கனவுகளும் கதறல்களும்...! - sonakar.com

Post Top Ad

Friday, 6 March 2020

கனவுகளும் கதறல்களும்...!உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் போன் கையில் இல்லாத சிறுவர்களே இல்லையெனும் அளவுக்கு தகவல் தொழிநுட்பம் அனைத்து தலைமுறையினரையும் முடக்கிப் போட்டுள்ளது. அவரவரைச் சுற்றிய உலகம் அவரின் விரல் நுனியில் என்றிருக்க, அவ்வப்போது, நாடு – சமூகம் - தலைவர்கள் - தேர்தல் என்றும் சில விடயங்கள் தனிநபர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.225 பேர் கொண்ட நாடாளுமன்றம், அதற்கொரு பிரதமர், அவர்களுக்கு மேல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதி எனும் அரசியல் சூழ்நிலையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கொரு தடவை தாம் விரும்பும் பிரதிநிதிகளை நாடாளுமன்றுக்கு அனுப்பி வைத்து, தாம் மற்றும் தம் சமூகம் சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்ப்பது இலங்கை மக்களின் வழக்கமாக இருக்கிறது.

தேர்தல் முடிந்து முதலாவது வாரம் ஆரம்பித்து, அடுத்த தேர்தல் அறிவிக்கப்படும் காலம் வரை தாமே தெரிவு செய்தவர்களைத் திட்டித் தீர்த்து, வசைபாடி, சமூக வலைத்தளங்களில் தமது ஏமாற்றத்தை, ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கும் வழக்கமும் விட்டபாடில்லை. ஒரு தெளிவுக்காக, அப்படியானால் அடுத்த தேர்தலிலாவது தமக்குத் தேவையான மாற்றுப் பிரதிநிதியை மக்கள் தெரிவு செய்கிறார்களா? என்றொரு கேள்வியைக் கேட்டால் அதற்குத் தெளிவான விடை சமூகத்தில் இல்லை.

அப்படியானால், இடைப்பட்ட காலத்தில் முன் வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் - கொட்டித் தீர்க்கப்படும் ஆதங்கங்களுக்கும் பெறுமதியில்லையா? என்றொரு கேள்வியும் உண்டு. எனினும், அடைவுகளால் தீர்மானிக்கப்படும் தற்காலிக எதிர்காலத்தைக் கொண்டு திருப்திப்படும் சமூகமாதலால் எல்லாம் கடந்து போய் விடுகிறது, கதறல்கள் மட்டும் ஓய்வதில்லை.

இப்போது, இன்னும் ஒரு வாய்ப்பு மலர்ந்திருக்கிறது. தாம் யாரால் ஆளப்பட வேண்டும் என்று ஒவ்வொரு தனி நபரும் தம் விருப்பத்தை 'வாக்காகப்' பதிய இன்னும் ஒரு வாய்ப்பு. சிங்கள சமூகத்தின் பெரும்பான்மையானோர் மீண்டும் தமது தெரிவு என்னவென்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையும் தமது தெரிவில் மிகவும் தெளிவாக இருக்கிறது. வட புலமாக இருக்கட்டும், மலையகமாக இருக்கட்டும் தாம் எதற்காக வாக்களிக்கப் போகிறோம் என்கிற 'பேரத்துக்கு' அந்த சமூகங்கள் தயாராகவே இருக்கின்றன. அவர்களின் தலைவர்களும் தமது இருப்பையும் சமூகத்தின் நலனையும் 'சமப்படுத்தும்' பொறிமுறையில் சிறப்பாகவே பயணிக்கிறார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் நிலை தொடர்ந்தும் பரிதாபமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஓயாமல் எழும் எதிர்பார்ப்புகளுள் ஒன்று தான் ஒற்றுமை. ஈஸ்டர் தாக்குதலையடுத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு ஏற்பட்ட நெருக்கடியை ஒற்றுமையாக எதிர்கொண்ட அந்த தருணத்தை வரலாறும் பொன்னெழுத்துக்களால் பொறித்துக் கொண்டது. ஆதலால், அதை மறக்க முடியாது. ஆயினும், அந்த சூழ்நிலை ஒற்றுமைக்கு அப்போதும் உத்தரவாதம் இருக்கவில்லை. அது தொடர்வதற்கான சாத்தியமும் இருக்கவில்லை.

இருந்த போதிலும் இந்த ஒற்றுமை குறித்த எதிர்பார்ப்பு அவ்வப்போது எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. முஸ்லிம்களின் இரு பிரதான அரசியல் கட்சிகளாக திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் - அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இவ்வாறான மக்கள் எதிர்பார்ப்பை தமது அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்தவும் கடந்த காலங்களில் தவறியதில்லை.

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும் 2014 ஊவா மாகாண சபைத் தேர்தல் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. கட்சியைக் காப்பாற்றத் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தியாகம் செய்து முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார் ஹரின் பெர்னான்டோ. ஐக்கிய தேசியக் கட்சி வீறு கொண்டெழுந்தது. எனினும், மஹிந்த ராஜபக்சவின் கணக்கு வேறு வகையில் அமைந்திருந்தது.

ஊவாவில் உள்ள முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்கச் செய்வதன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியைப் பலவீனப்படுத்த முடியும் என்பது அவரது கணிப்பாக இருந்தது. எனினும், அக்கால கட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த தொடர் முஸ்லிம் விரோத வன்முறைகளால் துவண்டு போயிருந்த சமூகத்தவரிடம் வேறு எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. வழக்கமாகவே, தமது இயலாமையைக் கொட்டித்தீர்ப்பதற்கு அந்த 20 – 21 பேரைத்தான் சமூகம் தேடும். அதிலும் ரவுப் ஹக்கீமையும்  ரிசாத் பதியுதீனையும் சப்பித் துப்புவதன் ஊடாக தமது சூழ்நிலை கொதிப்புக்கு ஆறுதல் தேடிக் கொள்ளும்.

ஏச்சும் - பேச்சுமே ஒவ்வொரு அரசியல்வாதியினதும் முதலீடு. குறித்த மாகாண சபைத் தேர்தலில் சமூக உணர்வை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விளைந்த ஹக்கீமும் - ரிசாதும் தாம் ஒற்றுமைப்பட முடிவெடுத்து விட்டதாகக் கூறினார்கள். பலத்த ஆரவாரம், சமூகம் ஒற்றுமைப்பட்டு விட்டது என்ற மாயை, தொப்பியும் சாரமும் செருப்புமாக பதுளையெங்கும் பிரச்சாரம் என்று இருவரும் அங்கே கூடாரமடித்திருந்தார்கள்.

வேட்புமனுத்தாக்கல் என்று வரும் போது இந்த ஒற்றுமைப் பிரச்சாரத்தையெல்லாம் மீறி இரு கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர்களைக் களமிறக்கின. ஒற்றுமையென்று சொன்னார்கள், ஆளுக்கு முப்பது வேட்பாளர்களைக் களமிறக்குகிறார்களே என்ற சந்தேகம் எழுந்த போது, அதனை அப்போதைய மு.கா செயலாளர் ஹசன் அலியிடம் வினவியிருந்தேன். அதற்கு அவர் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் குறித்த அளவு வேட்பாளரைக் களமிறக்க வேண்டும் என்றார். பட்டியலில் வெல்லக் கூடியவர்கள் எத்தனை பேர்? என்று மக்களும் தேடிப் பார்த்தார்கள். அதையும் மீறி, மஹிந்த ராஜபக்ச போட்ட கணக்குக்கு வடிவம் கொடுக்கவே அப்போதைய ஆட்சியின் பங்காளர்ளான இரு தலைவர்களும் இந்த நாடகத்தை அரங்கேற்றினார்கள் என்பதையும் மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.

ஊவாவுக்கு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர், முஸ்லிம் பிரதிநிதி, முஸ்லிம் உரிமையென்ற கோசங்களையெல்லாம் மீறி புத்தி சாதுர்யமாக முடிவெடுத்த ஊவா முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்சவின் திட்டத்துக்கமைவாக, அவர் வாழ்நாள் ஜனாதிபதியாக இருப்பதற்கு ஏதுவாக 18ம் திருத்தச் சட்டத்துக்கும் ஆதரவாகக் கையைத் தூக்கி 'நிரப்பிக்' கொண்ட இரு தலைவர்களின் போலி ஒற்றுமை நாடகத்தைப் புறக்கணித்து தூக்கியெறிந்தார்கள்.

அங்கு வாங்கிய அடியைக் கூட மறந்து தொடர்ந்தும் மஹிந்தவின் நிழலில் வாழ்ந்து வந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள், டிசம்பர் அளவில் மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்தே தமது தளத்தை மாற்றிக் கொண்டது. அதுவும் இறுதி நேரம் வரை தமது பாசக் கயிற்றை அறுத்துக் கொள்ள முடியாமல் திணறியே அந்த முடிவும் எடுக்கப்பட்டது. நன்றிக் கடனுக்கு மக்கள் மீண்டும் 2015 செப்டம்பரில் பழையன மறந்து அதே நபர்களை சபையேற்றி அழகு பார்த்தது. எனினும், அரசியல் ஆடு களத்தில் நின்று பிடிக்க முடியாமல் திணறிய கூட்டாட்சி அதன் உச்ச கட்டத் தளம்பல் நிலையை அடைந்து ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது. மீண்டும் சமூகம் பலிக்கடாவானது.

உச்ச கட்ட அரசியல் நெருக்கடியை சந்தித்த இந்த கால கட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் வெளிக்காட்டியிருந்த ஒற்றுமையெனும் சூழ்நிலை முன்னெடுப்பை குறைவின்றிப் பாராட்டும் அதேவேளை கடந்த காலங்களில் அரங்கேற்றப்பட்ட போலி நாடகங்களை மறக்கவும் முடியாது. ஆக, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மாறக்கூடிய அரசியல் நிலைப்பாடுகளை நம்பி ஏமாறுவதும் ஏமாறாததும் மக்கள் கடமையாக இருக்கிறது.

ஒவ்வொரு இனவன்முறைச் சம்பவங்களின் போதும் ஏசிப் பேசுவதற்காக மாத்திரம் பத்து பதினைந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் வேண்டுமென்றால், அந்த வாய்ப்பை பழக்கப்பட்டவர்களுக்கே வழங்குவதே நியாயம். இம்முறை நாடாளுமன்றம் முன் கூட்டியே கலைக்கப்பட்டுள்ளதால் ஓய்வூதியத்தை இழந்தவர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்காவது பயன் கிடைக்கும்.

மற்றும்படி, தெரிந்தவரே வந்தால் ஏதோ ஒரு ஐந்தாறு லட்சத்தைக் கொடுத்தாவது அரச தொழிலைப் பெறலாம் அல்லது பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுக்கலாம். அதனூடாக மாப்பிள்ளை வியாபாத்தை சிறப்பாக முன்னெடுக்கலாம் என்று எண்ணினால் கூட மாற்றுத் தெரிவு அவசியமில்லை. ஆயினும், ஐந்து வருடமாக திட்டித் தீர்த்தவர்களையே திரும்பவும் அந்த இருக்கைகளை சூடாக்க அனுப்புவதைத் தவிர வேறு தெரிவுதான் மக்களுக்கு இருக்கிறதா? என்பதும் விடை காணப்பட வேண்டிய கேள்வியே.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக ஒன்றிணைந்த தீர்மானத்தில் இல்லையென்பது தெட்டத் தெளிவானது. தற்போது திசை மாறியிருக்கும் இலங்கையின் அரசியல் போக்குக்கமைவாக தம்மை மாற்றிக் கொண்டுள்ள இச்சமூகம் வெளியில் காட்டிக் கொள்ளவில்லையாயினும் பீதியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

