உழ்ஹிய்யா சம்பந்தமாக ACJU விடுக்கும் முக்கிய வேண்டுகோள் - sonakar.com

Post Top Ad

Wednesday 15 July 2020

உழ்ஹிய்யா சம்பந்தமாக ACJU விடுக்கும் முக்கிய வேண்டுகோள்


உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர். 

உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றி, அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் “உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (108:02) என்று குறிப்பிட்டுள்ளான்.  

இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வதுடன், எமது நாட்டில் நடைமுறையிலுள்ள விலங்குச் சட்டம் (Animal Act No.29 of 1958)  கூறும் விடயங்களையும் கட்டாயம் கவனத்திற் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது. 

கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இவ்வருடம் உழ்ஹிய்யாவின் அமலை நிறைவேற்றும் பொழுது, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். 

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க வேண்டும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஒடட்கம் கிடைக்கப்பெறாமையினால் ஆடு அல்லது மாட்டையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியும்; அவையல்லாத எதுவும் உழ்ஹிய்யாவாக நிறைவேற மாட்டாது. ஓர் ஒட்டகம் அல்லது ஒரு மாட்டில் ஏழு நபர்கள் மாத்திரமே கூட்டுச்சேர முடியும். 

பிரதேசத்துக்குப் பிரதேசம் நிலைமைகள் வித்தியாசப்படுவதனால், வீண் சர்ச்சைகள் எதுவுமின்றி தத்தமது பிரதேசங்களில் முறையாக உழ்ஹிய்யாவை நிறைவேற்ற முடியுமா என்பதை, தமது பிரதேச ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் நிர்வாகம்;, ஏனைய முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை செய்து, பொருத்தமான முடிவொன்றை எடுத்துக் கொள்ளுமாறும், அம்முடிவிற்கு ஊர் மக்கள் அனைவரும் கட்டுப்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். 

உழ்ஹிய்யாக் கொடுப்பது சிரமம் எனக் காணப்படும் பிரதேசங்களில்  உள்ளவர்கள், அதனை நிறைவேற்ற உறுதி கொண்டால், பொருத்தமான வேறு பிரதேசங்களில் நிறைவேற்ற ஏற்பாடு செய்துகொள்ளலாம். 

உழ்ஹிய்யாவுடைய அமல்களை நிறைவேற்றுவோர் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.

உழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும்; தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.

நம் நாட்டின் சட்டத்தை இந்நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற் கொண்டு, மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

ஏழு நபர்கள் இணைந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஒட்டகத்தையோ உழ்ஹிய்யாவாக நிறைவேற்றுவதை விட, தனித்தனியாக ஒவ்வொருவரும், ஓர் ஆட்டினை உழ்ஹிய்யா கொடுப்பது ஏற்றமானதாகும். இச்சிறப்பினை அடைந்து கொள்ள ஒவ்வொருவரும் தனது சத்திக்கேற்ப முயற்சிக்கவேண்டும்.
எப்பிரதேசங்களில் மாடுகளை உழ்ஹிய்யாவாக நிறைவேற்றுவது சிரமமாக உள்ளதோ, அப்பிரதேசங்களில் ஆடுகளை உழ்ஹிய்யாவாக நிறைவேற்றிக் கொள்ளவும்.

அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றிவருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

  • மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையையும் கொடுப்பது கூடாது.
  • உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.
  • அறுப்பதற்காகப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி, கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.
  • உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை ஒன்றுக்கு முன் ஒன்று கிடத்தி அறுக்கக் கூடாது.
  • குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.
  • அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத் தெளித்து சூழல் சுற்றாடல் சுத்தத்தை உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.
  • சமூக இடைவெளி பேணுதல், முகக்கவசம் அணிதல் போன்ற கோவிட் 19 சம்பந்தமாக அரசாங்கம் வழங்கும் வழிகாட்டல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
  • பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.
  • நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்து கொள்வதோடு, ஏனைய நாட்களை இதற்காக பயன்படுத்துவது சிறந்ததாகும்.
  • உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துகொள்ள வேண்டும்.
 
பள்ளிவாயல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லினங்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.

வஸ்ஸலாம்

அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்
உதவி பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

குறிப்பு : மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரும் ஜுமுஆத் தொழுகையின் பின் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டி, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பார்வைக்கிடுமாறு மஸ்ஜித் நிர்வாகிகளை ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கிறது. மேலும் உழ்ஹிய்யா தொடர்பான மேலதிக விளக்கங்களை உள்ளடக்கிய “தியாகத்தை பறைசாற்றும் உழ்ஹிய்யா ஒரு விளக்கம்” எனும் கையேடு ஜம்இய்யாவின் இணைய தளமான www.acju.lk இல் மேலதிக வாசிப்புக்காக பதிவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment