உபுல் ரோஹனவை ராஜிதவுடன் இணைத்து பிரச்சாரம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 April 2020

உபுல் ரோஹனவை ராஜிதவுடன் இணைத்து பிரச்சாரம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை


அத தெரண தொலைக்காட்சியில் தோன்றி, கொரோனா தொற்றுக்குள்ளான முஸ்லிம்கள் மூவரினாலேயே சிங்கள - தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் தடைப்பட்டுப் போயிருக்கிறது எனும் தொனியில் அத்தொலைக் காட்சி கொண்டு சென்ற பிரச்சாரத்துக்குத் துணை போயிருந்த மருத்துவ ஆய்வாளர்கள் சங்க பிரதானி உபுல் ரோஹன, முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இருப்பது போன்ற படங்களை வெளியிட்டு அதனை மையமாகக் கொண்டு தவறான பிரச்சாரங்களை சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவிக்கிறார்.


குறித்த நபர், தான் சுகாதார அமைச்சராக இருந்த கால கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட புகைப்படங்களை வைத்து, அவரை தெரணவில் தானே பேசத்தூண்டியது போல், குறிப்பாக தமிழில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்ட சில நபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்திற்காகக் குரல் கொடுத்து வரும் தன்னைப் பற்றி முஸ்லிம்கள் மத்தியில் தவறாக சித்தரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவிக்கும் அவர், தன்னைத் தொடர்பு கொண்டு தொடர்ந்தும் ஆதரவளித்து வரும் முஸ்லிம் சமூகத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சோனகர்.கொம்முக்கு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment