தெரணவின் விடா முயற்சியும் சமூகச் சிக்கல்களும்! - sonakar.com

Post Top Ad

Monday 6 April 2020

தெரணவின் விடா முயற்சியும் சமூகச் சிக்கல்களும்!

https://www.photojoiner.net/image/HRR4E0ho

இலங்கையின் சட்ட திட்டங்கள், நாட்டின் இயல்பு வாழ்க்கை மற்றும் அனேக சாதாரண விடயங்களுக்கு இத்தீவில் எல்லா வகையிலும் முரண்பாடான ஒரு சமூகம் முஸ்லிம் சமூகம் என்ற மாயையைக் கட்டியெழுப்புவதற்கு அத தெரண தொலைக்காட்சி சேவை நீண்ட காலமாக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.



இதைத் தெரியாத முஸ்லிம்கள் நாட்டில் இல்லையென்றாலும் கூட தொட்டில் பழக்கம் சுடு காடு வரைக்கும் என்பது போல திரும்பத் திரும்ப அவர்களுக்குத் தீனி போட்டுக் கொண்டேயிருக்கிறோம். அவர்களது பிரச்சார வீச்சு அரசியல் ரீதியாக நம்மைப் பாதிக்காவிட்டாலும் நமக்கெதிரான சிந்தனைத் தூண்டலை ஏனைய சமூகங்களின் அடிமட்டத்திலும் உருவாக்கியுள்ளது, இன்னும் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு வாரத்துக்கு முன்னர் தான் பிறிதொரு நிகழ்ச்சி இடைவேளையின் போது தனது இனவாத சுயரூபத்தைக் கக்கியிருந்த ஒரு வேதாளத்தின் முன்னால் மூன்று முஸ்லிம் நபர்கள் இன்று சென்று அமர்ந்தாலும் கூட அவர்களும் நாணிக்குறுகி சமாளிப்பு என்ற வட்டத்தை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையை உருவாக்கி வைத்திருப்பது அவர்களும் பங்குதாரர்களான இச்சமூகமே.

ஏன்? என்ற கேள்விக்கு உடனடி விடையிருக்குமா என்பது சந்தேகமே. தம்மை வைரசும் அண்டாத சமூகம் என நம்பிக்கொண்டிருப்பது மாத்திரம் தான் காரணமா என்றால் இல்லையென்று சொல்லலாம். சில இடங்களில் வீடுகளில் முடங்கிக் கிடந்த மக்களைக் கூட நிவாரணப் பொருட்களைப் பெறுமாறு வெளியில் அழைத்து, அலைக்கழிக்க வைத்து, அதன் பின் அங்கிருந்தே தனிமைப்படுத்தலுக்கும் பலரை அனுப்பியதில் அரசுக்கும் பங்கிருக்கிறது.

அது போக, சமூக இடைவெளியின் மீதான அலட்சியம் எம் சமூகத்தவர் மத்தியில் இயற்கையாகவே இருக்கிறது. எதிலும் மிகவும் அன்யோன்யமாகப் புழங்கி, ஒரே சஹனில் அமர்ந்து சமத்துவத்தைப் பேணி வந்த சமூகத்துக்கு இது புது அனுபவம் தான். எனினும், இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வந்த பின்னரே அது பற்றி மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டும் என்று நினைப்பதாகவும் இதற்கு முன்னர் மக்களிடம் இவை பற்றிப் போதிய அளவு பேசப்படவில்லையென அஷ்ஷெய்க் முர்ஷித் முலாபர் சொல்லியிருப்பதும் முக்கியம் பெறுகிறது.

உலகக் கல்வியென பிரித்துப் பார்த்து, பொது அறிவிலிருந்தும் பொது விவகார நடைமுறைகளிலிருந்து மொத்தமாகவும் விலகியிருந்ததன் விளைவுகளுள் ஒன்றாக இதனைப் பார்ப்பதையும் தவிர்க்க முடியாது. 

ஒரு தேசத்தின் பிரஜைகள் என்ற அடிப்படையில், அதுவும் பல்லின மக்கள் வாழும் தேசத்தில் எப்போதும் கவனிக்கப்படும் சமூகமாக நமக்கென்ற கூட்டுப் பொறுப்பும் - தனிமனித பொறுப்புகளும் கூட இருக்கிறது. அது பற்றி ஆராய்ந்து எம் வாழ்வை ஒழுங்கு செய்வதில் எப்போதுமே நாம் தவறியே வருகிறோம். இனவாதத்துக்கு அடிபணிவது அதற்குத் தீர்வில்லை, ஆனால் தீனி போடுவதைத் தவிர்ப்பது நம் கட்டாய கடமை!

jTScYcS
Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

2 comments:

Mufthi Thaqiyyuddeen said...

நாம் ஒன்றை புரிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். எமது சமூகம் செய்யும் சில தவறுகள் எமது சமூகத்தாலே காட்டிக் கொடுக்கப்படுவது எமது சமூகம் கீழ்நோக்கி போவதற்கான ஓர் முக்கிய காரணமாகும். அதுமட்டுமல்லாமல் சமூக வளைத்தளங்களில் கண்டபடி விமர்சனங்கள் செய்வதன் மூலம் நிறைய பிரச்சனைகளுக்கு எமது சமூகத்தில் இருக்கும் மூதறிஞர்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இஸ்லாம் எந்தக் கல்வியையும் பிரித்துப் பார்க்கவில்லை ஆனால் எந்தக் கல்வியை பயின்றாலும் மார்க்க விழுமியங்களுக்கு அப்பால் செல்வதையே தடை செய்கிறது..... உலகக்கல்வி, மார்க்கக்கல்வி என்பதெல்லாம் ஓர் மாயையை. முஸ்லிம் சமூகம் விழித்துக் கொள்ளாத வரை இதன் தாக்கத்தை இவ்வரசாங்கத்தினூடாகவே நாம் அனுபவிப்போம் எனபதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை....

எனவே எமது அடுத்த தலைமுறையினருக்கு கல்வியை கல்லூரிகளில் பயில்வதுபோன்று மார்க்கத்தை வீட்டிலுள்ளவர்கள் கட்டாயம் தானும் தெரிந்து வைத்திருப்பதுடன் தம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்பது மாத்திரமல்லாது செயல்முறையிலும் ஊக்குவித்தால் இன்ஷா அல்லாஹ் இவ்வாறு அரசாங்கத்திற்குப் பயந்து தலைகுனியாமல் அல்லாஹ்வுக்கு பயந்து தலை நிமிர்ந்து உண்மை உரக்கச் சொல்வார்கள்...

CMR. (அல்லாஹ்வின் அடிமை) said...

Great dear. மாஷா அல்லாஹ்.

Post a Comment