பெரமுன பிரச்சாரப் புலிகள் வெல்லும் பக்கமே சேர்ந்திருக்க வேண்டும் என்கிறார்கள். பழைய முகங்களோ எதிர்ப்பு அரசியல் தான் வழியென்று 'தற்போது' மறுபக்கம் இருக்கிறார்கள். இதில் எதைத் தெரிவு செய்வது தமக்கு இலாபம் என்பதை முடிவெடுக்க மக்களுக்கு ஒன்றரை மாதம் அவகாசம் இருக்கிறது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும் குறிக்கோளோடு ஜனாதிபதி தேர்தலுக்காக உழைத்ததை விட பல மடங்கு அடி மட்ட மக்கள் மத்தியில் 'தேசப் பாதுகாப்பு' பற்றி பிரச்சாரம் செய்து சிங்கள அரசொன்றை ஸ்தாபிக்கப் போவதாக உணர்வூட்டிக் கொண்டிருக்கும் சக்திகளுக்கு மத்தியிலேயே இந்த போராட்ட களம் அமைந்துள்ளது.

பிரித்தானியரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட இத்தீவு கிடுகிடுவென வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதே அன்றைய கனவாக இருந்தது. ஆயினும், சுதேசிய – முதலாளித்துவ கொள்கை முரண்பாடுகளின் விதைப்பால் அங்கிருந்து பின் நோக்கி நகர்ந்து, இன ஒடுக்குமுறை சகாப்தத்தைக் கடந்து, இன மேலான்மை யுகத்தில் இன்னும் பின் நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது.

அலங்கரிக்கப்பட்ட தெரு விளக்குகளும், கார்பட் வீதிகளுமே அடிப்படைத் தேவைகள் என்று திருப்திப்பட்டுக் கொள்ளத் தயாராக இருக்கும் சமூகத்தின் கூறுகளைப் பொறுத்தவரை எதுவும் நடக்காது என்ற வாக்குறுதி நேற்றுச் சொன்ன கதையாகத்தான் போகும் என்ற ஐயமும் இருக்கிறது. கொட்டின மேளத்தை கொட்டித்தானாக வேண்டும் என்ற சூழ்நிலைக்குள் சென்று விட்ட நிலையில் மாயக்கல்லிக்கு வாய் பிளக்கக் கதறி மஹர வந்ததும் அடங்கியிருப்பது போன்றே அவர்கள் எப்போதும் அடங்கியிருக்க நேரும்.

இந்த நிலையில், சமூகக் கூறுகளின் தனித்தனி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத பொதுச் சிந்தனைக்கு எந்த வழியிலாவது இடமிருக்கிறதா? சமூகம் எதை முற்படுத்தும் போன்ற கேள்விகளே அரசியல் வாதிகளின் மனங்களில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. தம்மை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக எதையாவது செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் போராடிக் கொண்டிருக்கும் இவர்களைத் தாண்டி, புதியவர்களுக்கு இடம் கிடைப்பதும் அரிதான விடயம்.

ஆதலால், மக்களுக்குத் தெரிவென்று ஏதும் கிடைக்குமா? என்பது சந்தேகமே. ஒருவேளை கோட்டாபே – மஹிந்த சொல்வது போன்றே மாற்று அரசியல் தலைமைகளை உருவாக்குவதற்கான நேரம் கனிந்து விட்டது என மக்கள் நினைத்து விட்டால், அதையே அல்லாஹ்வும் விரும்பினால் அதைத் தடுப்பதற்கும் யாரும் இல்லை. எனினும், பெரமுனவின் அரசியல் ஏஜென்டுகளை மக்கள் எந்தத் தராசில் வைத்து அளவிடப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சாத்தியமும் அமையும்.

ஈஸ்டரை அடுத்து உருவான சூழ்நிலையைப் போன்றே தற்போதும் பொதுத் தேர்தலை எதிர்நோக்கும் சமூகத்துக்குக் கட்டாயக் கடமையொன்று இருக்கிறது. அதுதான் நாடாளுமன்றில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது. இத்தேசம் பல்லின மக்கள் வாழும் தேசம் என ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று சர்வதேச சமூகத்துக்கு மத்தியில் தினேஷ் குணவர்தனவால் பேச முடிகிறதென்றால் அதை புலத்தில் நிரூபிப்பது மக்களின் கடமையாகிறது.

ஏசினாலும் பேசினாலும் 'எங்கடவங்க' இத்தனை பேர் நாடாளுமன்றில் இருக்கிறார்கள் என்று பெருமைப் பட்டுக் கொள்வதே எமது சமூகத்தின் கடந்த காலமாக இருந்தது. நிற்க, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதற்காக உழைக்க வேண்டிய கடமைப்பாடும் மக்களுககு இருக்கிறது. அதில் பலர் மௌனிகளாகவே இருக்கப் போகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அரசாங்கத்தின் எந்தக் குழுவில் அங்கம் வகித்தாலும், அண்மையில் நாடாளுமன்றில் முகத்திரை அணிவதற்கு எதிரான பரிந்துரையின் போது வாயடைத்து இருந்தது போல், கடந்த காலத்தில் 18ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து மஹிந்தவின் திருப்தியைக் கண்டது போல் இருக்கைகளை சூடாக்கும் மௌனிகளுக்குக் குறைவிருக்கப் போவதில்லை.

ஆயினும், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றில் நிறுவியாகிய வேண்டிய கட்டாயம் சமூகத்துக்கு இருக்கிறது. இதுவரை அனுபவித்தது போன்று 20 முதல் 21 அல்லது கூடுதலாக இன்னும் ஐந்தோ பத்தோ, சமூகப் பிரதிநிதித்துவம் குறிப்பாக பொதுஜன பெரமுன உருவாக்கக்கூடிய அரசின் நாடாளுமன்றில் இருந்தேயாக வேண்டும். இது, எந்தக் கட்சியில் போட்டியிட்டாலம் முஸ்லிம் வேட்பாளரை ஆதரித்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தையும் மக்கள் மீது திணிக்கிறது. துரதிஷ்டவசமாக இன மையக் கொள்கையின் அடிப்படையில் இயங்கும் இலங்கை அரசியலில், குறிப்பாக இக்கால கட்டத்தில் நாடாளுமன்றில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதுகாக்கப்பட்டேயாக வேண்டிய சூழ்நிலை. 225ல் ஏதோ ஒரு பங்கு உறுப்பினர்கள் இந்நாட்டின் சிறுபான்மை சமூகங்களுள் ஒன்றான முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்ற செய்தி மீண்டும் நிறுவப்பட்டேயாக வேண்டும். அது சிறுபான்மை சமூக இருப்பும் சார்ந்த விடயம் என்பதால் இந்த கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது.

துரதிஷ்டவசமாக, தமிழ் சமூகத்துக்கிருக்கும் தெளிவான சூழ்நிலை எமக்கில்லையென்பதால் தெரிவு செய்யப் போகும் வேட்பாளருக்கு மக்கள் எந்த நிபந்தனை விதிக்கப் போகிறார்கள், எதனடிப்படையில் வாக்களிக்கப் போகிறார்கள் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயம். எனினும், சிங்கள பெரும்பான்மையை நம்பி இயங்கக் கூடிய நாடாளுமன்றில் சமூகப் பிரதிநிதித்துவத்தின் அவசியம் உணரப்பட்டேயாக வேண்டும்.

சாதாரண வாழ்க்கைக் கனவுகள் நிரந்தரக் கதறல்களாக மாறாத சூழ்நிலைக்கு ஒவ்வொருவரும் போராட வேண்டும்.

jTScYcS

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment