசாங்கம் இயங்குகிறது? என்று புதுத் தலையிடியை உருவாக்கியுள்ளார்.


எனவே, ஜனாஸா அடக்கம் என்கிற விவகாரத்தைப் பின் தள்ளி அரசின் மீதான ஏனைய அழுத்தங்கள் முக்கியம் பெற ஆரம்பித்துள்ளன. இத்தனைக்கும் இது கூட அரசியலின் ஏற்பாடாக இருக்கலாம். அலி சப்ரியைத் திருப்திப்படுத்த ஒரு நடவடிக்கையும், அதனைக் குழப்புவதற்கான தர்க்க ரீதியான காரணங்களும் கூட அதே அரசியலில் திட்டமிடப்பட்டிருக்கலாம். அதனை மறுக்கும் அளவுக்கு நாட்டின் அரசியல் தூய்மையானதில்லையென்பதால் அந்த சந்தேகமும் தொக்கு நிற்கிறது.


எவ்வாறாயினும், சமூகம் என்ற அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் கூட்டுப் பொறுப்பு மீண்டும் தவற விடப்பட்டிருக்கிறது என்பதே கவலை. ஒருவர் எந்த ஜமாத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால், முஸ்லிம் சமூகம் என்ற அடிப்படையில் சமூக நன்மை – தீமை குறித்த பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடமையிருக்கிறது.


ஆயினும், தற்கால முஸ்லிம் சமூகத்தில் அதனை எதிர்பார்ப்பதே தவறு என்ற நிலைதான் இருக்கிறது. அரசியல் ரீதியாக ஏமாற்றப்பட்டு உணர்வுகளால் ஒன்று பட்டிருந்தாலும் இயக்கப் பிளவுகளினால் தொடர்ந்தும் பிளவுபட்டு நிற்கிறது சமூகம். எனவே, யார் முந்திக் கொள்வது என்ற போட்டியும் துரதிஷ்டவசமாக வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.


மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று அலி சப்ரி விரும்பியிருந்தால், ரிஸ்வி முப்திக்கு அறிவித்தது போல் அவரே ஏனைய இயக்கங்களுக்கும் அறிவித்திருக்கலாம். ஆனாலும், அவர் தனது தெரிவில் தெளிவாக இருந்துள்ளார். அத்துடன் இதை ஒரு அரசியல் சர்ச்சையாக்காமல் விடுவது ஆர்ப்பாட்டம் செய்வதை விடப் பலமானது என்பதை உணர மறுத்த குறித்த அமைப்பினர் தமது சுயநலத்தை முற்படுத்தியும் விட்டனர்.


இனி இதற்குத் தீர்வுதான் என்னவென்று மக்கள் அங்கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். கடந்த வார உரையிலேயே குறிப்பிட்டது போன்று அலி சப்ரியெனும் மாற்றுத் தலைமையை நிறுவ அரசுக்கும் இது சிறந்த ஆயுதமாக இருப்பதனால் ஜனாஸாக்களை அடக்குவதற்கான அனுமதியென்ற விடயம் இன்னும் உயிரோடிருக்கிறது என உறுதியாகக் கூறலாம். அது அலி சப்ரியினால் நடந்தேறியதாக இருக்க வேண்டும் என்பதில் அரசும் குறியாக உள்ளது.


இதற்கிடையில், ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற கோசமும் மேலெழுந்துள்ளது. ஆயினும், பௌத்தர்கள் கூட அடக்குவதற்கு அனுமதி கேட்டால் அதனையும் அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர நாசுக்காக தெரிவித்து விட்டார். எனவே, ஒரு பொதுச் சட்டமாக, விரும்பியவர்கள் அடக்கிக் கொள்வதற்கான நிலை மாற்றத்தையே அரசு அறிவிக்க வேண்டும்.


கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தில், உலக சுகாதார அமைப்பும் இதனையே வலியுறுத்தியிருந்தது. அதற்கேற்ப பெரும்பாலான உலக நாடுகள் இறப்போரின் சமயம் சார்ந்த இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள அனுமதியளித்திருந்தன. இவ்வாரம் செவ்வாயிரவு இங்கிலாந்திலும் ஹம்பாந்தோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட 42 வயது குடும்பஸ்தர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் வபாத்தானார். மறு நாள் புதன் கிழமை அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது. காரணம், மார்ச் மாதமே இங்கிலாந்தின் கொரோனா அவசர கால சட்டம் இயற்றப்பட்டிருந்ததோடு அதில் மிகத் தெளிவாக, சமய – நம்பிக்கை சார்ந்த உரிமைகளை மதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு விட்டது.


ஆதலால், ஏழு மாதங்கள் கடந்து ஒவ்வொரு சமயத்தைப் பின்பற்றும் மக்களுக்காககவும் தனித்தனி சுற்றுநிருபங்கள் வெளியிட வேண்டிய அவசியமில்லை. இலங்கையில் அரசியல் தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட எரிப்பு முடிவுக்கு துரதிஷ்டவமாக நேரடி வெளியேற்றப் பாதையில்லை. எந்த முள் குத்துமோ என்ற அச்சத்துடன் பல கோணங்களில் மக்கள் உணர்வுகளைப் பந்தாட விட்டே ஒரு முடிவு வரப்போகிறது.


இதன் முழுப்பொறுப்பும் ஜனாஸா அரசியல் என்ற அத்தியாயத்தைத் திட்டமிட்டவர்களையே சாரும். அதன் தொடக்கத்தில் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பங்கிருக்கிறது. ஆதலால் தான், இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளில் யாருக்காவது கொரோனா வராதா? அதனால் அவர்களோ அவர்களின் நெருக்கமானவர்களோ இறக்கக் கடவதாக என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் மக்கள் சாபமிடுகிறார்கள்.


இதுவெல்லாம் நெஞ்சை உலுக்கும் அளவுக்கு எமது அரசியல்வாதிகள் வெட்க மானம் உள்ளவர்கள் இல்லையென்பதால் பிரார்த்தனைகளைக் கைவிடாது தொடர்ந்தும் நம்பிக்கையோடு இறைவனிடம் கையேந்துவது ஒன்றே சிறந்த வழி!Irfan Iqbal

Chief editor, Sonakar.com

No comments:

Post a Comment