நாட்டை பாதுகாப்பது ராஜபக்ச குடும்பத்தின் நோக்கமில்லை: ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Monday, 4 November 2019

நாட்டை பாதுகாப்பது ராஜபக்ச குடும்பத்தின் நோக்கமில்லை: ஹக்கீம்ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றினால்தான் நாட்டின் பாதுகாப்பு நிச்சயிக்கப்படும் என்று பேசுகின்றனர். ஆனால், அவர்களது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு எனக்கூறி அவர்களது அரசாங்கத்தையே பாதுகாத்தனர். அவர்களது இலக்கு நாட்டை பாதுகாப்பதல்ல, அவர்களது அரசாங்கத்தை பாதுகாப்பதே அவர்களது நோக்கமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை புல்மோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;

வட, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை கட்சிகள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அகில இலங்கை தமிழரசுக் கட்சியும் அதன் ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்தகால தேர்தல்களில் தெற்கிலுள்ள சிங்கள மக்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக ராஜபக்ஷ குடும்பத்துக்கு எழுதிக் கொடுத்ததாக பேசினார்கள். ஆனால், நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. அவர்களை நோக்கி அச்சம் பீடித்துள்ளது. செல்கின்ற இடமெல்லாம் இப்போது எமது இளம் வேட்பாளருக்கு அமோக வரவேற்புக் கிடைக்கின்றது. இப்படியான சாதக நிலைமை உருவாகும் என்பதை நாங்கள் முன்னரே அறிந்திருந்தோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அசல் வேட்பாளர் ஒருவரினால் கடந்த 30 வருடங்களாக ஜனாதிபதி ஆசனத்தை எட்டிப்பிடிக்க முடியவில்லை. 2005ஆம் ஆண்டு களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க மிகவும் சொற்ப வாக்கு வித்தியசாத்தில் தோல்வியைத் தழுவினார். தமிழ் மக்களை வாக்களிப்பததை விடுதலை புலிகள் இயக்கம் தடுத்தமையே இதற்கு பிரதான காரணாகும். இதன் காரணமாகவே, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் கதிரையில் அமர்ந்தார்.

1977இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தி பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்தது. பின்னர் 1983 ஆம் ஆண்டு கலவரம் மற்றும் 1986ஆம் ஆண்டில் ஜே.வி.பி. கலவரம் போன்றவற்றால் நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்டது. பாதுகாப்பு தொடர்பில் மிக மோசமான பின்னடைவை சந்தித்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருந்துவந்தது.

1988இல் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டபோது மக்களின் நிலைப்பாடு மாற்றமாக இருந்தது. நீண்டகாலமாக ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி மீது கொண்ட வெறுப்பின் காரணமாக அவருக்கு பாரிய சவால்கள் இருந்தன. அத்தனை சவால்களையும் வெற்றிகொண்டு, ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

தற்போதைய ஆட்சியில் மக்களுக்கு விமர்சனங்கள் இருக்கின்ற நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு வெற்றி கிட்டுமா என்று சிலர் நினைக்கலாம். அன்று அவருடைய தந்தை இதைவிட மோசமான நிலையில்தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகண்டார். அவருக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய மறைமுகமாக ஆதரவினால் வெற்றிபெற்றார். அதேபோல், முஸ்லிம் காங்கிரஸ் தற்போது பகிரங்கமாக ஆதரிக்கும் சஜித் பிரேமதாசவும் வெற்றிபெறுவார் என்பது தெளிவாக தெரிகிறது.

இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தலாக மக்கள் பார்க்கவில்லை. களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் ஆளுமை, அந்தஸ்து பற்றித்தான் மக்கள் பார்க்கின்றனர். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றை வெளிநாடுகளில் அடகுவைக்காத ஆளுமையொன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தேவை என்ற எதிர்பார்ப்பில் தெற்கில் வாழும் சிங்கள மக்கள் இருக்கின்றனர். ராஜபக்ஷ குடும்பத்தினர் இவ்வாறே தெற்குவாழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு வந்தனர்.

தாங்கள் ஆட்சியை கைப்பற்றினால்தான் பாதுகாப்பு நிச்சயிக்கப்படும் என்ற ஆணவத்தில் எதிரணியினர் பேசுகின்றனர். ஆனால், அவர்களது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எனக்கருதி அவர்களது அரசாங்கத்தை பாதுகாப்பதில்தான் தங்களது முழுக் கவனத்தையும் செலுத்தினார்கள். அவர்களது இலக்கு நாட்டை பாதுகாப்பதல்ல. தமது அரசாங்கத்தை பாதுகாக்கவும், ஆட்சி நீடிப்புக்காக பாதுகாப்புத் துறையினரை பகடைகளாக பயன்படுத்தவும் அவர்கள் திட்டம் தீட்டி செயற்பட்டதை அவதானித்தோம்.

யுத்தம் முடிந்த கையோடு மறு யுத்தம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் மக்களின் அவதானம் திசைதிரும்பிவிடும் என்று சிந்தித்தார்கள். விடுதலைப் புலிகளை தோற்கடித்துவிட்டோம் என்று நிறுத்தாமல், முழு தமிழர்களை தங்களது சப்பாத்து கால்களுக்குள் போட்டு நசுக்கியே அரசியல் செய்தார்கள். யுத்த வெற்றியுடன் பாதுகாப்பு நடவடிக்கைளை அதிகரித்து, மக்களை பீதியில் வைத்திருக்க வேண்டும் என்ற பாங்கிலேயே அவர்களது செயற்பாடுகள் இருந்தன.

முஸ்லிம்கள் மத்தியில் எவ்வாறு கலவரம் செய்யலாம் என்று உற்றுப்பார்த்தார்கள். சமூகத்தின் பாதுகாப்பு மீறப்படும்போது நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு முன்னால் வரும் இளைஞர்களை அடையாளம் காண்பதற்கு கிறீஸ் மனிதனை கொண்டுவந்தார்கள். கிறீஸ் மனிதன் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் வரவில்லை. சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள்ளேயே ஊடுறுவ விடப்பட்டன.

பாதுகாப்பு தரப்பிலிருந்த ஒரு கும்பல் திட்டமிட்ட முறையில் கிறீஸ் மனிதன் திட்டத்தை இகரசியமாக இதை செய்தார்கள் என்பதை பின்னர் எல்லோரும் தெரிவிந்துகொண்டனர். பாதுகாப்புத்தரப்பு மீது ஏற்பட்ட ஆத்திரத்தினால் 20க்கு மேற்பட்ட பொலிஸாரின் வாகனங்களை மக்களினால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

எமது ஆட்சியில் எல்லோருக்கும் பூரண சுதந்திரம் கொடுத்துள்ளோம். ஊடகவியலாளர்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளை வேன் கலாசாரம் இல்லை. கடந்தகால ஆட்சியின், அவர்களது தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால், மறுநாள் அவரை தேடத்தெரிய வேண்டிய நிலைக்கு ஆளானோம். இவ்வாறு பல ஊடகவியலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு, காணாமலாக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு எதிராக செயற்படுவர்களுக்கு எதிராக பாரிய அச்ச சூழ்நிலையை உருவாக்கி வைத்திருந்தனர்.

பாதுகாப்பு தொடர்பில் அவர்கள் பேசுவது எல்லாம் அபாண்டமான பொய்கள். தங்களை மாத்திரமே அவர்கள் தேசப்பற்றாளர்களாக கருதுகின்றனர். அவர்களுக்கு பதிலளிப்பதற்காக, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் நாட்டின் பாதுகாப்பை ஒப்படைப்பேன் என்ற சஜித் பிரேமதாசவின் அறிவிப்பு அவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

கோட்டபாய ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்களினால் கேள்விகள் கேட்டபோது, தனது கோபத்தை அடக்கிக்கொண்டு, சிரித்துக்கொண்டே மழுப்பல் பதில்களை அளித்தார். ஊடகவியலாளர் ஒருவர், யுத்தகாலத்தில் இராணுவம் பல குற்றங்களை செய்தமை மற்றும் உங்களுக்கெதிரான முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்குவீர்களா என்று கேட்டபோது, நான் யுத்தம் செய்யவில்லை. இராணுவத் தளபதிதான் யுத்தம் செய்தார் என்று சொல்லிவிட்டார். இதைவிட மோசமான கோழைத்தனம் இருக்கமுடியுமா?  

அந்தக் கும்பல்தான் இப்போது நாட்டையும் பௌத்த மதத்தையும் பாதுகாப்பதாக மேடைகளில் பேசித் திரிகின்றது. எமது அரசாங்கம் இன, மத பேதமின்றி கம்பெரலிய திட்டத்தின் மூலம் 300 மில்லியன் ரூபாவை பள்ளிவாசல், கோயில், தேவாலயங்கள், விகாரைகள் அனைத்துக்கும் வாரி வழங்கியுள்ளது. முன்னைய அரசாங்கத்தினால் இவ்வளவு பெருந்தொகை பணம் மதஸ்தலங்களின் அபிவிருத்திக்களுக்கு ஒதுக்கப்படவில்லை.

புல்மோட்டையில் மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தி காணிகளை அபகரித்து வருகின்றனர். அதற்கு ஏதுவாக தொல்பொருள் திணைக்களம், வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம், வன பரிபாலன சபை ஆகியவற்றினூடாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணிகள் சூறையாடப்படுகின்றன. அரிசி மலையைச் சுற்றி வேலிகள் போடப்படுகின்றனர். சிலர் உண்ணாவிரம் இருக்கின்றனர்.

13ஆம் கட்டையில் இராணுவ முகாம் அமைப்பதற்கு காணி கிடைக்காமல், அவர்களும் மக்களின் வாழ்வாதார காணிகளையே தேடிப்பிடித்து தங்களது தேவைகளை பூர்த்திசெய்கின்றனர். இந்தப் பிரதேசத்தில் எடுத்ததற்கெல்லாம் பாதுகாப்பு படையின் கெடுபிடிகள் மக்கள்மீது வேண்டுமென்றே திணிக்கப்படுகிறது. அப்படியான பாதுகாப்பு படையினர் கூட இவர்களின் கபடத்தனமான அரசியலை புரிந்துவிட்டனர். இப்படியானவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால், இதைவிட பாராதூரமான சம்பவங்கள் நடக்கும்.

குச்சவெளி பிரதேச சபையில் கிழக்கு மாகாண காணி ஆணையாளரின் அனுமதியுடன், சுமார் 30 வருடங்களின் பின்னர் காணி அனுமதிப்பத்திரங்களை ஆயிரக் கணக்கானோருக்கு வழங்கினோம். அதனைத் தடுப்பதற்கு ஜனாதிபதியிடம் முறைப்பாட்டு மனுக்களை சமர்ப்பித்து தடங்கல் ஏற்படுத்தினார்கள். எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓடித்திரிந்து அவற்றை சமாளித்து மக்களின் காணிகளை அவர்களிடமே மீள ஒப்படைத்தார்கள்.

கொக்கிளாய் கடற்பரப்பின் மீன்பிடியில் ஒரு பங்கீட்டில் வட மாகாணத்துக்கு பொறுப்பான முல்லைதீவு மீனவ அதிகாரிகள் நீண்டகாலமாக தலையிட்டு, புல்மோட்டை மக்களின் வாழ்வாதாரத்துக்கு பங்கள் விளைவித்து வருகின்றனர். மீன்பிடி அமைச்சரிடம் இதுதொடர்பில் பல தடவைகள் கதைத்துள்ளோம். மக்களின் வாழ்வாதாரத்துக்கு பங்கம் விளைவிக்காத முறையில் இதனை செய்துதருவதாக அவர்கள் எங்களிடம் வாக்களித்திருக்கிறார்.

மக்களின் பிரச்சினைகள் யாவும் சஜித் பிரேமதாச ஆட்சியில் தீர்த்து வைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. எதிரணியின் போலித்தனமான விடயங்கள் யாவும் தற்போது அம்பலத்துக்கு வந்துவிட்டன. நாட்டின் தேசிய ஒற்றுமை, சமத்துவம், இறையாண்மை போன்றவற்றை பாதுகாத்துகொள்வதற்கும் சிறுபான்மை மக்கள் மத்தியிலுள்ள அச்சத்தைப் போக்குவதற்கும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை கொண்ட வேட்பாளராக சஜித் பிரேமதாச விளங்குகின்றார். அவரின் வெற்றிக்காக அனைவரும் பாடுபடுவோம் என்றார்.

-SLMC

No comments:

Post a Comment