கரையொதுங்கும் முஸ்லிம் வாதமும் குழப்ப அரசியலும்! - sonakar.com

Post Top Ad

Friday, 7 February 2020

கரையொதுங்கும் முஸ்லிம் வாதமும் குழப்ப அரசியலும்!1980களில் மேலோங்கியிருந்த முஸ்லிம் தனித்துவ அரசியல் தற்போது கரையொதுங்கிக் கொண்டிருக்கிறது. 90களின் இறுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் அஷ்ரபிடம் இச்சிந்தனை மாற்றம் ஏற்பட்ட போது அதனையொரு இணையொத்த அரசியல் செயற்பாடாக முன்னெடுப்பதையே அவர் விரும்பியிருந்தார்.இது தொடர்பில் பல அரசியல் தலைவர்கள் பல்வேறு மட்டத்தில் தெளிவுபடுத்தியுள்ளதோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் அவ்வப்போது பேசி வருகிறார்கள்.

90களின் பிற்பகுதியில் மர்ஹும் அஷ்ரப் கப்பற்துறை அமைச்சராக இருந்த போது, அவரது அலுவலகத்தில் அளவளாவிக் கொண்டிருந்த ஒரு தினம், தேசிய ஐக்கிய முன்னணி எனும் தமது அரசியற் திட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என என்னிடம் வினவியிருந்தார். அரசியல் வித்தகர்கள் முன்னிலையில் பேசுவதற்கு எதுவுமில்லையென்பதால் நல்ல பெயர் என்று பதிலளித்திருந்தேன். அந்நேரத்தில் ஒரு மூதாட்டியை எனக்கு அறிமுகப்படுத்தினார். பொல்லூண்டி வந்த அந்த மூதாட்டி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை தூக்கி வளர்த்தவர் எனவும் தனது புதிய அரசியல் முன்னெடுப்பை இவர் போன்றவர்களிடமும் கொண்டு சேர்த்து விரிவாக்கும் திட்டம் இடம்பெறுவதாகவும் கூறினார்.

பின்னர் முஸ்லிம் காங்கிரசின் தலைமையகம் தாருஸ்ஸலாத்தின் திறப்பு விழாவின் போது தேசிய ஐக்கிய முன்னணி அல்லது 'நுஆ' என்று சுருக்கமாக அறியப்பட்ட அமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் அதனை ஒரு தனிப் பிரிவாக இயங்க வைத்து அதனூடாக திறப்பு விழாவுக்கு ஒரு சஞ்சிகையையும் வெளியிட வைத்தார். சிங்கள-தமிழ் புத்தாண்டு காலமாதலால் அந்த சஞ்சிகையை குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிக்க முடியாமல் ஏற்பாட்டாளர்கள் திணற, ஈற்றில் அதன் முழுமையான தட்டச்சு, வடிவமைப்பு வேலைகளையும் செய்து விடுமுறையில் இருந்த அன்பர்களைத் தொடர்பு கொண்டு வரவழைத்து மெசன்ஜர் வீதி அச்சகத்தில் ஒரே நாளில் அச்சுப் பணியையும் முடித்துக் கொடுத்திருந்தேன். திறப்பு விழாவில் அதிக 'தலைகள்' நெருக்கிக் கொண்டிருக்கும் என்பதால் அங்கு செல்லவில்லை, மாறாக சஞ்சிகைகளை அனுப்பி வைத்ததோடு அப்பணியை முடித்துக் கொண்டேன்.

ஒருவேளை, அஷ்ரப் அன்று முன் வைத்த தேசிய அரசியல் மீதான முற்போக்குப் பார்வை என்னைக் கவர்ந்திருக்கலாமோ என்று அடிக்கடி எண்ணியதுண்டு. ஆதலால், அன்றும் - இன்றும் முஸ்லிம் அரசியல் தனித்துவம் என்ற பாதைக்குள் இறுகிக் கொண்டுள்ள எமது உரிமைப் போராட்டத்தின் மீதான நெகிழ்வானதும் விமர்சன ரீதியிலுமான பார்வை என்னிடம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது. 

தேசிய அரசியலுக்குள்ளான கலப்பும், முஸ்லிம் தனித்துவத்தின் பாதுகாப்பும் என்ற இரு பக்க அடைப்புக்குள் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மற்றும் சிந்தனை விடுதலை சிக்கிக் கொண்டு தவிப்பதை அன்று அஷ்ரப் முதல் இன்றிருக்கும் அசாத் சாலி, ரிசாத் பதியுதீன், ரவுப் ஹக்கீம், அலி சப்ரி வரை மிக நெருக்கமாக அவதானித்து வருகிறேன். எவ்வாறு கடந்த காலத்தில் தேசிய சூழ்நிலை அக்கால சிந்தனைகளைப் பலப்படுத்தியதோ அவ்வாறே இன்றும் அதே தேசிய சூழ்நிலை அதனை பலவீனப்படுத்திக் கொண்டிருப்பதை மதிப்பிடாமல் இருக்க முடியாது.

2012 முதல் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தலையெடுத்த இனவாதம் அரசியல் ஊடாகவே தீர்க்கப்பட்டாக வேண்டும் என்பதில் மக்கள் மிகவும் தெளிவாக இருந்தார்கள். அப்போதைய இனவாத நடவடிக்கைகளுக்கு இருந்த ஆட்சியாளர்களின் தெளிவான ஆசீர்வாதம் மக்களுக்கு இது தொடர்பிலான ஐயமற்ற தெளிவைத் தந்திருந்தது.

எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் மக்களின் கோபமும் பார்வையும் ஏக்கமும் முஸ்லிம் அரசியல்வாதிகளை நோக்கியதாகவே இருந்தது. 80 முதல் விதைக்கப்பட்டிருந்த முஸ்லிம் தனித்துவ அரசியல் என்ற விதை அறுவடைக்குத் தயாராகியிருந்தததையும் இக்காலம் எடுத்தியம்பியது. ஆயினும் உணர்ச்சிப் பொங்கலில் மிதந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகம் இதனை உணர மறுத்திருந்தது.

தேசிய அரசியலின் முக்கிய பங்காளிகளாகவே நாமிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல் நீதியமைச்சையும் அக்கால கட்டத்தில் வைத்திருந்தது. எனினும், பூதாகரமாக வளர்ந்தெழுந்து அளுத்கமயில் இனவாத அறுவடை இடம்பெற்ற போதுதான் முஸ்லிம் அரசியல் தனித்துவம் தேசிய களத்தில் வெற்றுப் பொம்மையாக இருப்பது உணரப்பட்டது. ஆயினும், வழமை போன்று உணர்ச்சியூட்டலில் ஓரளவு வெற்றி கண்ட முஸ்லிம் அரசியல் அதனைத் தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றத்தில் பங்கெடுத்ததோடு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் தக்க வைத்துத் தாமும் தேசிய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சமூக சக்தியென பறைசாற்றிக் கொண்டது.

இருப்பினும் 2019 ஜனாதிபதி தேர்தல் அந்த அத்தியாயத்தை மாற்றியெழுதியுள்ள நிலையில் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் தனித்துவ அரசியல் படகு கரையைத் தாண்டுவது சந்தேகமே. இன்றளவிலும் துடுப்பெடுத்து வள்ளத்தைத் தள்ளிச் செல்ல ஓரிரு அரசியல்வாதிகள் முயற்சிக்காமலில்லை. ஆயினும், அது எடுபடுமா? இல்லையா என்ற கேள்விக்கு 2024க்கு முன்பாக உறுதியான விடை காண முடியாது.

ஏனெனில், புதிய அரசியல் அலைக்கு மக்கள் எவ்வாறு அசைந்து கொடுக்கப் போகிறார்கள் என்பது இன்னமும் களப் பரீட்சைக்குள்ளாக்கப்படவில்லை. அதற்கான முதலாவது சந்தர்ப்பத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலாகவே இருக்கும் என்பதால் அதுவரை ஊசலாடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டங்களை ஒட்டு மொத்தமாக கணிப்பிட முடியாது.

இக்கட்டுரையின் தேவைக்காக கடந்த கால அரசியல் சூழ்நிலையின் சில சம்பவங்களை மீட்டிப்பார்ப்பது தகும். அடிப்படையில் ஞானசார என்ற கதாபாத்திரத்தின் முஸ்லிம் விரோத கூச்சலுக்கு மக்களிடம் இரு வகையான எதிர்பார்ப்புகள் இருந்தது. முதலாவது, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாவது, முஸ்லிம் அரசியல் மற்றும் சமய தலைமைகள் பதிலளிக்க வேண்டும். முன்னதும் நடக்கவில்லை, இரண்டாவதும் நடக்கவில்லையென்ற போது முஸ்லிம் சமூகத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. இந்நிலையில் இந்தக் கோபம் சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பக்கம் தாவியிருந்தது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் போன்ற அமைப்புகளும் ஆரம்பத்தில் திணறிக் கொண்டேயிருந்தது. அரசியல் ரீதியான எதிர்ப்புக்குரல்கள் எழாது சிவில் சமூகம் தனிமைப்பட முடியாது என்ற யதார்த்தம் ஒரு புறமிருக்க, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழ் விடயத்தில் தாமாக எடுத்துக் கொண்ட உரிமை தேசிய பிரச்சினையாக உருவான போது உடனடித் தீர்வைக் காண முடியாத அளவு ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்ததால் கடும்போக்கு வாத சக்திகளை பிரித்துணர்த்த முயன்று கொண்டிருந்தது.

பின்னர் சிவில் சமூக அமைப்புகளும், அரசியல்வாதிகளும் கூட மெல்ல மெல்ல கடும்போக்குவாதிகளை பிரதான சிங்கள சமூகத்திலிருந்து பிரித்துணர்த்தவே முயன்றார்கள். இதனை இன்னும் வெளிப்படையாகச் சொல்வதானால் ரணில்-மைத்ரி அரசில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத வன்முறைகளின் போது காரணகர்த்தாக்கள் என கை நீட்டப்பட்டவர்களை அக்காலப் பகுதியில் தைரியமாக கை நீட்டும் அளவுக்கு சமூகம் துணிந்திருக்கவில்லை.

அரசியல் களத்தில் இந்த வெற்றிடத்தை அக்காலப் பகுதியில் இரு விதமாக முஸ்லிம் சமூகம் கையாண்டது. முதலில் எதிர்த்துப் பேசவும் பதில் தரவும் அரசியல்வாதிகள் அவசியப்பட்டார்கள். அந்த வெற்றிடத்தை நிரப்பியதில் பெரும் பங்கு அசாத் சாலிக்குச் செல்ல, கட்சி வட்டத்துக்குட்பட்ட ஜனநாயக போராட்டத்தில் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்களின் பங்கும் இருந்தது. எனினும், இவர்களுக்கு அடுத்த மட்ட அரசியல் தலைமைகளின் மௌனம் தொடர்ந்தும் வெறுமையை அதிகரித்திருந்தது.

இக்காலப் பகுதியில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முஸ்லிம்கள் கொதித்தெழுந்து தம் உணர்வுகளைக் கொட்டிக் கொண்டிருந்தார்களே தவிர, சூழ்நிலையைக் கையாள்வதற்கான நேரடி களப் போராட்டத்தை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல்கள் இருந்தது. அடிப்படையில் சம்பவங்கள் பற்றி பல நாட்களாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பேசுவதற்கு ஆளிருந்தாலும் பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் ஒரு முறைப்பாட்டை முன் வைப்பதற்கு ஆளில்லாத நிலையே தொடர்ந்தது.

இச்சூழ்நிலை விலங்கை உடைக்கக் கூடிய அரசியல் பக்கபலம் கிடைக்காததால் சிவில் சமூகமும் சட்ட வல்லுனர்களும் கூட தவித்துக் கொண்டிருந்தார்கள். சில மாதங்களில் ஒரு முஸ்லிம் அமைச்சர் நடவடிக்கையில் இறங்கத் துணிந்த போது களமாற்றம் ஏற்பட்டது. முதற்கட்டமாக அல்-குர்ஆனை நிந்தித்த ஞானசார மீது வழக்குத் தொடர 'ஆள்' கிடைத்தது. இச்சூழ்நிலையில் அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகளுக்கு விடிவு கிடைத்ததாகக் கருதிய பல சமூக ஆர்வலர்கள் முன் வந்தார்கள். சட்டத்தரணிகள் இலவசமாகத் தம் சேவையை வழங்க முன் வந்தார்கள், அதே போன்று தனவந்தர்கள் பின்னணியிலிருந்து செலவீனங்களைப் பொறுப்பெடுக்கவும் முன் வந்தார்கள், இவ்வாறு நிலைமை மாறியது. சரியோ பிழையோ மியன்மாரின் அசின் விராது இலங்கைக்கு வருவதற்கு இடமளிக்க வேண்டாம் என அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பும் அளவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலும் செயற்பட்டது.

இவை எதிர்ப்பு நடவடிக்கைகளின் மேலோட்டமான பார்வை மாத்திரமே. இவை தவிர, எமது சமூகத்தின் மத்தியில் அமைதியையும், கட்டுப்பாட்டையும் புரிதலையும் உருவாக்க பின்னணியில் இயங்கிக் கொண்டிருந்த சிவில் சமூக அமைப்புகள், சமயத் தலைமைகளை மறக்க முடியாது. அவர்களின் பங்கும் இச்சமூகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு அளப்பரிய பங்கை வகித்திருந்தது.

நாளடைவில் 2015 ஆட்சி மாற்றத்திற்கான காலம் வந்த போது அரசியல் தலைமைகளின் தேவைகளுக்கப்பால் தமது வாக்கு எனும் ஆயதத்தைப் பிரயோகிக்க மக்களாகவே முன் வந்ததோடு தேசிய மாற்றத்தின் பங்காளிகளாக மாறினார்கள். துரதிஷ்டவசமாக அதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட முஸ்லிம் அரசியல் மஹிந்த ராஜபக்சவை முஸ்லிம்களே தோற்கடித்தார்கள் என்று தம்பட்டம் அடித்து அதன் பயனை 'தலைக்கு மேல்' அனுபவித்துக் கொண்டார்கள். ஆயினும் அடுத்த ஐந்து வருடங்களில் தற்போது மக்கள் எந்தப் பக்கம் என்று தெரியாமல் அதே அரசியல் தலைமைகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக, தேசிய எழுச்சியின் ஒருமைப்பாடும் மீண்டும் கேள்விக்குறியாகி நிற்கிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்துக்கு அசாத் சாலிகள், ரிசாத் பதியுதீன்கள், முஜிபுர் ரஹ்மான்கள் தேவையா? என்பதைக் கூட அறுதியிட்டுக் கூற முடியாது. அல்லது, தனது 'நாற்காலியை' பாதுகாத்தல் எனும் மிகக்குறைந்த பட்ச கடமையுடன் உள்ள ரவுப் ஹக்கீமின் தேவையும் இருக்கிறதா? என்பதும் சந்தேகத்தளத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது.

அப்படியானால், கோட்டாபே ராஜபக்சவுக்காக ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்த அலி சப்ரி சூழ்நிலைத் தீர்வாவாரா? மஹிந்தவின் தோழர்கள் ஹிஸ்புல்லாவும் அத்தாவுல்லாவும் தீர்வாவார்களா? அல்லது சிங்களம் பேசத் தெரிந்த அம்ஹர் மௌலவி தீர்வாவாரா? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கிறது. முதலில் புகழ்வதும், சில மாதங்களிலேயே கிழித்துக் காயப்போட்டு அவமானப்படுத்துவதையும் கூட எதிர்பார்க்க வேண்டும் என்பதால் தேசிய அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு – முஸ்லிம் தனித்துவ அரசியல் என்ற இரு வேறு தலைப்புகளின் கீழ் முஸ்லிம் சமூகம் தமக்குள் ஆய்வு செய்துகொள்ளும் தேவை உருவாகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்றளவில் வெற்றி பெறும் சக்தியெனவே நம்பப்படுகிறது. அடிப்படையில் சிங்கள நாடு – சிங்கள தலைவர் என்ற சிங்கள மக்களிடையேயான எழுச்சியின் பயனால் வெற்றியைக் கண்டுள்ள பெரமுன கணிசமான தொகை ஆசனங்களைக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல்களும் விரிசல்களும் மக்களை சோர்வடையச் செய்துள்ளதால் ஐக்கிய தேசியக் கட்சி மீதான நம்பிக்கை என்றுமில்லாதவாறு வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்நிலையில், சிங்கள பிரதேசங்களுக்கு வெளியில் பெரமுன வெற்றி பெறுவதற்கு சிறுபான்மை சமூகங்களின் உதவியும் ஒத்தாசையும் கட்டாயம் தேவைப்படுகிறது. அதனை வழமையான மு.கா – அ.இ.மு.காவுக்கு வெளியில் உருவாக்குவதையே தற்போதைய சூழ்நிலையில் பெரமுன தலைமை விரும்புவதால் கிழக்கு மற்றும் மன்னாரில் பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை. ஆயினும், வழமைக்கு மாறாக மன்னாரில் ரிசாத் பதியுதீனும் கிழக்கில் முஸ்லிம் காங்கிரசும் என்றுமில்லாதவாறு பலத்த சவால்களுக்கு முகங்கொடுக்கப் போகிறது.

ஊருக்கு ஒரு எம்.பி வேண்டுமென்ற மக்களின் மனவோட்டம் இன்னும் மாறாததால் இரு முஸ்லிம் கட்சிகளும் கடும் உழைப்பின் பயனால் கையளவு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமாயினும் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்திகளாக வருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. எனவே. எதிர்க்கட்சி அரசியலுக்கு அவர்களும், அவர்களூடான முஸ்லிம் தனித்துவ அரசியல் மீது இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளவர்களும் தயாராக வேண்டும். 

தமது நாடாளுமன்ற ஆசனங்களுக்க ஆபத்து வந்திருக்கிறது என்பதை ரிசாத் பதியுதீன் மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளதை அவரது அண்மைக்கால நடவடிக்கைகளும் அறிக்கைகளும் தெளிவுபடுத்திக் கொண்டிருக்க, தன் தொகுதி மக்கள் மீதான நம்பிக்கையில் கிழக்கில் ஹரீஸ் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்.

கண்டியில் வெல்லாவிட்டாலும் கூட தேசியப் பட்டியல் கிடைக்கும் என்ற பின்புலம் இருப்பதால் ரவுப்ஹக்கீம் என்ற தனி மனிதனுக்கு 'இழப்பில்லை' என்றாலும் கூட தன் சட்டைப் பைக்குள்ளேயே தொடர்ந்து வைத்திருக்கும் கட்சியை இந்த இக்கட்டிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்கான சரியான வியூகமைப்பதும் அவரின் தலையாய கடமையாக இருக்கிறது.

ஐந்து வருட தொடர் உழைப்பு – திட்டமிடல் மற்றும் களப்பணி ஊடாக கண்ட வெற்றியை அவ்வளவு எளிதாக மஹிந்த தரப்பு கோட்டை விடப்போவதில்லை என்பது ஒரு புறமிருக்க, தேசிய அரசியலிலிருந்து முஸ்லிம் தனித்துவம் கரையொதுங்கி விட்டதாகக் கருதும் மக்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் திருப்புமுனையாக மாறும்.

jTScYcS
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment