கலாசார அமைச்சின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி மரபுரிமை ஆவணங்களை டிஜிடல் நவீன தொழிநுட்ப முறையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் நூலகம் பௌண்டேசன் மட்டக்களப்பு கிளையின் அனுசரனையில் மேற்கொண்டு வருகிறது.
இதன்படி மட்டக்களப்பு மாவட்ட கலாசாரகூடத்தில் காலனித்துவ ஆட்சியாளர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மரபுரிமை ஆவணங்களான வரலாற்றச் சாதனங்கள் ஏடுகள் மற்றும் பண்டைய தொன்மை கூறும் ஆவணங்கள் மென் பிரதியில் பதி வேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்விதம் ஆவணம் செய்யப்பட்ட பிரதிகளை இன்று (28) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது குறித்த நூலகம் பௌண்டேசன் நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளைப் பணிப்பாளர் சொக்கலிங்கம் பிரசாத் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், மேலதிக அரசாங்க அதிபர் காணிப்பிரிவு நவரூப ரஞ்சினி முகுந்தன், உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஜெய்னுலாப்தீன் உட்பட அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்து தெரிவிக்கையில் எதிர்கால சந்ததியினர் எமது பண்டையகாலத்து வரலாறுகளை அறிந்து கொள்வதற்கு இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளது. இதனை செயல்படுத்த முன் வந்தமைக்கு குறித்த செயல்பாட்டு நிறுவணத்திற்கு நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். இந்த பயனுள்ள வேலைத் திட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி செய்யும் தமிழ் சகோதரர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி பாராட்டுகின்றேன்.
எதிர் காலத்தில் தமிழ் மக்களின் இருப்பினை உறுதி செய்யும் நமது கலாசார முறைகள் ஏனைய ஆக்கங்கங்கள் டிஜிடல் கட்டமைப்பில் ஆவணப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது. இதனை நிறைவேற்றுவதற்கு இந்நிறுவனம் முன்வர வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment