ஜனாஸா அரசியல் 2.0 - sonakar.com

Post Top Ad

Friday 6 November 2020

ஜனாஸா அரசியல் 2.0

 




ஒரு திடீர் பரபரப்பினால் உயரப் பறந்த ஆளுங்கட்சி முஸ்லிம் அரசியல்வாதிகளின் உணர்வுகள் ஏறிய வேகத்தில் புதன்கிழமை (04) இறங்கி விட்டது. 20ம் திருத்தச் சட்டத்துக்கான ஆதரவை எப்படியாவது ஜனாஸாக்களோடு சேர்த்து அடக்கிக் கொள்ளலாம் என்ற 'தாவியவர்களின்' நம்பிக்கையும் தகர்ந்து போனது.


எது எப்படியாயினும், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வியூகம் வெற்றி கண்டுள்ளது என்பதை முதலிலேயே சொல்லியாக வேண்டும். தேசிய அரசியலில் பங்கெடுக்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாகத் தம்மை வியாபாரப் பண்டங்களாக்கிக் கொண்டதன் ஊடாக இன்று தம்மைத் தாமே கேலிக்கூத்தாக்கிக் கொண்டுள்ளார்கள். அல்-குர்ஆனை மனதில் சுமக்கும் ஒருவர் தம் சமூகத்தவராலேயே இழிவு படுத்துவதை சஹாபாக்கள் நேரில் கண்டால் எத்தனை வேதனைப்படுவார்கள் என்று கூட எண்ணிப் பார்க்கத் தூண்டியது.


இலங்கை 'தேசிய' அரசியலின் போக்கை தாம் விரும்பும் வழியில் நிர்ணயிப்பதற்கே இரு பெரும் தேசியக் கட்சிகளும் தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி அதன் வழியிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் வழியில் வந்து இப்போது பிரிந்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதன் வழியிலும் தேசிய அரசியலை நிர்ணயிக்க முயல்கிறது. சமகி ஜன பல வேகய ஐக்கிய தேசியக் கட்சியின் வழியிலேயே செல்கிறது என்பதை தனித்து விளக்க வேண்டிய அவசியமும் இல்லை.


எனவே, ஆளுங்கட்சி – எதிர்க்கட்சியென்ற தளத்தில் தமக்குப் பலம் தரக்கூடிய இடங்களில் அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் எதிர்பார்க்கப்பட வேண்டியது. இந்த வாரம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் உணர்வலைகள் வெகுவாகத் தூண்டப்பட்டுக் கொண்டிருப்பதன் பின்னணி, மீண்டும் ஜனாஸா எரிப்பு – அதன் அதிகரிப்பு விவகாரமாக இருக்கிறது.


கடந்த சனிக்கிழமை இரவு முதல் புதன் கிழமை காலை வரை, ஆளுங்கட்சி சார்பு அரசியல் சக்தியொன்றின் ஆதரவாளர்களால் கடந்த ஏழு மாதங்களாக எப்போது முடிவுக்கு வரும்? என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்திருந்த ஒரு விடயம் தொடர்பில் உணர்வலை கிளப்பிவிடப்பட்டிருந்தது. அதாவது, இலங்கையில் கொரோனா பாதிப்பினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடலங்களைத் தகனம் செய்வது நிறுத்தப்பட்டு, அடக்கம் செய்வதற்கான அனுமதிக்கு ஏற்பாடாகி விட்டது என்பதே அது.


கலிமாச் சொன்ன ஒவ்வொரு முஸ்லிமும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதையிட்டு கவலை கொண்டுள்ளார்கள் என்பதில் ஐயமில்லை. ஏதாவது ஒரு வகையில் முடிவைக் காண வேண்டும் என்ற அவா ஒரு புறமிருக்க, இன்னொரு புறத்தில் ஆட்சியதிகாரம் குவிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்தே தீர்வு வந்தாக வேண்டும் என்ற இயல்பான எதிர்பார்ப்பும் தொடர்கிறது. ஆதலால், ஆட்சியாளர்களோடு நெருக்கமாக உள்ளவர்களுக்கும் சமூகத்தில் வழமையான மவுசு இருக்கிறது.


அந்த வகையில் நீதியமைச்சர் அலி சப்ரி மீதான கடுமையான எதிர்பார்ப்புகள் சமூக மட்டத்தில் இருப்பதை மறுக்க முடியாது. அவரை நன்கறிந்த வகையில், திடமான எதிர்ப்பு சக்தியிருந்தாலும் கூட, தன்னைச் சுற்றியுள்ள முஸ்லிம் அரசியல் சக்திகளால் அவர் திண்டாடிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. ஞாயிறு தினம் அலி சப்ரி அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து ஜனாஸா எரிப்பு விவகாரத்துக்கு முடிவைக் கொண்டு வந்து விட்டார் என்று தகவல் பரவிய போது, எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. வழமையாக, நான் ஏதாவது கேள்வியை குறுந்தகவல் ஊடாக அனுப்பினால் கூடிப் போனால் அரை மணி நேரத்துக்குள் பதில் தரக்கூடிய அவர், இது தொடர்பில் நான் வினவிய போது தெளிவான ஒரு பதிலைத் தர முடியாமல் தவித்ததைக் கண்டேன்.


ஆனாலும், கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரத்; தானே வேண்டும் என காத்திருக்கத் தீர்மானித்தேன். இரண்டு நாட்களில், கடந்த செவ்வாய்க்கிழமை (03) நாடாளுமன்ற அமர்வில் அதுவும் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனாலும், சற்றும் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாய்ப்பைப் பயன்படுத்தி, ஜனாஸா விவகாரத்தைக் கையிலெடுத்து, வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதனை நிச்சயமாக ஆளுந்தரப்பு, குறிப்பாக நீதியமைச்சர் எதிர்பார்த்திருக்கவில்லையென்பது அவரது பதிலிலிருந்து புரிந்தது.


முஸ்லிம் சமூகத்திடம் இருக்கும் பெரும் பலவீனம், தமக்கே பெருமை வந்து சேர வேண்டும் என்பதற்காக முந்திக் கொண்டு தகவல்களைக் கசிய விடுவதாகும். நல்லது நடக்கும் வரைக்கும் பொறுங்கள் என்று யார் கேட்டுக் கொண்டாலும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, 'அல்ஹம்துலில்லாஹ் இனி ஜனாஸாக்களை அடக்கலாம்' என்ற செய்தி முதல், இதோ ஒரு ஜனாஸா அடக்கப்பட்டு விட்டது, அணுக் கழிவுகளை புதைப்பது போன்ற பாதுகாப்பான பெட்டி செய்து கொடுக்கப்பட்டு விட்டதென்றெல்லாம் பேசலானார்கள். ஆயினும், சஜித் பிரேமதாச கடந்த செவ்வாய் நாடாளுமன்ற அமர்வில் தனதுரையின் போது சந்தர்ப்பங்களைச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டிய ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் பணியைக் கச்சிதமாக செய்தார்.


அதன் போது, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல் அனைத்தையும் அச்சுப்பிசகாமல் பின்பற்றுவதாகக் கூறும் சுகாதார அமைச்சரும் அரசாங்கமும், உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா பாதிப்பினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதித்துள்ள போதிலும் இலங்கையில் மாத்திரம் அது இனவாதத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு, நாட்டில் கொரோனாவைப் பரப்புவது முஸ்லிம்கள் தான் என்ற மாயையையும் உருவாக்கி, உடலங்களை எரித்து உணர்வுகளுடன் விளையாடினார்கள் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.


ஏப்ரல் முதல் இப் பேச்சு வரையான காலத்தில், ட்விட்டரில் அதுவும் அசாத் சாலியின் வேண்டுகோளுக்காக ஒரு குறுஞ்செய்தியை மாத்திரமே இதற்கெதிராகப் பதிவிட்டிருந்த சஜித்தின் அன்றைய 'பேச்சு' சுகாதார அமைச்சரை உசுப்பேற்றியது மாத்திரமன்றி, அரசின் ஒரேயொரு முஸ்லிம் அமைச்சரான அலி சப்ரியை பெரும் சங்கடத்துக்குள்ளாக்கியது. அரசாங்கம் இனவாத அடிப்படையில் இவ்வாறு நடந்து கொண்டது அலி சப்ரியின் மனச்சாட்சிக்குத் தெரியும் என சஜித் பிரேமதாச தெரிவித்திருந்ததன் பின்னணியில் பதிலுரைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட அலிசப்ரி, தான் அங்கம் வகிக்கும் அரசைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லையெனக் கூறினார்.


இந்த சந்தர்ப்பத்தில் விமல் வீரவன்சவின் சகாவான முசம்மிலும் இதே கருத்தைக் கூறியதன் ஊடாக இவ்விருவரும் ஒரே தட்டில் கலந்து கொண்டார்கள். சற்றே விளக்கமளித்த அலி சப்ரி, அரசின் மருத்துவ நிபுணர்கள் 'அறியாத' சூழ்நிலையில் தெரியாத அச்சத்தின் அடிப்படையிலேயே புதைக்க அனுமதி மறுத்து, எரிக்கத் தீர்மானித்ததாகவும் அது இனவாத முடிவில்லையெனவும்; விளக்கியிருந்தார். அத்துடன், அக்காலப் பகுதியிலேயே பக்கசார்பற்ற நிபுணர்கள் குழுவொன்றை நியமித்து, இவ்விடயத்துக்குத் தீர்வைத் தரும்படி முன் வைக்கப்பட்ட வேண்டுகோளை ஆறு மாதங்களின் பின்னர் பரிசீலிப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.


இதன்போது இடையறுத்த முஜிபுர் ரஹ்மான், அப்படியொரு குழு இதுவரைக்கும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் இறந்தாலும் அலிசப்ரி இறந்தாலும் எரியூட்டப்படுவோம் என்றும் விரைவில் முடிவொன்றை எடுங்கள் என்றும் உணர்வுபூர்வமாகப் பேச, அதற்கு பதிலளிக்க விளைந்த சுகாதார அமைச்சர் பவித்ரா, அந்தக் குழு ஒரு வாரத்திற்குள் கூடி ஜனாஸா எரிப்பு விடயத்தை மீளாய்வு செய்யவுள்ளதாகவும் நியமிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.


ஆக, இந்தக் குழு கூடி மீளாய்வு செய்யப் போகிறது என்பதே தவறான முறையில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது எனக் கொள்ளலாம். இச்சூழ்நிலையில், அப்படித்தான் ஒரு குழு மீண்டும் கூடி ஜனாஸா எரிப்பைக் கைவிடக்கூடிய சாத்தியமுண்டா? என்ற கேள்வியெழுகிறது. இதனை சற்று விரிவாகப் பார்ப்போம்.


கடந்த ஏப்ரல் மாதத்தில் பரவிய கொரோனா வைரசை விட தற்சமய் பரவும் வைரஸ் வீரியமானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஐரோப்பாவிலும் இதே கருத்தே நிலவுகிறது. இலங்கையின் புவியியல் அடிப்படையில் அக்கால கட்டத்தில் இருந்த வைரசே மிகவும் ஆபத்தானதாகவும் இறந்த உடலங்களில் தொடர்ந்தும் இருக்கும் என்றும், ஆதலால் இறந்த உடலங்களை உயிரியல் ஆயுதமாக (biological weapon) பயன்படுத்தலாம் என்றும், பத்தடி ஆழத்தில் புதைத்தாலும் நீர் ஊடாக வைரஸ் பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப பேராசிரியர் மெதிகா வழங்கிய அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, ஜனாஸா எரிப்புக்கு எதிரான வழக்குகளையும் அரசு வாதாடி வருகிறது.


நிலைமை இவ்வாறிருக்க, முன்னையதை விட வீரியமான வைரஸ் பரவி வரும் இக்காலத்தில் முன் சொன்ன எந்தப் பாதிப்பும் இல்லையென அதே மருத்துவ நிபுணர்கள் ஏற்றுக்கொள்ளப் போகிறார்களா? என்பது சுவாரஸ்யமான விடயம். சரி, அப்படி ஏற்றுக்கொண்டால் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு என்னாவது? என்பதும் இன்னொரு கேள்வி. அந்த வழக்குகளுக்கு பாரிய தொகை செலவு செய்தவர்களும் இருப்பதை நினைவூட்டிக் கொள்ள விரும்புகிறேன். நாளையே அரசு தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால், அதாவது சம்பிரதாயப்படி அந்த நிபுணர் குழு இனி ஆபத்தில்லையென ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்தால் நிச்சயமாக அதன் பின்னணியில் அரசியல் தலையீடே இருக்கும் என்பதை சிறுபிள்ளையும் புரிந்து கொள்ளும். அதனடிப்படையில், முன்னைய முடிவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியது போன்று அரசியல் பழிவாங்கல் என்று நிரூபணமாகும். 


20ம் திருத்தச் சட்டத்துக்குத் தாம் ஆதரவளித்ததே இந்த உரிமையைப் 'பேரம்' பேசிப் பெற்றுக்கொள்ளத்தான் என்று வெற்றிப் பிரச்சாரம் செய்வதற்குக் காத்திருந்த அந்த ஏழு பேருக்கும், இரு கட்சித் தலைவர்களுக்கும் கூட இவ்வாரம் நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாஸா எரியூட்டல் சம்பந்தமான விவாதம் தலையிடியாக அமைந்துள்ளது. அவர்கள் எதிர்பார்த்தது போன்று வெற்றிப் பிரச்சாரம் செய்ய முடியாது. ஏனெனில், இனி வரும் முடிவுகளுக்கு சஜித் பிரேமதாசவுக்கும் எதிர்க்கட்சிக்கும் பங்கிருப்பது பதிவாகிவிட்டது.


இந்நிலையில், அரசுக்கு இரு தேர்வுகள் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். ஒன்று, சமூகங்களின் நிலைப்பாடு எவ்வாறாக இருந்தாலும் அலிசப்ரியின் முயற்சியில் இப்பிரச்சினைக்கு முடிவு கிடைத்துள்ளது என்று உருவகப்படுத்துவது. அல்லது, நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கினூடாக அந்த வெற்றியை வழக்காடியவர்களுக்கு வழங்குவது. இவ்விரண்டில் எது நடந்தாலும் பெரமுனவின் அரசியல் திட்டம் நிச்சயம் நிறைவேறும்.


கடந்த ஞாயிறு – திங்கள் தினங்களில் ஜனாஸா எரிப்புக்கு முடிவு வரப்போகிறது என்ற தகவல் பரவலை சஜித் பிரேமதாச மாத்திரம் அவதானிக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீமும் அவதானித்திருந்தார். எனவே, இவ்விடயத்தை முதலில் பேசியது நான் தான் என அவரும் செவ்வாயன்று உரிமை கோரிக் கொண்டார். அத்துடன் இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏதாவது நடந்தாலும் என்ற அச்சத்தில் தாமும் அரசை வலியுறுத்துவதாக அறிக்கை விட, புதிதாக வந்தவன் முழுமையாக அள்ளிச் செல்ல விட முடியாது என்று நினைத்த மஹிந்த ராஜபக்சவின் பழைய சகாக்களும் தாமும் பிரதமருடன் பேசியுள்ளதாக அறிக்கைகளை வெளியிட்டார்கள். ஆக மொத்தத்தில், எல்லா அரசியல்வாதிகளும் இலாபம் பார்க்க முயற்சித்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.


ஆயினும், அரசாங்கம் இந்த வெற்றியை நீதியமைச்சர் அலி சப்ரிக்கு வழங்குவதிலேயே நாட்டம் கொண்டுள்ளது. அதற்கான நியாயமான காரணமும் உள்ளது. கடந்த வார உரையில் 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்திருந்ததன் ஊடாக முஸ்லிம் தனித்துவ அரசியலின் பாத்திரக் கொலைக்கு (character assasination)  எம் அரசியல்வாதிகள் துணை போனார்கள் எனக் கூறியிருந்தேன். பெரமுன திட்டமிட்டுள்ள பாத்திரக் கொலையின் முக்கிய அம்சமானது மாற்றுத் தலைமையை உருவாக்குவதாகும். இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியான மாற்றுத் தலைமை அவசியம் என்பதை வலியுறுத்தி வரும் அக்கட்சி அலி சப்ரிக்கு வலிந்து நீதியமைச்சர் பதவியைக் கொடுத்ததையும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவை 20ம் திருத்தச் சட்டததுக்குப் பெற்றுக்கொண்டதையும் ஏதோ 'எதேச்சையாக' நடந்த நிகழ்வுகள் என எண்ணிக்கொண்டிருப்பவர்கள் இலங்கை அரசியலை இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


ரவுப் ஹக்கீமும் ரிசாத் பதியுதீனும் இனத்தின் பெயரால் செய்து வரும் அரசியலினை, பொதுத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்குள்ளேயே துகிலுரித்துள்ள பெரமுன அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அலி சப்ரியை முஸ்லிம் சமூகத்தின் மாற்றுத் தலைவராக நிறுவியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலும் உள்ளது. தனக்குப் பழக்கமில்லாத விடயமாயினும் கூட முஸ்லிம் அரசியல்வாதிகளின் மட்டமான பண்புகளை அவரும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளதாகவே நான் கருதுகிறேன். அதற்கான சமிக்ஞைகளும் - செயற்பாடுகளும் கண்கூடாகத் தெரிகிறது.


கடந்த ஞாயிறு தொடங்கிய நாடகம் சற்றும் எதிர்பார்க்காத விதமாக புதனன்று இரண்டு ஜனாஸாக்களை எரித்ததன் ஊடாக முடிவுக்கு வந்தது. ஆனால், அரசியல் நம் சமூகத்துக்குள் பரந்த தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால் இன்னும் பல்லாயிரம் வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உருவாகும் என்பது திண்ணம். அடிப்படையில், மக்கள் இன்னும் தம் சிந்தனை வட்டத்தை விட்டு வெளிவரவில்லை. எனவே, ஜனாஸா எரிப்பு என்ற விவகாரத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன் தாம் எதிர்த்து வாக்களித்த சர்வாதிகார அரசியலே முடிவு தரப்போகிறது என்பதை வெற்றியாகவே கருதுவார்கள்.


இது போன்றே ஒவ்வொரு விடயத்திலும் தாம் சூழ்நிலைக் கைதிகளாக்கப்படும் போது எப்படி எதிர் வினையாற்றுவது என்ற கேள்வி இன்னும் சமூக மட்டத்தில் கேட்கப்படவில்லை. ஆதலால், தொண்டர்களை வாக்களிக்கச் சொன்ன தலைவர் தான் சூழ்நிலைக் கைதியாகி விட்டதாக சொல்லும் போது அதையும் நம்ப விளைகிறார்கள். 


கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த ஜனாஸா அரசியலுக்கு (இவ்வுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளை வரை) 12 உடலங்களை சாம்பலாக்கியிருக்கிறோம் என்ற ஒரு உண்மையிருக்கிறது. அந்த பத்து உடலங்களில் சில மிகவும் வருவாய் குறைந்த குடும்பங்களோடு தொடர்பு பட்டது. அவர்கள் யாரிடமும் சொல்ல முடியாது, எந்த உதவியுமில்லாது தம் குடும்ப உறுப்பினரை இழந்து, இதுவரை அறிந்திராத வகையில் சாம்பலைக் கொண்டு சென்று 'புதைத்து' விட்டு வாழவும் பழகிக் கொண்டுள்ளார்கள்.


இந்நிலையில், இவ்விவகாரத்தின் தீர்வென்பது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுக் கொந்தளிப்பின் மீதான மரியாதைக்காக அன்றி, மாற்றுத் தலைமையை நிறுவும் அரசின் திட்டத்துக்கேற்ப அதற்குரிய வேகத்தில், அதற்குரிய கோணத்திலேயே வந்து சேரும் என்பதே எனது கணிப்பு. விரைவாக இது நிறைவேற வேண்டும் என்பதுதான் என் மனமார்ந்த பிரார்த்தனையும். ஆனாலும், அரசியல் மாற்றி யோசிக்க வைக்கிறது.


மக்களும் யோசிக்க வேண்டும்!


 










Irfan Iqbal

Chief editor, Sonakar.com


No comments:

Post a Comment