ஒப்புக்கான ஒற்றுமையும் முடங்கிப் போன எண்ணங்களும் - sonakar.com

Post Top Ad

Saturday, 23 November 2019

ஒப்புக்கான ஒற்றுமையும் முடங்கிப் போன எண்ணங்களும்


தேசத்தின் 7வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து இயங்க ஆரம்பித்த மஹிந்த ராஜபக்ச அணி உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் பெற்ற வெற்றியோடு நின்று விடாமல் தொடர்ச்சியாக இயங்கி தமது வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்துள்ளது.


52.25வீத மக்களின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாகியுள்ள கோட்டாபே ராஜபக்ச, மிகத் தெளிவாக இரு வேறு நிறங்களாகப் பிரிந்துள்ள தேச உணர்வுக்கு மத்தியில், தான் அனைவருக்குமான ஜனாதிபதியென வாக்குறுதியளித்துள்ளார். இதன் சாதக – பாதகங்களை ஆராய்வதற்கு முன்பாக அவரது செயற்பாட்டுக்குரிய கால அவகாசம் வழங்கப்படுவதே நியாயம். தான் பொறுப்பேற்றிருக்கும் பதவியின் கனம், அதன் மீதான கடமைகள் மற்றும் தேச அபிவிருத்தி, இன நல்லிணக்கம் - ஐக்கியம் ஊடாகக் கட்டியெழுப்பப் பட வேண்டிய எதிர்காலம் என அனைத்தையும் அறிந்த நிலையிலேயே கோட்டாபே ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார்.

2015ல் மைத்ரிபால சிறிசேன 51.28 வீத மக்கள் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியான போது அவர் அந்தப் பதவிக்கு ஏலவே தயாரான ஒருவராக இருக்காத காரணத்தினால், பதவியேற்ற பின்னரே தனது பயணத்தைத் திட்டமிடவும், நடைமுறைச் சிக்கல்களோடு முட்டி மோதவும் செய்தார். ஆயினும் தனது சகோதரனின் ஆட்சிக்காலத்தில் (2005-2015) பாதுகாப்பு செயலாளர் என்ற பதவியில் இருந்ததோடு மாத்திரமன்றி 2015 பொதுத் தேர்தல் தோல்வியின் பின் மஹிந்த ராஜபக்சவுக்கான மாற்றீடு என்ற எதிர்பார்ப்போடு ஊட்டி வளர்க்கப்பட்டவர் என்பதால் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச ஏலவே தயார் படுத்தப்பட்ட ஒரு நபராக இருக்கிறார்.

எனவே, மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற தொடர்சியான தவறுகள், சொதப்பல்கள், குளறுபடிகள் (Comedy of errors) இல்லாத திறமையான நிர்வாகம் இவரிடம் எதிர்பார்க்கப்படுவது இயல்பானது. அத்துடன் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் வெறும் பினாமி ஜனாதிபதியில்லையென்பதை நிரூபிக்கும் கடமைப்பாடும் புதிய ஜனாதிபதிக்கு உண்டு.

ஒரு நாட்டின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இரு சகோதரர்கள் இருப்பதில் எந்தத் தவறுமில்லை. இருவரும் தமக்குரிய கடமைகளைச் சரி வர முன்னெடுக்குமிடத்து நாட்டு மக்கள் அதில் அதிருப்தி கொள்ளப் போவதுமில்லை. கட்சி பேதம் உலகின் எல்லா நாடுகளிலும் இருக்கும் ஒரு விடயம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் வேறுபாடான புரிதல்களும் தேவைகளும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒரே சித்தார்ந்தத்துக்குள் வரப் போவதுமில்லை. தேசத்தின் எதிர்காலம் பற்றிய சிந்தனையும இவ்வாறே ஒருவருக்கொருவர் வித்தியாசப்படலாம்.

2010ம் ஆண்டு இரண்டாவது தடவையாக ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச, தனது பதவிக் காலம் முடிவதற்குள், 18ம் திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றிய உத்வேகத்தில் நடாத்திய ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். அப்போது நாட்டு மக்களிடம் மேலோங்கியிருந்த தேச உணர்வு வேறு வகைப்பட்டிருந்தது. இப்போது அவரது சகோதரர் கோட்டாபே ராஜபக்ச வெற்றியடைந்துள்ளார், இதன் போதான தேச உணர்வு இன்னொரு வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரு கால கட்டங்களின் இடையே சரியையும் பிழையையும் உணர்ந்து கொள்ள மக்கள் வௌ;வேறு அளவீடுகளை வைத்திருந்ததுள்ளமை தெளிவாகிறது.

2009 யுத்த நிறைவின் பின்னர் நாட்டு மக்களின் பெருவாரியான எதிர்பார்ப்பு தேச மற்றும் சமூக அபிவிருத்தி சார்ந்ததாக இருந்தது. பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் பாரிய செலவீனங்களைத் தாண்டி தேசம் கட்டியெழுப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆயினும், 2010 முதல் தலை தூக்கிய பேரினவாதம் பகிரங்க இனவன்முறையாக மாறிச் சென்றதில் அதிருப்தியடைந்த மக்கள் 2015ல் மாற்றத்துக்காக வாக்களித்தார்கள். உலக அரங்கில் தமது தேசத்தின் கௌரவம் பாதிக்கப்பட்டு விட்டதாக பொது மக்கள், குறிப்பாக அனைத்து இனங்களையும் சார்ந்த முற்போக்கு சக்திகள் உணர்ந்ததன் விளைவு அக்கால கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் செயற்திட்டத்தைப் பலப்படுத்தியது. 

எனினும், அந்த ஆட்சி மாற்றம் நாட்டின் இன்னொரு சாராரை வேறு வகையில் சிந்திக்கவும் தூண்டியது. 2009 யுத்த வெற்றி ஒரு இனம் சார்ந்த வெற்றியெனக் கருதியோரைப் பொறுத்தவரை தமது இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும் பௌத்த முன்னுரிமை மழுங்கிச் செல்வதாகவும் உணரப்பட்டது. இவ்வாறான ஒரு பார்வையையும், அச்சத்தையும் உருவாக்குவதில் பரவலாக அரசியல்மயப்பட்டுள்ள தனியார் ஊடகங்கள் பாரிய பங்களித்தன. அதற்கேற்ப, சிங்கள பேரினவாதத்தை வலியுறுத்தும் கடும்போக்கு அமைப்புகளும் தோற்றம் பெற்று, அடிமட்ட சிங்கள மக்கள் மத்தியில் சரி-பிழைகளுக்கு அப்பாற்பட்ட அச்சத்தை விதைக்க ஆரம்பித்தன. துரதிஷ்டவசமாக இதன் போதான இலக்காக முஸ்லிம் சமூகம் காவுகொள்ளப்பட்டது.

ஆதலால், முஸ்லிம்களின் இனப்பெருக்கம், பொருளாதார முன்னேற்றம், சமூகக் கட்டமைப்பு என அனைத்தும் முடக்கப்பட வேண்டும் என்ற எண்ணமும் தற்போதைய ஆட்சியாளர்கள் பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் தேசத்தில் பௌத்தர்களின் உணர்வுகளை மதிக்கத் தவறுகிறார்கள் என்ற சிந்தனை விதைப்பும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வப்போது உருவாக்கப்பட்ட வன்முறைகள், அதற்கு ஊடகங்களில் வழங்கப்பட்ட முக்கியத்துவம் அதற்குத் தேவையான விளம்பரத்தை வழங்கியதோடு மாத்திரமல்லாமல் கவனயீர்ப்பையும் உருவாக்கியது.

