கடுமையான போட்டியா தனிக் குதிரை ஓட்டமா? - sonakar.com

Post Top Ad

Saturday, 2 November 2019

கடுமையான போட்டியா தனிக் குதிரை ஓட்டமா?


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்ஹ 2015 ஜனாதிபதி தேர்தலில் ஹீரோவாக இருந்து காய்நகர்த்தியமை அனைவரும் அறிந்த செய்தியே. அவர் ஜனாதிபதியாகக் கொண்டு வந்த மைத்திரி அவருக்கே ஆப்பு வைக்கின்ற தீர்மானங்களை எடுத்து அவரது அரசியல் எதிரியான ராஜபக்ஷாக்களுடன் போய் ஒட்டிக் கொண்டது சந்திரிகாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால் மைத்திரியும் சந்திரிக்காவும் இன்று இரு துருவங்களாக நிற்க்கின்ற அரசியல் பின்னணி தோன்றியது.சு.கட்சியில் நிலவுகின்ற இந்த அரசியல் குழப்பங்கள் கட்சியை சிதறடிக்கும் என்று நாம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே சொல்லி இருந்தோம். தற்போது உத்தியோகபூர்வமான சு.கட்சி கோதா அணிக்கு ஆதரவு கொடுக்கின்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. இன்னும் சில சு.கட்சியினர் ஏற்கெனவே சஜிதுடன் களத்தில் நிற்கின்றனர். மற்றும் சிலர் அநுராவுக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள். 

சு.கட்சி நலன்பேணும் அமைப்பு

அண்மையில் நாடு திரும்பிய சந்திரிக்கா-குமார் வெல்கமவுடன் இணைந்து சு.கட்சி நலன் பேணும் அமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி அதற்கான மகா நாட்டை வருகின்ற 5ம் திகதி கொழும்பில் நடாத்தி சஜித்துக்கு ஆதரவாக தீர்மானத்தை எடுக்க முடிவு செய்திருக்கின்றார்கள் என்ற செய்தி தற்போது உறுதியாகி இருக்கின்றது. இது பற்றி சு.கட்சி உள்ளாட்சி மன்ற வேட்பாளர்கள் அமைப்பின் தலைவர் கித்சிரி ஹெட்டியாரச்சி அவர்களிடம் தகவல் கேட்டபோது அவர் இதனை உறுதி செய்தார். 

அவர் கருத்துப்படி சு.கட்சியைச் சேர்ந்த  பல பாராளுமன்ற உறுப்பினர்களும் 100 வரையிலான மாகாண சபை உறுப்பினர்களும் 1000 வரையிலான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் 3000 வரையிலான 2018 உள்ளுராட்சி மன்ற முன்னாள் வேட்பாளர்களும் சந்திரிகா-குமார் வெல்கமவுடன் மகா நாட்டில்  இணைந்து கொள்ளவிருக்கின்றார்கள் எனக் குறிப்பிடுகின்றார். அன்றைய தினம்  2 மணிக்கு சுகததாச அரங்கில் நடக்கின்ற மகா நாட்டில் சஜித்துக்கு ஆதரவாக இப்படி ஒரு அதிரடித் தீர்மானத்திற்கு இவர்கள் வர இருக்கின்றார்கள். இதற்கான ஏற்பாடுகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றது. அத்துடன் நாடுபூராவிலும் நடக்கின்ற 20 வரையிலான சஜித் ஆதரவுப் பேரணியில் சந்திரிகா மேடையேற இருப்பதாகவும் தெரிகின்றது.

ஹெட்டியாரச்சியால் சொல்லப்பட்ட எண்ணிக்கை தொடர்பில் எமக்கு மிகப் பெரிய முரன்பாடுகள் இருக்கின்றது. எமக்குக் கிடைக்கின்ற தகவல்களின் படி உத்தியோகபூர்வமான சுதந்திரக் கட்சியில் இருந்து ஓரிரு பாராளுமன்ற உறுப்பினர்களையாவது தமது மகா நாட்டு மேடைக்குக் கொண்டுவர கடும் முயற்ச்சிகள்தான் இதுவரை நடந்து கொண்டிருக்கின்றன. முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 100 வரை என்ற கணக்கு முற்றிலும் பிழையான தகவல். இது ஓரிரு டசன்களுக்கு மேல் செல்லாது. உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1000 என்று இவர்கள் பரப்புரை செய்வதும் பிழையானது. அது 150 முதல் 200 வரையில்தான் அமையும்.  முன்னாள் உள்ளாட்சித் தேர்தலில் நின்று தோற்றுப்போன வேட்பாளர்கள் 700 பேர்வரை இவர்கள் அணியில் இந்த கூட்டத்தில்  கலந்து கொள்ள இருக்கின்றார்கள். 15000 வரையிலான ஆதரவாலர்களை மகா நாட்டுக்கு அழைத்திருக்கின்றார்கள். எமது கணக்குகளும் அவர்கள் கணக்குகளுக்கும் பாரிய முரன்பாடுகள் இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு முயறச்சி சந்திரிகா - வெல்கம தரப்பு மேற்கொள்வதே சஜித் அணிக்கு மிகப் பெரிய தேர்தல் வெற்றியையும் உத்வேகத்தையும் கொடுக்கும். இது சஜித் ஆதரவாலர்களுக்கு நம்பிக்கை தரும் நல்ல முன்னேற்றம்.

ஜனாதிபதித் தேர்தலுடன் மைத்திரி ஓய்வு பெற்ற பொலிஸ்காரன் நிலைக்குத் தள்ளப்படுவார் என்று உணர்க்கின்ற சு.கட்சியினர் இதன் பின்னர் அவர் பின்னால் ஒடுவது தங்களைத் தாங்கலே ஏமாற்றிக் கொள்ளும் அரசியலாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாலும் மொட்டுக்கள் தரப்பினர் தம்மைக் கௌரவமாக நடத்த மாட்டார்கள் என்பதாலும் சந்திரிக்கா-வெல்கம அணியுடன் இணைந்து தமது அரசியலை முன்னெடுக்கின்ற ஒரு நிலை அங்கு இருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம்.

இந்த சு.கட்சி நலன்பேணும் அமைப்பு ஏழு இலட்சம் வாக்குகளை சஜித்துக்குப் பெற்றுக் கொடுக்க இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அந்தளவு இல்லாவிட்டாலும் ஒரு 3-4 இலட்சம் வாக்குகளையாவது அவர்கள் சஜித்துக்குப் பெற்றுக் கொடுப்பார்கள் என்று நாம் கருதுகின்றோம். சஜித்துக்காக சந்திரிக்கா மற்றும் குமார் வெல்கம மேடையேறுவதே ஐ.தே.காவுக்கு நல்ல உந்து சக்தியாகும். சந்தரிக்கா-வெல்கம நடவடிக்கைகளினால் கோதா அணியினருக்கு சற்றுக் கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது.

போட்டிக் கூட்டணிகள்

கடந்த வெள்ளிக் கிழமை சுதந்திரக் கட்சி சந்திரிக்கா அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு புரிந்துனர்வு உடன்பாட்டைச் கொழும்பு தாஜ் ஹோட்டலில் செய்து கொண்டர். அதற்கு முன்னய தினம் மொட்டுக்கள் அணியினருடன் உத்தியோகபூர்வமான சு.கட்சியினர் கூட்டணியொன்றுக்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் கைச்சாத்திட்டிருந்தனர். 

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவராவது 5ம் திகதி சுகததாச அரங்கில் நடக்கின்ற கூட்டத்தில் கலந்து கொண்டால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை என்று அச்சுறுத்தி வருகின்றனர். அந்தக் கட்சியைப் பொறுப்பவரை யார் மீது யார் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது ஒரு கேலிக்கூத்தாகவே நாம் பார்க்கின்றோம்.  

தனி மனித எதிர்பார்ப்பு

நம்பிக்கை என்பது அனைத்து மனிதர்களிடத்திலும் ஒரே விதமாக நிழவுகின்ற ஒரு விடயமல்ல இது ஆலுக்கால் வித்தியாசப்படும். மத நம்பிக்கைகளும் சமூக நம்பிக்கைகளும் இப்படித்தான். இதில் யார் சரி யார் பிழை என்பதும் அவரவர் சிந்தனைகளைப் பொறுத்த விடயம். அதனை விமர்சிக்கும் உரிமை எமக்கு மட்டுமல்ல எவருக்கும் கிடையாது. அதே போன்று இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெற்றி வாய்ப்புக்கள் தொடர்பாகவும் சமூகங்களுக்கிடையேயும் தனி மனிதர்களுக்கிடையேயும் கருத்து முரன்பாடுகள்; நிலவுகின்றன.

தமது மனதில் நிழவுகின்ற உணர்வுகள் விருப்புக்களுக்கு ஏற்ப சிலர் தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திகளை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் 16ம் திகதி நடக்கின்ற நமது எட்டாவது ஜனாதிபத் தேர்தலுக்கான இறுதி முடிவுகள் 18ம் திகதி அளவில்தான் தெரியவரும். அதுவரையும் இந்த அவரவர் நம்பிக்கைகள் இருந்து விட்டுப்போகட்டும். அதுவரைக்கும் அவர்களுக்கு ஒரு மன நிறைவு கிடைக்கும்! 

எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் விஞ்ஞான ரீதியிலான கணிப்பீடுகளையும் கருத்துக்களையுமே இதுவரை நாம் சொல்லி வந்திருகின்றோம். எனவே எமது கருத்துக்களை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆனால் தேர்தல் முடிவு வெளிவந்த பின்னர் நாம் எழுத்தில் கொடுத்திருக்கின்ற கணக்குகளுக்கு - வார்த்தைகளுக்கு பதில் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எங்களிடத்தில் இருக்கின்றது என்பதனை நாங்கள் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

இனரீதியான விருப்பு வெறுப்பு

2020 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கடும்போக்கு பௌத்த இனவாதிகளும் பெரும்பான்மையான சிங்களவர்களும் கோதாவுக்கு நிச்சயம் வெற்றி என்று உறுதியாக நம்புகின்றார்கள். அவர்கள் பெரும்பாலும் சிங்கள வாக்காளர்களிலேயே நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். சஜித்தைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது வெற்றிக்கு பெரும்பான்மை பௌத்த வாக்குகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அதில் தங்களுக்கு பெரும்பான்மை கிட்டாது என்பதை அவர்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.  

தமிழ் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தலில் அவர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. தமது அரசியல் தலைமைகள் என்னதான் தீர்மானங்கள் எடுத்தாலும். அவர்கள் என்னதான் கோஷங்களை முன்வைத்தாலும் சஜித் வெற்றி பொறுவதையே அவர்கள் விரும்புகின்றார்கள். எனவே விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள் என்ற கோஷமும் தெற்கு சிங்கள வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும் என்று கோஷங்களும் கலாவதியான பண்டம்போல்தான் மக்கள் பார்க்கின்றார்கள். சில தினங்களுக்கு முன்னர் நடந்த தபால் மூலவாக்களிப்பின் போது வடக்கில் இந்த பகிஸ்கரிப்பு வெற்றி பெறவில்லை என்று தெரிகின்றது. எனவே மக்கள் அரசியல் கட்சிகளின் பிடியிலிருந்து விலகி சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.

முஸ்லிம் வாக்காளர்களைப் பொறுத்தவரை நான்கில் மூன்று பங்கு வாக்காளர்கள் சஜித்துக்கே வோட்டுப்போடுவது என்று முடிவெடுத்து விட்டார்கள். இங்கு அவர்கள் கட்சிகளையோ தலைவர்கள் முடிவுகள் சொல்லும்வரை காத்திருக்கவில்லை. எனவே முஸ்லிம்களில் பொரும்பாலானவர்கள் சஜித் வெற்றி பெறுவதையே விரும்புகின்றார்கள். 

இது எந்தளவுக்கு இருக்கின்றது என்றால் சஜிதுக்கு வாய்ப்பு குறைவு என்று சொல்கின்ற கணக்குகளைப் படிக்கின்றபோது அவர்களுக்கு கடும் கோபம் வருவது எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. அவர்கள் நம்பிக்கையும் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். மலையக தமிழர்களின் இதயங்களில் கூட சஜித்தே முதலிடத்தில் இருக்கின்றார். 2020 ஜனாதிபதித் தேர்தலில் இன உணர்வுகளும் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் இப்படி இருக்கின்றது. நாட்டிலுள்ள மொத்த வாக்குகளில் செல்லுபடியான வாக்குகள் 80 சதவீதமான அளவில்தான் பதிவாகும் என நாம் கருதுகின்றோம். இனரீதியாக இத்தொகை பின்வருமாறு அமைக்கின்றது.

மொத்த வாக்குகாளார் எண்ணிக்கை
15992096 பேர் -100 மூ
செல்லுபடியான உத்தேச  வாக்குகள்
12793676 பேர் - 80 மூ

பௌத்த வாக்காளர்:- 8990151  
இந்து வாக்காளர்:- 1613618  
முஸ்லிம் வாக்காளர்:- 1242229  
கிருஷ்தவ வாக்காளர்:- 0947678  
மொத்தம்     12793676

(ஏனைய இனங்கள் என்ற மிகச் சிறுதொகை 
வாக்காளர்கள் இருந்தாலும் அவர்களை நாம் 
மேற்சொன்ன கணக்கில் இணைத்துள்ளோம்) 

சிதரும் சஜித் வாக்குகள்

இந்தத் தேர்தலில் நேரடியாக சஜித்துடன் மோதுகின்ற கோதா அணி சஜித்தை பலவீனப்படுத்த பல்வேறு வியூகங்களை வகுத்து அவற்றை  முன்னெடுத்து வருகின்றார்கள். பிரதேச ரீதியிலான வாக்குறுதிகள் மூலம் இவர்கள் இந்த நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றார்கள். சாய்நதமருதுக்கு பிரதேச சபை. வடக்கு கல்முனைக்கு தமிழ் பிரதேச செயலகம் போன்ற வாக்குறுதிகள் - உறுதிமொழிகள் இவர்களால் வழங்கப்பட்டிருக்கின்றன. 

ஆளும் அக்குரனை பிரதேச சபையின் பி.எம்.ஜி.டி. தரப்பினரும் கோதாவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்திருக்கின்றார்கள். இதற்குக் காரணம் அவர்கள் அதிகாரத்தில் இருக்க மஹிந்த தரப்பினர் கைகொடுத்து வருகின்றனர். இதனை நன்றிக்கடன் அரசியலாகவும் நாம் பார்க்கலாம். புத்தளக் குப்பைப் பிரச்சினையிலும் கோதாவுக்கு நல்ல அருவடை கிடைத்திருக்கின்றது. தான் பதவிக்கு வந்தால் அருவாக்காட்டில் குப்பை கொட்டுக்கின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று கொடுத்த வாக்குறுதியை அடுத்து புத்தள மு.கா. நகரபித கோதாவுக்கு ஆதரவாக களமிறங்குகின்றார். முன்னாள் மு.கா. முக்கியஸ்தர்களான ஹசனலி, பஷீர் சேகுதாவூத் போன்ற பலர் கோதாவுக்கு ஆதரவாக களமிஙக்குகின்றார்கள்.

தமிழ் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் கூட சில சந்தேகங்களைத் தோற்றவிக்கின்றன. தமக்குப் பெற்றுக் கொள்ள முடியாத சஜித் ஆதரவு வாக்குகளை கோதா மூன்றாம் தரப்புக்கு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளையும் திட்டமிட்டு செய்து முடித்திருக்கின்றார்கள். இதன் மூலம் கோதா சஜித் இடைவெளியை மேலும் விசாலப்பட்டு வருகின்றது. இறுதி வாரத்தில் பல உளவியல் அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்க நிறையவே திட்டங்கள் அவர்களிடத்தில் இருக்கின்றன. 

கலாநிதி கனவும் சிவாஜி நிலையும்

அஷ்ரஃபிற்குப் பின் கிழக்கில் பல குறுநில மன்னர்கள் தோன்றி இருக்கின்றார்கள். அவர்கள் பிடியில் இருக்கின்ற பிரதேசங்கள் தன்னையும் தனது மண்ணையும் முன்னிருத்தியே அரசியல் செய்து வருகின்றார்கள். அப்படி ஒரு பிரதேசம்தான் காத்தான்குடி அங்கு கலாநிதி ஹிஸ்புல்லாஹ் பிடி வலுவாக இருக்கின்றது. சஹ்ரான் அட்டகாசங்கள் அந்த மண்ணுக்கு மிகப் பெரிய தலைகுனிவைக் கொடுத்திருக்கின்றது. அந்த மண்ணின் நலத்தையும் தனது அரசியல் இருப்பையும் மையமாகக் கொண்ட அரசியல் வியூகமே ஹிஸ்புல்லாஹ் ஜனாபதிக் கனவு.

தனக்கு இரண்டரை இலட்சம் வாக்குகள்வரை வாக்குகள் கிடைக்கும். அந்த வாக்குகளே 2020 ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் என்பது அவர் பரப்புரை. இது விடயத்தில் அவருடன் சில விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள நாம் பல முறை தொடர்பு கொண்டாலும் அதற்கான சந்தர்ப்பம் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை.

எமது கணக்குப் படி 50 ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றாலே பெரு வெற்றியாக இருக்கும். அவர் கூறுகின்ற படி அவருக்கு வழங்கப்படுகின்ற வாக்கில் இரண்டாம் தெரிவே 2020ல் இந்த நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் என்ற கதை யதார்த்தத்துக்குப் புறம்பான கதையாகவே நாம் பார்க்கின்றோம். அத்துடன் இன்றுவரை அந்த 2ம் தெரிவை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர் பகிரங்கப்படுத்தாமல் இருப்பதும் புதிராக இருக்கின்றது. எப்படியும் காத்தனார்கள் கலாநிதிக்கு தமது பெரும்பான்மை வாக்குகளை வழங்குவார்கள் என நாம் நம்புகின்றோம். 
விக்ணேஷ்; தரப்பு அறிவிப்பு சிவாஜிக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும். வடக்கு கிழக்கில் மனிதனுக்கு குடிகளில் ஆதரவு கம்மியாகத்தான் இருந்து வருகின்றது. தெற்கு சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்று சொல்கின்றவர் சிவாஜி பற்றி இதுவரை ஒரு வார்த்தையேனும் பேசாதிருக்கின்றார்கள். சிங்கள வேட்பாளர்களில் கம்யூனிஸட் வேட்பாளர் சிரிதுங்ஹ மட்டுமே தமது கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக சொல்லி இருப்பதாக கூறுகின்றார்கள். இந்தத் தேர்தலில் அவரால் ஒரு பத்தாயிரம் வாக்குகளையாது பெற்றுக் கொள்வதே முயல்கொம்பு நிலை. எனவே அவருக்காவது களமிறங்க இந்தத் தரப்பு தயாராக இருக்கின்றதா என்று நாம் கேட்கத் தோன்றுகின்றது. 

தனிக் குதிரை ஓட்டமா!

தேர்தல் தொடர்பில் கருத்துக் கணிப்புக்களும் செய்திகளும் பெரும்பாலும் பக்கச்சார்பானவையாக இருந்து வருகின்றன. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் மஹிந்த தேசப்பிரிய ஒரு செயல்பாட்டுக்காரராக இருப்பதால் ஊடகங்கள் ஓரளவுக்கு தாம் ஆதரிக்கின்ற வேட்பாளருக்கு மட்டுமல்லாது ஏனையவேட்பாளர்கள் பற்றித் தற்போது சில செய்திகளை காட்சிப்படுத்துகின்றன. அனேகமான தனியார் ஊடகங்களும் தொலைக்காட்சி நிறுவனங்களும் பக்கச்சார்பான நிலைப்பாட்டில் அல்லது அந்த நிறுவனங்களின் உரிமையாளரின் அரசியல் விருப்பு வெருப்புக்களுக்கு இசைவாகவே செய்திகளை காட்சிப்படுத்த முனைகின்றன.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றி பெறுவார் என்று சொல்லும் ஊடக ஜம்பவான் விக்டர் ஐவன் கண்டியில் நடந்த சஜித் சார்பிலான அரசியல் மேடையில்ஏறி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். ஐவனை சஜித் மேடையில் பார்த்தவர்கள் அதிர்ந்து போய் இருக்கின்றார்கள். இதுவரை அவர் இப்படியான ஐ.தே.க. மேடைகளில் தோன்றியது கிடையாது. அங்கு பேசிய விக்டர் சஜித் தேர்தல் விஞ்ஞாபனம் மிகச்சிறந்த கனவு அதனை நிறைவேற்ற மக்கள் அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றும் பேசி இருக்கின்றார்கள்.   இது சஜித்துக்க மிக நல்ல செய்தியாக இருக்கின்றது. 

தேர்தலில் கடும் போட்டி நிலை என்றும் சில ஊடகங்கள் செய்தி செல்கின்றன. ஆனால் நாம் இந்த நேரம்வரை 2020 ஜனாதிபதி தேர்தலை தனிக்குதிரையோட்டமாகவே பார்க்கின்றோம்.  கடந்த காலங்களில் நாம் சொல்லிவந்த தகவல்கள் அப்படியே உயிர் வாழ்கின்றன. யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு மக்கள் சந்திப்பில் சுமந்திரன் பேசும்போது 2020 தேர்தலில் கோதாவே வெற்றிபெறும் வேட்பாளராக இருக்கின்றார் எனவே நாம் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அங்கு அறிவுரை வழங்கி இருக்கின்றார்.


காட்டுமிராண்டித்தனம்

கடந்த புதன் கிழமை குருனாகலையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள ஹெலியில் வருகை தந்த ஐ.தே.க. வேட்பாளர் சஜித்திற்கு குருனாகல-வெலகெதர மைதானத்தில் தரையிறங்க விடாமல் சில விசமிகள் செய்த செயல் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகவே பார்க்க வேண்டி இருக்கின்றது. இந்த வேலை அவருக்கு உயிராபத்துக்களைக்கூட ஏற்படுத்த இடமிருந்தது. ஆனாலும் இதனைக் கூட சிலர் இது ஐ.தே.க.வே பார்த்த வேலை என்றும், இன்னும் சிலர் கூட்டத்தில் போதிய மக்கள் வருகை தராமல் சஜித் திரும்மிப் போய்விட்டு, அனுதாபம் தேடுவதற்காக இந்தக் கதையை மொட்டுக்கள் அதிகாரத்தில் இருக்கின்ற குருனாகல நகரசபையால் செய்யப்பட்ட வேலை என்று செய்தி பரப்பி வருகின்றார்கள் எனக் கதை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிகழ்வு சஜித் கூட்டத்தில் கலந்து கொண்டதை விட அது குழப்பி அடிக்கப்பட்டது அவருக்கு நல்ல பிரச்சாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அத்துடன் இப்படியான செயல்கள் எதிகாலத்தில் இவர்கள் அதிகாரத்தில் வந்தால் எப்படியான வன்முறைகளுக் கெல்லாம் இடமிருக்கின்றது என்பதனைக் தெளிவுபடுத்துகின்றது.

-நஜிப் பின் கபூர்

1 comment:

Post a Comment