அஷ்ரபின் பெயரால் ஆளாளுக்கு ஓதும் கத்தம்..! - sonakar.com

Post Top Ad

Friday 18 September 2020

அஷ்ரபின் பெயரால் ஆளாளுக்கு ஓதும் கத்தம்..!


இலங்கையில் முஸ்லிம் தனித்துவ அரசியல் எழுச்சியென்ற அலை பல மட்டத்தில் வீசத்தொடங்கியிருந்த 80 களின் நடுப்பகுதியில் தென் பகுதியிலும் இது குறித்து மக்கள் பேசத் தொடங்கியிருந்தனர்.


குறிப்பாக தமிழ் அரசியல் தரப்புகள் இது பற்றி பேச ஆரம்பித்ததன் பின்னணியில் தமிழ் மக்கள் இதனை எச்சரிக்கையுடன் அணுக ஆரம்பித்திருந்தனர். இக்காலப் பகுதியில் ஒரு நாள் கொழும்பு 7, ரீட் அவனியுவில், உதைபந்தாட்டப் பயிற்சி முடிந்து வீடு செல்வதற்காக பஸ் தரிப்பில் நின்று கொண்டிருந்த நேரம், என் தமிழ் நண்பன் ஒருவன் அரசியல் பேச ஆரம்பித்தான்.


ஒதுங்கியிருந்த என்னிடம் வலுக்கட்டாயமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றி பழித்துப் பேசிய போதுதான் அதனைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. பின்நாளில் 90களின் இறுதிப் பகுதியில் மர்ஹும் அஷ்ரபுடன் அரசியலுக்கு அப்பால் கலைத்துறை சார்ந்த நெருக்கம் இருந்தது. அவர் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரது 50 வது வயது நிறைவை முன்னிட்டு ரண்முத்துவில் இடம்பெற்ற 'ஓடும் நதியைப் பாடும் மலர்கள்' என்ற இலக்கிய நிகழ்விலும் பின் அவரது நூலான 'நான் எனும் நீ' வெளியீட்டின் போதும் என் கலை நிகழ்ச்சி இடம்பெற்றது. 


அவ்வப்போது அழைத்துப் பேசுவார். இதன் போது ஒரு கட்டத்தில் நுஆ (தேசிய ஐக்கிய முன்னணி) பற்றிய பேச்சும் அது தொடர்பிலான பல தகவல்களையும் பகிர்ந்து கொண்ட அவர், கொழும்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பும் அரசியல் ஆர்வமும் அவசியப்படுவதாகவும் தெரிவித்திருந்த ஞாபகம். கால் நூற்றாண்டு கடந்தும் கூட கொழும்பில் இன்றும் அதே நிலை தான். ஆயினும், கிழக்கைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்மக்களின் அரசியல் உயிர் மூச்சாகவே வளர்ந்திருந்தது.


அண்மையில் என்னோடு இது பற்றிக் கலந்துரையாடிய முன்னாள் கட்சித் தொண்டர் ஒருவர், அக்காலப் பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் வளர்ப்புப் பணியில் ஈடுபடுவதை ஜிஹாதாகக் கருதியே தம் போன்ற பலர் அர்ப்பணிப்போடு செயலாற்றியதாக விபரித்திருந்தார். அஷ்ரப் அவர்களைப் போராளிகள் என்று அழைத்ததில் அர்த்தமுண்டு என்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.


90 களில் கிழக்கின் சில இடங்களில் அஷ்ரப் ஒரு அரசியல் வித்தகன் என்ற பார்வை இருந்தது. கிண்ணியா பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் மீதும் அதன் அப்போதைய தலைவரான அஷ்ரப் மீதும் ஏற்பட்டிருந்த அதிருப்தியைக் கையாள செருப்புக் காலும், பழைய ஷேர்ட்டுமாக மேடையேறி, உருக்கமாகப் பேசி மக்கள் மனம் கவர்ந்த நிகழ்வு பற்றி கல்வியமைச்சில் பணியாற்றிக்கொண்டிருந்த ஒரு அன்பர் அக்காலப் பகுதியில் எனக்கு விபரித்திருந்தார்.


இவை யாவும் கடந்து, நான் எனும் நீ புத்தக வெளயீட்டின் பின் மர்ஹும் அஷ்ரப் வீட்டில் நடந்த விருந்துபசார நிகழ்வில்; வைத்து என்னோடு அளவளாவிக் கொண்டிருந்த புதல்வன் அமான், 'இந்த கட்சியில் உள்ளவர்களில் உண்மையான விசுவாசிகள் யார்? என தன் தந்தைக்கும் - தாய்க்கும் மாத்திரமே தெரியும்' என்று தனக்குத் தெரிந்த கட்சி விபரத்தோடு என்னிடம் தெரிவித்திருந்தார்.


20 வருடங்கள் கடந்து, தன் தந்தையின் இறப்பு வெறுமனே விபத்தாக இருக்கும் என்பதை தனக்கு ஏற்றுக் கொள்ளக் கஷ்டமாக இருப்பதாகவும், அந்த விபத்துக்கு வேறு பின்புலம் இருக்கக் கூடும் எனவும் இவ்வாரம் தன் உள்ளக்கிடக்கையையும் வெளியிட்டுள்ளார் அமான் அஷ்ரப். மறு புறத்தில் சில அரசியல் குழுக்கள் தமது வசதிக்கேற்ப கத்தம் ஓதவும் செய்கிறது.


அஷ்ரபுடைய நினைவு தினம், அரசியல் முதலீடாக மாற்றப்பட்டு பல வருடங்களாகி விட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதற்காக 'தலைவர் தினம்' கொண்டாடாவிட்டாலும் தலைவர் விட்டுச் சென்ற அரசியல் இலக்கை நோக்கித் தான் பயணிக்கிறோமா? என்பது பற்றியாவது மீளாய்வு செய்ய வேண்டிய கடமையைப் புறந்தள்ளியே வருகிறது.


முஸ்லிம்களும் சம அந்தஸ்த்துள்ள தேசிய சமூகமாக அங்கீகாரம் பெற வேண்டும் என்ற அவரது இலக்கு ஆயத போராட்ட பிரதேசங்களில் கொண்டிருந்த அர்த்தம் தேசிய அரசியலில் பிரதிபலித்ததா? இல்லையா? என்பதை இன்று நாட்டு மக்கள் மிகச் சாதாரணமாக எடை போடக்கூடிய சூழ்நிலையுள்ளது.


தமிழ்த் தேசியம், தமிழீழம் அல்லது தமிழ் நிர்வாக அலகுப் பகுதியென்ற பிரிவினை உருவாகுமாக இருந்தால் அதன் போது முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகி விடக்கூடாது என்ற அடிப்படை நோக்கம் அக்கால செயற்பாடுகளில் காணப்பட்டது. ஆயினும், தென் பகுதி அரசியலில் ஒரு காலத்தில் ஏதேனும் மாற்றம் வந்தால், பிரிவினைவாதமற்ற இலங்கை உருவானால், அதன் போது இந்த இலக்கு நோக்கிய முஸ்லிம் தனித்துவ அரசியல் எவ்வாறு செயற்பட வேண்டும்? என்பதில் அஷ்ரபின் சிஷ்யர்கள் எனக் கூறிக் கொள்ளும் யாருக்கும் தெளிவு இருப்பதாக காலம் இதுவரை நிரூபிக்கவில்லை.


இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், பிரபாகரனுடன் சமமாக இருந்து பேசக்கூடிய சந்தர்ப்பம் தந்தால் மாத்திரமே வர முடியும் என்று கூறியிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்காலப் பகுதியின் தலைவர், இன்றைய ச10ழ்நிலையில் தேசிய அரசியலில் செல்லாக்காசாகியுள்ளார், போதாததுக்கு சஜித் பிரேமதாசவும் ஏமாற்றி விட்டதாக ஒப்பாரியும் ஆரம்பாகியுள்ளது.


மேற் சொன்ன இரு சந்தர்ப்பங்களையும் கால கட்டங்களையும், நிலையையும் ஒப்பிடடுப் பார்க்கையில் மிக வேகமாக எழுச்சி கண்டு வந்த முஸ்லிம் தனித்துவ அரசியல் இன்று அஷ்ரபுக்கு கத்தம் ஓதுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை இலகுவாக அறிந்து கொள்ளலாம். 


மாகாண சபைகள் ஊடான பிராந்திய அதிகாரப் பகிர்வு என்ற தளம் இருப்பதனால் அதனூடாக முஸ்லிம் சமூகத்துக்கு எதையெதையோ பெற்றுக் கொடுக்கப் போவதாக கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் அந்தக் கனவும் ஏதோ ஒரு கட்டத்தில் கை கூடிய போதும் கண்டது எது? என்ற கேள்வி விடை காணப்படாமல் இருக்கிறது. 


கிழக்கு மாகாண நிகழ்வொன்றின் போது அரச அதிகாரிகள் நெறி தவறித் தன்னை அழைக்கத் தவறி விட்டார்கள் என்று நிகழ்வுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து தனது பதவி உரிமைக்காகக் குரல் கொடுத்த முஸ்லிம் முதலமைச்சர் பதவியூடாக அடி மட்ட மக்கள் பெற்றுக்கொண்டது எது? என்பதற்கும் கடந்த காலமே பதிலாக அமைகிறது. 


பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் தற்காலத்தில் நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் தாம் சார்ந்த பிரதேசங்களிpல் தொழில்வாய்ப்பைப் பெற்று அதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வகையில் அவர்களுக்கான தகைமைக்கு அங்கீகாரம் கிடைத்தது என்று மகிழ்வடையலாம். இப்படியான மகிழ்வுப் பகிர்வுகளை நமது கையில்தான் அதிகாரம் என்று முஸ்லிம் தனித்துவ அரசியல் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த காலத்தில் நான் காணவில்லை. மாறாக, விரும்பியவர், நெருங்கியவர், தெரிந்தவர், உறவுக்காரர், ஊர்க்காரர் நன்மையடைந்த கதைகள் ஏராளமாக இருக்கிறது.


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூட, இறுதி வரை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பதவி கொடுப்பதுதான் முஸ்லிம்களின் தாகம் என 'உணர்வு பூர்வமாக' எண்ணிக் கொண்டிருந்தார். அந்த அளவு மக்களைப் பற்றி எத்தி வைத்த அதே நாயகர்கள் தான் தேர்தல் காலத்தில் இந்த மக்களின் உரிமைகளுக்காகப் போராடப் போவதாகச் சொல்கிறார்கள்.


நாட்டின் நிலைமை தொடர்பில் தொடர் அவதானத்தில் இருக்கும் பலருக்கு இப்போதிருக்கும் முக்கியமான பிரச்சினை 20ம் திருத்தச் சட்டம்;. இந்தத் திருத்தச் சட்டம் வருகிறதோ இல்லையோ 19ம் திருத்தச் சட்டம் நீக்கப் பட்டாலே 18 அமுலுக்கு வந்து விடும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிக்கிறார். 


அப்படியொரு நிலை வருமாயின், கடந்த ஐந்து வருட காலத்தில் தாம் அனுபவித்து, இப்போது இழக்கப் போவதாக மக்கள் நினைக்கும் அந்த ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்ததில் ஒரு சமூகத்தின் சுயநிர்ணய விடிவுக்காகப் போராடிய அஷ்ரபின் பெயரில் கத்தம் ஓதும் பலருக்குப் பங்குண்டு என்பதை மறக்கலாகாது.


மிகச் சாதாரணமாக சர்வாதிகார ஜனாதிபதியை, அதுவும் ஒரே நபர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாகலாம் என்ற விதியை உருவாக்கக் கை தூக்கியவர்கள், இப்போது நாட்டு மக்கள் 20...19...18 என வாதிட்டுக் கொண்டிருக்க, சஜித் பிரேமதாச ஏமாற்றி வி;ட்டார் என்று வேறு விடயத்தில் குறியாக இருக்கிறார்கள். மீண்டும் ஒரு தடவை மன்னிப்புக் கேட்கலாம் அல்லது ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொள்வதன் ஊடாக தாம் தவறிழைக்கவில்லையென்று நியாயங் கற்பிக்கலாம் என்று எண்ணுகிறார்கள் போலும்.


ஆக மொத்தத்தில் தேசிய பிரச்சினைகள், நாட்டின் சட்ட திட்டங்கள், முக்கிய அரசியல் தருணங்களின் போது மக்களுக்கும் - இந்த தலைவர்களுக்கும் வெகு தூரமாகி விடுகிறது. மர்ஹும் அஷ்ரப், முன் சொன்ன கிண்ணியா விடயத்தைக் கையாண்ட விதமும் இப்போதைய தலைவர்கள் சமூகத்தை அண்டிப் பிழைக்கும் விதமும் நேரெதிரானது. 


கடல் நீரை சுத்திரகரித்தாவது தூய குடிநீரைத் தராவிட்டால் நான் நீர் வழங்கல் அமைச்சராக இருந்து என்ன பிரயோசனம்? என்று கேள்வி கேட்பது ஒரு ரகம். கேள்வியைக் கேட்டு விட்டு, அதை மறந்து விடுவதும் மக்கள் மறக்க வேண்டும் என நினைப்பதும் இன்னும் ஒரு ரகம். இந்த சுழற்சிக்குள் அகப்பட்டு தேசிய அரசியலைப் புதிதாகக் கற்க வேண்டிய சூழ்நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை இன்னொரு புறம்.


தேசத்தின் அரசியலில் பங்காளிகளாக அடுத்த தலைமுறை முஸ்லிம் அரசியல்வாதிகள் தயாராக வேண்டும். ஒரு வேளை ராஜபக்ச சகோதரர்கள் திட்டமிட்டுள்ள தனிச் சிங்கள அரசு என்ற நியாயம் அடுத்த தேர்தலில் எடுபடாமல் போனாலும் கூட அந்த எண்ணக்கருவை விதைத்த பீடங்கள் உறங்கப் போவதில்லையென்பது உறுதியாகவும் தெளிவாகவும் புலப்படுகிறது.


18ன் ஆயுள் காலம் அடுத்த ஆட்சிக்காலம் வரை இருந்தது. 19ன் ஆயள் அதற்கடுத்த ஆட்சியோடு முடிவுக்கு வருகிறது எனும் போது 20, 21களின் நிலையும் இவ்வாறே மாறும் என கணிப்பதில் நியாயமுண்டு. ஆயினும், முற்போக்கு அரசியலை முழுமையாக முடக்கிவிட்டு எழுச்சி கண்டுள்ள பெருந்தேசியவாதத்தோடு சம பாதையில் பயணிக்க முஸ்லிம் தனித்துவ அரசியல் இதுவரை தயாரானதாகத் தெரியவில்லை. அதைவிட, தேசிய வாதத்தை இன ரீதியான பிளவோடு பேணுவதே தமக்குச் சாதகமானது என்றே முஸ்லிம் அரசியல் இன்றும் கணக்கிடுகிறது.


பொதுத் தேர்தல் முடிந்த கையோடு கிழக்கில் முஸ்லிம்கள் தான் ஆட்சியமைப்பார்கள் என்று தமது வழமையான பல்லவியை பிராந்திய முஸ்லிம் தலைவர்கள் பாடத் தொடங்கி விட்டார்கள். நாடாளுமன்றுக்குச் செல்ல போதிய வாக்குகளைப் பெறவில்லையாயினும் பேரினவாதத்தைத் தழுவி கிழக்கில் முஸ்லிம் விரோத மனப்பாங்கை விதைப்பதில் மும்முரமாக செயற்படும் அம்மான் சக்திகள் இன்னும் ஓயவில்லை.


இந்நிலையில், தப்பித் தவறியேனும் மாகாண சபைகள் அவசியமில்லையென்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடிய இவ்வரசு முடிவெடுத்தால் முஸ்லிம் மக்களின் பிராந்திய வாதம் தேசியத்திலிருந்து வெகு தூரம் அந்நியப்பட்டிருக்கும். அதன் பின்னர் முஸ்லிம் சமூகம் புதிய அரசியல் தளத்தைப் புரிந்து மீளெழுவதற்கு நீண்ட காலம் அவசியப்படும்.


பெரமுன தான் ஆட்சியமைக்கப் போகிறது என்று தெரிந்தும் வாக்களித்துத் தம் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்திய மக்களுக்கு தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. முதலில், அது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.


இருந்தாலும், அது பற்றி மக்களும் சிந்திக்கக் கூடாது என்பதில் எம் தலைவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். குறிப்பாக, மெய்ப்பாதுகாவலர் புடை சூழ சொகுசு வாகனங்களில் வலம் வந்து, வாழ்ந்து கொண்டிருந்த பழைய வாழக்கையை விட்டுக் கொடுக்கவும் முடியாமல், புதிய நடைமுறையை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் இந்தத் தலைவர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், இடைக்கிடையில் அஷ்ரபுக்கு கத்தம் ஓத மறப்பதுமில்லை. 


ஆமீன் சொல்லும் மக்களுக்கும் எதுவும் நினைவில் நிற்பதில்லையென்பதால் தலைவர்கள் மிகத் தீவிரமாக பதவிகளை மாத்திரம் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். 



Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment