வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம்: ACJU - sonakar.com

Post Top Ad

Wednesday 29 January 2020

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம்: ACJU


உலகளாவிய ரீதியில் மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸினால் சீனா உட்பட பல நாடுகளில் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன்  இதுவரை சிலர் உயிர் இழந்துள்ளார்கள். மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள்  விரைவில் குணமடைய வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.


இது போன்ற சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வின் அன்பையும், அருளையும், நெருக்கத்தையும் பெற்றுத்தரக் கூடிய வணக்க வழிபாடுகளிலும், நற்காரியங்களிலும் ஈடுபடுமாறும், தற்போது நிலவும் அசாதாரண நிலை நீங்கி பாதிக்கப்பட்ட நாடுகள் தமது வழமைக்குத் திரும்புவதற்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றது. 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் வீணான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதானது வீண் பிரச்சினைகளை தோற்றுவிக்கவும், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் காரணமாக அமைகின்றன. எனவே, இவ்வாறன விடயங்களில் இருந்து தவிர்ந்து நடந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறது. 

மேலும், மக்களின் நலனுக்காக சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் ஆலோசனைகளை கடைபிடிப்பதுடன் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோய் இருக்கின்ற இடங்களுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு இஸ்லாம் எமக்கு வழிகாட்டியுள்ளது. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்” என்று சொல்ல கேட்டேன் என கூறினார்கள்.  (புஹாரி 5729) 

மேலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த பின்வரும் துஆவை நாம் அதிகமாக ஓதி வரவேண்டும்.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ

பொருள் : யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். (அபூதாவூத் 1554)

எனவே, இவ்வாறான நோய்கள், அனர்த்தங்கள் போன்ற சோதனைகளில் இருந்து அல்லாஹுதஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

ஆமீன்.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாறக்
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment