முடிச்சுகளும் முஸ்தீபுகளும் ! - sonakar.com

Post Top Ad

Friday, 9 October 2020

முடிச்சுகளும் முஸ்தீபுகளும் !

 அது என்னமோ என்ன மாயமோ தெரியல டொனால்ட் ட்ரம்புக்கு மட்டும் கொரோனாவாலயும் பிரச்சினையில்லை என்ற ஆதங்கம் உலகில் பல மில்லியன் மக்களுக்கு இருக்கிறது. வெளியில் சொல்லியும் பயனில்லையென்று பெருமூச்சு விடுபவர்களே அதிகம்.


கொரோனா ஒரு பெரிய விடயமேயில்லையென்று சொல்லி வந்த ட்ரம்புக்கு கொரோனா வந்து விட்டது என்றார்கள், வைத்தியசாலையிலும் வைத்தார்கள். ஆனாலும், அடங்காத ட்ரம்ப் வெளியில் வந்து வழமைக்குத் திரும்பி விட்டார். இப்போது, எதிர்த்து நில்லுங்கள் கொரோனா பின் வாங்கி விடும் என்று தம் விசுவாசிகளுக்கு அறிவுரை வேறு கூறுகிறார்.


இருந்தாலும் ட்ரம்பின் பிதற்றல்களை நம்பாதீர்கள் என்று அவர் கூறிய கருத்துக்களை பேஸ்புக் நீக்கியுள்ளது, ட்விட்டர் மறைத்துள்ளது. அதேவேளை உலகில் பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்றிருக்கக் கூடும் என்ற எதிர்வுகூறல்களும் தெரிவிக்கப்படுகிறது.


ஐக்கிய இராச்சியத்தில் நிலைமை மிக மோசமாக மாறி வருகிறது. நாளாந்தம் 10,000க்கு மேற்பட்டோர் புதிதாகத் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக புள்ளிவிபரம் வெளியிடப்பட்டு வருகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசிலின் நிலைமைகள் படு மோசமாக இருக்க, பல ஐரோப்பிய நாடுகளும் அடுத்த சுற்றுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.


வெறும் 13 பேர் தான் உயிரிழந்திருக்கிறார்கள், உலகிலேயே மிகத் திறமையாக கொரோனாவைக் கட்டுப்படுத்திய நாடு என பெருமை பேசி மிகச் சில நாட்களுக்குள்ளேயே இலங்கையில் எதிர்பாராத கொரோனா தொற்று அதிகரிப்பு. 


யார் காரணம்? என்ற கேள்விக்கு விடை காண அதிகாரிகள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், வழமை போன்று ஊடகங்கள் கச்சிதமாக ஊதிப் பெருப்பித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது சந்தேகம் வராமலில்லை.


எதிர்க்கட்சியான சமகி ஜனபலவேகய அதை வெளிப்படையாகச் சொல்லி விட்டது. அக்கட்சி சார்பாக கருத்து வெளியிட்ட கபீர் ஹாஷிம், தற்போது பேசப்படும் மினுவங்கொட கொரோனா தொற்று வேறு அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட கட்டுக்கதையா? என மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதாக இவ்வாரம் தெரிவித்திருந்தார்.


ஒரு வகையில், பாதி சந்தேகம் நிலவுகின்ற அதேவேளை மீண்டும் ஒரு லொக்டவுன் வந்து விடுமோ என்ற அச்சம் நாட்டின் அனைத்து பக்கங்களிலும் காணப்படுகிறது. இந்த சந்தடியில்; மாடறுப்பு சர்ச்சையை மக்கள் மறந்து விட்டார்கள்.


ஆயினும், மாடாக இருந்தாலும், மானாக இருந்தாலும், கொரோனாவாக இருந்தாலும் அதனை முஸ்லிம்களோடு முடிச்சுப் போடுவதால் பேரினவாத அரசியலுக்கு நன்மையுண்டு என்ற அடிப்படையில் முதல் இரு தினங்கள் பெயர் குறிப்பிடாமல், மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை என்றே குறிப்பிட்டு வந்த ஊடகங்கள் அந்த எல்லையைக் கடந்து அடிக்கடி பிரன்டிக்ஸ் என்ற பெயரைப் பிணைத்து இலங்கையில் உருவாகியிருக்கும் அடுத்த கொரோனா சுற்றை பிரன்டிக்ஸ் சுற்றாக தற்போது மாற்றியுள்ளார்கள்.


பல சந்தேகங்கள் எழாமலில்லை. அடிப்படையில் செப்டம்பர் 30ம் திகதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கே ஒக்டோபர் 3ம் திகதி இரவு கொரோனா தொற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, அவரரு பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதம் என இங்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.


அதன் பின், 4ம் திகதி காலை முதல் மாலை வரை கொரோனா பரபரப்பிலும் அடுத்த சுற்று லொக்டவுன், ஊடரங்கு மற்றும் பொருட்கொள்வனவு முண்டியடிப்பிலும் நாடு மூழ்கியிருக்க, அதற்கடுத்த நாட்களில் மினுவங்கொட தொழிற்சாலை ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டு விட்டார்கள். 


முதற் பரிசோதனைக்கு எடுத்ததை விட மிகக்குறைந்த காலத்தில் அடுத்தடுத்த பரிசோதனை முடிவுகள் வெளிவந்ததால் இது சாத்தியமானது. ஆக, முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரிசோதனை முடிவு வர ஏன் தாமதமானது? என்ற கேள்வியும் இருக்கத்தான் செய்கிறது.


இருப்பினும் கூட, இதனை நன்கு ஆராய்ந்த சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி மருத்துவர் சுதத் சமரவீர, இச்சுற்று இம்முறை முதன் முதலாகக் கண்டறியப்பட்ட திவுலபிட்டிய பெண்ணிலிருந்து ஆரம்பித்திருக்க வாய்ப்பில்லையென்று அடித்துக் கூறுகிறார். 


ஆகக்குறைந்தது செப்டம்பர் 20 அளவிலேயே தொழிற்சாலையில் யாருக்கோ கொரோனா இருந்திருக்கலாம் அல்லது அவர் வேறு எங்கிருந்தோ காவி வந்திருக்கலாம் என்பது ஊகம். எப்படியாயினும், முன்னைய கொரோனா காலத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் குறிப்பிட்டது போன்று, சமூக மட்டத்திலான பரிசோதனைகள் அதிகரிக்கும் போதே கொரோனா ஊடுருவல் பற்றிய உண்மைகளும் துலங்கும் என்பது தற்போது நியாயப்படுத்தப்படுகிறது.


இலங்கையில் மாத்திரமன்றி, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும் இதே நிலை தான். சமூக மட்டத்திலான பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகமாக நடாத்தப்படுவதன் பின்னணியிலேயே அதிகமான தொற்றாளர் அடையாளங்காணப்படுகிறார்கள். ஆயினும், இன்னொரு வகையில் கொரோனாவோடு மனிதாகள் வாழப்பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மையாகிறது.


இப்பின்னணியில் 21ம் நூற்றாண்டின் உலக அரசியலிலும் கொரோனா பங்காளியாகியுள்ளது. ஆரம்பத்தில் சீனாவை நொந்து கொண்ட உலகம் தற்போது எல்லைகள் கடந்து உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனாவுக்கு யார் பொறுப்பு? என தனிமைப்படுத்த முடியாது தவிக்கிறது. அமெரிக்காவில் இதனை அரசியல் முதலீடாக்க முனைந்த டொனால்ட் ட்ரம்ப், நாளடைவில் தன் முயற்சி பலனளிக்காது போனதால் பேச்சை மாற்றிக் கொண்டார்.


இலங்கையில், கொரோனாவோடு கொரோனாவாக தேர்தலை நடாத்தியே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்ற பொதுஜன பெரமுன நினைத்த அடைவை எட்;டிக்கொண்டது. எனினும், முழுமையான மூன்றிலிரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியாது போனதால் ஏனைய கட்சிகளின் தயவிலுமே தமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய தேவையுடன் இருக்கிறது.


அந்த வகையில் ராஜபக்ச சகோதரர்களின் அனைத்து எதிர்கால திட்டங்களும் நிறைவேற வேண்டுமாயினும் அதற்குப் பல மாற்றுக் கூட்டணிகளும் அவசியப்படுகிறது. எனவே, இன்றைய அரசியலில், அதுவும் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒன்றுமேயில்லாது போயுள்ள நிலையில் வேறு எந்தக் கட்சியையும் முழுமையாகப் பகைத்துக் கொள்ளக் கூடிய நிலையில் ராஜபக்ச சகோதரர்கள் இல்லை.


எனவே, பழைய நட்புகள் புதுப்பிக்கப்படுவது கூட இதில் ஒரு அங்கமாகிறது. இலங்கையின் அரசியலைத் தூய்மைப்படுத்தப் போவதாக 25 வருடங்களாக தலைவர்கள் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனாலும், அந்த மாற்றம் இன்னும் தான் வந்து சேரவில்லை. சுழற்சி முறையில் அதே வட்டத்துக்குள் தான் நிற்கிறது.


ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் பல வேடிக்கைகளை மக்கள் பார்க்கிறார்கள். உதாரணமாக 2015 ஜனவரி 8ம் திகதி வரை அரச ஊடகங்கள் எவ்வாறு செயற்பட்டன? 9ம் திகதி முதல் எவ்வாறு செயற்பட்டன என்பது அனுபவப் பாடம். அதேபோன்று 2019 நவம்பர் நடுப்பகுதி வரை தேசத்தின் ஊடக சக்திகள் எவ்வாறு செயற்பட்டன, ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்ச வென்றவுடன் நிலைமை எவ்வாறு மாறியது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


அதற்கடுத்து இவ்வாண்டில் பொதுத் தேர்தல் முடிந்ததும் நாடும், அரச நிறுவனங்களும், பொது மக்களின் சிந்தனைப் போக்கும், செயற்பாடும் எவ்வாறு வடிவம் மாறிக்கொண்டுள்ளது என்பதையும் அளவிட்டுப் பார்த்தால் அந்த மாற்றம் ஏன் சாத்தியமில்லையென்பதையும் புரிந்து கொள்ளலாம்.


தற்போது நாட்டின் மக்கள் மத்தியில் பெருங்குழப்பம் நிலவுகிறது. தம்மை ஆளும் அதிகாரம் ஒரு தனிநபரிடம் இருக்க வேண்டுமா? இல்லையா? என்ற தெளிவு போதிய அளவில் இல்லை. அந்த அளவுக்கு அரச இயந்திரம் ஊழலாலும் முறைகேடுகளாலும் நிரம்பி வழிகிறது. ஆதலால், அரச நிறுவனமொன்றுக்குள் ஜனாதிபதி திடீரென புகுந்து கடமையைச் செய்யாத ஊழியர்களைக் கடிந்து கொண்டால் அதனை மக்கள் கொண்டாடவும் செய்கிறார்கள்.


எனினும், பாரிய அரச இயந்திரத்தின் ஒவ்வொரு அலுவலகத்துக்கும் ஒரு ஜனாதிபதியால் செல்ல முடியாது. ஒவ்வொரு நிமிடமும இன்னொரு இடத்தில் காட்சியளிக்கவும் முடியாது. ஆதலால், மக்கள் திருந்த வேண்டும், பொது சேவை ஊழியர்கள் தாமும் மக்களின் பிரதிநிதிகள் என்றுணர்ந்து கடமையைச் செய்ய வேண்டும், விதி முறைகள் என்ற பெயரில் மக்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் நீக்கப்பட வேண்டும். ஆக்கபூர்வமான செயற்பாட்டு மாற்றம் வர வேண்டும். ஆனால், அவை யாவையும் மிஞ்சிய உயர் மட்ட அதிகாரத்தைப் பற்றி மாத்திரமே தொடர்ச்சியாக இரு தசாப்தங்களுக்கு மேல் பேசப்பட்டு வருகிறது.


அடிமட்டத்தில், பழக்க வழக்கங்களில், செயல் முறைகளில் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றன. நீதியமைச்சரானதும் அலி சப்ரி ஒரு வழக்கறிஞரின் பார்வையில் நீதித்துறையில் காணப்படும் குறைகளை அடுக்கடுக்காகக் கூறியுள்ளார். இது போல பொது மக்களிடடும் பல்லாயிரக்கணக்கான குறைகள் உண்டு. ஆனாலும் அவை பேசப்படுவதில்லையென்பதால் அவை பொருட்டாவதும் இல்லை. அட்ஜஸ்ட் செய்வதற்கு பல காலமாக மக்கள் பழகிக் கொண்டார்கள். அதிகாரிகளும் அரச நிறுவனங்களும் அதில் சூடு கண்டு வாழப் பழகிக் கொண்டன.


ஒரு முறை, புதிதாக வாங்கியிருந்த எனது வீட்டின் நீர் வழங்கலுக்கான கட்டணப் பற்றுச் சீட்டை, முன்னைய உரிமையாளரின் பெயரிலிருந்து என் பெயரில் மாற்றிக்  கொள்வதற்காக, சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். எனது தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, என் பெயரிலுள்ள வீட்டின் உறுதி, கிராம சேவை அதிகாரியின் அத்தாட்சி;க் கடிதம், தேவையான பணம் உட்பட அனைத்து ஆவணங்களையும் கொண்டு சென்றிருந்தேன். சுமார் ஒன்றரை மணி நேர காத்திருப்பின் பின்னரே ஒருவர் அழைத்துப் பேசினார். எடுத்தவுடன், எல்லாம் சரி எங்கே ஜே.பி. (சமாதான நீதவான்) யின் கையொப்பம் என்றார்.


என்னையும், வீட்டின் உரிமையாளன் நான் தான் என்பதையும் நிரூபிக்க அத்தனை உத்தியோகபூர்வ ஆவணங்கள் இருந்தும் எதற்காக புதிதாக ஒரு ஜே.பி? அதுவும் என்னை யார் என்றே தெரியாத ஒருவரின் கையொப்பம் எதற்கு? என்று நான் கேட்ட கேள்வியின் நியாயத்தை அவர் உணர்ந்து புரிந்து கொள்ளவில்லை. ஆனால், அங்கிருந்த ஒரு அலுவலக உதவியாளருக்குப் புரிந்தது. அப்போது என்னை அணுகிய அவர், மாத்தையா, அப்படியே வெளியே போனால் தெரு மூலையில் ஒரு கடையிருக்கிறது, அங்கே ஒரு ஜே.பி இருக்கிறார், 20 ரூபா கொடு;த்தால் கையொப்பமிடுவார் என்று என்னை சமாதானப்படுத்தினார்.


அடிப்படையில் அதனை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. விண்ணப்ப படிவத்தில் ஒரு சமாதான நீதவானின் கையொப்பம் வேண்டும் என்ற நிபந்தனை அச்சிடப்பட்டிருக்கவுமில்லை. அவ்வாறிருக்க, ஆங்கிலேயன் காலத்திலிருந்து அது நடைமுறை என கூறி விளக்கமளிக்கபட்டது. என்னைத் தவிர அன்று அதே தேவைக்காக வந்த எல்லோரும் மறு கேள்வியின்றி அந்த நடைமுறையைப் பின்பற்றியிருப்பார்கள். ஆக, பழகிக்கொண்ட மக்களிடம் மாற்றத்தைக் காண்பது தான் கடினம்.


ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வாக்களிக்கும் போது இவ்வாறான சில்லறைப் பிரச்சினைகள் எல்லாம் மக்கள் மனதில் பதிந்திருக்குமா? அதற்கான மாற்றத்தைக் காண அவர்களுக்கும் நேரம் இருக்குமா? என்பது சந்தேகமே. கேள்வி கேட்பது, உரிமைக்குரல் எழுப்புவதெல்லாம் எல்லோரும் விரும்பும் விடயமுமன்று. பழக்கப்பட்டதை விலக்கிக் கொள்வதும் அத்தனை சாதாரணமான விடயமன்று. 


அதிகார குவிப்பை மையமாகக் கொண்ட அரசியல் மாற்றம் சமூகம் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வளிக்குமா? என்பதற்குத் தெளிவான விடையிருக்கிறதா என்பதை ஒவ்வொரு தனி நபரும் சிந்தித்தாக வேண்டும். 1978ல் சரியென நினைத்து உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு நாட்டுக்கு உகந்ததில்லையென ஆகக்குறைந்தது கடந்த இரண்டு தசாப்தங்களாக வெகுவாக பேசப்பட்டு வருகிறது.


அதில் ஒரு முறை திடமாக இருந்த மக்கள் 2015ல் மாற்றத்தை வேண்டி நின்றார்கள். அதனூடாக ஏதோ ஒரு மட்டத்திலான அடைவுகள் கிடைத்திருந்தாலும் அதில் குறைபாடுகள் இருக்கிறதென்பதை இன்றைய அரசியல் ஏற்றுக்கொள்கிறது. ஆனாலும் வேண்டப்படும் மாற்றங்கள் மக்களுக்கானதா? என்ற கேள்விக்கு விடையில்லாத நிலையிலேயே கொரோனா போர்வையில் வேறு ஏதும் திட்மிடப்படுகிறதா என்ற சந்தேகமும் கூடவே நிலவுகிறது.


அபிப்பிராய வாக்கெடுப்பென்று வந்தால் சிந்திக்க நிறையவே உண்டு! 


-Irfan Iqbal

Chief editor, Sonakar.com


No comments:

Post a Comment