மருந்தும் நாமே நஞ்சும் நாமே..! - sonakar.com

Post Top Ad

Friday 29 May 2020

மருந்தும் நாமே நஞ்சும் நாமே..!


மே மாதம் 25ம் திகதி மாலை நேரம், அளுத்கம, தர்கா நகரில் மூளை வளர்ச்சி குன்றிய ஒரு சிறுவன் அநியாயமாக பொலிசாரால் தாக்கப்பட்ட செய்தி சிலர் அறிந்திருக்கலாம், பலர் அறியாமலே விட்டிருக்கலாம்.

பரபரப்பாக பேசப்படும் ஒரு விடயம் கூட சமூகத்தின் கடைசி மட்டத்தை வந்து அடைவதற்கு சில நேரம் கஷ்டப்படும். கடந்த எட்டு வருடங்களாக இலங்கையில் இடம்பெற்று வரும் இன விரோத நடவடிக்கைகளின் போதான அனுபவத்தை இதைவிட சுருக்கமாக என்னால் சொல்ல முடியாது. சிலவேளைகளில் பக்கத்து தெருவில் நடந்திருக்கும் ஒரு விடயத்தை கூட அறியாத நிலையில் நம் மக்கள் வாழ்கிறார்கள்.

முஸ்லிம்களிடம் பொதுவான ஒரு பழக்கம் இருக்கிறது. தமது நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதனை முதலில் 'பொய்' என மறுத்து விடுவது. பின் அதனை நியாயப்படுத்த முனைவது. இரண்டு தசாப்தங்களுக்கு மேற்பட்ட என் ஊடக அனுபவத்தில் எமது சமூகத்திலேயே இப்பண்பு அதிகமிருப்பதைக் கண்டிருக்கிறேன் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

2016ம் ஆண்டு ரமழான் மாதத்தில் மதீனா, மஸ்ஜிதுன் நபவியருகே இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை இந்த வருடம் ஜனவரியில் கூட மறுத்தவர்கள் இருக்கிறார்கள். சர்வதேச விவகாரங்கள் இப்படியிருக்க, உள்நாட்டு விவகாரங்களிலும் ஒரு தெருவின் விடயத்தை அடுத்த தெருவில் உள்ளவரும், ஊரின் விடயத்தை அடுத்த ஊரில் உள்ளவரும், மாகாண விடயத்தை அடுத்த மாகாணத்தில் உள்ளவரும் என்ற நிலையிலும், ஆட்சியில் எந்தக் கட்சி இருக்கிறதோ அந்தக் கட்சியைக் காப்பாற்றும் மும்முரத்திலும் நமது சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கூட மூடி மறைக்கும் முன்னெடுப்புகள் சதா இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

2014 அளுத்கம வன்முறையின் ஆரம்பம் கூட, முதற்கட்டத்தில் ஊரில் உள்ளவர்களால் மறுதலிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அது குழு மோதல் இல்லை இன வன்முறையென்பதை அறிந்து கொண்டதும், தத்தமது வீடுகள் தாக்கப்பட்டதும் தான் மக்கள் அதன் விபரீதத்தை உணர ஆரம்பித்தார்கள், சிதறியோடினார்கள்.

நாம் மிகத் தெளிவாக ஒரு விடயத்தை இன்று காண்கிறோம். அதுதான், இலங்கையின் அரசியல் முற்று முழுவதும் பேரினவாதத்தை நிறுவும் நிகழ்ச்சி நிரலைக் கொண்டியங்குகிறது. நவீன கால இலங்கை அரசியலுக்கு அதுவே ஒரே வழியென இன்றைய அரசியல்வாதிகள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இதன் தாக்கம் வெளிப்பட்டிருந்தது ஒரு புறமிருக்க, அந்தத் தேர்தலில,; அதுவரை தம்மை முற்போக்கு சக்திகள் என சொல்லிக் கொண்டிருந்த சிங்கள மக்களின் மௌனம் என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இலங்கை முஸ்லிம்கள் மதத்தால் முஸ்லிம்கள் என்று அறியப்படுகிறார்களே தவிர, பூர்வீகத்தில் இலங்கையரே. இலங்கையைப் பூர்வீகமாகக் கொள்ளாத ஏனைய நாட்டின் வம்சாவளிகள் இன்னும் தத்தமது கலாச்சாரங்களோடு தான் வாழ்கிறார்கள், அதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. போரா மற்றும் மேமன் சமூகத்தினரிடம் அத்தாக்கம் இருந்தாலும் கூட அவர்களிலும் பெரும் பகுதியினர் இலங்கை சமூகவியல் பண்புகளுடனேயே வாழ்கிறார்கள். மலே சமூகத்தினர் இவ்விரு சமூகங்களையும் விட அதிகமாக இலங்கையின் சமூகவியலோடு கலந்து கொண்டுள்ளார்கள்.

சோனகர்களைப் பொறுத்த வரை தமக்கு அரபு அல்லது உருதுப் பெயர்களை சூட்டிக் கொண்டாலும் எப்போதும் இலங்கையர்களாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இடையில், கடந்த நாற்பது வருடங்களுக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த தலைமுறை மத்தியில் நாம் ஏதோ இலங்கையின் விருந்தாளிகள் என்ற மாயை உருவாக்கப்பட்டு எகிப்து, ஈரான், சவுதி, குவைத் தான் நமது பூர்வீகம் என்ற எண்ணப்பாடு விதைக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் பின் அந்த மனப் போக்கில் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, இதுதான் கள யதார்த்தம்.

இந்த எண்ணப் போக்கு அரசியலிலும் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கிறது. இதை நன்கு அறிந்து வைத்துள்ள பேரினவாத சக்திகள் அதனை அவ்வப்போது திறம்படப் பயன்படுத்துகின்றன. அண்மைய உதாரணமாக தற்போதும் பேசு பொருளாக இருக்கும் குவைத்திலிருந்து திரும்பி வந்தவர்கள் பற்றிய விபரத்தை முன் வைக்கலாம்.

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையருக்கு பொது மன்னிப்பு வழங்கும் படி இலங்கை அரசின் சார்பில் முன் வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அந்நாட்டு அரசு அதற்கான காலக்கெடுவாக ஏப்ரல் 25ஐ அறிவித்திருந்தது. பின்னர் இதனை மே மாதம் இறுதி வரை நீடிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்த போதிலும் அதற்கு குவைத் இணங்கவில்லை. 

இந்நிலையில் மே மாதம் 19ம் திகதி முதலாவது தொகுதி இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது இலங்கை வெளிநாட்டுப் பணியகமும் குவைத்தில் இயங்கும் இலங்கைத் தூதரகமும். ஏப்ரல் 25ம் திகதியே நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டிய இலங்கைப் பிரஜைகளை பராமரிக்கும் பொறுப்பு குவைத் தூதரகத்தைச் சார்ந்தது. அங்கு என்ன நடந்தது? எவ்வகையான வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டது? என்ற கேள்விகள் கேட்கப்படாமலேயே குவைத்திலிருந்து வந்த அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானமை அரசியல் தளத்தில் பேசு பொருளானது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் விளக்கமளிக்கச் சென்ற அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நாங்கள் ஒன்றும் சிறுபிள்ளைகள் இல்லை, அங்கிருந்த கொரோனா பாதிப்புற்றவர்களை குவைத் இலங்கைக்கு அனுப்பி வைத்து விட்டது, மொத்தத்தில் கொரோனா குண்டுத் தாக்குதலாக இது அமைந்து விட்டது என்று விளக்கம் சொல்ல, அது ஒரு முஸ்லிம் நாடு இலங்கைக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையாக ஆளுங்கட்சி சார்பு அறிவாளிகளினால் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

இம்முறை பொது மன்னிப்பைப் பெற்று நாட்டை விட்டு வெளியேறுகிறவர்கள், மீண்டும் முறைப்படி விசா பெற்று வேலை வாய்ப்புக்காக குவைத் திரும்பலாம் என்ற சலுகையும் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் இலங்கை அரசின் முக்கியஸ்தர் ஒருவர் இவ்வாறு சொல்வதும் சர்ச்சையை உருவாக்குவதும் அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையில்லை. ஆனாலும், முஸ்லிம் உணர்வு பாதிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் எம்மவர்களே இதன் நியாய அநியாயங்களைப் பேசி வாதிக்க வேண்டியுள்ளது. 

எனினும், ராஜதந்திர உறவைப் பேணி வரும் குவைத்துக்கு எம்மவரின் மன உளைச்சல் புரியப் போவதில்லை.

