தென்கிழக்கு பல்கலையில் IntSym 2019 ஆய்வரங்கு - sonakar.com

Post Top Ad

Thursday, 28 November 2019

தென்கிழக்கு பல்கலையில் IntSym 2019 ஆய்வரங்கு


இலங்கை, தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட சர்வதேச ஆய்வாளர்கள் பங்குகொண்ட 09 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களிலிருந்து கலந்து கொண்ட ஆய்வாளர்களின் பங்குபற்றுதலுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக அறபு மற்றும் இஸ்லாமிய பீட கேட்போர் கூடத்தில் நேற்று (27) ஆரம்பமானது.


ஆய்வரங்கின் இணைப்பாளர்  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் அவர்களது தலைமையில் ஆரம்பமான குறித்த ஆய்வரங்கானது 2019. 11. 28 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

‘பல்துறைசார் கல்வியல் ஆய்வினையும் புத்தாக்கத் திறனையும் மேம்படுத்தல்’ எனும் தொணிப்பொருளில் ஆரம்பமான இன்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கலை காசார பீடத்தின் அரசியல் துறைத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.பாஸில் அவர்களது வழிநடத்தலில் இடம்பெற்ற குறித்த சர்வதேச ஆய்வரங்கில் விஷேட பேச்சாளராக மலேசிய மலே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி எட்மன்ட் றிரன்ஸ் கொமஸ் அவர்கள் கலந்துகொண்டு விஷேட உரையாற்றினார்.

இவ் ஆய்வரங்கிற்கு  பொருளாதாரம், அரசியல், தொழில் நுட்பம், கலை, கலாசாரங்கள், சூழல் பாதுகாப்பு, சனத்தொகை பரம்பல் போன்ற தலைப்புக்களில் சுமார் 200 க்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் ஆய்வுக்காக 150 கட்டுரைகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.

இந்தியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட 53 வெளிநாட்டு ஆய்வாளர்களும், பல உள்நாட்டு ஆய்வாளர்களுமாக 150 பேர் கலந்து கொண்டு தமது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திரந்தனர்.

இம்மாநாட்டில் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பீடங்களின் பீடாதிபதிகள்,  நூலகர், நிதியாளர்,திணைக்களங்களின் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், கட்டுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment