அழுது கொண்டே சிரிக்கிறோம்...! - sonakar.com

Post Top Ad

Friday 28 August 2020

அழுது கொண்டே சிரிக்கிறோம்...!


ஜனாஸாக்களை எரிப்பதைப் பார்த்து அழுது கொள்ள ஒரு மனம் வேண்டும், அழும் சத்தம் வெளியில் கேளாமல் பாதுகாத்துக் கொள்ள ஒரு மனம் வேண்டும் என்ற இரட்டை நிலைப்பாட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது இலங்கை முஸ்லிம் சமூகம்.


கொரோனா தொற்றுக்குள் சிக்கி உலகமே தவித்துக் கொண்டிருக்க, இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரம் மேலதிக அச்சம். கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் உடலங்கள் எரிக்கப்பட்டு விடும் என்பதே அந்த மேலதிக அச்சம்.


மார்ச் இறுதியில் இந்த அச்சம் திணிக்கப்பட்ட போது யாரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போதைய நீதியமைச்சரும் கூடவே. ஆட்சியாளர் கோட்டாபே ராஜபக்ச என்பதாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருந்ததாலும் அவரையோ அல்லது அண்ணன் மஹிந்த ராஜபக்சவையோ அணுகி அதற்கொரு தீர்வு கண்டால் தான் உண்டு என்றானது. 


சரி, அப்படியாயின் அவர்களை அணுகக் கூடியவர்கள் யார்? என்பது அடுத்த கேள்வியாக இருந்தது. என்னதான் இணக்கப்பாட்டு அரசியல் என்று மார்தட்டிக் கொண்டாலும் சமூகம் இரண்டாகப் பிரிந்து நின்று தான் ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் ஆதரிக்கிறது என்ற அடிப்படையில் ஆளுந்தரப்போடு நெருக்கம் உள்ளவர்களால் மாத்திரமே அங்கு செல்ல முடிந்தது.


குறையின்றி அவர்களும் சென்றார்கள், பேச்சுவார்த்தை நடாத்தினார்கள் ஆனால் நிறைவேற்று அதிகாரம் தான் வேண்டும் என்ற கொள்கை கொண்ட ஆட்சியாளர்களோ இந்த விடயத்தில் மாத்திரம் நாங்கள் தலையிடக் கூடாது, அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். இன்றளவில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் குறைத்த 19ம் திருத்தச் சட்டம் நாட்டுக்கு வந்த சாபம் என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் விளக்கமளித்துக் கொண்டிருப்பது தனிக் கதை.


நிலைமை இப்படியிருக்க, அதிகாரிகளோ ஆறடி தோண்டிப் புதைத்தாலும் அதற்கடியில் உள்ள நீர் ஊடாக கொரோனா பரவி நாட்டை அழித்து விடும் என்றார்கள், மேலதிகமாக இறந்த அந்த உடலை எரிக்காவிட்டால் அதை உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தி விடுவார்கள் என்று சர்வதேசத்துக்குக் கேட்குமளவுக்கு வியாக்கியானமும் தந்தார்கள். 


கேட்டுக் கொண்டிருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சமூகம் ஏதோ ஒரு கட்டத்தில் சரி நீதிமன்றம் செல்லலாம் என்று முயற்சி செய்தது. அமைச்சர்களுக்கு பொன்னாடை போர்த்துவதற்கு முந்திக் கொள்வது போல ஆரம்ப கட்டத்தில் வழக்காடப் போட்டி நிகழவில்லை. ஆனாலும் திடீரென வழக்குப் பதிய யாரோ முன் வந்து விட்டார்கள் என்ற தகவல் பரவியதுடன் கண்ணை மூடித் திறப்பதற்குள் எட்டு வழக்குகள் தயாராகி விட்டது. 


சரி, ஒரே விடயத்துக்காகத்தானே வழக்காடப் போகிறார்கள், எல்லோரும் ஒற்றுமையாகச் செல்லலாமே என்று முயற்சி செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்குள் தொடர்பாடலை ஏற்படுத்தி வழி சமைத்தால், அதிலும் பெயருக்கு முந்திக் கொள்ளும் போட்டியொன்று உருவானது. இடையில் திடீரென இலவசமாக வாதாட வருகிறேன் என்று எம்.ஏ சுமந்திரன் அறிவித்ததும் எம்மவரின் உணர்ச்சி நரம்புகள் புடைத்துக் கொண்டது.


ஆகவே, முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஆளுக்கொரு இடாப்பு பதிவுக்காக வழக்குத் தாக்கல் செய்யச் சென்றது. அரசியல் கட்சிகள் உள் நுழைந்ததும், நிலவரம் திசை மாறும் என்பது எதிர்பார்க்கப்பட்ட அதேவேளை, வழக்காடுவதற்கு எமக்கிருக்கும் அவசரம் தணிக்கப்படும் என்பதே எனது அச்சமாக இருந்தது.


அதை நிரூபிக்கும் வகையில் ஒரே விடயத்துக்காக பதியப்பட்ட ஒரு வழக்கை மாத்திரம் நீதிமன்றம் தனியாக விசாரிக்க ஆரம்பித்தது. ஆக, முதற் தொகுதி மனுதாரர்களுக்கு ஜுலை மாத முற்பகுதியில் ஒரு தேதியும் ரிசாத் பதியுதீனின் கட்சி வழக்குக்கு ஜுலை இறுதியில் தனியான தேதியம் வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற வழக்கப்படி இவ்வனைத்து வழக்குகளும் ஒன்றாகவே விசாரிக்கப்படுவதற்கான 'இணைப்பு' காலக்கிரமத்தில் நடைபெறும், அந்த நேரத்தில் கொரோனாவும் முடிந்து விடும் என்பது அரசியல் கணக்காக இருந்தது.


ஆக மொத்தத்தில் மே மாதம் 18,19 அல்லது 20ம் திகதிக்குள் விசாரணையை நடாத்தக் கோர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்னும் இழுபறியில் இருக்க இப்படி எங்கள் இரட்டைவால் குருவிகளும் காரணம்.


அதற்கிடையில், உச்ச நீதிமன்றுக்கு நாடாளுமன்றை மீண்டும் கூட அனுமதிப்பதா இல்லையா என்ற தலையாய பிரச்சினை வந்ததால் எங்கள் மனுதாரர்களுக்கு நீண்ட ஓய்வு. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 22ம் திகதி இந்தியாவுக்கு சிகிச்சைக்காகச் சென்று திரும்பிய முஸ்லிம் பெண்ணொருவருக்கு கொரோனா பாதிப்பென்று ஐ.டி.எச்சில் வைத்தார்கள்.


சனிக்கிழமை (22), இலங்கை நேரம் இரவு 9 மணியளவில் அவரது குடும்பத்தில் ஐவரை மறுநாள் காலையில் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இரவு வேளை என்பதால் பி.எச்.ஐயை தொடர்பு கொண்ட போதும் அவருக்கும் விளக்கம் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்தும் அப்பெண்மணி வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருப்பதாக மாத்திரம் கூறப்பட்டது.


ஆயினும், மறு நாள் காலை அவர் இரவே இறந்து விட்டார் என்று கூறி வழமை போன்று அவசரமாக எரியூட்டியும் விட்டார்கள். ஆதலால், இப்போது மீண்டும் சமூகத்தில் ஒரு உணர்வலை. எங்கே அந்த வழக்காடச் சென்றவர்கள் என்று ஒரு கூட்டம் தேட, எங்கே மொட்டுக் கட்சியை ஆதரித்தவர்கள் என்று இன்னொரு கூட்டம் தேட, எங்கே அந்த நீதியமைச்சர் என்றும் கொஞ்சம் சாந்தமாக தேடுகிறது சமூகம்.


சத்தமாகக் கேட்க ஏதோ ஒரு அச்சம் இருப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லையென்றால் யாரும் நிர்ப்பந்திக்கக் கூடாது. ஆயினும், நீதி கேட்கும் குரல்கள் ஆங்காங்கு எழாமலில்லை, விமர்சனங்கள் வராமலில்லை. அதிலும் நீதியமைச்சருக்கு அலி சப்ரியென்ற பெயர் இருப்பதனால் அவருக்கு ஏன் அக்கறையில்லையென்ற கேள்வியும் எழாமலில்லை.


ஆனாலும், அவர் மிகத்தெளிவாக ஏலவே தன் நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கிறார். முதலாவது ஜனாஸா எரிப்பின் போது இருந்த சலசலப்பில் அவரும் குரல் கொடுத்திருந்தார். என்ன சொன்னாரென்றால், எரியூட்டல் மாத்திரம் தான் ஒரே தீர்வென்ற விஞ்ஞான ரீதியான தீர்மானம் இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், ஆனாலும், ஏதோ ஒரு சமூகத்துக்கு அநீதியிழைக்கப்படும் வகையில் அவ்வாறு நடக்கக் கூடாது என்றார்.


பின்னர் மே மாதம் அளவில் இது பற்றி கருத்துரைத்த அவர், கொரோனா சூழ்நிலையில் இந்த துன்பம் முஸ்லிம் சமூகத்துக்கு மாத்திரமானது இல்லை, கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும் கூட பாதிக்கப்படுகிறார்கள். அதிகாரிகளின் தீர்மானத்தையே அரசு ஏற்றுக்கொள்கிறது என்றும் விளக்கியிருந்தார்.


அந்த அதிகாரிகளின் தீர்வு சரியானதா? என்பதற்கே வழக்காட வேண்டியிருக்கிறது. முதற்தடவை வழக்கு பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது பேராசிரியர் மெதிகா விதானகேயின் நீர் வள இயல் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டே பிரதிவாதிகள் தரப்பு தமது நியாயத்தை முன் வைக்க முனைந்தது. இதன் போது அங்கு சென்றிருந்த ஒரு அரசியல் பிரமுகர், வழக்கு பின் போடப்பட்டிருந்த நிலையில் என்னைத் தொடர்பு கொண்டு, உலக சுகாதார அமைப்பை (WHO) வரவழைத்து இலங்கை அரசின் முடிவு பிழையென்று நிரூபிக்க என்ன வழியென்று கேட்டார்.


அப்போது அவரது உணர்வைப் புரிந்து கொண்ட நான், அது உலக சுகாதார அமைப்பின் வேலையில்லை, அவர்கள் வரப் போவதுமில்லை. உள்நாட்டிலே மெதிகா போன்ற நீர் வள இயல் நிபுணர் ஒருவரைப் பிடித்;து அவர்; ஊடாக மெதிக்காவின் அறிக்கைக்கு எதிரான பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதே தேவையென பதில் சொன்னேன். அப்படியானவர்களை எங்கே தேடுவது என்றார்? அது சரி, வளரும் பிள்ளைகள் எல்லோரையும் டொக்டர், இன்ஜினியர், லோயர் ஆகு இல்லையென்றால் வண்டியைத் தள்ளிக் கிட்டு வியாபாரம் பண்ணு என்ற வட்டத்துக்குள் இருந்து கொண்டு மாத்திரம் கடந்த தலைமுறையையும் வளர்த்த எம் சமூகத்தில் இப்போது புதிதாக அப்படியொரு நிபுணரை அதுவும் உடனடியாக எங்கே போய் தேடுவது?


இருந்தாலும் இவ்வாறான நிபுணர்கள் பெரும்பாலும் நீர்வழங்கல் அமைச்சுடன் தொடர்பு பட்டிருப்பார்கள் என்று சொல்லக் கூடியதாக இருந்தது. அதனையடுத்தும் அமெரிக்காவில் உள்ள பேராரிசியர் ரிபாய் என்பவரின் விபரம் தேடிய பிறிதொரு மனுதாரருக்கும் இதே விளக்கத்தையே வழங்க நேர்ந்தது. ஏனெனில் மெதிகாவின் அறிக்கை சரியா – பிழையா என ஆராய்வதும் நீதிமன்றின் வேலையில்லை. மாறாக இந்த வழக்கைப் பொறுத்தவரை அது தவறு என நிரூபிக்க வேண்டியது வாதிகளின் வேலை. அல்லது, அந்த அறிக்கைக்கு எதிரான தனி வழக்குத் தொடர்ந்து நீதிமன்றின் தலையீட்டை நாட வேண்டும். அதன் போது, வேறு எவரும் எதிரறிக்கை வழங்காவிட்டால் மெதிகா சொன்னதே சரியாகி விடும். இப்படி இந்த பரிசோதனைகள் எல்லாம் நடந்துதான் ஜனாஸா எரிப்பு வழக்குகளுக்கு தீர்வு வர வேண்டும் என்றால், அது செத்துப் போன கதையாகி விடும்.


புதிதாக எரியூட்டப்பட்ட ஜனாஸாவின் தகவல் கிடைத்ததும் எங்கே வழக்குப் போட ஆளில்லையா? என்று கேட்பவர்களுக்கு மேற்சொன்ன மூன்று மாதத்துக்கு முற்பட்ட வரலாறு உதவியாக இருக்கும். சரி, நிலைமை இவ்வாறிருக்க தேசத்தில் பேசப்படும் ஒரே சட்டம் இதுதான் என்ற நிம்மதிப் பெருமூச்சு அடைய முனைந்தால் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைக் காட்சிகள் அப்பாவி உள்ளங்களில் தோன்றி மறைவதையும் தவிர்க்க முடியாது. தேர்தல் காலம் வரை எந்த உயிரிழப்பையும் 'கொரோனா' வகைக்குள் கொண்டு வராமல் பார்த்துக் கொண்டார்கள் என்ற எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டையும் மறைத்து வைக்க முடியாது.


எது எவ்வாறாயினும், மக்கள் வெளியில் சொல்ல முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகியே வாழ்கிறார்கள். ஆயினும், அது தற்காலிகம். ஏனெனில். இலங்கை முஸ்லிம் சமூகம் விரைவாக மறப்பதற்குப் பழகி விட்டது. தனி நபர்களின் சுய நலத்திற்காக தமது அரசியல் உரிமைகளை 'விற்பனை' செய்யவும் இந்த சமூகம் தயங்கவில்லையென நடந்து முடிந்த தேர்தலில் தோற்ற அரசியல்வாதிகள் இன்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.


கடந்த காலங்களில் அவர்கள் எவ்வாறு வென்றார்கள் என்பது இப்போது கேள்வியில்லை, ஆனால் எதிராளிகள் அரிசியைக் கொடுத்து வென்றார்கள் என்று குற்றஞ்சாட்டும் அளவுக்கு சமூகத்தின் நிலை மலிந்து போய்விட்டது. ஒரு வகையில் ஒரு பிடி அரிசிக்காகவும் உதவி தேடும் நிலையில் சமூகம் இருக்கிறதென்பதை நினைத்து எல்லோருமாக சேர்ந்து கவலைப்பட்டாக வேண்டும், ஏதாவது வழி செய்தாக வேண்டும்.


மறு முனையில் அற்ப சொற்ப விடயங்கள் எந்த அளவு அரசியலில் முக்கியம் பெறுகிறது என்பதற்கும் இவை நடைமுறை எடுத்துக்காட்டாக அமைகிறது. ஆயிரம் காரணங்களை அடுக்கலாம், பல ஆயிரம் உதாரணங்களை முன் வைக்கலாம், ஆனால் அவை யாவும் மக்களின்; அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதில்லையென்பதால் மக்களைக் குறை கூறிக் கொண்டிருப்பதிலும் பயனில்லை.


இலங்கை தேசம் பல்லினங்களுக்கானதா இல்லை ஒரு குறிப்பிட்ட இனத்தின் மேலாதிக்கத்துக்குள்ளானதா என்ற கேள்விக்கு நடைமுறையில் பதில் சொல்லத் தேவையான சூட்சுமங்களுடன் தற்போதைய அரசியல் நகர்ந்து கொண்டிருக்க, இருட்டில் இருக்கும் முஸ்லிம் சமூக அரசியல் தலைமைகள் இன்னும் கருப்பு – வெள்ளைப் படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


பொதுத் தேர்தல் முடிந்த கையோடு, மாகாண சபைத் தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிடையில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிழக்கில் இனி ஆட்சியைத் தீர்மானிப்பது நாங்கள் தான் என்று உணர்வூட்ட ஆரம்பித்து விட்டார். விக்ணேஸ்வரன் வடக்கில் முதல்வராக இருந்த சாதித்ததுதான் என்ன? என்றோ அல்லது இதுவரை தீர்மானித்துக் கண்டது என்ன என்றோ பதில் கேள்வி கேட்பதற்கு உணர்வு இடமளிக்காத நிலையில், மக்களும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த நிலையை விட்டு அடுத்த கட்ட அரசியல் சிந்தனைக்கு மக்கள் மாறுவது எப்போது? என்ற கேள்விதான் தொடர்கிறது. இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் உள்ள எல்லா குற்றச் செயல்களிலும் எம் சமூகம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் எம்மவர்க்குப் பங்கிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை சீர்திருத்தப் பாதையில் கொண்டு செல்வதற்கான பொதுத் தளம் எதுவென்பதைக் கண்டறியும் சிவில் சமூக செயற்பாடுகள் இல்லாமலேயே இருக்கிறது.


அவ்வப்போடு கிடைக்கும் நிதியைக் கொண்டு ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு பகுதிக்கு உதவிகள் சில செய்து விட்டு தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொண்டு அடங்கி விடும் நிலைக்கே இன்றைய சிவில் அமைப்புகள் தள்ளப்பட்டிருக்கின்றன. அவை பொதுத்தளத்தில் அமர்ந்து தம் வலுவையும் சிந்தனைகளையும் வளப்படுத்தி, பலமான சமூகக் கட்டமைப்புக்காக இயங்கும் சாத்தியமும் இல்லாதிருக்கிறது.


இந்நிலையை எவ்வாறு மாற்றுவது? என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் வருடத்துக்கு இரண்டு தடவைகள் பி.எம்.ஐ.சி எச்சில் 'போலி' கௌரவ டாக்டர் பட்டங்களை வாங்குவதிலும் எம்மவர்களே முண்டியடித்துக் கொண்டு செலவு செய்கிறார்கள். 


இந்த வகை கலாநிதிகளுக்கும் வாழ்த்துச் சொல்லி பொன்னாடை போர்த்திக் கொண்டு வாழப் பழகிக் கொண்டுள்ளது எம் இரட்டை வால் சமூகம்!

jTScYcS

-Irfan Iqbal

Chief editor, Sonakar.com




No comments:

Post a Comment