கொரோனா சூழ்நிலையில் இடம்பெற்ற இன்னும் ஒரு கருத்து முறுகல் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கியதாக இருந்தது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கள் எரிக்கப்படுவதற்கெதிரான உணர்வலைகள் மேலோங்கியிருந்த சூழ்நிலையில் ஷார்ஜாவிலும் அடக்க அனுமதியில்லையென சர்ச்சைக் கருத்தை உருவாக்கி அழகு பார்த்தார்கள் பேரினவாத கொள்கைவாதிகள். இதன் விளைவில், அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பப்படவிருந்த உதவிகள் இடை நிறுத்தப்பட்டதாக இடையில் கூறப்பட்டது. எனினும், அமீரகத்துக்கும் இலங்கைக்குமிடையிலான ராஜதந்திர உறவு அதனைக் கையாளும் என்பதால் இதுவெல்லாம் தற்காலிக பின்னடைவு மாத்திரமே.

ஆயினும், அதிலும் கூட இலங்கை முஸ்லிம்களே அதிகம் கவலைப்பட்டவர்களாக இருந்தார்கள். தேசப்பற்றும் இதற்கான காரணம் என்பதை மறுதலிக்க முடியாது. ஆயினும், இந்த தேசப்பற்று அரசியல் சந்தையில் எந்தளவு மதிப்பைப் பெற்றிருக்கிறது என்பதே கேள்விக்குறி. 

இவ்வாறான சூழ்நிலையிலேயே கடந்த 25ம் திகதி தர்கா நகரில், வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த ஒரு மூளை வளர்ச்சி குன்றிய சிறுவனைப் பொலிசார் பிடித்துத் தாக்கித் துன்புறுத்திய சம்பவம் அம்பகஹ சந்தியில் இடம்பெற்றது. 14 வயதாகியுள்ள போதிலும் ஆறு அல்லது ஏழு வயது குழந்தைக்கான மூளை வளர்ச்சியே உள்ளதனால் இச்சிறுவனின் செயற்பாடுகள் குழந்தைத்தனமாகவே இருக்கிறது.

ஊரடங்கை மீறி வெளியே வந்ததாகக் கூறிய இந்தச் சிறுவனை பொலிசார் அடித்து, கைகளைக் கட்டித் துன்புறுத்தியதோடு நிறுத்திக் கொள்ளாமல் வழிப்போக்கர்கள் கூட நின்று தமது பங்குக்கு அடித்துத் துன்புறுத்தியது மிகவும் கொடுமையான மனித உரிமை மீறல். இதைக் கேள்வியுற்றதும், அருகிலிருந்த சிசிடிவி ஒளிப்பதிவொன்றில் பார்த்ததும் ஊர் மக்கள் கொதித்தெழுந்தார்கள். இந்த அநியாயத்துக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று துடித்தார்கள். இது முதற்கட்டம்.

எமது சமூகத்திலிருக்கும் இந்த நேர்மையான கோபத்தை ஒரு போதும் ஈடு செய்ய முடியாது. எனக்கு எம் சமூகத்தில் மிகவும் பிடித்த விடயமே இதுதான். யாருக்காக இருந்தாலும், இவ்வாறு ஒரு அநீதி இடம்பெற்றால் உடனடியாக நம் சமூகத்தவர் கொந்தளிப்பதை புலத்திலும், இணைய உலகில் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி காண்பதுண்டு. அந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்த விடயங்களுள் ஒன்று.

ஆனால், அந்த கொந்தளிப்பு சில விநாடிகளில் அடங்கி விடும், சில நாட்களில் மறந்தே போய் விடும். எனவே, நீதிக்கும் அநீதிக்குமிடையிலான போராட்டமும் குறுகியதாகி விடும். சில வேளைகளில் இவ்வாறான சூழ்நிலைகளைத் தணித்து, நீதியை கிடங்கில் போட்டு மறைப்பதில் எமது சமூகத்தின் அரசியல்வாதிகளுக்குப் பெரும் பங்கிருக்கிறது.

எல்லா பக்கமும் நாம் இருக்க வேண்டும், எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போட்டு விடக்கூடாது என்று கூறி ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி மற்றும் எல்லாக் கட்சியிலும் பங்களிப்பது என்பது சமூகத்துக்கு எதிரான அநீதிகளை மூடி மறைப்பதற்கான பிரசன்னமாக இன்றைய அரசியலில் தோற்றம் பெற்றுள்ளது.

இன்னொரு புறத்தில் தாம் எதிர்க்கட்சியிலிருந்தால் மாத்திரமே அநீதி தட்டிக் கேட்கப்பட வேண்டியது என்றும் ஆளுங்கட்சியில் இருந்தால் அடுத்தவர் மீது விரல் நீட்டப்பட வேண்டும் என்ற எழுதப்படாத வழக்கத்தையும் எம் அரசியல்வாதிகள் கொண்டிருக்கிறர்கள்.

தர்கா நகரில் ஒரு ஏழைச்சிறுவனுக்கு நடந்த அநீதியும் இவ்வாறே மூடி மறைக்கப்பட முயற்சிக்கப்பட்டது, அநீதியிழைத்த பொலிசாருடன் முட்டிக் கொள்ள வேண்டாம் அது 'வேறு' எங்கோ போய் முடியும் என ஏழைச் சிறுவனின் தந்தையை மிரட்டிய பிரதேச முஸ்லிம் அரசியல் சக்திகள் இதை ஏதோ ஒரு 'சாதாரண' நிகழ்வாக சித்தரிக்கக் கடும் பிரயத்தனம் மேற்கொண்டது. அதற்காக திகன வன்முறையின் போது வாயடைத்துப் போயிருந்த அப்போதைய ஆளுங்கட்சி அரசியல் சக்திகள் நல்லவர்கள் என்ற அர்த்தமும் இல்லை.

எவ்வாறாயினும், மாறி மாறி இவ்வாறே நமக்கு நாமே மருந்தாகவும் சில வேளைகளில் நஞ்சாகவும் இருக்கிறோம் என்ற நிகழ்கால உண்மை புரியப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். வழமை போன்று நாங்கள் அப்படிச் செய்யவில்லை என்ற கோசத்தோடும் நியாயங்கள் பேசப்படும், அளுத்கம வன்முறை நடந்த சூடு கூட ஆறாத நிலையில் பேருவளையில் நீதி வழங்கத் தவறிய ஆட்சியாளர்களுக்கு கூட்டம் வைத்துப் புகழ் பாடிய சமூகமாதலால் அதுவும் எதிர்பார்க்கப்பட வேண்டியதே.

இவை கூடத்தான் சின்ன விடயங்கள் என்று ஒதுக்கச் சென்றாலும், இன்று பொத்துவிலில் குறிப்பாக சின்னக்குடியிருப்பு மற்றும் அண்டிய பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு உருவாகியிருக்கும் இருப்பு குறித்த சவால்களுக்கும் இதே கள்ள மௌனமே பதிலாகிறது. மாயக்கல்லியில் சிலை வைத்த போது சாக்குப் போக்குச் சொன்னவர்களும், நாங்கள் தான் தற்போதைய ஆட்சியாளர்களின் பங்காளிகள் என இப்போது சொல்லிக் கொள்பவர்களும் அதையும் அரசியல் தளத்தில் வைத்துப் பேசு பொருளாக்கி மறக்க வைக்கும்  நிலையில் தான் இப்போது இருக்கிறார்கள்.

சில அரசியல்வாதிகளிடம் இது பற்றிப் பேசினேன். ஒவ்வொருவரும் அந்த 'எல்லைக்குள்' இருப்பவர்களிடம் தான் இது பற்றிக் கேட்க வேண்டும் என நழுவினார்கள். இது பற்றி விரிவான தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்ததன் ஒரு கட்டமாக எஸ்.எஸ்.பி மஜீதிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், மிக நியாயமான கேள்வியொன்றை முன் வைத்தார். அங்கு காணப்படுவதெல்லாம் பழங்கால கட்டிடமொன்றின் எச்சங்களா? அல்லது புதையுண்டு போன நவீன விகாரையா? அங்கு முற்கால கட்டிடச் சிதைவுகள் காணப்படுவதையே முஸ்லிம்கள் தானே சொன்னார்கள் என்றார்.

50 களில் சுவீகரிக்கப்பட மேற்கொள்ளப்பட்ட முயற்சியை வென்றெடுத்தே அங்கு குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருந்ததாக மேலதிக ஆவணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இவை அரசியல் தளத்தில் எவ்விதமான பெறுமதியைக் கொண்டிருக்கின்றன? அதுவும் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் நேரடி உத்தரவில் அங்கொரு கடற்படை முகாம் வரப் போகிறதெனும் போது பிரதேசத்தின் குறுநில மன்னர்கள் தாம் என்ன செய்வார்கள்? 

தனக்கு வரட்டும் என்று காத்திருக்கும் சமூகத்தில் பொது நியாயங்களுக்கு இடமேது?

jTScYcS
Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment