இறுதியாக நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியதையிட்டு நம் நாட்டு ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கும், பிரதமர் திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் இத்தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவான அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜம்இய்யா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
நெருக்கடியானதொரு சூழலில் தேர்தலை வெற்றிகரமாக நடாத்தி முடித்திருப்பதானது நம் நாட்டின் இயலுமை மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான எமது மக்களின் ஈடுபாடு என்பவற்றை பறைசாட்டுகின்றது.
நடந்து முடிந்த தேர்தலானது எமக்கு ஒரு ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்தை கற்றுத் தந்துள்ளது. வன்முறையற்ற தேர்தல் மற்றும் சுதந்திரமான முறையில் வாக்களித்தல் போன்றன எமக்கு ஒரு திருப்திகரமான அரசியல் கலாச்சாரத்தைக் காண்பிக்கின்றன.
மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர். அரசாங்கத்தின் வெற்றியுடன் சேர்த்து அதன் மீது பொறுப்புக்களும் வந்து சேர்கின்றன. ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு நம் நாட்டைப் பொருளாதார அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம்; போன்றவற்றின்பால் இட்டுச் செல்லும் இயலுமையை இந்த புதிய அரசாங்கம் கொண்டிருப்பதாக நாம் நம்புகின்றோம்.
நம் நாட்டை அபிவிருத்தி, நல்லிணக்கம் கொண்ட ஒரு நாடாக கட்டியெழுப்புவதற்கு இப்புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்துவிதமான காத்திரமான நடவடிக்கைகளுக்கும் அரசியல், இன, மத வேறுபாடுகளை புறந் தள்ளிவிட்டு ஒன்றுபட்டு ஒத்துழைக்க எதிர்க்கட்சி, ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.
அல்லாஹுதஆலா எமது தாய் நாட்டை அமைதியும், அபிவிருத்தியும் நிறைந்த ஒரு நாடாக ஆக்குவானாக. மேலும் அனைத்துவிதமான தீங்குகள், நோய்களை விட்டும் பாதுகாப்பானாக.
அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
No comments:
Post a Comment