இந்நிலையிலேயே விகாரைகளின் வலையமைப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி பேரினவாத உணர்வு தட்டியெழுப்பப்பட்டு, அதன் பயன் அனுபவிக்கப்படுகிறது. இது தேசத்தின் ஒரு பக்க செயற்பாட்டு நிலையென்றால் இன்னொரு பக்கத்தில் இதற்கு நேரெதிரான உணர்வு குடிகொண்டிருப்பதை இம்முறை ஜனாதிபதி தேர்தலின் முடிவு எடுத்துக் காட்டுகிறது. ஒப்பீட்டளவில் 2010 மற்றும் 2019க்கான வரைபடத்தையும் 2015ன் வரைபடைத்தையும் வைத்துப் பார்த்தால் அந்த உணர்வு பளிச்சென புலப்படும்.

இதனடிப்படையில் இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழும், பல் கலாச்சாரத்தைக் கொண்ட நாடென்பதை ஏற்று முன் செல்வதா? பௌத்த பெரும்பான்மையைக் கொண்ட நாடு எனும் அடிப்படையில் ஏனைய சமூகங்கள் வாழப்பழகிக் கொள்வதா? என்ற இரு கேள்விகளை இந்தத் தேர்தல் முடிவு உருவாக்கியுள்ளது. இந்த சவால்களுக்கு மத்தியில், தான் அனைவருக்குமான ஜனாதிபதியென பகிரங்கமாகக் கூறியதனை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச எவ்வாறு நிரூபிக்கப் போகிறார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயம். முன் சொன்னது போன்று, அவருக்கு அதற்கான கால அவகாசம் வழங்கப்படுதலே நியாயம்.

எனினும், அடுத்தடுத்து வரக்கூடிய தேர்தல்கள் பொது உணர்வுக்குத் தடையாகிவிடாதா? என்ற கேள்வியெழாமலும் இல்லை. ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு வெளிக்கிளம்பிய, நாட்டில் இனவாதத்தை விதைத்து வன்முறைகளைத் தூண்டியதற்காக பரவலாக அறியப்பட்ட பொது பல சேனா மற்றும் சிங்ஹல ராவய அமைப்புகள் தாம் இதுவரை காலம் செயற்பட்டு வந்ததற்கான இலக்கு வெற்றியடைந்து விட்டதாகவும், எதிர்பார்த்தபடி ஒரு சிறந்த சிங்கள தலைவர் உருவாக்கப்பட்டு விட்டதாகவும், ஆதலால் இதன் பின் தாம் கூச்சலிட, குழப்பங்களை ஏற்படுத்தத் தேவையில்லையெனவும் இப்பின்னணியில் எதிர்வரும் பொதுத் தேர்தலோடு தமது அமைப்புகள் கலைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

கடந்த செவ்வாய் (19) அன்று பொதுபல சேனாவின் ஞானசார இதனை விளக்குகையில், சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது என்று நிலவிய மாயையைத் தகர்த்தெறிய வேண்டிய தேவையிருந்ததாகவும் அது தகர்க்கப்பட்டு, சிங்கள வாக்குகள் ஊடாகவே ஒரு சிங்கள தலைவர் உருவாகியுள்ளதால் இதன் பின் பொது பல சேனா என்ற பெயரில் தமக்கான செயற்பாட்டுத் தேவையில்லையெனவும் விளக்கமளித்திருந்தார்.

எனினும், இரு அமைப்புகளும் கூட பொதுத் தேர்தல்வரை செயற்பாடுகளைத் தொடர வேண்டும் என தெரிவித்திருப்பதானது, மீண்டும் இன உணர்வின் அடிப்படையிலான தேர்தல் முடிவொன்றை எதிர்பார்த்தே என்பது தெளிவான விடயம். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் உருவாக்கியுள்ள நிறங்களுக்கிடையிலான நிழல் யுத்தமாகவே அடுத்து வரும் பொதுத் தேர்தலும் இருக்கப் போகிறது என்பதும் தெளிவாகிறது. இதனை சமப்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி அவசரம் காட்டப் போவதில்லையென்பதும் எதிர்பார்க்கக்கூடிய விடயம்.

கடந்த புதன் (2) இதனை மேலும் உறுதிப்படுத்திய பெரமுனவின் முன்னணி செயற்பாட்டாளர் வாசுதேச நானாயக்கார, பொதுத் தேர்தலை நடாத்த தமது தரப்புக்கு எந்த அவசரமும் இல்லையென விளக்கமளித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ள நீண்ட கால திட்டமிடலும் செயற்பாடுகளும் அவசியப்பட்டிருந்த நிலையில் அவசர அவசரமாக பொதுத் தேர்தலை நடாத்துவது எதிர்பார்த்த அளவு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தராது என்பது அவரது கணிப்பாக இருக்கிறது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் மக்களை வாக்களிப்பதற்குத் தயார் படுத்தியது தொடர்பில் விளக்கமளித்த ஞானசார, கடந்த மூன்று மாதங்களாக ஊடகங்கள் முன் தோன்றவில்லையாயினும் விகாரைகள் ஊடாக தான் மாத்திரம் சுமார் ஆறு லட்சம் பேர் கலந்து கொண்ட 250 போதனை நிகழ்வுகளை நடாத்தியதாக தெரிவித்திருந்தார். 

கோட்டாபே அல்லது சஜித் பிரேமதாச என்ற இரு நபர்களுக்கிடையிலான போட்டியின் போது இந்த யுக்தி வெற்றி பெற்றிருப்பினும் கூட பிரதேச, பிராந்திய மற்றும் சுய நலன் சார்ந்து அணுகப்படும் பொதுத் தேர்தலில் இதே யுக்தி மூலமாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியுமா? என்பது கேள்விக்குறியான விடயமே. வேறு கட்சிகள் சாராத தனிப்பெரும்பான்மையைப் பெறுவதே பெரமுனவின் அடுத்த இலக்கு எனும் அடிப்படையில் அதற்கான கால அவகாசம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

நாடாளுமன்றில் முழுமையான ஆதரவும் - அதிகாரமும் இல்லாமல் முடங்கிப் போன மைத்ரிபால் சிறிசேனவின் இடத்துக்கு கோட்டாபே ராஜபக்சவையும் கொண்டு சென்றால் அது ஜனாதிபதி தேர்தலில் அவர் பெற்ற வெற்றியை செல்லாக் காசாக்கி விடும். எனவே, நாடாளுமன்ற பெரும்பான்மையை உருவாக்கும் வேலைத்திட்டத்தை திட்டமிடலும் அதனூடாக பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதும் இன்று சொல்லப்படுவது போன்று சிறுபான்மையினரின் ஆதரவும் - கூட்டும் இன்றி ஆட்சியமைப்பதும் சவாலான விடயங்களே.

இன்னொரு புறத்தில், சிறுபான்மை சமூகங்களினால் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பங்களிப்பின்றி, ஒப்புக்கான பிரதிநிதிகளுடன் அமைக்கப்படும் அரசு தமிழர் பிரதேசங்களில் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்ட அரசாகவே உலகுக்குக் காட்சியளிக்கும். இந்த அரசியல் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்த மேற்கு நாடுகள் சிலவும் புலம் பெயர்ந்து வாழும் சக்திகளும் கூடக் காத்திருக்கும் நிலையில் பேரினவாத அடிப்படையிலான நாடாளுமன்றை நோக்கிய செயற்பாடு நாட்டின் இறையான்மைக்கும் ஐக்கியத்துக்கும் ஆபத்தை விளைவிப்பதாகவே இருக்கும். அவ்வாறான ஒரு சூழ்நிலை மீண்டும் உருவானால் 2009ல் யுத்தத்தை முடித்ததிலும் பயனற்றுப் போகும் என்பதை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவும் நன்கறிந்தவராகவே இருப்பார்.

இப்பின்னணியில், மஹிந்த அணி கொள்கை வகுப்பாளர்களின் அடுத்தடுத்த நகர்வுகள், ஆகக்குறைந்தது பொதுத் தேர்தல் வரையாவது சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரானதாக அமையப் போவதில்லையென எதிர்பார்க்கலாம். வட-கிழக்கு மாத்திரமன்றி மலையக மக்கள் சமூகமும் உணர்வால் மாறுபட்டே நிற்கிறது. இச்சூழ்நிலைக்கு மத்தியில், குறிப்பாக தொகுதிவாரி தேர்தல் முறைமையின் கீழ் தனிச் சிங்கள பிரதிநிதித்துவம் கொண்ட நாடாளுமன்றை உருவாக்குவது மிகப் பெரும் சவாலான விடயமாகும். அதனை அவ்வாறே அமைய வழி விடுவது சிறுபான்மை சமூகங்கள் தமக்குத் தாமே செய்து கொள்ளும் தீங்காகவே இருக்கும் என்பதால் ஜனாதிபதி தேர்தலையடுத்து நிகழ்வுகள் குறித்த அவதானமும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், முற்போக்கு சக்திகளும் மேலோங்கிய இன உணர்வால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தமை கண்கூடு. கட்சிகளுக்கப்பால் முற்போக்கு நிலைப்பாட்டை வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க எதிர்பார்த்த அளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. அது வெறுமனே அபிப்பிராய பேதம் என அவரும் கருதவில்லை, மாறாக கடந்த செவ்வாய் (19) இது குறித்துப் பேசிய அவர், ஜனாதிபதி தேர்தல் முடிவு நாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக பிரிவினையை புடம் போட்டுக் காட்டியிருப்பதாக தெரிவித்திருந்தார்.

நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம், இன ஐக்கியம் மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடிப்படையிலான அநுர குமார திசாநாயக்கவின் கொள்கைகளையும் பிரச்சாரங்களையும் ஏற்றுக் கொள்வதை விட இன எழுச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதனாது, சரி – பிழைகளுக்கு அப்பால் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட பீதி மற்றும் கருத்தியல் விதைப்புகளின் தாக்கம் என்றே கருதப்பட வேண்டும்.

வழக்கமாகவே சொல்லி வருவது போன்று, அந்த கருத்தியலை நியாயப்படுத்தும் வகையிலேயே தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தின் கூறுகள் இயங்கி வருவதால் அறிந்தும் அறியாமலும் பேரினவாத எழுச்சியூட்டலுக்கு ஒவ்வொருவரும் பொறுப்பாளியாகின்றனர். எனினும், இந்த நிலை நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்வது ஆரோக்கியமானதா? இலலையா? என்பதை மக்கள் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். 2015ல் போன்று இம்முறையும் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான போட்டியில் சுமார் 80வீதம் மக்களே வாக்களித்துள்ளனர். ஆயினும் 2015ன் 80 வீதமும் இம்முறை வாக்களித்த 80 வீதமும் இலங்கை சமூகத்தின் வேறு தளங்களில் இருந்தே உந்தப்பட்டுள்ளதற்கு தேர்தல் முடிவு சான்றாகிறது.

அப்படியானால், வாக்களிக்காமல் இருப்போரது நிலையும் - சிந்தனையும் எங்கு முடங்கிக் கிடக்கிறது? என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயமாகும். கிழக்கிலோ கொழும்பிலோ கூட இம்முறை வாக்களிப்பில் எதிர்பார்த்தளவு சிறுபான்மை சமூகத்தின் பங்களிப்பு இருக்கவில்லை. ஆயினும், இந்த அரசியல் ஊடான விளைவுகள் அவர்களையும் சாரும். அந்த வகையில் எதிர்வரும் நாட்களின் அரசியல் நகர்வுகளை அவதானித்துத் தம் பிரதிநிதித்துவத்தை தேர்ந்தெடுக்கத் தயாராவதும் கட்டாய கடமையாகிறது.

jTScYcS
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment