சிதைந்த தேசமும் சுமக்கத் தேடும் தோள்களும்! - sonakar.com

Post Top Ad

Saturday 25 January 2020

சிதைந்த தேசமும் சுமக்கத் தேடும் தோள்களும்!



ரஞ்சன் ராமநாயக்க கைதானதிலிருந்து பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது இலங்கை அரசியல்.


அதனைக் கூட ஜனவரி 21ம் திகதிக்கு முன் - பின் என இரு வகைப்படுத்த முடியும். அண்மைக்காலமாக அசம்பாவிதங்கள் எதுவும் இல்லையென்றாலும் ஒரு காலத்தில் இலங்கையில் அரசியல் கொலைகள் மிகச்சாதாரணமான விடயமாகவே இருந்தது. இன்றளவும் தமக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளே அதிகமாகவுள்ளனர்.

அந்த வகையில் ஏதோ ஒருவகையில் கொலைக் கலாச்சாரம் அடங்கியிருக்கிறதே தவிர முற்றாக ஒழிந்து போனதாகக் கருத முடியாது. ஆதலால், அரசியலில் இருப்பவர்கள் ஒரு வகையில் இன்னமும் தம்மைச் சண்டியர்களாகவே கருதிக் கொள்கிறார்கள். தேசிய மட்டத்தில் இல்லையென்றாலும் பிராந்திய மட்டத்தில் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தமக்குள் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இருப்பினும் இன்றைய ஊடக வளர்ச்சிக்கு முன்னால் இரகசியம் காப்பது மிகக்கடினமான விடயமாக இருக்கிறது. இலத்திரனியல் ஊடக வளர்ச்சியின் ஆளுமை அதிகரித்துள்ள அதேவேளை சமூக வலைத்தளங்களும் ஒரு வகையில் தனிநபர் ஊடகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆயினும், இணைய உலகோடு தொடர்புடைய சில இலட்சம் இலங்கைக் குடிகளை விட வீடு தேடி வரும் ஒலி,ஒளி அலைவரிசைகளுக்;கு இன்னும் மவுசு குறையவில்லை.

அதிலும், ஜனரஞ்சகமான ஊடகங்களாகத் திகழும் தனியார் ஊடகங்கள் தமக்கிடையிலான போட்டியில் நாட்டு மக்களைக் கவர்ந்திழுப்பதில் மாத்திரமன்றி நாகரீக உள்ளீடு, கலாச்சாரத் தாக்கம் மற்றும் மாற்றங்களையும் உருவாக்குவதில் பங்களித்து வருகிறது. அரச ஊடகங்களின் பணி இந்த வகையறாக்குள் இல்லையென்பதால் அந்த வெற்றிடத்தைத் தனியார் ஊடகங்களே நிரப்புகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை நாடாளுமன்றில் ஒலித்த இரு முக்கிய குரல்கள் பல தரப்பட்ட விடயங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஹிருனிகா பிரேமசந்திர ஆகியோரின் குரல்களே அவை. ரஞ்சனைப் பொறுத்தவரை தன் செயல்களை நியாயப்படுத்துவதற்கு நாடாளுமன்றைத் தவிர சிறந்த ஊடகம் இல்லையென்பதால் தனது உரை நேரத்தைப் பாவித்து நிலுவையில் இருக்கும் நீதிமன்ற விசாரணையிலும் தாக்கம் செலுத்தக் கூடிய பல்வேறு விடயங்களை கொட்டித் திPர்த்திருந்தார்.

இன்னொரு பக்கத்தில் ஹிருனிகா பிரேமசந்திர, இந்நாட்டின் அரசியல் தலைவிதியைப் பற்றிய சிந்தனையுள்ளோருக்கு பல முக்கிய செய்திகளை சொல்லியிருந்தார். ஆக மொத்தத்தில் அன்றைய தினம் இருவரும் உருவாக்கிய சப்தத்தில் நாடாளுமன்றம் அடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. இன்னொரு நாளில், வௌ;வேறு இடங்களில் அதனை எதிர்த்துப் பேசுவது வேறு. ரஞ்சன் பேசும் போது நிலவிய அமைதி நிறையவே சிந்தனைகளைத் தூண்டியுள்ளது. அதன் எதிர் வினையை சமூக வலைத்தளங்களிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற பதவி இலங்கையின் தற்கால அரசியலில் கை நிறைய வருமானத்தை அள்ளித்தரும் ஒரு தொழில் என்பது எல்லோரும் அறிந்தது. அதேவேளை நாட்டின் கலாச்சார-பொருளாதார விடயங்களில் அங்குள்ளவர்கள் எத்தனை தூரம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை ரஞ்சனின் உரை எடுத்தியம்பியிருந்தது. மறுப்பதற்கும் யாரும் இல்லாத நிலையில் அது ஹன்சார்டிலும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாடாளுமன்றின் 225 பேரது பின்னணியையும் ஆராய்ந்து தனியாக புத்தகம் எழுதலாம், ஆனால் ஒற்றை வரியில் கூறுவதென்றால் உத்தமர் என்று எவரும் இல்லையெனலாம். ஒருவரோடு தொலைபேசியில் உரையாடும் போது அவரின் அனுமதியின்றி அதனை ஒலிப்பதிவு செய்வது ஐரோப்பிய நாடுகளில் சட்டத்துக்குப் புறம்பான விடயமாகும். எனினும், இலங்கையில் அது முடியும் - முடியாது என இரு கருத்துக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே முன் வைக்கப்பட்டு வருகிறது.

என்னதான் இருந்தாலும், தன்னை நம்பி தன்னோடு அன்யோன்யமாக உரையாடியவரின் பேச்சை ஒலிப்பதிவு செய்து வைத்திருப்பது ஏற்புடையதல்ல என்ற வகையில் ரஞ்சன் ராமநாயக்க மீது தவறிருக்கிறது. இதேவேளை, ரஞ்சனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அல்லது பொலிசார் சொல்வது போல யாரோ கொண்டு வந்து கொடுத்த ஹார்ட்-டிஸ்க்கிலிருந்த ஒலிப்பதிவுகளில் ரஞ்சனும் நீதிபதிகளும், ரஞ்சனும் ஹிருனிகாவும், ரஞ்சனும்-சஷி விமல் வீரவன்சவும் பேசிய உரையாடல்கள் மாத்திரம் தான் இருந்தனவா? என்பது முதற் கேள்வி.

அடுத்ததாக பொலிசார் சொல்வது போன்று யாரோ கொண்டு வந்து கொடுத்தோ அல்லது ரஞ்சனின் வீட்டிலிந்து கைப்பற்றியோ பொலிசாரிடம் கிடைத்த இந்த ஒலிப்பதிவுகள் திட்டமிட்ட வகையில் கடும்போக்கு அமைப்புகள் மற்றும் குறிப்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியூடாக வெளியாவதும், அதனைக் கொண்டு முஸ்லிம் விரோத இனவாதத்தின் பயனால் முன்னரங்குக்கு வந்த டான் பிரியசாத், சிங்கள ராவய போன்ற அமைப்புகள் மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வா வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என்றெல்லாம் பேசுவது தற்போதைய ஆட்சியில் உயர் மட்டத்துக்கு தெரியாமல் நடக்கும் விடயங்களா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்.

தமது ஊடக ஆளுமையூடாக உண்மையைப் பொய்யாக்கவும் தாம் சொவ்வதையே உண்மையாக்கவும் முடியும் என நம்பும் குறிப்பிட்ட தனியார் தொலைக் காட்சியொன்று மிகக் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதுடன் தொலைக்காட்சி உரிமையாளரின் சகோதரரான துமிந்தவை சிறையிலிருந்து மீட்பதற்கு இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முனைந்து கொண்டிருக்கிறது. அவ்வாறே அதற்கு இடங்கிடைத்தால் நீதி தோற்றுப் போய் விடும்.

இச்சூழ்நிலையில், தான் பேச வேண்டியதை 20 நிமிடங்களுக்குள் நாட்டுக்குச் சொல்ல நினைத்த ரஞ்சன் ராமநாயக்க கடந்த செவ்வாய் சிறையிலிருந்து நேரடியாகச் சென்று சபை அமர்வில் கலந்து கொண்டதோடு அங்கிருக்கும் போதைப் பொருள் வியாபாரிகள், மணல் கடத்தல்காரர்கள், மது விற்பனையாளர்களின் எண்ணிக்கையையும் வெளியிட்டு, பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும், கலரியில் அமர்ந்திருந்திருக்கக் கூடிய பாடசாலை மாணவர்களுக்கும் அழுத்தமான செய்தியொன்றைச் சொல்லியிருக்கிறார்.

ஒரு காலத்தில் தேயிலை, இறப்பர், தென்னை போன்றவற்றிற்காக உலக அரங்கில் வெகுவாக அறியப்பட்டிரு;ந்த இலங்கை, இன்றளவில் போதைப் பொருள் வர்த்தக மையமாக மாறியிருப்பதற்கு அன்றைய தினம் நிசப்தமாக இருந்த குறிப்பிட்ட நபர்களும் காரணம் என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். என்றாலும் வீறு கொண்டெழுந்த நிமல் லன்சா, ரஞ்சன் ராமநாயக்கவிடம் சில முக்கிய கேள்விகளைக் கேட்காமலும் இல்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் எழுந்து, லன்சாவின் உரையிலிருந்த தகாத வார்த்தைகளை ஹன்சார்டிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் அளவுக்கு அந்த உரையும் அமைந்திருந்தது.

மோட மூசலயா என்று மேர்வின் சில்வா சக நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்த்துச் சொன்ன போது அது நகைப்பாகவே பெரும்பாலானோரால் பார்க்கப்படடது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாசுதேவ நானாயக்கார தகாத வார்;த்தைகளைக் கொண்டு திட்டிய போது அதை யாரும் கவனிக்கத் தயாராகவும் இருக்கவில்லை.

ஆனாலும், ரஞ்சன் ராமநாயக்கவின் விடயம் அண்மைக்காலமாகவே பரபரப்பாக மாறியிருந்ததனால் அன்றைய தினம் அவரது நாடாளுமன்ற உரையும் பெரும்பாலானோரால் அவதானிக்கப்பட்டிருந்தது. நீதிபதிகள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாருடனுமான தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்து வைத்திருந்த ரஞ்சன், மேலும் ஆயிரக்கணக்கான ஒலிப்பதிவுகளை நாடாளுமன்றில் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார்.

அதில் எதுவெல்லாம் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் அல்லது அவை வெளியிடப்படாமலேயே கை விடப்பட்டாலும் தான் தனது கடமையைச் செய்து முடித்த திருப்தியில் இருப்பதாக ரஞ்சன் தெரிவிக்கிறார். குரலற்ற மக்களின் குரலாக இருப்பது ஒன்றும் அத்தனை இலகுவான செயலில்லை. ரங்சன் ராமநாயக்க செய்த ஒலிப்பதிவினை நியாயப்படுத்த முடியாது. ஆனாலும், அதனூடாக நாடு அறிந்து கொள்வதற்கும், தெரிந்து-தெளிவடைவதற்கும் பல விடயங்கள் இருக்கிறதென்பதுதான் இங்கு முக்கியமாகிறது.

21ம் நூற்றாண்டில் இலங்கை போன்ற வளம் நிறைந்த ஒரு நாட்டை வழி நடாத்தக் கூடிய சிறந்த அரசு அமைந்திருந்ததாகவும், அமையப் பெற்றிருப்பதாகவும் காலத்துக்குக் காலம் தமக்குத் தாமே சொல்லிக் கொண்டு, தம்மைத் தாமே ஏமாற்றி வரும் அரசியல் பக்தர்களுக்கு உண்மை புலப்படவில்லையென்றாலும் கூட, சாதாரண மக்களுக்காவது அது புலப்பட்டிருக்க வேண்டும். எனினும், தம் கட்சி மீதும் தலைவர்கள் மீதும் கொண்டிருக்கக் கூடிய அதீத பக்தியினால் அவை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

இந்நிலையில் தான் பல்வேறு வகை தேசியம் தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்நியர் விதைத்த பிரிவினை விதையிலிருந்து இன்னுமே விடுபட முடியாத சமூகங்களாகவே இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை காலத்துக்குக் காலம் அவர்களை வந்தடையும் தேசீயம் மேலும் குழப்பத்தையே உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது.

2019 நவம்பருக்கு முற்பட்ட தேசியமும் தற்போதைய தேசியமும் வித்தியாசப்படுகிறது. 2015-2019 வரையான காலப்பகுதியில் ஆயிரம் பிரிவினைக் கூறுகள் இருந்த போதிலும் ஒரு கணமாவது எங்கோ ஒரு மூலையில் தமது சமூகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரனுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகளைக் கண்டு ஏற்பட்ட சாதாரண சமூக உணர்வு கூட இப்போதைய சூழ்நிலையில் அடங்கிப் போயுள்ளது.

மாற்றுத் தலைமை, மாற்றுச் சூழ்நிலை, இணக்கப்பாட்டு அரசியல் என்று அதே பழைய பல்லவியைப் பாடிக் கொண்டு இன்னொரு புதிய குழு புறப்பட முனைகிறதே தவிர, ஒற்றைச் சமூகமாக எழுந்து நிற்கும் பலமிழந்தே காணப்படுகிறது. இந்த சிதைவுக்கு முழு முதற் காரணமான கொள்கை இயக்கங்கள், குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் இலங்கைச் சேர்ந்தவர்களே இல்லை அவர்களது எண்ணப்பாடுகள் எல்லாம் துருக்கி, எகிப்து, கட்டார், ஈரானைச் சுற்றியே இருக்க வேண்டும் என கிலாபத்து கனவைப் போதித்து வந்தவர்கள் கூட இப்போது கோட்டாபே ராஜபக்சவுடன் இணங்கிப் போவது பற்றி தமது சஞ்சிகைகள், ஆக்கங்களில் சொல்ல விளைகிறார்கள்.

கடந்த காலத் தவறுகளை திருத்துவதற்கு வெறும் எழுத்துக்கள் போதுமா? என்றால், நேரடியாகக் களப்பணிகளை ஆரம்பிக்க இயலாது எனவும் அது இயக்கத்துக்குள் கொள்கை மோதல்களை உருவாக்கும் எனவும் சொல்கிறார்கள். எனவே, அவர்கள் தற்போது சொல்ல ஆரம்பித்திருக்கும் தேசியமும் கூட அர்த்தமற்றதாகவும் மூன்று தலைமுறைகளுக்கு அவர்களால் விதைக்கப்பட்ட வெறுப்புணர்வை சீர்திருத்தப் போதியதாகவும் இல்லை.

இந்த உணர்வுத்தூண்டலுக்குட்பட்ட இளைஞர்கள் தாம் ஒரு யுத்தத்தில் குதிப்பதாக எண்ணிக்கொண்டும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பிலிருந்து சமூகம் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் இந்த வருடம் ஏப்ரலிலேயே பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்படையாக மேடைகளில் இல்லாவிடினும் கூட, ஞானசார சொன்னது போன்று விகாரைகளிலாவது பெரமுன தேர்தல் பிரச்சாரத்தின் அடிப்படை விவகாரம் ஈஸ்டர் தாக்குதலாகவே இருக்கப் போகிறது.

அவர்களுக்குப் புகட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தேசியமும், தேசப் பாதுகாப்பும் எகிறி நிற்கும் காய்கறி விலைகளை விட, வாழ்க்கைச் செலவை விட அம்மக்களுக்கு முக்கியமானதாகப் படுகிறது. அந்த அளவுக்கு அச்சமூகத்தின் சமய-அரசியல் தலைமைகள் திட்டமிட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு ஒப்பீட்டுக்காக எமது பக்கத்தைப் பார்த்தால், நாம் அவர்களால் அன்னியப்படுத்திப் பார்க்கப் படுகிறோம் என்ற குற்றச்சாட்டையும் நாம் அன்னியப்பட்டே வாழ்ந்து வந்திருக்கிறோம் என்ற உண்மையையும் கூட சமதளத்தில் வைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சில வேளைகளில், இதனைச் சீர் செய்ய அளவுக்கு மீறிப் போகிறோம், அல்லது இன்னும் இன்னும் தூர விலகிக் கொண்டிருக்கிறோம். ஒரு தெளிவான செயற்திட்டத்தின் அடிப்படையில் இயங்கக் கூடிய சமூகமாக நாம் இன்று இல்லை. சனத்தொகை இரண்டு மில்லியனைத் தொட்டிருக்கும் நிலையிலேயே இந்நிலை எனும் போது இன்னும் அதிகரித்தால், கடந்த தலைமுறைகளை அந்நியப்படுத்தி வைத்துக் கொண்டிருந்த அதே ஞானிகள் இன்றும் வேறு போர்வையில் போதித்துக் கொண்டிருந்தால் நாளைய சமூகமும் எதை அடையும்? என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

சிந்திக்கிறோமா? என்பதை விட சிந்தித்து என்ன பயன் என்று விலகி நிற்பவர்களின் எண்ணிக்கையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அரசியலை மையப் புள்ளியாக வைத்து இயங்கப் பழகிக்கொண்டு வரும் இந்த சமூகம் தமது மார்க்க ஒழுங்கை இன்னும் சிதையவிட்டுக் கொண்டிருக்கிறது.

பெருமானார் (ஸல்) பூரணப்படுத்தித் தந்த மார்க்கத்தில் வாழ்கிறோம் என்று பெருமை கொள்கின்ற போதிலும் அந்த மார்க்கத்தின் சரியான வழிமுறையில் தான் வாழ்கிறோமா? என்பதில் இன்னும் பூரண தெளிவையும் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அந்தத் தெளிவு எது என்பதிலும் இன்னும் உடன்பாடில்லை.

இதற்கிடையே சிதைக்கப்பட்ட தேசத்தினை சுமக்கும் தோள்கள் தேடப்படுகிறது.

jTScYcS
-Irfan Iqbal
Chief editor, Sonakar.com


No comments:

Post a Comment