பாயப் பதுங்கும் பூனைகள் ..! - sonakar.com

Post Top Ad

Saturday, 25 July 2020

பாயப் பதுங்கும் பூனைகள் ..!


அறுவடைக்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வெளியிலே துடிப்பாய் வீர வசனம் பேசிக்கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கத்தால் பலமுள்ள கட்சி என தம்மை நம்பிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கட்சியும் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான சமரசப் பேச்சுக்களையும் நடாத்திக் கொண்டு தான் இருக்கின்றன. ரோசக்காரர்களாகப் பிதற்றிக் கொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் உள்ளடக்கம்.

தனிப்பெரும்பான்மையைப் பெரும் இலக்கில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், முன் சென்ற வாரங்களில் அலசப்பட்டது போன்று பல இடங்களில், குறிப்பாக சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பிரதிநிதிகளை வென்றெடுக்கக் கூடிய ஜனரஞ்சக வேட்பாளர்கள் யாரும் பெரமுனவால் களமிறக்கப்படவில்லை.

ராஜபக்ச சகோதரர்களின் வெற்றியில் பங்கெடுக்க வேண்டும் என்ற காரணமும் பிராந்திய தேவைகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. தாம் விரும்பும் புதிய தலைமுறை முஸ்லிம் தலைவர்களை இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு வலுக்கட்டாயமாக உருவாக்கிக் கொடுக்க ராஜபக்ச சகோதரர்கள் போட்டிருக்கும் திட்டம் சமூக மட்டத்தில் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதற்கிடையில், பெரமுன வெற்றி பெற்றால், வலிந்து கொடுக்கக்கூடிய இரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள், அவ்வாறே கொடுக்கப்படினும் கூட பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்தின் தேவைகள், இச்சமூகம் எதிர் நோக்கும் இனவாத சவால்களுக்கு முன் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

தான் முழு நேர அரசியல்வாதியானாலும் கூட சமூகத்தின் 'சில்லறைப்' பிரச்சினைகளுக்கெல்லாம் தலையிடப் போவதில்லையென பெரமுன தேசியப்பட்டியல் நம்பிக்கை நட்சத்திரம் அலி சப்ரி மிகத் தெளிவாக, பகிரங்கமாக, கடந்த மே மாதம் 18ம் திகதி என்னுடனான வீடியோ நேர்காணலில் தெரிவித்திருந்தார். அத்துடன், ஒரே நாடு – ஒரே சட்ட அடிப்படையில் கடடியெழுப்ப வேண்டிய இலங்கை தேசம் தொடர்பில் அவரது பார்வையும் கோணமும் சாதாரண மக்களின் உணர்வுகளிலிருந்தும் மாறுபட்டது.

ஜனாஸாக்கள் எரிக்கப்படுகிறது என்பது முஸ்லிம்களின் உணர்வு, சமூகத்திற்கெதிரான ஓர வஞ்சனை இடம்பெறுகிறது என்பது பரவலான கவலை. ஆனால், அது அலிசப்ரி போன்ற தளத்தில் உள்ளவர்களுக்கு அதே உணர்வைத் தரக்கூடிய விடயமில்லையென்பதை அந்த நேர்காணலை நிதானமாக அவதானிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். சோனகர்.கொம் முகநூல் பக்கத்தில் அப்பதிவு இருக்கிறது.

சமூக மட்டம் என்ற வரையறை தாண்டி தேச மட்டம் என்ற நிலையில் தாம் இருப்பதாக அவர் கருதுகிறார். அதற்கான உரிமையும் அவருக்கு உண்டு. ஆயினும், இன்றைய இலங்கையின் சூழ்நிலையில் வாழும் முஸ்லிம்கள் இது போன்ற எண்ணப்பாடுள்ளவர்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏற்றுக் கொள்ளும் சிலர், அவருக்கும் ஜனாதிபதிக்கும் இருக்கும் 'தொடர்பு' தமக்கு நன்மை பயக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே ஏற்றுக் கொள்வர். ஆயினும், கைவசம் நல்ல வருவாயும் வாழ்க்கை வசதியும் கொண்ட அவருக்கு இந்த நிலை அரசியலில் ஆர்வமில்லை.

பேருவளை மர்ஜானைப் பொறுத்தவரை அவருக்கு தேசியப் பட்டியல் தரப்பட்டாலும் தரப்படாவிட்டாலும் கூட இதுவரையான அரசியல் வட்டம் எதுவோ அதுவே தொடரும். அந்த வகையில் முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைகளுக்கும் அவருக்கும் தூரம் அதிகம். இவ்விருவருமே பெரமுனவில் எதிர்பார்க்கப்படும் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள்.

இவர்கள் தவிர, கண்டியில் கோலாகலமாக செலவு செய்து கொண்டிருக்கும் பெரமுன வேட்பாளர் பாரிஸ் மக்களால் நம்பப்படுகிறாரா? என்பது முதற்கேள்வி. தப்பித் தவறி வென்று விட்டால் கோட்டாபே ராஜபக்சவின் நண்பர் என இன்னும் கூறிக் கொண்டிருக்கும் அவரை பகைத்துக் கொள்ள வேண்டாமே என கூட்டங்களுக்கு செல்வதென்பது சிலரின் நிலைப்பாடு. எனினும், ஓகஸ்ட் 5ம் திகதி அவரது பெயருக்கு அருகில் புள்ளடியிடப்படும் வரை தற்போதைய செலவுகள் எல்லாம் அறவிட முடியாத கணக்குகளே.

மறு புறத்தில், கடந்த காலங்களில் நாடாளுமன்ற ஆசனங்களை நிரப்பியிருந்த பலர் இருக்கிறார்கள். ஹக்கீம் - ரிசாத் என்ற இரு தலைவர்களிடம் முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடிய வட – கிழக்கு வாக்கு வங்கியிருக்கிறது என்பதே இதுவரையான வரலாறு. அது மாற வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவெடுக்கும் தேர்தலாகவே எதிர்வரும் பொதுத் தேர்தல் இருக்கப் போகிறது.
உச்ச கட்ட போட்டி கிழக்கு மாகாணத்திலேயே எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் அம்பாறை மாவட்டமே முஸ்லிம் தனித்துவ அரசியல் என்று அப்பிராந்தியத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக பேசப்பட்டு வரும் உணர்வின் எதிர்காலத்தை முடிவெடுக்கப் போகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏதோ ஒரு வகையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுண்டு. ஆயினும், அம்பாறையைப் பொறுத்தவரை மூன்று ஆசனங்களைப் பெறுவதென்பது சிக்கலான விடயமாக மாறியிருக்கிறது.

ஒரு புறம் அங்கு மு.கா – அ.இ.ம.கா செல்லச் சண்டை நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் அதாவுல்லாவின் வாக்குச் சிதைப்பும் அவதானிக்கப்பட வேண்டிய காரணியாகும். ஒரே கட்சியிலிருந்து மூன்று பிரதிநிதிகளா, இரண்டும் ஒன்றுமா? அல்லது மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு ஆசனமா? ஒன்றுமில்லையா? என்ற கேள்விகளும் அங்குண்டு. எவ்வாறாயினும், மேலோட்டமான பார்வையிலேயே இலங்கை முஸ்லிம்களுக்கு யார் தலைவராக இருக்க வேண்டும் என்ற ராஜபக்சக்களின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பது அத்தனை இலகுவான காரியமில்லையென்பது புலப்படும்.

இதனைத் தாண்டி, தமது உணர்வு – தேவை அல்லது எதிர்பார்ப்புகள், விட்டுக்கொடுக்க முடியாமை மற்றும் அவசியம் எனக் கருதி மக்கள் கிழக்கில் அதாவுல்லாஹ்வை புறக்கணித்தாலோ, கண்டியில் பாரிசுக்கு வாக்களிக்காமல் விட்டாலோ கூட பெரமுனவுக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில், அவர்களும் தமக்கான தேசிய இலக்கு மற்றும் அடைவு குறித்து தெளிவாக இருக்கிறார்கள்.

அண்மையில் கருத்துரைத்த நிமல் லன்சா, தேவையேற்படின் நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பெரமுன கூட்டு சேரும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இரண்டாகியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக, வென்றாலும் - தோற்றாலும் தாம் ஆட்சியின் பங்காளர்கள் என்ற கொள்கைக்கு உயிர் கொடுக்கலாம். கையளவு நாடாளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டாலும் சஜித்தி;ன் பலவேகய பெரமுனவோடு கூட்டு சேர்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்ற நிலையில், தமக்கான பெரும்பான்மையைப் பெறும் தேவை வந்தால் ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியையோ அல்லது சஜித் அணியில் இருக்கக் கூடிய சிறுபான்மைக் கட்சிகளையோ கூட்டு சேர்த்துக் கொள்வதற்கே பெரமுன முயலும்.

அவ்வாறான சந்தர்ப்பம் உருவானால், தேர்தல் பிரச்சாரங்கள் முழுவதுமாக ராஜபக்சக்களை விமர்சித்தும் அவர்களது தரப்பினால் மேற்கொள்ளப்படும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளை மூலதனமாக்கியுமே வாக்குகளைக் கவர முயற்சி செய்து கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்ன செய்யும்? என்றொரு கேள்வியும் உண்டு. கடந்த கால வரலாறு, இந்தப் பூனைகள் பாய்ந்து விடும் என்றே பதில் சொல்கிறது.

அதற்கேற்ப, இப்படியொரு கேள்வி கேட்கப்படின் ஹக்கீமும் - ரிசாதும் பிடி கொடுக்காமலேயே இதுவரை பதில் சொல்லி வருகிறார்கள். சரி, அவ்வாறே அவர்கள் சேர்ந்து கொள்வார்கள் என்றால் அதனால் சமூகம் அடையக் கூடிய நன்மைகள் என்ன? என்ற கேள்வியெழுந்தாக வேண்டும். ஆனால், சரணாகதி அரசியல் ஊடாக தம் தலைவனுக்கு ஒரு அமைச்சுப் பதவி கிடைத்தால் போதும், அதைக் கொண்டு நமக்கொரு வேலை வாய்ப்பு அல்லது ஏதோ ஒரு சலுகை, நன்மை கிடைத்தால் போதும் என்ற வரையறைக்குள் இருந்து அரசியலை எதிர்கொள்ளும் வாக்காளப் பெருமக்கள் இது பற்றி சிந்திக்கப் போவதில்லை.

தற்போது நாடெங்கும் மேடையேறி அல்லாஹ், ரசூல் என்று மார்க்கப் பற்றோடு அரசியல் பிரச்சாரம் செய்யும் தன்மானச் சிங்கங்களான இதர வேட்பாளர்கள் அந்த எண்ணமே வரக்கூடாது என்று பிரார்த்திப்பார்கள். ஆக, இன்னும் இரண்டு வாரத்தில் எதற்காக வாக்களிக்கப் போகிறோம் என்பதன் தெளிவு மக்களுக்குத் தான் தேவைப்படுகிறது.

இம்முறை தேர்தலில், குறிப்பாக அம்பாறையில் கருணா அம்மானின் இனவாத அலப்பறைகள் தான் பெருவாரி பேசுபொருளாகவும் முஸ்லிம்களை மன உளைச்சலுக்கும் உள்ளாக்கி வருகிறது. நிதானப் போக்கில் சிந்திக்கும் தமி;ழ் மக்களும் கருணாவின் இனவாதக் கருத்துக்களால் வெறுப்படைந்துள்ளார்;கள். 2014 இறுதியில் தனது வெற்றி வாய்ப்பு உறுதியென நம்பிய மஹிந்த ராஜபக்ச தேசிய ஊடகங்களையும் கையில் வைத்துக் கொண்டு மக்களிடம் வலுக்கட்டாயமாக உருவாக்க முனைந்த சிந்தனையோட்டம் வெற்றி பெறவில்லையென்ற கடந்த கால படிப்பினையைக் கொண்டு பார்க்கையில் கருணாவின் பேச்சுக்களைப் பொறுத்தவரை முஸ்லிம் சமூகத்துக்கு அவசியப்படுவது பொறுமையாகும்.

தேர்தல் முடிந்த பின் மாத்திரமன்றி, இப்போதும் முஸ்தபாக்கள் முபாரக்குகளுடன் கருணா தனது அரசியலைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார். ஓகஸ்ட் 7ம் திகதியாகும் போது, தமிழ் மக்கள் தாம் பட்டுணர்ந்த பாடங்களைக் கொண்டு கருணாவுக்கு நல்ல பாடத்தைப் புகட்டினால், இதுவும் கடந்து போன இன்னொரு கட்டமாகி விடும். எனவே, கருணாவுக்கு பதில் கருத்து கூறிக்கொண்டிருப்பது இன்றைய முஸ்லிம் அரசியலின் தேவையன்று. அந்நிலையில் தான் கல்முனை வாழ் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று சூழ்நிலையைத் திசை திருப்புவது பல அரசியல் ஆபத்துகளை உருவாக்கக் கூடியது.

இவ்வாறான சூழ்நிலைகளின் போது தான் முஸ்லிம் சமூகம் தமக்குத் தேவையான நிதானமான தலைமைத்துவம் குறித்து ஏதோ ஒரு அளவிலாவது சிந்திக்கக் கடமைப்படுகிறது. 20 லட்சம் முஸ்லிம்களுக்குள் அவ்வாறான நல்ல ஆளுமையுள்ள, சமூகப் பற்றுள்ள நல்ல தலைமைத்துவ பண்புள்ள ஒருவர் இல்லவே இல்லையென்று சொல்வது தவறு. ஆயினும், தற்போதைய அரசியல் களத்தில் இல்லையென்பது உண்மை.

எனவே, இருப்பவர்களிலிருந்தே தெரிவு செய்யும் கட்டாயம் வாக்காளர் மத்தியில் திணிக்கப்படுகிறது. ஆக, கடந்த தடவை நாடாளுமன்றில் அமர்ந்திருந்த 20 பேர் ஏதோ ஒரு வகையில் முன்னுரிமையைப் பெறுகிறார்கள். இலங்கை அரசியல் சூழலும் பலம் படைத்தவர்களைச் சுற்றித் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அரசியல் பலம் யாருக்கு இருக்கிறதோ அவரிடமே மக்களும் செல்வார்கள், ஆட்சியாளர்களும் அண்ட விடுவார்கள்.
பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு இருக்கப் போகும் இறுக்கமான சூழ்நிலை இந்நாட்டின் அரசியலில் இன்னொரு அத்தியாயத்துக்கு வழி வகுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நாடாளுமன்றில் பெரமுன தரப்பு பெரும்பான்மையைப் பெறுமாக இருந்தால், நாட்டின் சட்ட – திட்டங்களில், குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் அனுபவிக்கும் சலுகை விதிகளில் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கலாம். அச் சூழ்நிலையில் ஏற்படக் கூடிய சவால்களை சமாளிக்க அனுபவமும் அவசியப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.

இச்சூழ்நிலை, ஏலவே மக்களால் குறை கூறப்பட்டுக் கொண்டிருக்கும் அதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சாதகமாக அமையினும் கூட, வேறு என்ன தெரிவு இருக்கிறது? என்ற கேள்வியெழும். தனக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியலுக்கு மர்ஹும் அஸ்வர் எத்தனை விசுவாசமாக இருந்தாரோ, அதைவிடவும் விசுவாசமானவர்களையே பெரமுன, தம் ஆட்சிக்குட்பட்ட சபையில் எதிர்பார்க்கிறது.

ரணில் - சஜித் தரப்புகள் தமது பாரம்பரியத்துக்கேற்ப கட்சிகளுக்கிடையிலான கூட்டு என்ற அடிப்படையில் ஒப்பந்த அரசியலையே முன்னெடுத்துச் செல்கிறது. பிராந்தியத்துக்குப் பிராந்தியம் இதில் சாதக – பாதங்கள் இருப்பினும் கூட, நாடாளுமன்றில் எழக்கூடிய தேசிய சவால்கள் என்று வரும் போது அதனைக் கையாள்வதற்கான வளைவு சுளிவுகள் தெரிந்தவர்கள், குறிப்பாக இந்த இக்கட்டான காலத்தில் அவசியப்படுகிறார்கள்.

சமூகத்தை முன் நிறுத்திய எதிர்காலத்திற்கு இது அவசியப்படுகின்ற போதிலும், சமூக உரிமைகள் முடக்கப்படுகிறது எனக் கூறி இன்னொரு தடவை கூட்டு இராஜினாமாவெல்லாம் எம் தலைவர்கள் செய்யப் போவதில்லை. எனவே, மேடையில் பேசிக்கொண்டிருப்பவருக்குக் கை தட்டிக்கொண்டிருந்த காலத்தைக் கடந்து, அங்கிருப்பவர் மக்களின் தேசிய பிரச்சினையை எவ்வாறு கையாளப் போகிறார், எவ்வகையான திட்டங்கொண்டு ஒட்டு மொத்த சமூகத்துக்கும், அதன் அபிவிருத்திக்கும் பங்களிக்கப் போகிறார் என்பதையும் வாக்காளர்கள் அவதானிக்க வேண்டும்.
ஓகஸ்ட் 5 தவறவிட்டால், அடுத்த ஐந்து வருடங்களுக்கு மயிலுக்கு வாலைக் கடன் கொடுத்து விட்டு கூவிக் கொண்டிருக்கும் சேவலின் கதையாகவே சமூகத்தின் கதை மாறும். 

சிந்தித்து வாக்களிப்பீர்!


jTScYcS
Irfan Iqbal
Chief editor, Sonakar.com

1 comment:

Habrah said...

மாஷா அழ்ழாஹ் அருமையான அறிவுரைகள் வாழ்த்துக்கள்

Post a Comment