GMOA அறிக்கையும் இனவாத குழறுபடியும் - sonakar.com

Post Top Ad

Saturday 18 April 2020

GMOA அறிக்கையும் இனவாத குழறுபடியும்

https://www.photojoiner.net/image/Fl8ljRJ9

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் இலங்கைக்குள் ஊடுருவிய கட்டத்திலிருந்து தொடர்ச்சியாக அரசாங்கத்தில் தமது ஆளுமையை நிரூபிப்பதற்காகப் போட்டியிட்டு தோல்வி கண்டுள்ள நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இச்சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கான திட்ட முன்மொழிவொன்றை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளதாகக் கூறி அவ்வாவணத்தை தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.



உலக சுகாதார அமைப்பின் (W.H.O) வகைப்படுத்தலுக்கு அமைவாக எனும் கட்டத்தில் இலங்கையில் கொரோனா பரவல் நிலையை  Home Clusters (III A) சூழ்நிலைக்குள் அடக்கியுள்ள GMOA, இதிலிருந்து வெளியேறுவதற்கான செயற்பாட்டை மூன்றாகப் பிரித்துள்ளது.

அவையாவன: 

  • படிப்படியாகக் கட்டுபாடுகளைத் தளர்த்தல் 
  • வழமை வாழ்வு நோக்கிய அபிவிருத்திக்கான அடிப்படை மாற்றம் 
  • வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான திட்டமிட்ட செயல்முறைகளைப் பேணல்

எனினும், வெளியேற்றத் திட்டத்துக்கான முன்னுதாரணமாக கொழும்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டுள்ள கருத்துப் படிவத்தில் (Concept Abstract) முஸ்லிம் சமூகத்தை ஏனைய சமூகங்களிலிருந்து பிரித்து தனியொரு காரணியாக இணைத்திருப்பதன் ஊடாக கொரோனா பரவலில் (உதாரணத்துக்கு அமைவாக, கொழும்பு மாவட்டத்தில்) முஸ்லிம் சனத்தொகையின் பங்களிப்பு இருப்பதாக நேரடியாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. 

கொழும்பில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் முஸ்லிம்களுக்கும் பங்கிருக்கின்ற போதிலும் தனியாக முஸ்லிம் சமூகமே அதற்குப் பொறுப்பெனக் கூற வருவது வெளிப்படையான இனவாத அடிப்படையாகும். தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டோரிலும் முஸ்லிம்களுக்குப் பங்கிருக்கின்ற அதேவேளை ஏனைய சமூகத்தினரின் விகிதாசாரம் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் இதில் உள்ளடக்கியிருப்பது இனவாதத்தின் ஒரு வடிவமாகவே கணிக்கப்பட வேண்டியுள்ளது. சாரம்சமாக, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் கொரோனா தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக ஆரம்பம் தொட்டு அத தெரண, ஹிரு போன்ற ஊடகங்களில் தெரிவித்து வந்த கருத்தையே இது வலியுறுத்தி நிற்கிறது.

எனினும், இத்திட்ட முன்மொழிவுக்கு ஆலோசனை வழங்க விரும்புகிறவர்களை ஏப்ரல் 22ம் திகதிக்கு முன்பாக அதற்கான ஆலோசனைகளை வழங்குமாறும் GMOA தெரிவிக்கின்றது. அதற்கான மின்னஞ்சல் முகவரி:  [email protected]. மின்னஞ்சலின் தலைப்பினை “EXIT STRATEGY” என குறிப்பிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்சமயம், GMOA இணையத்தில், புதுப்பிக்கப்பட்டு..பதிவேற்றப்பட்டுள்ள அறிக்கையில் 'முஸ்லிம்கள்' தொடர்பான விபரம் நீக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அறிக்கை பூர்த்தியாக்கப்படவில்லையென்பதால் உறுதியான எதிர்ப்பில்லையேல் அது மீண்டும் இடம்பிடிக்கும் வாய்ப்பும் உண்டு.

எனவே, முஸ்லிம் சமூகத்தின் விஞ்ஞான நிபுணர்களுக்கு இது தொடர்பில் உடனடியாக செயற்படுவது கடமையாகிறது. அரசியல் மட்டத்தில் கண்டன அறிக்கைகள் வெளியிடுவதன் ஊடாக இதற்கான தீர்வைக் காண முடியாது. ஆயினும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் பங்கேற்கும் முஸ்லிம் மருத்துவர்கள், துறைசார் மருத்துவ நிபுணர்கள் இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது என்பதை சோனகர்.கொம் வலியுறுத்த விரும்புகிறது.

இவ்வாறான கட்டங்களில் 'அங்கீகாரம்' (recognition) முக்கியமானது என்பதால் பொதுமக்கள் தாம் அறிந்த விஞ்ஞான, புள்ளிவிபரவியல் மற்றும் சமூக - சுகாதார துறை சார் நிபுணர்களுக்கு இது தொடர்பில் அழுத்தம் கொடுத்து அவர்கள் ஊடாகவே GMOAவை அணுகுதல் பயன் தரும்.

Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment